டெங்கு ஒழிப்பு பிரகடனம்: காலம் கடந்த ஞானம்


dengue_fever-mosquito-bite

நாடு தற்போது பல சவால்களுக்கு முகம்கொடுத்து வந்தாலும், சுகாதார ரீதியில் முகம் கொடுத்துள்ள பாரிய சவாலாக டெங்கு ஆட்கொல்லி நோய் இடம்பிடித்துள்ளது. அந்தவகையில் கடந்த மாதங்களில் வரட்சியினால் நீர்ப்பற்றாக்குறை மற்றும் இதர பிரச்சினைகளால் பல மாகாணங்களும் பாதிப்புக்குள்ளான நிலையில் மழை வருமா? வரட்சி நீங்குமா?, வெப்பம் தனியுமா? என்ற மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவது போல மழையும் நாட்டில் இடையிடையே பொழிய ஆரம்பித்தாலும், அந்த எதிர்பார்ப்பு சற்று மாறியுள்ளது என்றே கூறலாம்.

ஆம், மீண்டும் வந்துவிட்டது டெங்கு எனும் ஆட்கொல்லி நோய். நாட்டில் தற்போது இடைப்பருவப்பெயர்ச்சி காலநிலை மாற்றமடைந்து தென்மேல் பருவபெயர்ச்சி காலநிலை ஆரம்பித்துள்ள நிலையில் நாடெங்கும் ஆங்காங்கே விட்டு விட்டு மழைபொழிகின்றது. இதனால் வெப்பம் சற்று தணிந்தாலும், டெங்கு நுளம்பின் பெருக்கத்திற்கு இந்த இடைக்கிடையே பெய்யும் மழை பெரும் சாதகமாக அமைந்துவிட்டது என்றே கூறலாம்.

மீண்டும் அதி தீவிரமாக பரவி வரும் டெங்குவை கட்டுப்படுத்த நாடளாவிய ரீதியில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் கொழும்பு, கம்பஹா உள்ளிட்ட 12 மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

கடந்த காலங்களில், டெங்கு நோய் பற்றிய பல விழிப்புணர்வுகள், டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் என பல வேலைத்திட்டங்களை முன்னெடுக்கப்பட்டாலும், டெங்குவினால் பாதிப்புக்குள்ளாகின்றவர்கள் மற்றும் பலியாகின்றவர்களின் எண்ணிக்கையானது இன்னும் அதிகரித்து செல்கின்ற சூழ்நிலையே உருவாகியுள்ளது.

தற்போதைய நிலையில் இலங்கை வரலாற்றிலேயே மிக மோசமான சூழ்நிலையை டெங்கு பாதிப்புக்கு முகம்கொடுத்துள்ளது. 2017 ஆம் ஆண்டு ஆரம்பமாகி கடந்த நான்கு மாதங்களில் 44 ஆயிரத்து 623 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 120 பேர் இதுவரையில் மரணித்துள்ளார்கள். இந்த மரண வீதத்தின் எண்ணிக்கையானது மீண்டும் அதிகரிக்குமா? என்ற அச்ச நிலையில் நாட்டில் ஒவ்வொருவரும் உள்ளனர். மேல் மாகாணத்தில் மாத்திரம் நூற்றுக்கு 41.4 வீதமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளார்கள் என்றும், நாட்டிலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்திலேயே இனங்காணப்பட்டுள்ளார்கள் என்றும் சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இவ்வாண்டின் ஆரம்பத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள்

2002 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் 10 ஆயிரம் பேரே டெங்கு நோயினால் பாதிப்படைந்திருந்தார்கள். ஆனாலும் 2009 ஆம் ஆண்டு 35 ஆயிரம் பேர் டெங்கு நோயாளர்களாக ஒரேயடியாக இனங்காணப்பட்டார்கள். 2009 இலிருந்து ஆரம்பிக்கப்பட்ட ஒவ்வொரு வருடத்திலும் 35 ஆயிரம் பேருக்கு அதிகமாகவே பாதிப்புக்குள்ளானார்கள்.

