அமைச்சரவை முடிவுகள் : 20-12-2016

20-12-2016 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை சந்திப்பின் போது எடுக்கப்பட்ட முடிவுகள்

01.நாடப்பட்ட சிறுநீரக நோய்த்தடுப்பு தேசிய நிகழ்ச்சித்திட்டம் – 2016 – 2018 (விடய இல. 05)

காரணம் கண்டறியப்படாத உயிர்கொல்லி சிறுநீரக நோயினால் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பலர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

இதனைக்கருத்திற் கொண்டு குறித்த நோய் தொடர்பில் அதனை இல்லாதொழிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய தேவை எழுந்துள்ளது. அதற்காக வேண்டி ஜனாதிபதி செயலகத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள ‘சிறுநீரகை நோய் தடுப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணி’ மூலம் 2016 -2018 வரையான காலப்பிரிவினுள் செயற்படுத்தப்படுகின்ற, நாடப்பட்ட சிறுநீரக நோய்த்தடுப்பு தேசிய நிகழ்ச்சித்திட்டத்திற்கு தேவையான நிதியினை திறட்டிக் கொள்வது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்த யோசனைகளை அமைச்சரவை கொள்கை அடிப்படையில் ஏற்றுக் கொண்டது.

02. தேசிய ஒருமைப்பாட்டு மற்றும் நல்லிணக்க வாரத்தினை பிரகடனப்படுத்தல் (விடய இல. 11)

இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் நோக்கில் 2017ம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் 08ம் திகதி தொடக்கம் 14ம் திகதி வரையான வாரத்தை ‘தேசிய ஒருமைப்பாட்டு மற்றும் நல்லிணக்க வாரமாக’ பிரகடனப்படுத்துவதற்கும், 2017ம் ஆண்டில் அனுஷ்டிக்கப்படவுள்ள குறித்த வாரத்துடன் இணைந்ததாக நாடு தழுவிய ரீதியில் அனைத்து பாடசாலைகள்ரூபவ் ஊடகங்கள், அரச மற்றும் தனியார் நிர்வனங்களை மையமாகக் கொண்டு தேசிய ஒருமைப்பாட்டின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகின்ற பல்வேறு வேலைத்திட்டங்களை
முன்னெடுப்பதற்கும் தேசிய ஒருமைப்பாட்டு மற்றும் நல்லிணக்க அமைச்சர் எனும் ரீதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

03. அநுராதபுரம் கும்பிச்சன்குளத்துடன் இணைந்ததாக களியாட்ட வசதிகளை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம் (விடய இல. 15)

அநுராதபுர நகரமானது பல்வேறு பொதுவசதிகளுடன் கூடிய நகரமாக காணப்படினும் அங்கு ஓய்வு நேரத்தை களிப்பதற்கு உகந்த இடங்கள் அறிதாகவே காணப்படுகின்றன. அதனால் அநுராதபுரம் கும்பிச்சன்குளத்தினை மீளமைப்பு செய்து, அதனை சூழவுள்ள பிரதேசத்தில் ஓய்வு நேரத்தை களிப்பதற்கு உகந்த வசதிகளை கொண்ட பிரதேசமாக அபிவிருத்தி செய்யும் நோக்கில் செயற்படுத்தப்படுகின்ற வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தினை முன்னெடுப்பதற்கான நிதியினை திரட்டிக் கொள்வது தொடர்பில் பாரிய நகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

04. சியபலாண்டுவ பிரதேசத்தில் 100 மெகாவொட் கொள்ளலவைக் கொண்ட சூரியசக்தி பூங்காவினை ஸ்தாபித்தல் (விடய இல. 16)

இன்று சூழலுக்கு பாதிப்பு செலுத்தாத வளங்களை பயன்படுத்தி மின்னுற்பத்தி செய்யும் நடைமுறை தொடர்பில் கூடுதல் அக்கறை செலுத்தப்படுகின்றது. இங்கு சூரிய சக்திக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகின்றது. 11.3 மெகாவொட் அளவிலான சூரிய மின்சாரமானது இன்று இலங்கை மின்சார அமைப்புடன் இணைக்கப்படுகின்றது.

