நல்லாட்சி அரசாங்கத்தில் தேர்தலுக்குத் தடை போடுவது களநிலைமையா?


Maithree-and-Mahinda+gossip

வித்தியாசமான இரு கொள்கைகளைக் கொண்ட தேசிய கட்சிகள் இணைந்து தேசிய அரசாங்கம் அமைக்கும் போது, நாட்டின் அபிவிருத்தியில் பெரும் புரட்சியையும், புரையோடிப் போயுள்ள தேசியப் பிரச்சினைகளுக்கு தீர்வையும் காணலாம் என்ற எதிர்பார்ப்பு பொதுவாக நாட்டு மக்களிடம் எழுவது நியாயமானது.

எமது நாட்டிலும் இந்த அரசியல் மாற்றம் 2015 ஜனவரி 09 ஆம் திகதி நடைபெற்றது. நாட்டு மக்களின் மனங்களிலும் ஏற்பட்ட எதிர்பார்ப்புக்கு இரண்டு வருடம் கழிந்துள்ளது. மூன்றாவது வருடம் உருண்டோடிக் கொண்டிருக்கின்றன. இன்னும் எதிர்பார்ப்புக்கள் வெறுமனே காணல் நீராகவே காணப்படுகின்றது என்பது ஒவ்வொரு நாளும் வெளியாகும் பத்திரிகைச் செய்திகளின் சாரம்சம்.

மக்களின் எதிர்பார்ப்புக்களாகவுள்ள நாட்டின் அபிவிருத்தி,தேசிய பிரச்சினைகள் என்பனவற்றை தீர்ப்பது எப்படிப் போனாலும், நாட்டில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் பிரச்சினைகளும், அரசாங்கத்துக்குள் கருத்து முரண்பாடுகளினால் உருவாகும் முரண்பாடுகளும் அதிகரித்த வண்ணமே காணப்படுகின்றது.

மீதொடமுல்ல அனர்த்தமும் அதனடியாக கொழும்பு நகர் எதிர்கொண்ட குப்பைப் பிரச்சினையும் இன்னும் ஒழுங்கான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படாத முரண்பாடாகவே காணப்படுகின்றது. நாட்டிலுள்ள பிரதான ஏழு நகர்களில் இன்னும் குப்பை அனர்த்தம் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படும் தகவல் அரசாங்கத்தின் தலைவலியை இன்னும் அதிகரிக்கச் செய்வதாகவே உள்ளது.

மற்றொரு புறத்தில் மே தினப் பனிப்போர். ஸ்ரீ ல.சு.க.யின் உள்வீட்டுச் சண்டை அரசியல் மேடையை சூடாக்கிக் கொண்டிருக்கின்றது.  அதிகாரத்திலுள்ள ஸ்ரீ ல.சு.க.யின் கண்டி மே தினக் கூட்டமும், காலி முகத்திடல் மஹிந்த ராஜபக்ஷவின் மே தினக் கூட்டமும் கடந்த இரு வாரங்களாக ஊடகங்களில் முக்கிய செய்திகளாக மாறியுள்ளன.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு மே தினக் கூட்டத்துக்காகவும் எதிர்வரும் தேர்தலுக்காகவும் களத்தில் பணியாற்ற அமைப்பாளர்கள் தேவைப்படுகின்றனர். சுதந்திரக் கட்சியின் தொகுதி, மாவட்ட அமைப்பாளர்களாக இருந்துகொண்டு, மஹிந்தவுக்காக வேலை செய்பவர்களை நீக்கும் நடவடிக்கை ஜனாதிபதியினால் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றது. கட்சியிலுள்ள பழையவர்களை அமைப்பாளர் பதவிகளிலிருந்து நீக்குவது கட்சிக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜனாதிபதியின் மே தினக் கூட்டத்தில் கலந்துகொள்ளாத கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக எடுக்கப் போகும் நடவடிக்கையிலும் தற்பொழுது வழமைபோன்று சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளதாக காட்டப்படுகின்றது.

