பகடைக்காயாக மாறியுள்ள முஸ்லிம் சமூகம் !


muslima

மது நாட்டைப் பொருத்தவரையில் எதிர்க் கட்சி என்றால் அரசாங்கத்தின் எல்லா நல்லது கெட்டதையும் எதிர்ப்பவர்கள் என்பது எல்லோரும் அறிந்து வைத்துள்ள உண்மைகளாகும். இருப்பினும், அண்மைக் காலமாக கூட்டு எதிர்க் கட்சி தெரிவித்து வரும் கருத்துக்கள் ஒரு கனம் அரசாங்கத்தைத் திரும்பிப் பார்ப்பதற்கு தூண்டுகின்றது என்றே சொல்ல வேண்டும்.

நாட்டில் பெய்த அடை மழையினால் ஏற்பட்ட அனர்த்தங்களில் புதையுண்டிருந்த இனவாதம் தற்பொழுது மீண்டும் விஷ்வரூபம் எடுத்துள்ளது என்பதை சமூக ஊடகங்களுடன் தொடர்புடையவர்களுக்கு விளக்கத் தேவையில்லாத உண்மையாகும். அரச அனுசரணை இல்லாமல் நாட்டில் எந்தவொரு நடவடிக்கையையும் நகர்த்த முடியாது என்பதை நாட்டின் புலனாய்வுத் துறையின் வல்லமையை அறிந்த சகலரும் ஏற்றுக் கொள்வர்.

ஞானசார தேரர் தலைமறைவாகி நீதிமன்றத்திலும் ஆஜராகாமல் இருக்கின்றார் என்பதையும், பிடியாணை பிறப்பிக்கப்பட்டும், நான்கு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டும் பிடிபடாமல் மறைந்துள்ளார் என்பதையும் நினைத்துப் பார்க்கும் போது அதிகமாக சிரிப்பவர்களை பைத்தியம் என்று மட்டும் சொல்ல வேண்டாம். இதுதான் எமது நாட்டு அரசியல் என்று பலர் ஆதங்கப்பட்டுக் கொள்கின்றார்கள்.

முஸ்லிம்களுடைய எரிக்கப்படும் வியாபார நிறுவனங்கள் குறித்தும், தாக்குதலுக்குள்ளாகும் அல்லாஹ்வின் வீடுகள் பற்றியும் இந்த நாட்டின் சிறுபான்மையினர் காப்பீடாக கூறப்படும் ஜனாதிபதி, முஸ்லிம் அமைச்சர்கள் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தமது கவலையைத் தெரிவிக்க ஒரு சிறு நேரம் கொடுக்காமல் இருக்கின்றார் என்பது ஆச்சரியமான ஒரு விடயமாகும்.

இனவாதத்தின் முன்னாள் மௌனம் சாதித்த ஒரு ஜனாதிபதியின் செயல்பாட்டை கண்ணால் கண்டவர்கள் கடந்த 2015 ஆம் ஆண்டு எடுத்த தீர்மானமும் தலைகீழாகவே மாறி நிற்கின்றது என காண்பவர்கள் மேலே பார்த்து கையை ஏந்துவதை விட வேறு ஒன்று இல்லை என்றுதான் எண்ணுகின்றார்கள்.

நாட்டில் எரிந்துகொண்டிருக்கும் விடயம் குறித்து முறையிட நேரம் கேட்டு மூன்று வாரங்களாகியும் எந்தவித பதிலும் இல்லாதிருப்பதாக முஸ்லிம்களின் சிறு ஊடகங்களில் வெதும்பி நின்ற எழுத்துக்கள் கண்ணீர் விட்டன.

இது இவ்வாறிருக்க, வில்பத்துப் பிரச்சினையில் மும்முரமாக முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சாரத்தைக் கொண்டு சென்றவரும், அமைச்சர் ரிஷாட் உடன் நேரடியாக தொலைக்காட்சி விவாதத்தில் கலந்துகொண்டவருமான சாலக தேரர், கடந்த வாரம் களுத்துறையில் நிவாரணம் வழங்கிய நிகழ்வில் ஜனாதிபதியுடன் கொண்டிருந்த நெருக்கமான உறவை ஊடகங்களில் கண்ட ஒருவருக்கு, பொதுபல சேனா விடயத்தில் ஜனாதிபதியின் மௌனம் குறித்து சந்தேகம் ஏற்படாமல் இருக்க வாய்ப்பில்லை.

இதேவேளை, ஞானசார தேரருக்கு பாதுகாப்பு வழங்கி, அவரின் நடவடிக்கைகளுக்கு அனுசரணை வழங்கும் பலமுள்ள மனிதர் யார் என்ற கேள்வி எல்லோரிடையேயும் பரவலாக இருந்தது. முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி, “நீதி அமைச்சர் விஜேதாசவே ஞானசார தேரரை மறைத்துப் பாதுகாக்கின்றார்” என பகிரங்கமாகவே தெரிவித்திருந்தது அனைவருக்கும் ஞாபகமிருக்கும்.