இலங்கையில் சூரியசக்தி மின்னுற்பத்தியினை மேலும் அதிகரிக்கும் நோக்கில் இதுவரையில் பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 100 மெகாவொட் அளவினை கொண்ட 03 சூரியசக்தி மின்னுற்பத்தி பூங்காக்களை உருவாக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் அதன் முதற் கட்டமாக சியபலாண்டுவ பிரதேசத்தில் 100 மெகாவொட் கொள்ளலவைக் கொண்ட சூரியசக்தி பூங்காவினை ஸ்தாபிப்பதற்கான சாத்தியவள அறிக்கையினை மேற்கொள்வது தொடர்பில் மின்வலு மற்றும் மீள்புத்தாக்க சக்தி அமைச்சர் ரன்ஜித் சியபலாப்பிட்டியவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

05. நகல்ஸ் தகவல் மத்திய நிலையத்தை அமைத்தல் – வன பாதுகாப்பு திணைக்களம் (விடய இல. 27)

மத்திய மலையகத்தில் உலக பிரசித்திபெற்ற நகல்ஸ் பாதுகாப்பு வனாந்திரத்தினுள் அங்க சம்பூர்ணமான தகவல் மத்திய நிலையம் ஒன்றை நிர்மாணிப்பதற்கான பணிகள் 2014ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட போதும், நிதியிடலுக்கு ஏற்பட்ட தடைகளினால் இடைநடுவே இடைநிறுத்தப்பட்டது. ‘2016 – 2018 புனருதயம்’ வேலைத்திட்டத்தின் கீழ் கிடைக்கப்பெறவுள்ள 23 மில்லியன் ரூபா நிதியினை பயன்படுத்தி அத்தகவல் நிலையத்தின் நிர்மாணப்பணிகளை மீள ஆரம்பிப்பதற்கு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சர் எனும் ரீதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

06. மொரகஹகந்தை – களுகங்கை அபிவிருத்தி வேலைத்திட்டத்தினால் இடம்பெயர்கின்ற குடும்பங்களை மெதிரிகிரிய பிரதேச செயலாளர் பிரிவில் மீள்குடியேற்றம் செய்தல் (விடய இல.28)

மொரகஹகந்தை – களுகங்கை அபிவிருத்தி வேலைத்திட்டத்தினால் இடம்பெயர்கின்ற குடும்பங்களை மெதிரிகிரிய பிரதேச செயலாளர் பிரிவில் மீள்குடியேற்றம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி மெதிரிகிரிய பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 04 கிராம சேவையாளர் பிரிவுகளின் அபிவிருத்தி செயற்பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், குறித்த பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட அனைத்து கிராம சேவகர் பிரிவுகளும் உள்ளடங்கும் வகையில் குடியிருப்புக்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. அதனடிப்படையில், தற்போது அபிவிருத்தி அடையாத நிலையில் இருக்கும் 09 கிராம சேவையாளர் பிரிவுகளில் நீர்ப்பாசன மற்றும் குடியிருப்பு அபிவிருத்தி செயற்றிட்டங்களை விருத்தி செய்வதற்கும், எஞ்சிய 32 கிராம சேவையாளர் பிரிவுகளிலும் குடியிருப்பு அபிவிருத்தி செயற்றிட்டங்களை விருத்தி செய்வதற்கும் தேவையான சாத்தியவள அறிக்கையினை மேற்கொள்வது தொடர்பில் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சர் எனும் ரீதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

07. குருநாகலிலிருந்து ஹபரன வரையான தம்புள்ளை ஊடாக புதிய புகையிரத மார்க்கத்தினை ஸ்தாபித்தல் (விடய இல. 19)

குருநாகலிலிருந்து ஹபரன வரையான தம்புள்ளை ஊடாக புதிய புகையிரத மார்க்கத்தினை ஸ்தாபிப்பது தொடர்பிலான சுற்றாடல் தாக்கம் தொடர்பான ஆய்வறிக்கை ஏற்கனவே கிடைக்கப்பெற்றுள்ளது. சீன நிர்மாணிப்பு கம்பனியான இதன் வேலைத்திட்ட முன்மொழிவாளர்கள் மூலம் முன்வைக்கப்பட்ட தொழில்நுட்ப யோசனைகள் தொடர்பில் செயற்படுத்தும் போது அமைச்சரவையின் மூலம் நியமிக்கப்பட்ட கலந்தாலோசனை குழுவிற்கு உதவுவதற்காக பொறியியல் செயற்பாடுகளுக்கான மத்திய ஆலோசனை பணியகத்தின் சேவையினை பெற்றுக் கொள்வது தொடர்பில் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

