பொலித்தீன் பாவனை தடை ; மாற்றுத் திட்டம் வேண்டும்


PLASTIC-AND-POLYTHENE_05127_02416
- ஆதில் அலி சப்ரி -

– ஆதில் அலி சப்ரி –

உலகமயமாக்கல், விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சி, டிஜிட்டல் யுகம் மனிதனுக்கு பல நன்மையான விளைவுகளையும் சொகுசையும் ஏற்படுத்தியுள்ளது போன்றே மறுபுறம் விரும்பத்தகாத, மனித நிலவுகைக்கே வேட்டு வைக்கும் பல தீமைகளையும் ஏற்படுத்தியுள்ளதை மறுக்கமுடியாது.

நவீன கண்டுபிடிப்புகள், அணுவாயுத பரிசோதனைகள், விண்வெளி ஆராய்ச்சிகள், விஞ்ஞான- டிஜிட்டல் கழிவுகள் வளிமண்டலத்தை மாசுபடுத்தி, ஓசோன் மண்டலத்தை பாதித்து, பூமி மண் வளத்தை இழந்து, நீர் வளம் அ்த்தமடைந்து, மனிதனின் நிலவுகைக்குத் தேவையான அனைத்து வளங்களும் இல்லாதொழியும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

காலத்துக்கு காலம் உலக நாடுகள் முகங்கொடுக்கும் மண் சரிவு, வெள்ளம், சுனாமி, புவியதிர்வு உட்பட இன்னோரன்ன அழிவுகளும் சாதாரணமாக இயற்கையின் சீற்றம், அசாதாரண சூழ்நிலை, என்பவற்றிற்கு இறையேற்பாடு போன்ற தலைப்புகளையிட்டு மறந்துவிடுகின்றோம். இயற்கை அனர்த்தங்களுக்கு மனிதனின் செயற்பாடுகளும் காணரமாகின்றன என்பதை ஏற்க மறுக்கின்றோம்.

இலங்கையும் வருடா வருடம் ஒவ்வோர் அனர்த்தத்துக்கு முகங்கொடுத்து வருகின்றது. வெள்ளம், மண்சரிவு, குப்பை மலை சரிவு என்று நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் இருப்பிடங்களை இழந்து முகாம்களில் வசித்து வருகின்றனர்.

மீதொட்டமுல்லை அனர்த்தத்தை தொடர்ந்து இலங்கையில் கழிவுகளை அப்புறப்படுத்தி, குவிக்க இடமில்லை என்ற நிலையேற்பட்டுள்ளது. குப்பைப் பிரச்சினைக்கு உடனடி தீர்வுத் திட்டமொன்றை ஆரம்பிக்கவும் அரசாங்கம் தவறியுள்ளது. இதனால் கொழும்பிலும், நகர்ப் புறங்களிலும் குப்பைகள் குவிந்து காணப்படுகின்றன.

குப்பை மற்றும் சுற்றாடல் பிரச்சினைகளை கருத்திற்கொண்டு ரெஜிபோம், பொலிதீன் பைகள், பொலிதீன் உணவு பொதிகள், லன்ச் சீட்களை பயன்படுத்தல், கொள்வனவு செய்தல் உற்பத்தி செய்தல் போன்ற அனைத்து செயற்பாடுகளையும் அரசாங்கம் தடைசெய்துள்ளது.

பொலிதீன், பிளாஸ்டிக் பாவனை குறித்த தேசிய கொள்கையொன்றை உருவாக்க கடந்த 2016ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 6ஆம் திகதி நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கைக்கமைய குறுகிய கால, மத்திய கால மற்றும் நீண்ட கால அடிப்படையில் செயற்படுத்த மகாவலி அபிவிருத்தி, சுற்றாடல் அமைச்சர் ஜனாதிபதி மைத்திரிபால முன்வைத்த திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதோடு, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 1ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.

பொலிதீன், பிளாஸ்டிக் பாவனையை தடைசெய்த அரசாங்கத்தின் தீர்மானம் பாராட்டுக்குரியதாகும். எனினும், இவ்விடயத்தை தவிர்த்து மாற்று வழிகளை பாவிப்பது குறித்து அரசாங்கம் மக்களை அறிவூட்ட தவறியுள்ளதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

பொலிதீன், பிளாஸ்டிக் பாவனையை தடைசெய்து மாற்றுத் திட்டங்களின்பால் மக்கள் செலுத்தப்படாதபோது, மக்கள் சவால்களை எதிர்கொள்வர். மக்கள் அதிருப்தியடையும்போது அரசாங்கத்தின் திட்டம் தோல்வியில் முடிவடையும். எனவே, பொலித்தீனுக்கு மாற்றுத் திட்டங்கள் குறித்து அரசு உடன் கவனம் செலுத்த வேண்டும்.

அரசாங்கம் தேசத்தின், பொதுமக்களின் நன்மை கருதியே பொலிதீன், பிளாஸ்டிக் பாவனையை தடைசெய்துள்ளது என்பதை பொதுமக்களும் உணர்ந்து செயற்படல் கட்டாயமாகும். குப்பைகளை உரிய இடங்களில் போடுதல், பொலிதீன்- பிளாஸ்டிக் பாவனையைத் தவிர்த்தலினூடாக சுற்றாடலுக்கு பங்களிப்பு செய்யவேண்டும். (ஸ)
– ஆதில் அலி சப்ரி –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>