விஷேட பயிற்சி நெறியை பூர்த்தி செய்த ஆலிம்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு


m

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் ஒருங்கிணைப்பிற்கும் ஒத்துழைப்பிற்குமான கவுன்ஸிலும் (CCC) இத்திஹாதுல் மதாரிஸ் ஒன்றியமும் இணைந்து நடத்திய ஆலிம்களுக்கான 150 மணித்தியாலங்கள் கொண்ட “சமூக ஒற்றுமையையும் சகவாழ்வையும் மையப்படுத்திய விஷேட பயிற்சி நெறியை பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கடந்த சனிக்கிழமை (13) மாலை கொழும்பு- 10 அல்ஹிதாயா கல்லூரியின் எம்.ஸீ. பஹார்தீன் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

அஷ்ஷெய்க் அல்ஹாபிழ் எம். அப்துல்லாஹ் அவர்களின் குர்ஆன் பாராயணத்துடன் ஆரம்பமான இந்நிகழ்வை அஷ்ஷெய்க் ஏ.ஸீ.எம். பாஸில் அவர்கள் நெறிப்படுத்தினார்.

m

நிகழ்வின் வரவேற்புரையையும் பாடநெறி தொடர்பான அறிமுக உரையையும் நிகழ்த்தினார் அ.இ.ஜ.உ.வின் பிரதித் தலைவரும் ஒருங்கிணைப்பிற்கும் ஒத்துழைப்பிற்குமான கவுன்ஸிலின் தலைவருமான அஷ்ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத். அவர் தனது உரையில் பின்வருமாறு தெரிவித்தார்:

இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு. அ.இ.ஜ.உ.வின் வரலாற்றில் முதல் தடவையாக உலமாக்களுக்கான விஷேட பயிற்சிநெறி வெற்றிகரமாக நிறைவுபெற்றிருக்கிறது. ஆலிம்களை வலுவூட்டுவது ஜம்இய்யதுல் உலமாவின் பணிகளில் முதன்மை பெற வேண்டிய, முக்கியத்துவம் பெற வேண்டிய பணி என்பதில் இரண்டு கருத்துக்கு இடமிருக்காது.

ஆலிம்களை ஆன்மிக ரீதியாகவும் அறிவு ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் வலுவூட்டுகின்ற தலையாய கடப்பாடு அ.இ.ஜ.உ.வுக்கு இருக்கிறது.

அந்த வகையில் இந்த பயிற்சிநெறியை பல்வேறு உள்ளடக்கங்களுடன் விஞ்ஞானபூர்வமாக வடிவமைத்து வெற்றிகரமாக நிறைவுசெய்திருக்கின்றோம்.

முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழ்ந்து வருகின்ற எமது நாட்டில் அல்குர்அன், ஸுன்னாவின் ஒளியில் இஸ்லாமிய அமைப்புகளுக்கு, முஸ்லிம்களுக்கு மத்தியில் ஒற்றுமையை வளர்த்து பெரும்பான்மை இன மக்களோடு சகவாழ்வைப் பேணி வாழ்வது தொடர்பான விரிவுரைகள், வழிகாட்டல்கள் இந்தப் பயிற்சிநெறியில் உள்வாங்கப்பட்டிருந்தன.