இதேவேளை, நாட்டுக்குள் மீண்டும் முஸ்லிம்களை இலக்காகக் கொண்டு கடந்த அரசாங்கத்தைப் போன்று முழு அதிகாரத்துடன் அல்லாது இனவாத சக்திகள் தங்களது கைங்கரியங்களை முன்னெடுத்து வருகின்றன. அம்பாறை தீகவாபி மாணிக்கமடு பிரதேசத்தில் முஸ்லிம்களின் சொந்த இடங்களில் விகாரைக்கான கட்டிடங்களை அமைக்கும் முயற்சி முன்னெடுக்கப்படுகின்றது.

இந்த பலவந்தமான ஆக்கிரமிப்புக்கு எமது நாட்டின் சில தனியார் தேசிய தொலைக்காட்சிகள் வானத்திலிருந்து விழுந்தவர்களுக்கு கூறுவது போன்று, வியாக்கியானங்களை வழங்கி வருகின்றன. ஒரு பௌத்த நாட்டில் விகாரைக்குரிய புனிதப் பிரதேசத்தில், விகாரை அமைக்க முடியாத ஒரு சூழல் நாட்டில் காணப்படுவதாக இந்த ஊடகங்கள் சித்தரிக்க முயற்சிக்கின்றன. முஸ்லிம்களிடம் காணப்படும் காணி உறுதிகளை கேவலமாக வெறுமனே ஒரு தாள் துண்டு அம்பாறை மாவட்ட செயலாளருடன் கொழும்பிலிருந்து சென்ற பொதுபல சேனா அமைப்பு நடாத்திய கலந்துரையாடலின் போது பொதுபல சேனாவின் செயலாளர் ஞானசார தேரர் குறிப்பிட்டார்.

ஸ்ரீ பாத மாலையின் உச்சிப் பிரதேசத்தில் புத்தர் சிலையொன்றை வைப்பதற்கான முயற்சியை கடந்த 25 ஆம் திகதி சிங்கள தேசிய அமைப்பு எனும் இயக்கம் முன்னெடுத்தது. எல்லா சமுகத்தினராலும் புனிதமாக கருதப்படும் இடத்துக்கு தனியான உரிமை கோரும் இந்த தீவிரவாத அமைப்பின் முயற்சியை பொலிஸார் தடுத்து நிறுத்தினர். சிறிபாகம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இரத்தினபுரி மேலதிக நீதிமன்றத்தில் தடை உத்தரவைப் பெற்று அந்த நடவடிக்கையை மேற்கொண்டிருந்தார்.

இது இவ்வாறிருக்கையில், நாட்டில் ஓயாதுள்ள தொழிற்சங்கங்களின் போராட்டத்தை அடக்குவதற்கு, புதிய படையணியொன்றை முன்னாள் இராணுவத் தளபதியின் தலைமையில் அமைப்பதற்கு ஜனாதிபதி யோசனையொன்றை அமைச்சரவையில் முன்வைத்திருந்தார். இந்த செய்தி தொழிற்சங்கங்களின் போராட்டத்தின் பால் தூண்டியும், அரசாங்கத்தின் மீதுள்ள எதிர்ப்பை அதிகப்படுத்தியும் உள்ளது. நல்லாட்சி அரசாங்கத்துக்காக உழைத்த தொழிற்சங்கங்களும் இந்த தீர்மானத்தை கடுமையாக விமர்சித்துள்ளது.

அரசாங்கம் எதிர்வரும் நாட்களில் முன்னெடுக்கப் போகும் தேசிய வேலைத்திட்டங்களுக்கு எதிராக எழும் என  எதிர்பார்க்கப்படும் எதிர்ப்பலைகளை சமாளிப்பதற்குத் தேவையான ஒரு முன்னேற்பாடாக தெரிவித்தே ஜனாதிபதி இந்த விசேட படையணி யோசனையை அமைச்சரவையில் தெரிவித்துள்ளமை பலரதும் கவனத்தை ஈர்த்த விடயமாகும்.

தேர்தல் ஒன்றை முகம்கொடுக்க தமக்குச் சக்தியில்லையென இரு பெரும் கட்சிகளும் உள்ளார்ந்தமான ரீதியில் உணர்கின்றன. இதனால், பல்வேறு சாக்குப் போக்குகளைத் தெரிவித்து தேர்தலை பிற்போட்டு வருகின்றது. கூட்டு எதிர்க் கட்சியின் பலம் இன்னும் எதிர்பார்த்த அளவு குறையாதுள்ளமை அரசாங்கத்துக்கு பெரும் சங்கடமாக மாறியுள்ளது.