08. பல்கலைக்கழகங்களில் அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்தல் (விடய இல. 30)

ரஜரட்ட, ருஹுணு, வயம்ப, சபரகமுவ, கிழக்கு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பல்கலைக்கழகங்களின் பணியாளர்களுக்காக வசிப்பிடங்களை நிர்மாணிப்பதற்கான வேலைத்திட்டத்தை செயற்படுத்துவதற்கும்ரூபவ் திறந்த பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பாண பிரதேச மத்திய நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக 04 மாடிகளைக் கொண்ட கட்டிடம் ஒன்றை நிர்மாணிப்பதற்கும், பேராதனை பல்கலைக்கழகத்தின் பழைய கட்டிடங்களை முழுமையாக புனரமைப்பு செய்வதற்கும் உயர் கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் கௌரவ லக்ஷமன் கிரியெல்ல அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

09. உடம்பினுள் செலுத்தும் (ஐஏ) பொருட்கள் உற்பத்திகூடமொன்றை இலங்கையில் நிறுவுதல் (விடய இல. 31)

நாட்டின் அனைத்து வைத்தியசாலைகளிலும் தேவைப்படுகின்ற உடம்பினுள் செலுத்தும் (IV) பொருட்களை உற்பத்தி செய்வது போன்ற அம்சங்களை இலகுவிலும், குறைந்த செலவிலும் மேற்கொள்வதற்கு உடம்பினுள் செலுத்தும் (IV) பொருட்கள் உற்பத்தி கூடமொன்றை இலங்கையில் நிறுவுவதற்கு அமைச்சரவை ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ளது.

அவ்வுற்பத்தி கூடத்தினை நிறுவும் வேதை திட்டத்தை, அமைச்சரவையின் மூலம் நியமிக்கப்பட்ட நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் அடிப்படையில் வழங்குவது தொடர்பில் சுகாதார போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்னவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

10. ஹோமாகம பிரதேச செயலகத்திற்காக புதிய கட்டிடம் ஒன்றை நிர்மாணித்தல் (விடய இல. 33)

ஹோமாகம பிரதேச செயலகத்திற்காக மூன்று மாடிகளைக் கொண்ட புதிய கட்டிடம் ஒன்றை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையின் மூலம் நியமிக்கப்பட்ட நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் அடிப்படையில் வழங்குவது தொடர்பில் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

11.அநுராதபுரம், பொலன்னறுவை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கும் வகையில் நிலக்கீழ் நீர்க் கண்காணிப்பு வலையமைப்பினை உருவாக்கும் முதல் நிலைக் கருத்திட்டம் (விடய இல.34)

அநுராதபுரம் மாவட்டத்தின் மல்வத்து ஓயா, பொலன்னறுவை மாவட்டத்தின் மாதுறு ஓயா மற்றும் மொனராகலை மாவட்டத்தின் கும்புக்கன் ஓயா ஆகிய ஆற்றுப் பள்ளத்தாக்குகளை உள்ளடக்குவதாக நிலக்கீழ் நீர் கண்காணிப்பு தரவுத் தொகுதியொன்றை நிலைநாட்டுவதற்கான முதல் நிலைக் கருத்திட்டத்துக்கான ஒப்பந்தத்தை அமைச்சரவை நியமித்த பேச்சு வார்த்தை குழுவின் சிபார்சுகளுக்கு அமைவாக வழங்குவது தொடர்பில் நீர்ப்பாசன மற்றும் நீர்வளங்கள் முகாமைத்துவ அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

12. தென் அதிவேக நெடுஞ்சாலையை நீடிக்கும் கருத்திட்டத்தின் சிவில் வேலை நிர்மாணங்கள் மேற்பார்வை செய்தல் மற்றும் வடிவமைப்பு மீளாய்வு ஆகியவற்றுக்கான ஆலோசனைச் சேவை (விடய இல. 41)