அந்தவகையில் 2014 ஆம் ஆண்டு 47 ஆயிரத்து 246 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 97 பேர் பலியாகியுள்ளனர். 2015 ஆம் ஆண்டு 29 ஆயிரத்து 777 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதோடு 60 பேர் உயிரிழந்துள்ளனர். 2016 ஆம் ஆண்டு 55 ஆயிரத்து 150 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 90 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆனால் இந்த ஆண்டில் ஆரம்ப நான்கு மாதங்களிலேயே 44 ஆயிரத்து 623 பாதிப்புக்குள்ளாகியுள்ளதோடு, 120 பேர் பலியாகியுள்ளனர். இவ் எண்ணிக்கையானது சுகாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலாகவும், பாரிய சவாலாகவும் அமைந்துள்ளதோடு, இந்த தீவிர நிலை தொடருமாயின் நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

கடந்த சில மாதங்கள்; வரட்சி காலநிலை ஏற்பட்டிருந்தது. இதன் காரணமாக நீர் தேங்கி நிற்பதற்கான வாய்ப்புக்கள் குறைவாகவே காணப்பட்டது. அதனால் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டிருந்தன. ஆனால் தற்போது தென்மேல் பருவப்பெயர்ச்சி காலநிலை ஆரம்பித்துவிட்டதன்காரணமாக நீர் தேங்கி நிற்பதற்கான சந்தர்ப்பம் அதிகம். இனிவரும் காலங்களில் வீட்டிலோ அல்லது சுற்றுச்சூழலிலோ நுளம்புகள் பரவக்கூடிய இடங்களை கண்டுபிடித்து அகற்றுதல், புகைவீசுதல் என பல்வேறு ஒழிப்பு வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது நல்லது.

டெங்கு நோயாளர்கள் அதிகரித்துள்ள மாவட்டங்கள்

இந்த வருடத்தின் ஆரம்ப நான்கு மாதங்களில் கொழும்பு, கம்பஹா, கண்டி, குருநாகல், இரத்தினபுரி, கேகாலை, யாழ்ப்பாணம் மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளார்கள். அந்தவகையில் கம்பஹா மாவட்டத்தில் மாத்திரம் 400 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளார்கள்.

டெங்குவின் அறிகுறி

டெங்கு நோயின் முக்கிய நோய் அறிகுறியாக கடும் காய்ச்சல் காணப்படும். அத்தோடு, தலைவலி, உடம்பு வலி ஆகியனவும் நோய் அறிகுறிகளாக இனங்காணப்பட்டாலும், சாதாரண காய்ச்சல் என்றால் டெங்குவாக தான் இருக்கும் என்று பரிசோதனை செய்வதும், சிகிச்சைப் பெற்றுகொள்வதும் நல்லது.

வைத்தியசாலையில் டெங்குவை இனங்காணல்

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளை மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் குறையவில்லை என்றால் முழுமையாக இரத்த பரிசோதனை மேற்கொள்வர். முதலில் இரத்தபரிசோதனையில் தெரியாவிட்டாலும், ஒவ்வொருநாளும் ஒருமுறையேனும் இரத்தப்பரிசோதனை மேற்கொள்வது சிறந்தது. அவ்வாறு மேற்கொள்வதால் நோயினை அறிந்து கொண்டு அதற்கேற்றவாறு சிகிச்சை பெறலாம்.

டெங்கு நோயினை குணப்படுத்த முதலில் உடலுக்கு ஓய்வு மிகமுக்கியம். காய்ச்சலுக்காக வைத்தியரினால் கொடுக்கப்படுகின்ற மாத்திரைகளை தவிர வேறு மாத்திரைகளை பாவிக்காமல் இருக்கவேண்டும். உடல் வலி, தலைவலி என்பவற்றை கட்டுப்படுத்த வலி நிவாரணி மாத்திரைகளை வைத்தியரின் எந்த பரிந்துரைகளும் இன்றி உட்கொள்வது கூடவே கூடாது. வைத்தியர்கள் வேறு மாத்திரைகளை கொடுத்தாலும், குறித்த மாத்திரை தொடர்பில் வைத்தியரிடம் கேட்டு தெரிந்து வைத்திருப்பது நல்லது.

