ஆட்டிப் படைக்கும் டெங்கு


dengue

டெங்கு, நாளுக்கு நாள் இதே பேச்சு, ஊடகங்களிலும் சரி, சமூவலைத்தளங்களிலும் சரி இதனை எவ்வாறு ஒழிக்கலாம், பாதுகாப்பு பெறலாம் என்ற விழிப்புணர்வு பதிவுகளையும் செய்திகளையும் கடந்த சில நாட்களாக காணமுடிகின்றது.

டெங்கு எனும் ஆட்கொல்லி நோய் இலங்கையை பாரிய அச்சுறுத்தலுக்குள்ளாக்கியிருக்கின்றது. ஆம், இதுவரை டெங்குவால் 235 பேர் உயிரிழந்துள்ளதுடன், 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்குமா? என்ற அச்ச உணர்வுடனான கேள்விகள் அனைவரது மனதிலும் தோன்றியுள்ளது.

1962 இல் முதல் டெங்கு நோயாளி பதிவு:
நுளம்பினால் காவிச் செல்லப்படுகின்ற காவி நோய்களுள் இலங்கையில் டெங்கு நோய் முக்கிய இடத்தினை வகிப்பதுடன் முதல் தடவையாக ஆய்வுகூடப் பரிசோதனை மூலம் டெங்கு நோயென உறுதிப்படுத்தப்பட்ட ஒரு நோயாளி 1962 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டார். இந் நிலைமைகளின் கீழ் 1996 ஆம் ஆண்டு டெங்கு நோயானது கட்டாயமாக அறிவிக்கப்பட வேண்டிய நோய்ப் பட்டியலின் கீழ் உள்ளடக்கப்பட்டது. சுகாதார அமைச்சின் கடந்த கால பதிவுகளின்படி 2012 ஆம் ஆண்டிலேயே நாட்டில் டெங்கு நோய் மோசமாக அதிகரித்திருந்தது.

அக்காலப் பகுதியில் இந்நோயினால் பீடிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சுமார் 44 ஆயிரமாகவும், மரணமடைந்தோரின் எண்ணிக்கை 300 ஆகவும் காணப்பட்டது. 2012 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இவ்வருடத்திலேயே டெங்கு நோய் மிகத் தீவிரமாக அதிகரித்திருக்கின்றது. இவ்வருடத்தின் ஆறு மாத காலப் பகுதியில் டெங்கு நோயினால் பீடிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சுமார் 88 ஆயிரம் ஆகும்.

டெங்கு நோயால் ஏற்படுகின்ற மரணம் என்பது பாதையோரமாக செல்கின்ற ஒருவரை திடீரென வந்த வாகனம் ஒன்று மோதி விட்டு சென்றால் எதிர்பாராத விதமாக மரணம் சம்பவிக்குமே அதனை ஒத்ததே இம்மரணங்கள்.

ஆண்டு               நோயாளர் எண்ணிக்கை
2002 8 931
2003 4 672
2004 15 463
2005 5 994
2006 11 980
2007 7 332
2008 6 607
2009 35 095
2010 34 105
2011 28 140
2012 44 456
2013 32 063
2014 47 502
2015 29 777
2016 55 150
2017  இதுவரை 80 ஆயிரத்திற்கு அதிகம்

டெங்கு நோய் என்றால் என்ன?
இதனாலேயே டெங்கு காய்ச்சலினால் ஏற்படுகின்ற மரணம் பலரது மனங்களை மிகவும் பாதிப்படைய செய்கிறது. இது வயது வேறுபாடின்றி எல்லா வயதுடையவர்களையும் பாதிக்கிறது. குறிப்பாக எம்முடன் கொஞ்சி விளையாடுகின்ற குழந்தை செல்வங்களின் மரணம் குடும்பத்திலே நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

நுளம்பின் மூலம் பரவக்கூடிய நோயே டெங்கு நோய், இந்நுளம்பு கடித்து 5 முதல் 15 நாட்களுக்குள் நோய் தொற்றுக்குள்ளாகும். ஆரம்பதில் குளிர் காய்ச்சல், தலைவலி, கண்ணை சுற்றி வலி, முதுகு வலி, பின்னர் கடுமையான கால் மற்றும் முட்டு வலி நோய் வந்து சில மணிநேரத்தில் வரும். இலேசாக, நாடித்துடிப்பு குறைதல், இரத்த அழுத்தம் குறைதல் போன்றவையும் எற்படும். கண்கள், சிவந்து போகலாம்.உடலில் தோலில் சிகப்பு நிற மாற்றம் ஏற்படும். கழுத்து மற்றும் பிறப்பு உறுப்பு அருகே நெறிகட்டலாம்.