தென் அதிவேக நெடுஞ்சாலையை நீடிக்கும் கருத்திட்டத்தின் சிவில் வேலை நிர்மாணங்கள் மேற்பார்வை செய்தல் மற்றும் வடிவமைப்பு மீளாய்வு ஆகியவற்றுக்கான ஆலோசனைச் சேவைகளை வழங்குவதற்கான வசதிகளைச் செய்வதற்கு ரென்மின்பி யுவான்577 மில்லியன் கடன் தொகையொன்றை பெற்றுக் கொள்வதற்காக சீன அரசாங்கத்துடன் வேலை வரைச்சட்டக உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திடுவதற்கும், சீன அரசாங்கத்தின் சலுகைக் கடன் வசதியின் கீழ், இலங்கை அரசாங்கம் சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கியுடன் கடன் உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திடுவதற்கும் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

13. ‘ரஜரட்டயின் எழுச்சி’ ஜனாதிபதி நிகழ்ச்சித்திட்டத்தின் ‘பொலன்னறுவையை கட்டி எழுப்புவோம்’ மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் வீதிகளை அபிவிருத்தி செய்வதற்கான 04 ஒப்பந்தங்களை வழங்குதல் (விடய இல. 49)

‘ரஜரட்டயின் எழுச்சி’ ஜனாதிபதி நிகழ்ச்சித்திட்டத்தின் ‘பொலன்னறுவையை கட்டி எழுப்புவோம்’ மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் வீதிகளை அபிவிருத்தி செய்வதற்கான 04 ஒப்பந்தங்களை அமைச்சரவையின் மூலம் நியமிக்கப்பட்ட நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் அடிப்படையில் வழங்குவது தொடர்பில் உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

* மன்னம்பிட்டிய – அரலகன்வில – மாதுறுஓயா வீதியினை அபிவிருத்தி செய்தல்

* தெஹியத்தகன்டிய – அரலகன்வில வீதியை புனர்நிர்மானம் செய்தல்

* மின்னேரியா – கல்லோயா வீதியினை அபிவிருத்தி செய்தல்

* எலஹெர – கிரித்தலே வீதியினை அபிவிருத்தி செய்தல்

14. தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்திற்குரிய மொனராகலை தொழிற் பயிற்சி நிலையத்தின் வசதிகளை விரிவுபடுத்தல் (விடய இல. 50)

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்திற்குரிய மொனராகலை தொழிற் பளிற்சி நிலையத்தில், 250 இளைஞர்களுக்குப் பயிற்சியளிக்கக் கூடிய வசதிகளைக் கொண்ட 10 பாடநெறிகளை நடாத்த முடியுமான வகையில் புதியதொரு விரிவுரை மண்டபத்தை நிர்மாணிப்பது தொடர்பில் தேசியக் கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் எனும் ரீதியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

15. சந்தையில் அரிசியின் விலை உயர்வதை தடுப்பதற்காக பாதுகாப்பான தொகையினை பேணுவதற்காக அரிசியினை இறக்குமதி செய்தல் (விடய இல. 58)

நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சி காலநிலை காரணமாக போதுமான மழை கிடைக்காமையினால் வருடத்தில் பெரும்போகங்களின் மூலம் பயிரிடப்படும் நெல் பயிர் செய்கை நிலங்கள் குறைந்துள்ளன. இதனால் சந்தையில் அரிசியின் விலை அதிகரிப்பு ஏற்படலாம் எனக் கருதி விலை அதிகரிப்பை தடுப்பதற்கு பாதுகாப்பான தொகையொன்றை பேணுவதற்காக தனியார் துறையினரால் அரிசியினை இறக்குமதி செய்வதற்கும், அவ்வாறு இறக்குமதி செய்யப்படும் அரிசியினை பாதுகாப்பான முறையில் களஞ்சியப்படுத்தி வைப்பதற்கும், சந்தையில் அரிசியின் விலையை கட்டுப்படுத்துவதற்கு ஏதுவான வகையில் அவ்வரிசியினை முறையாக சந்தைக்கு பகிர்ந்தளிப்பதற்கும் கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் ரிஷாட் பதியூதீனினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. (ஸ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>