கடந்த மே தினக் கூட்டத்திலும் காலிமுகத்திடலை நிரப்பிய மக்களைக் காணும் போது அரசாங்கம் தேர்தலை இன்னும் பல மாதங்களுக்கு தள்ளிப் போடும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நல்லாட்சி அரசாங்கம் இவ்வருடத்தில் முதலாவது முகம்கொடுக்கும் தேர்தல், புதிய அரசியல் யாப்புத் திருத்தத்துக்கான சர்வஜன வாக்கெடுப்பாகும் என அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன கடந்த 25 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.

பாராளுமன்றத்தில் புதிய அரசியல் யாப்பு நிறைவேற்றப்பட்டதன் பின்னர், அது சர்வஜன வாக்கெடுப்புக்கு விடப்படும்.  புதிய அரசியல் யாப்பை தயாரிக்கும் பணிகளுக்காக குழு நியமித்தல் மற்றும் பொது மக்கள் அறிவுட்டல் என்பன ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சர்வஜன வாக்கெடுப்பை அடுத்து, மாகாண சபைத் தேர்தலும், உள்ளுராட்சி சபைத் தேர்தலும் நடைபெறும் எனவும் அவர் மேலும் அறிவித்துள்ளார்.

துருக்கியில் அண்மையில் நடைபெற்ற அரசியல் யாப்பு மாற்றத்துக்கான சர்வஜன வாக்கெடுப்பு வெற்றிபெற்றது. அந்நாட்டில் ஏ.கே.பி. கட்சிக்குள்ள செல்வாக்கு தொடர்ந்தும் குறையாதுள்ளமை இந்த வெற்றிக்குரிய வெளிப்படையான இரகசியமாகும். அத்துடன், கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் திகதி துருக்கியில் ரெஸிப் தையிப் அர்துகானின் அரசாங்கத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட இராணுவ சதிப் புரட்சி மிகவும் வெற்றிகரமாக மக்களினாலேயே முறியடிக்கப்பட்டது. இது தற்பொழுது நடைபெற்று முடிந்த சர்வஜன வாக்கெடுப்புக்கு ஒரு பலமாக அமைந்தது என சர்வதேச ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஆனால், எமது நாட்டில் தற்பொழுது நல்லாட்சி அரசாங்கம் முகம்கொடுத்துள்ள உள்ளக நெருக்கடிகள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாதுள்ள நிலையில் எதிர்நோக்கியுள்ள பொது மக்களின் வெறுப்புக்கள் என்பவற்றுக்கு மத்தியில் சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடாத்தவுள்ளதாக அரசாங்க பேச்சாளர் சமிக்ஞை ஒன்றை வழங்கியுள்ளார்.

உள்ளுராட்சி சபைத் தேர்தலையே நடாத்துவதற்கு இரு முறை சிந்திக்கும் நிலையில் உள்ள அரசாங்கம், சர்வஜன வாக்கெடுப்புக்கு உண்மையில் செல்லுமா? என்பது அரசியல் சாணக்கியம் உள்ளவர்களுக்கு ஒரு வினாவாகவே உள்ளது.

சர்வஜன வாக்கெடுப்பு தோல்வியடைந்தால் அரசாங்கம் கூட கலைக்கப்படும் நிலைக்கு செல்ல நேரிடும். தற்பொழுது, நாடு அரசாங்கத்துக்கு சாதகமில்லாது இருக்கும் நிலையில், அரசாங்க பேச்சாளர் விடுத்துள்ள அறிவிப்பு ஏனைய தேர்தல்கள் குறித்த கவனத்தை திசை திருப்புவதற்கான  ஒரு கவனக் கலைப்பானாக இருக்கலாம் என்ற சிந்தனையும் எவர் மனதிலும் எழாமல் இல்லை.

  • கஹட்டோவிட்ட முஹிடீன் இஸ்லாஹி

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>