டெங்குவை எப்படி கண்டுபிடிப்பது?

டெங்கு நோயின் ஆரம்ப கால அறிகுறி, மற்ற வைரஸ் நோய் போல் இருந்தாலும், டெங்கு பரவும் காலகட்டத்தில், இந்த நோய் பரவும் பகுதியில் இருந்தாலோ, அல்லது அந்த பகுதிக்கு போய் வந்தாலோ, மேல் சொன்ன நோய் அறிகுறி இருந்தால், டெங்கு இருக்கும் வாய்ப்பு இருப்பதாக கருதி மருத்துவரை கலந்து ஆலோசிக்க வேண்டும். வைத்தியர்கள் இரத்த பரிசோதனையின் மூலம் இந்த நோயை கண்டு அறிவர்.

டெங்குவிற்கு சிகிச்சை முறை

இதற்கு தனியான மாத்திரை மருந்துகள் கிடையாது. காய்ச்சலை குறைக்க சாதாரண வலி நிவாரண மாத்திரைகளை வைத்தியர்கள் மூலம் பெற்றுகொள்ளவேண்டும். போதிய ஒய்வு, நன்றாக நீர் ஆகாரங்கள் உட்கொள்ளுதல் தான் இதற்கு சிகிச்சை. வைத்தியரின் அறிவுரை இல்லாமல், வலி நிவாரணிகள் எடுத்தால், இரத்த இழப்பு அதிகமாக்கலாம்.1 வீதத்திற்கும் குறைவான டெங்கு தான் உயிரிழப்பில் போய் முடிவும்.

3 மாத டெங்கு பிரகடனம் பொய்யா?

டெங்கு என்ற ஒரு சிறிய நுளம்பினால் ஒட்டுமொத்த இலங்கையும் ஆடிபோய் உள்ளது என்றே கூறவேண்டும். சுகாதாரத்துறைக்கு பாரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ள இந்நோயினை கட்டுப்படுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினாலும், ஜனாதிபதி செயலணியினாலும் கடந்த ஜுன் மாதம் முதலாம் திகதியிலிருந்து 3 மாதக்காலத்துக்குள் டெங்கு ஒழிப்பு பிரகடனம் அமுல்ப்படுத்தப்பட்டது. ஆனாலும், அந்த பிரகடனம் அமுல்ப்படுத்தப்பட்ட பின்னரே டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பலர் கேலியாக விமர்ச்சிக்கின்றனர்.

இந்த நோயின் தீவிர தன்மைக்கு அரசின் கவனயீனமே என்ற கருத்தும் உள்ளது. வெறும் வாய் வார்த்தைகளால் சுத்தம் செய்க, டெங்கை அழிக்குக, புகை விசுறுங்கள் என்று பிரச்சாரம் செய்யாமல் நடைமுறையில் காட்டினாலேயே இருநூறை தாண்டியுள்ள உயிர் பலிகளை குறைத்திருக்கலாம் என்று ஒருசிலரின் கருத்தாகவும் அமைந்துள்ளது. இந்த டெங்கு பிரகடணம் என்ற சொல் பொய்யாகவே பொய்த்து போயுள்ளமை பாதிக்கப்பட்டோரின் அதிகரிக்கப்பட்ட எண்ணிக்கையிலும், பலியானோரின் அதிகரிக்கப்பட்ட எண்ணிக்கையிலும் நிரூபணமாகியுள்ளது.
சிறுவர்கள் முதல் முதியவர்களை வரை வயது வித்தியாசம் பாராமல் தாக்கி வருகின்ற சிறிய ஆயுதமாக இந்த டெங்கு நுளம்பு வளர்ச்சியடைந்துள்ளது.

கட்டுக்கதைகள் நிலைக்கவில்லை

முள்ளை முள்ளால் எடுப்பது போல் நுளம்பின் மூலம் பரவுகின்ற டெங்கு நோயை நுளம்பின் மூலமே தடுக்கமுடியும் என்று யாரோ சொன்ன சிறுப்பிள்ளைத்தனமான கதைக்கு அரசு ஏமாற்றமடைந்துள்ளது என்றே கூறவேண்டும். ஆவுஸ்திரேலியாவிலிருந்து டெங்குவை அழிக்கக்கூடிய பக்டீரியாக்கள் கொண்டுவரப்படுவதாகவும், பூக்களிலுள்ள தேன்களை குடிக்கும் நுளம்புகளை இலங்கையில் உற்பத்தி செய்யப்படவுள்ளதாகவும் அண்மையில் பரவலாக பேசப்பட்டது. இது ஏதோ கட்டுக்கதை, சிறியவர்களுக்கு சொல்லப்படும் தேவதைக்கதையென்று ஒருசிலர் விமர்சிக்க, அப்பாவி மக்களோ நம்பிக்கையாக இருந்தனர். இருப்பினும் இக்கதை கட்டுக்கதையாகவே முடிவடைந்தது.