இஸ்லாத்தின் நடுநிலை சிந்தனை (வஸதிய்யா கோட்பாடு), பிக்ஹுல் அவ்லவிய்யாத், பிக்ஹுல் இஃதிலாப், இஸ்லாத்தின் வழிகெட்ட பிரிவுகள், முகாரனதுல் அத்யான் எனும் தலைப்பிற்கூடாக பௌத்தம், கிறிஸ்தவம், இந்து சமயங்கள் குறித்த அறிமுகம், உலகளாவிய ரீதியில் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் சவால்கள், சர்வதேச முஸ்லிம் உம்மத் பற்றி கண்ணோட்டம், முஸ்லிம்கள் இலங்கையில் எதிர்நோக்கும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையிலான தலைப்புகள், இன்றைய இளைஞர்கள் எதிர்நோக்கும் சவால்கள், பிரச்சினைகள், அவர்களது உளநிலை, அவர்களை உளவியல் ரீதியாக அணுகும் விதம், உளவளத் துணை, உள ஆற்றுப்படுத்தல் துறையுடன் தொடர்பான அடிப்படை விடயங்கள், அடிப்படை கணினி அறிவு, தலைமைத்துவ பயற்சிகள், மென்திறன்களை (Soft Skills) வளர்த்துக் கொள்வதற்கான வழிகாட்டல்கள்… முதலான அம்சங்களை உள்ளடக்கியதாக எமது பயிற்சிநெறி வடிவமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இஸ்லாமிய அறிஞர்கள், ஆலிம்கள், தாயிகள்… ஏனை துறையிலுள்ளவர்களைப் போல் தொடர்ந்தும் கற்க வேண்டும்; தம்மை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற வகையில் தொடர்ந்தும் இத போன்ற பயிற்சிநெறிகள் நடைபெறும். 150 மணித்தியால இப்பயிற்சிநெறியைப் பூர்த்தி செய்தவர்களுக்கு அடுத்த கட்ட பயிற்சிநெறி ஒன்றையும் விரைவில் ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன, இன்ஷா அல்லாஹ்.

பயிற்சி நெறியைப் பூர்த்திசெய்த ஆலிம்களான அஷ்ஷெய்க் ஹபீல், அஷ்ஷெய்க் றிஸ்வான் (நஹ்ஜி), அஷ்ஷெய்க் றிழ்வான் ஆகியோர் குறித்த பயிற்சிநெறியின் மூலம் தாம் பெற்றுக் கொண்ட பயன்களை விவரித்ததோடு தமது சிந்தனையில் ஏற்படுத்திய மாற்றம் குறித்தும் விக்கினர். ஆலிம்களை வலுவூட்டுகின்ற இது போன்ற பயிற்சிநெறிகள் தொடர்ந்தும் நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினர்.

அ.இ.ஜ.உ.வின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் அஹமத் முபாரக் உரை நிகழ்த்துகையில்,

அ.இ.ஜ. உலமா இந்த நாட்டில் நீண்ட காலமாக மகத்தான பணிகளை ஆற்றி வருகிறது. ஜம்இய்யதுல் உலமாவின் 15 க்கும் மேற்பட்ட பிரிவுகளில் ஒன்றான ஒருங்கிணைப்பிற்கும் ஒத்துழைப்பிற்குமான கவுன்ஸிலின் பல்வேறு வேலைத் திட்டங்களில் இது முக்கியமானது.

ஆலிம்கள் வலுப்படுத்தப்பட வேண்டியதன் தேவையை உணர்ந்த ஜம்இய்யதுல் உலமா, அந்த இலக்கை அடைந்து கொள்ளும் நோக்கில் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. மக்தப்களில் கற்பிக்கின்ற முஅல்லிம், முஅல்லிமாக்கள், முஆவின்களுக்கு தொடர்ந்தேர்ச்சியான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. அரபுக் கல்லூரிகளின் இறுதி வருட மாணவர்களுக்கு தேவையான பாடநெறி திட்டமிட்ட அடிப்படையில் நடத்தப்பட்டு வருகிறது. இதன் தொடரில்தான் இந்த விஷேட பயிற்சிநெறியும் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்திருக்கிறது.

நடுநிலைச் சிந்தனையுடன் சமூக ஒற்றுமையை விரும்பும், உண்மையை நிதானமாக முன்வைக்கும் ஆலிம்களே இன்று தேவைப்படுகிறார்கள். மோதலில் ஈடுபடுகின்றவர்கள், நடுநிலைப் போக்கை புறக்கணிப்பவர்கள், எல்லை மீறி நடந்து கொள்பவர்களால் சமூகத்திற்கு எவ்வித பயனும் கிட்டப் போவதில்லை. இன்றைய நாட்டு சூழலில் இந்தப் பயிற்சிநெறியினூடாக நீங்கள் பெற்ற அறிவை சமூகத் தளத்தில் எத்திவைக்க கடமைப்பட்டுள்ளீர்கள்.

