சில கேள்விகளும், மஹிந்த ராஜபக்ஷவின் சூடான பதில்களும்


mahinda-rajapaksa_24

முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவிடம் டுவிட்டர் சமூக வலைத்தளத்தினூடாக சகோதர ஊடகவியலாளர்கள், நாட்டின் நடைமுறை விடயங்கள் தொடர்பில், இன்று (10) கேட்ட கேள்விகளுக்கு, அவர் அளித்துள்ள சூடான பதில்களை டெய்லி சிலோனுக்காக இங்கே தமிழில் தருகின்றோம்.

கேள்வி – உங்களுக்கு மீண்டும் நாட்டின் தலைமைப் பதவி கிடைத்தால் என்ன செய்வீர்கள்?

பதில் – எவர் இந்த நாட்டை ஆட்சி செய்தாலும், தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்களுக்கு மிகச் சரியானதை செய்ய வேண்டும்.

கேள்வி – அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி அபேட்சகராக செயற்பட நடவடிக்கை எடுத்தால், கட்சியின் போசகராக உள்ள நீங்கள் அதற்கு ஆதரவு வழங்குவீர்களா?

பதில் – கட்சி அப்பொழுது என்ன தீர்மானத்தை எடுக்குமோ,அதற்கேற்ப எனது நிலைப்பாடும் மாறும்.

கேள்வி – ஹம்பாந்தோட்டை சுதந்திர வர்த்தக வலயத்துக்கு தாங்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளமைக்கு (நேற்று தாங்கள் மேற்கொண்ட சந்திப்பின் போது)  சீன தூதுவர் அதிருப்தியை வெளிப்படுத்தினாரா?

பதில் – செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் முறைமை தொடர்பில் அவர் அதிக கவனம் செலுத்தினார்.

கேள்வி – ஹம்பாந்தோட்டையில் காணிகளை விற்பனை செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வரும் நீங்கள், சாம்புரிலுள்ள காணியை வெளிநாட்டவருக்கு விற்பனை செய்தீர்களல்லவா?

பதில் – சாம்புர் மற்றும் நுரைச்சோலை அபிவிருத்தித் திட்டங்கள் இலங்கை அரசாங்கத்தினுடையது. சாம்புர் செயற்திட்டம் இந்தியாவினால் செயற்படுத்தப்படவிருந்தது. நாம் ஒரு போதும் காணிகளை வெளிநாட்டவருக்கு விற்பனை செய்ய வில்லை.

கேள்வி – அரசியல் லாபத்துக்காக தேரர்களை களத்தில் பயன்படுத்துகிறீர்கள் என்ற குற்றச்சாட்டு தங்கள் மீது முன்வைக்கப்படுகின்றது. இது தொடர்பில் தாங்கள் யாது கூற விரும்புகிறீர்கள்?

பதில் – நாட்டில் நெருக்கடி நிலைமை உருவாகிய ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சமய தலைவர்கள் களத்துக்கு வந்துள்ளனர். அவர்களுக்கும் அரசியலுக்கும் இடையில் எந்த தொடர்பும் கிடையாது.

கேள்வி – தங்களது சீன விஜயத்தின் நோக்கம் என்ன? தாங்கள் சீனாவுக்கு வழங்கிய வாக்குறுதி என்ன? சீனா தங்களிடம் எதை வேண்டியது?

பதில் – சீனா எப்போதும் எமது நண்பன். அவர்களது உதவியை நாம் மதிக்கின்றோம். மக்களை இருப்பிடங்களை விட்டும் அகற்றாமலும், சூழலுக்கு சேதம் விளைவிக்காமலும் ஆரம்ப கட்ட உடன்படிக்கையின் பிரகாரம் ஹம்பாந்தோட்டை செயற்திட்டத்தை முன்னெடுக்குமாறு நான் அவர்களைக் கேட்டுக் கொண்டேன்.

கேள்வி – வில்பத்து காடு ஆக்கிரமிக்கப்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது. இது தொடர்பில் தங்களது கருத்து என்ன?

பதில் – அபிவிருத்தியும் தான், மீள்குடியேற்றமும் தான் சூழலுக்கு அழிவை ஒருபோதும் ஏற்படுத்தாதிருத்தல் வேண்டும்.

கேள்வி – தங்களது சகோதரர் ஒருவர் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவதாக கூறப்படுகின்றது. அது உண்மையா?

பதில் – அரசியல் யாப்பு ரீதியில் போட்டியிட தகுதியுடைய எவரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முன்வரலாம்.

கேள்வி – கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தாங்கள் தோல்வியடைவதற்கான காரணம் என்னவென இனங்கண்டு கொண்டீர்களா?

பதில் – ஆம், பல காரணங்கள் உள்ளன. நாம் அது தொடர்பில் ஆராய்ந்தோம். நாம் எதிர்காலத்துக்கு தயார்.

கேள்வி – தாங்கள் மீண்டும் அதிகாரத்துக்கு வரத் தயாரா? அதற்காக எப்போது நடவடிக்கை எடுப்பீர்கள்?

பதில் – மக்கள் தயார் என்றால், அது மிக விரைவில் நடைபெறும். (மு)

– நன்றி லங்கா தீப 

– தமிழில் : எம்.எம். முஹிடீன் இஸ்லாஹி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>