டெங்குவை கட்டுப்படுத்த ஜனாதிபதி முன்னிலை

தற்போது வேகமாக பரவிவரும் டெங்கு நோயை கட்டுப்படுத்துவதில் தமது சமூகப் பொறுப்பை நிறைவேற்றுவதற்கு ஒன்றிணையுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரச மற்றும் தனியார் துறையினரிடமும் அரசியல்வாதிகளிடமும் கேட்டுக்கொண்டுள்ளார்.

டெங்கு ஒழிப்புக்காக நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிகழ்ச்சித்திட்டங்களுக்கு தேவையான வசதிகளை வழங்கி தமது நேரடி பங்களிப்பை வழங்குமாறும் அரசியல் பிரதிநிதிகளிடமும் கேட்டுக்கொண்டுள்ளார்.

டெங்கு நோய் வேகமாகப் பரவுவது தொடர்பாகவும் அந்த நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ள வேண்டிய உடனடி நடவடிக்கைகள் குறித்தும் டெங்கு ஒழிப்பு செயலணியுடன் ஜனாதிபதி கடந்த 16 ஆம் திகதி கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தார்.

ஜுன் முதல் டெங்கு ஒழிப்பு காலம் பிரகடனம்

அந்தவகையில் டெங்கு ஒழிப்புக்காக அரச மற்றும் தனியார் துறை இணைந்த தேசிய நிகழ்ச்சித்திட்டம் ஜுன் மாதம் முதலாம் திகதி முதல் 3 மாதக் காலப்பகுதிக்கு டெங்கு ஒழிப்பு காலப் பகுதியாக பிரகடனப்படுத்தப்படவுள்ளது.

டெங்கு நோய் ஒழிப்புக்காக அரசாங்க நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், சுற்று நிருபங்களை வெளியிடுவதுடன், அது தொடர்பாக தனியார் துறைக்கும் விழிப்பூட்டுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.

இனிவரும் காலங்களில் பாரியளவிலான கட்டிடங்கள் நிர்மாணிக்கப்படும் பிரதேசங்களில் நீர் தேங்கியிருப்பதற்கு எதிராக சட்டமும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

மேலும் அனைத்து அரச மற்றும் தனியார் நிறுவனங்களிலும் பாடசாலைகளிலும் ஒவ்வொரு வாரத்திலும் ஒரு நாள், ஒரு மணிநேரம் சூழலைச் சுத்தம் செய்வதற்கும் டெங்கு ஒழிப்பு தொடர்பாக அறிவூட்டுவதற்குமான ஒரு நிகழ்ச்சித் திட்டத்தையும் நடைமுறைப்படுத்தவுள்ளது.

டெங்கு ஒழிப்புக்குத் தேவையான பக்டீரியாக்களை உற்பத்தி செய்யும் செயற்பாட்டினை குறித்த நிறுவனங்களினூடாக இலங்கையில் மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கப்படவுள்ளன.

நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை சூழலில் இருந்து நீக்கி இந்த நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கு உரிய தெளிவை வழங்கும் நிகழ்ச்சித் திட்டங்களை தொடர்ச்சியாக ஊடகங்களினூடாக பிரச்சாரம் செய்ய வேண்டியதன் அவசியத்தைதன்மையும் தற்போது ஏற்பட்டுள்ளது.

சுற்றாடல் கண்காணிப்பில் பொலிஸாரின் உதவி

சுற்றாடல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பொலிஸாரை மேலும் பலப்படுத்தி டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவது தற்போதைய சூழ்நிலையில் மிக முக்கியமாக கருதப்பட்டுள்ளன.

அத்தோடு, டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் முப்படையினரும் சுகாதார அமைச்சும் இணைந்து நடைமுறைப்படுத்திவரும் நிகழ்ச்சித் திட்டங்களை மேலும் பலப்படுத்தப்படவுள்ளது.