இது இவ்வாறிருக்கையில், கூட்டு எதிர்க் கட்சி தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள இனப்பிரச்சினை தொடர்பிலான இரகசியங்களை பகிரங்கமாக தெரிவித்து வருகின்றது.

கடந்த 12 ஆம் திகதி இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட கூட்டு எதிர்க் கட்சியின் பங்காளியான லங்கா சமசமாஜக் கட்சியின் பிரதான செயலாளர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்திருந்த கருத்து பலரது மனதுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு கருத்துக்கு அணி சேர்ப்பது போல காணப்பட்டது.

நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரரை ஜாதிக ஹெல உறுமய கட்சியின் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவே மறைத்து வைத்துள்ளதாக பேராசிரியர் ஊடகங்கள் மத்தியில் உரத்துக் கூறியிருந்தார்.

பல ஊடகங்களில் முக்கிய அரசியல் வாதியொருவரே ஞானசார தேரரை மறைத்து வைத்திருந்ததாக செய்தி வெளியாகியிருந்தன. ஆனால், அமைச்சர் யார் என்பது எங்கும் கூறப்படவில்லை. இதனாலேயே உண்மையை வெளிப்படுத்த வேண்டியிருந்தது எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இவரை மறைத்து வைப்பதற்கு பல்வேறு நியாயங்கள் உள்ளன. அவற்றுள் ஒன்றுதான் ஞானசார தேரர் கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் ஜாதிக ஹெல உறுமயவின் வேட்பாளராக போட்டியிட்டவர். அத்துடன், தற்பொழுது அக்கட்சியில் தவிசாளராக இருக்கும் ஹெலிகல்லே விமலசார தேரரும் ஆரம்பத்தில் பொதுபல சேனாவுடன் ஒட்டியிருந்தவர்.

இதன்காரணமாக பொதுபல சேனாவுக்கும் ஜாதிக ஹெல உறுமய கட்சிக்கும் நெருங்கிய தொடர்பு காணப்பட்டது என பேராசிரியர் திஸ்ஸ விதாரண தனது கருத்துக்கு ஆதாரம் சேர்த்தார்.

எது எவ்வாறிருப்பினும், பேராசிரியரின் கருத்துக்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஊடகங்களில் வெளிப்படையாக மறுப்புத் தெரிவித்திருந்தார்.

பொதுபல சேனாவை உருவாக்குவதற்கு உதவிய ராஜபக்ஷாக்களிடம் இந்த திஸ்ஸ விதாரண போய் கேள்வி கேட்க வேண்டும். அதற்கு பால் ஊட்டி, வாகனம் வழங்கியவர் கோட்டாபய ராஜக்ஷவே. இவரிடம் போய் பொதுபல சேனா பற்றிக் கேட்க வேண்டும் எனவும் அமைச்சர் சம்பிக்க கூறியுள்ளார்.

எது எப்படிப் போனாலும் முஸ்லிம்கள் பல தரப்பினராலும்  பகடைக் காய்களாக பயன்படுத்தப்படுகின்றார்கள். அதனை உணராதவர்களாக இன்னும் எமது அரசியல் களம் காணப்படுகின்றது என்பதை நினைக்கும் ஒரு சமூக உணர்வு கொண்டவர் நிச்சயம் கண்ணீர் வடிப்பார்.

அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவங்ச தெரிவித்துள்ள ஒரு கருத்து முஸ்லிம்களது மனங்களை மாத்திரமல்ல, நல்லுள்ளம் படைத்த அனைவரது உள்ளங்களையும் நோகடிக்கவே செய்யும்.

முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதச் செயற்பாடுகளின் ஊடாக அவசரகாலச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி, சமஷ்டி தீர்வை உள்ளடக்கிய அரசியலமைப்பை நிறைவேற்றிக் கொள்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக விமல் வீரவங்ச எம்.பி. கூறியுள்ளார்.

நாடு முழுவதும் இன்று முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதை வெறுமனே ஓர் இனவாதச் செயற்பாடாக மாத்திரம் பார்க்க முடியாது. இதன் பின்னால் பெரும் அரசியல் நிகழ்ச்சி நிரலொன்று இருக்கின்றது என்ற பயங்கரமான ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார்.

கடந்த காலத்தில் கறுப்பு ஜூலையை உருவாக்கிய ஐ.தே.க. தற்பொழுது மீண்டும் கறுப்பு ஜூலையொன்றை நோக்கி எட்டிப்பார்க்கின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இப்படியெல்லாம் ஆபத்தான ஒரு நிலைமைக்கு நாடு சென்று கொண்டிருக்கையில் முஸ்லிம் சமூகம் என்ன பதில் நடவடிக்கையை எடுத்திருக்கின்றது என்பதையே அனைவரும் திரும்பிப் பார்க்கின்றார்கள். வருமுன் காப்போம் என்ற கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் எமது சமூக உறுப்புக்களின் முன்னாள் உள்ளது என்பதை மட்டும் சுருக்கமாக கூறமுடியுமான பதிலாகவுள்ளது. -முற்றும்- (மு)

–  கஹட்டோவிட்ட முஹிடீன் எம்.ஏ.

2 comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>