ஆலிம்கள் தொடர்பு கொள்ள வேண்டிய, பங்களிப்புச் செய்ய வேண்டிய, உரிமை கொண்டாட வேண்டிய இடம் அ.இ.ஜ. உலமா மாத்திரமேதான். ஆலிம்கள் ஒன்றிணைந்து சமூகத்தை வழிநடத்துகின்ற அமைப்பாகிய அ.இ.ஜ. உலமாவில் ஒவ்வோர் ஆலிமும் உறுப்புரிமை பெற்று சமூகப் பணியாற்ற முன்வர வேண்டும் எனத் தெரிவித்தார்.

நிகழ்வில் சிறப்புரையாற்றிய அ.இ.ஜ.உ.வின் தலைவர் அஷ்ஷெய்க் றிஸ்வி முப்தி உரையாற்றுகையில், பின்வருமாறு தெரிவித்தார்:

மறுமை நாள் வரை சமூகத்தில் தோன்றக்கூடிய அத்தனை பிரச்சினைகளுக்குமான தீர்வை அல்லாஹ் நபி (ஸல்) அவர்களது வாழ்வில் வைத்திருக்கின்றான். நபித் தோழர்கள் முன்மாதிரி சமூகமாக வாழ்ந்து வழிகாட்டியிருக்கிறார்கள். அவர்களது அறிவும் இறைவிசுவாசமும் தவ்ஹீதும் பரிபூரணமாக இருந்தன் காரணமாக அவர்களது வாழ்க்கை முன்மாதிரியாக அமைந்திருந்தது. ஒரு சில நபித் தோழர்கள் மார்க்கத்தை பின்பற்றுவதில் சற்று தீவிரமா நடந்து கொண்டார்கள். அந்த சந்தர்ப்பங்களில் நபியவர்கள் வஹியின் ஒளியில் அவர்களுக்கு மிகச் சிறந்த வழிகாட்டல்களை வழங்கினார்கள்.

உஸ்மான் இப்னு மழ்ஊன் (ரழி) அவர்கள் ஆண்மை நீக்கம் செய்துகொண்டு துறவறம் மேற்கொள்ள விரும்பினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவருக்கு அனுமதி மறுத்தார்கள். அவரை அதிலிருந்து தடுத்து நிறுத்தி அவரை நெறிப்படுத்தினார்கள்.

நபி (ஸல்) அவர்களின் தோழர்களில் சிலர் நபியவர்களின் துணைவியரிடம் (சென்று), நபியவர்கள் தனிமையில் செய்யும் வழிபாடுகள் குறித்து வினவினர். (அவர்கள் கூறிய மறுமொழியைக் கேட்ட பின் நபியவர்கள் செய்யும் வழிபாடுகளைக் குறைவாக எண்ணிக்கொண்டு) அவர்களில் ஒருவர், “நான் பெண்களை மணமுடிக்க மாட்டேன்” என்று சொன்னார். மற்றொருவர் “நான் மாமிசம் உண்ண மாட்டேன்” என்றார். இன்னொருவர், “நான் படுக்கையில் உறங்க மாட்டேன்” என்றார். (இதை அறிந்த) நபி (ஸல்) அவர்கள் இறைவனை வாழ்த்திப் போற்றிவிட்டு, “சிலருக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் இப்படியெல்லாம் கூறுகின்றனர். ஆனால், நான் (இரவில்) தொழுகிறேன்; உறங்கவும் செய்கிறேன். நோன்பும் நோற்கிறேன்; நோன்பை விட்டு விடவும் செய்கிறேன். பெண்களை மணந்தும் கொள்கிறேன். என் வழிமுறையை எவர் புறக்கணிக்கிறாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்” என்று அவர்களை எச்சரிச்து அவர்களுக்கு அல்குர்ஆனின் நிழலில் வழிகாட்டினார்கள். தீவிரப் போக்கை தடுத்து நடுநிலையை கடைபிடிக்குமாறு வலியுறுத்தினார்கள்.