இதேநேரம், டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை நாடளாவிய ரீதயில் அதிகரிதுள்ளமையால், பல வைத்தியசாலைகளில் இடநெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. அந்தவகையில், களுபோவில மற்றும் ராகம வைத்தியசாலைகளில் தற்காலிக கட்டிடங்களை அமைத்து அந்த நோயாளிகளுக்குத் தேவையான வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

பாடசாலைகளிலும் விழிப்புணர்வு

மேல்மாகாணத்தில் 10 ஆயிரத்து 89 பாடசாலைகளில் டெங்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதோடு, இதன்போது 298 பாடசாலைகளில் டெங்கு குடம்பிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் பாடசாலை சூழலை சுத்தமாக வைத்திருக்குமாறு 630 பாடசாலைகளுக்கு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதோடு, 106 பாடசாலைகளுக்கு எதிராக வழக்கு தொடர்வதற்கு எதிர்பார்த்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 28, 29 ஆம் திகதிகளில் மேல்மாகாணத்தின் சகல பாடசாலைகளிலும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதன்போதே 298 பாடசாலைகளில் டெங்கு குடம்பிகள் இருப்பது கண்டறியப்பட்டது.

எனவே இனிவரும் காலங்களில் டெங்கு நோய் விழிப்பூட்டும் செயற்திட்டம் பாடசாலைகளிலும் முன்னெடுக்கப்படவேண்டும். இதற்கு மிக முக்கிய பொறுப்பான அப்பாடசாலைகளின் அதிபர்கள் விளங்குகின்றார்கள்.

எனவே எதிர்வரும் காலங்களில் டெங்கு எனும் ஆட்கொல்லி நோயை முற்றாக ஒழிக்க நாட்டிலுள்ள அனைவரும் முன்வந்து செயற்படவேண்டும். நுளம்பினால் ஏற்படுகின்ற இந்த நோயினால் அப்பாவி உயிர்கள் பறிபோவதை தடுத்து சுற்றுச்சூழலையும், வீட்டையும, நீர்தேங்கி நிற்காது சுத்தமாக வைத்திருப்பது ஒவ்வொருவரனதும் கடப்பாடாகும்.

இதேவேளை, ஜனாதிபதியினால் கடந்த 16 ஆம் திகதி டெங்கு ஒழிப்பு செயலணியுடன் கூடி கலந்துரையாடி எதிர்வரும் ஜுன் மாதம் முதல் 3 மாதக்காலப்பகுதிக்கு டெங்கு ஒழிப்புக் காலப்பகுதியாக பிரகடனம் என்பது காலம் கடந்த ஞானம் என்றே கூறவேண்டும்.

ஏனெனில், கடந்த 2016 ஆம் ஆண்டு முழுவதிலும் 55 ஆயிரத்து 150 பேர் டெங்கு நோயினால் பாதிப்புக்குள்ளாகி இனங்காணப்பட்டுள்ளார்கள், ஆனால் இவ்வாண்டு ஆரம்பித்து கடந்த 4 மாதங்களில் 44 ஆயிரத்து 623 பேர் இனங்காணப்பட்டுள்ளதோடு, 120 பேர் பலியாகியுள்ளனர். இத்தனை உயிர்களும் பறிப்போனதிற்கு பின்னரா இவ்வரசுக்கு பிரகடனம் ஒன்றை கொண்டு வரவேண்டும் என்ற தீர்மானம் எழுந்துள்ளது.

டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள், விழிப்புணர்வுகள் என்பன மேற்கொண்டாலும் டெங்கு நுளம்பு சரியாக அழிக்கப்படுகின்றதா? நீர்ப்பாற்றாக்குறை வரட்சி என நாட்டில் மற்றொரு பிரச்சினை வந்தவுடன் டெங்குவை மறந்துவிடுவதும் சாத்தியமே. நாட்டின் சுகாதாரத்துறையும் அப்பாவி உயிர்கள் நுளம்பினால் பலியாகுவதை தடுப்பதற்கு நடவடிக்கையெடுப்பதும் சிறந்தது. எனவே அரசினால் மேற்கொள்ளப்படும் இந்த 3 மாத கால டெங்கு ஒழிப்பு பிரகடனம் சாத்தியப்படுமா என்பது கேள்விக்குறியே? (நு)

-பா.மலரம்பிகை-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>