எந்த ஒரு விடயத்தையும் அல்குர்ஆன், ஸுன்னாவின் ஒளியில் அணுக வேண்டுமே தவிர பகுத்தறிவுக்கு முன்னுரிமை கொடுத்து அணுகக் கூடாது. அது சமூகத்தை ஆபத்தில் தள்ளிவிடும்.
ஒரு தடவை வத்திக்கானிலிருந்து இலங்கைக்கு வருகை தந்திருந்த இரண்டு முக்கியமான பாதிரிகள் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா பிரதிநிதிகளான எம்மை சந்திப்பதற்காக வந்திருந்தனர். பல்வேறு விடயங்களை கலந்துரையாடிய அவர்கள், எம்மிடம் ஒரு கேள்வியை தொடுத்தனர். நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பரிசோதனைக் குழாய்கள் மூலம் குழந்தைகள் (Test Tube Babies) பெறப்படவில்லையே! இது போன்ற விடயங்களில் நீங்கள் எத்தகைய மார்க்க நிலைப்பாட்டை எடுக்கிறீர்கள்? என்பதுதான் அவர்களது கேள்வி. அப்போது நாம் அவர்களிடம், “நீங்கள் சிறந்த ஒரு கேள்வியை தொடுத்திருக்கிறீர்கள்.

முஹம்மத் நபியவர்களது காலத்தில் நபித் தோழர்களுள் முக்கிய ஒருவரான முஆத் இப்னு ஜபல் (ரழி) அவர்கள் யெமன் பிராந்தியத்திற்கான ஆளுநராக நியமனம் செய்யப்படுகிறார்கள். அப்போது மக்களுக்கான தீர்வுகளை வழங்குவது குறித்துத் தூதர் (ஸல்) அவர்கள் தோழரிடம் “உம்மிடம் பிரச்சினைகள் ஏதும் வந்தால் எவ்வாறு தீர்த்து வைப்பீர்?” என வினவியபோது, முஆத் இப்னு ஜபல் (ரழி) அவர்கள் “அல்லாஹ்வின் வேதத்தில் உள்ளவற்றைக் கொண்டு தீர்ப்பளிப்பேன்” என பதில் கூறினார்கள். அப்போது தூதரவர்கள், “அல்லாஹ்வின் வேதத்தில் நீங்கள் தீர்வைக் காணா விட்டால் என்ன செய்வீர்?” எனத் வினவியபோது, “அல்லாஹ்வின் தூதரின் ஸுன்னாவிலிருந்து தீர்ப்பளிப்பேன்” என்கிறார்கள். அதன் பின்பு “அல்லாஹ்வின் தூதரின் ஸுன்னாவிலும் நீங்கள் தீர்வைக் காணா விட்டால் என்ன செய்வீர்?” என மீளவும் கேட்டபொழுது “எனது அறிவிற்குட்பட்ட வரைக்கும் பூரணமாக இஜ்திஹாத் செய்து தீர்வு சொல்வேன்” எனக் கூற தூதரவர்களும் ஆமோதித்து, அல்லாஹ்வைப் புகழ்ந்தார்கள்.

இந்த வழிகாட்டலின் அடிப்படையில் குறித்த ஒரு கணவன்- மனைவியின் இந்திரியமாக இருக்குமாயின் பரிசோதனைக் குழாய்கள் மூலம் குழந்தைகள் பெறப்படுவது அனுமதிக்கப்பட்டிருக்கிறது என நாம் பத்வா வழங்கியிருப்பதாக அவர்களுக்கு கூறியபோது அவர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்கள்.

இவ்வாறே எமது நாட்டிலும் முஸ்லிமல்லாதவர்கள் எமது மார்க்கத்திலுள்ள பல விடயங்கள் குறித்து அறியாதிருக்கிறார்கள். அவர்களுக்கு இஸ்லாம் குறித்த தெளிவை வழங்கும் நோக்கில் “சமாஜ சங்வாதய” எனும் தலைப்பில் ஆறு சிறு நூல்களைத் தொகுத்து அ.இ.ஜ.உ. வெளியிட்டு வைத்திருக்கிறது. இதுவரை 50 ஆயிரம் பிரதிகள் அச்சிடப்பட்டுள்ளன. அவற்றில் 90 வீதமானவை நாடளாவிய ரீதியில் பெரும்பான்மை சகோதரர்களுக்கே விநியோகிக்கப்பட்டுள்ளன.

ஜம்இய்யதுல் உலமா எப்போதும் கூட்டு முயற்சியின் அடிப்படையிலேயே தீர்மானங்களை நிறைவேற்றி வருகிறது. காலத்தின் தேவையைக் கருதி இதனை மேற்கொண்டு வருகின்றோம்.

சமூகத்தை மையமாக வைத்து தீர்ப்புகள் வழங்காமல் தன்னிச்சையாக கருத்துக்களை முன்வைப்பது சமூகத்தில் குழப்பத்தையே ஏற்படுத்தும். எனவேதான் கலீபாக்களுடைய ஆட்சிக் காலத்தில் கூட்டு ஆலோசனையடிப்படையில் தீர்மானங்களை எடுத்தார்கள்.

அபூ தர் அல்கிஃப்பாரி (ரழி) அவர்கள் ஒரு மிகச் சிறந்த ஒரு ஸஹாபி. அவர் தான் புரிந்து கொண்டதை முன்வைத்த விதம் மக்கள் மத்தியில் ஒரு வகையான குழப்பத்தை ஏற்படுத்தியது. ஹஜ்ஜுக்காக வருபவர்கள் பணம் சேகரித்து வைக்கக் கூடாது. இரண்டரை சதவீதமல்ல, உங்களிடமுள்ள அனைத்தையுமே நீங்கள் கொடுத்து விட வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்ததன் காரணமாக முஆவியா (ரழி) அவர்கள் அபூ தர் அல்கிஃப்பாரி (ரழி) அவர்களது விடயத்தில் தூரநோக்குடன் சிந்தித்து அவர்களை ஷாம் தேசத்திலிருந்து மதீனாவுக்கு அனுப்பி வைத்தார்கள்.

மதீனா வந்தடைந்த அபூ தர் அல்கிஃப்பாரி (ரழி) அவர்களுடன் கலந்துரையாடிய உஸ்மான் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள், “நீங்கள் தன்னிச்சையாக சில மார்க்க தீர்ப்புகளை வழங்குகிறீர்கள். மதீனாவுக்கு அருகிலுள்ள அர்-ரப்தா எனும் இடத்தில் குடியமருங்கள்” எனக் கூறி அவர்களை அங்கு அனுப்பி வைத்தமைக்கு இஸ்லாமிய வரலாறு சான்று.

எனவேதான், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா பல்வேறு அமைப்புகளையும் சார்ந்த தரம்வாய்ந்த 40 ஆலிம்களைக் கொண்ட பத்வா குழுவின் மூலமே நிதானமாக முறையில் பத்வாக்களை வழங்கி வருகிறது. எனவே, ஒருவர் தன்னிச்சையாக, தனது அறிவுத் தரத்துக்கேற்ப மார்க்கத் தீர்ப்புகளை வழங்குவது ஆபத்தானது என்பதை நாம் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும். கூட்டுப் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

தலைவர் அவர்களின் உரையோடு பயிற்சிநெறியை பூர்த்தி செய்த ஆலிம்களுக்கான சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள், ஆலிம்கள், பயிற்சிநெறியின் வளவாளர்கள், துறைசார்ந்தவர்கள் என பலரும் பங்கேற்று நிகழ்வை சிறப்பித்தனர்.

– அபூ அர்வா-

a (1)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>