கொழும்பு ஜு.எச் க்கு புதிய வோட்

டெங்கு நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக 40 கட்டில்களை கொண்ட புதிய வோட் பிரிவு ஒன்று கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அண்மையில் திறந்துவைக்கப்பட்டது. டெங்கு நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள இந்த வோட்டுடன் வைத்தியசாலையில் மொத்தமாக 950 சிகிச்சை பிரிவு வாட்டுக்கள் கொழும்பு வைத்தியசாலையில் உள்ளன.

நாளாந்தம் காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட 150 நோயாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்றனர். இதுவரையில் 380 பேர் காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 380 பேரில் 80 பேரின் நிலைமை பாரதூரமாக இருக்கின்றது. டெங்கு நோயாளர்களுக்காக சிகிச்சை அளிப்பதற்கான மனித மற்றும் பௌதீக வளங்கள் வைத்தியசாலையில் அதிகரிக்கப்பட்டு வருகின்றது.

மேல் மாகாணத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதோடு, கொழும்பு மாவட்டத்தில் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்தவகையில் கொழும்பு தேசிய வைத்தியசாலை, களுபோவில வைத்தியசாலை ஆகிய வைத்தியசாலைகளில் காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட நோயாளர்கள் பெரும் எண்ணிக்கையில் நிரம்பி வழிக்கின்றனர். கொழும்பை அண்டியுள்ள பகுதியில் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள முடியும்.

1 மாதத்தில் 50 வீதத்தால் டெங்குவை குறைக்க திட்டம்

டெங்கு காய்ச்சல் பரவுவதை ஒரு மாதத்திற்குள் 50 வீதத்தால் குறைப்பதற்கு துரித திட்டமொன்றை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன நடைமுறைப்படுத்தவுள்ளார். உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிபுணத்துவ குழுவினரால் தயாரிக்கப்பட்ட அறிக்கையின் பிரகாரம் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுத்தப்படவுள்ளது. டெங்கு காய்ச்சலைத் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து அவர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தமைக்கு அமைவாக உலக சுகாதார ஸ்தாபனத்தினால் நான்கு விசேட நிபுணர்கள் நாட்டிற்கு வருகைதந்துள்ளனர்.

எதிர்வரும் மூன்று வாரங்களுக்குள் டெங்கு ஒழிப்பிற்கான உடனடி செயற்பாட்டுத் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. எனினும், டெங்கு ஒழிப்பிற்காக பிரான்ஸில் அறிமுகப்படுத்தப்பட்ட தடுப்பூசி, பிலிப்பைன்ஸில் பரீட்சார்த்தமாக பயன்படுத்தப்பட்ட போதிலும், இதுவரை அது வெற்றியளிக்கவில்லை. ஊடக அமைச்சு, ஊடக நிறுவனங்கள் இணைந்து டெங்கு பரவுவதை ஒழிப்பதற்காக மக்களுக்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றமையும் பாராட்டுக்குரியது என சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கைவிடப்பட்ட காணிகளுக்கு தண்டபணம்

டெங்கு நோயை கட்டுப்படுத்தும் முதல் நோக்கமாக மேல்மாகாணத்தில் கைவிடப்பட்டுள்ள காணிகளுக்கு தண்டப்பணம் அறவிடப்படவுள்ளதாக மேல் மாகாண முதலமைச்சர் அறிவித்துள்ளார். டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய வகையில் இக்காணிகள் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுமாயின் காணியின் பெறுமதியில் 2 சதவீதம் தண்டப்பணமாக அறவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சரின் அதிரடி உத்தரவு

டெங்குவால் மக்கள் நாளாந்தம் தமக்கு டெங்கு ஏற்பட்டு விடுமா என்ற பீதியில் வாழ்கின்ற சூழ்நிலையில், வைத்தியர்களை நாடி இரத்த பரிசோதனைகளை மேற்கொண்டு உறுதிசெய்துகொள்கிறார்கள். இதனை பொருட்டாக கொண்டு அவர்களிடம் இரத்த பரிசோதனைக்கு 250 ரூபாவை அறவிடுமாறு சுகாதார அமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார். பெரும்பாலும் ஒருவரது பலவீனத்தை பயன்படுத்தியே சம்பாதிக்கும் உலகம் இது. அந்த அடிப்படையில் இரத்த பரிசோதனைக்கு 1000, 2000 ரூபா என கறக்கும் நிலைமையும் இது. இதனை கருத்திற்கொண்டே சுகாதார அமைச்சர் அனைத்து தரப்பினருக்கும் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். ஆனாலும் இது சாத்தியப்படுமா?

மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றச்சாட்டு

டெங்கு நோய் தொடர்பில் மக்களுக்கு வழங்கப்படுகின்ற தகவல்கள் பொய்யானது என்று மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளது. அதாவது, டெங்கு நோய் பரவுவதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதில் அரசாங்கம் போதிய கவனம் செலுத்தத் தவறி விட்டதாகவும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை தாண்டி செல்கின்றது. இருப்பினும் 80 ஆயிரம் பேர் என தவறான தகவல்களையே வழங்குவதாக மருத்துவ அதிகாரிகள் சங்கம் வெளிப்படையாகக் குற்றம் சுமத்தியுள்ளது.

சைட்டம் மருத்துவ கல்லூரிக்கு எதிராக மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர். இதனால் அரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றச்சாட்டை முன்வைத்து, டெங்கு தொடர்பான கவனயீனத்தையும் வெளிப்படுத்தியுள்ளது.

குற்றம் சாட்டுவதற்கான நேரமில்லை, இது!

ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டிக்கொள்ளும் நேரமில்லை இது என ஒவ்வொருவரும் புரிந்துகொள்வது காலத்தின் தேவையாக உள்ளது. நாட்டின் டெங்கு நோய் தீவிரமடைந்துள்ள நிலையில் வைத்திய அதிகாரிகள் சங்கம் சைட்டம் என்ற ஒன்றை பிடித்துக்கொண்டு வேலைநிறுத்தபோராட்டமும், ஆர்ப்பாட்ட பேரணியும் முன்னெடுப்பது மக்களை அசௌகரியங்களுக்கு உள்ளாக்கியுள்ளன. மக்கள் உயிர் அச்சத்தில் இருக்கும் நிலையில் வைத்தியர்களையே நம்பி இருக்கும் சூழ்நிலை தற்போது நாட்டில் நிலவி வருகின்றது. இதனை ஒவ்வொரு வைத்தியரும் உணர்ந்து கொள்ளவேண்டும். அரசின் மீது வெறுப்புக்காக, பலிவாங்கும் நோக்கத்திற்காக அப்பாவி உயிர்கள் பறிபோவதை தடுக்க வேண்டும்.

அரசாங்க வைத்தியசாலை வைத்தியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுவருவதால் மக்கள் மத்தியில் வைத்தியர்கள் மீதான வெறுப்பு மேலோங்கியிருப்பது அப்பட்டமான உண்மை. நாடு டெங்கு ஆபத்தில் மூழ்கியிருக்கும் இவ்வேளையில் எதிரும் புதிருமான கண்டனக் கணைகளோ, வாதப்பிரதிவாதங்களோ பொருத்தமானவையல்ல.

88 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் டெங்கு நோயினால் பீடிக்கப்பட்டுள்ளனர். 225 பேருக்கு மேல் மரணமடைந்து விட்டனர். இதனை இனிமேலும் உதாசீனப்படுத்துவது புத்திசாலித்தனமல்ல. அவ்வாறு அலட்சியப்படுத்த முற்படுமிடத்து டெங்கு நோயினால் ஏற்படுகின்ற மரணங்கள் மேலும் அதிகரிப்பதற்குரிய அபாயம் உண்டு.

டெங்கு நோய் விடயத்தில் அரசாங்கம் இன்னுமே போதியளவு விழிப்படையவில்லையென்ற குற்றச்சாட்டு மக்கள் மத்தியில் தற்போது நிலவி வருகின்றது. இந்நோய் தொடர்பாக ஒவ்வொருவரும் தற்போது உண்மையிலேயே அச்சம் அடைந்திருக்கின்றார்கள்.

தனியார் வைத்திய நிலையங்களை நாடும் நிலை

சாதாரண காய்ச்சல் என்றதுமே விசேட வைத்திய நிபுணரிடம் சென்று பெருந்தொகைப் பணத்தைச் செலவிடும்படியாக மக்கள் மத்தியில் ஒரு வகை பீதி நிலவுகின்றது. தனிப்பட்ட சேவையில் ஈடுபடும் வைத்தியர்களுக்கும், தாதியர்களுக்கும், தனியார் வைத்தியசாலைகளிலும் இக்காலப் பகுதியில் கல்லாப்பெட்டி நிரம்பி வழிகிறது என்பதையும் இவ்விடத்தில் சுட்டிக் காட்டாமலிருக்க முடியாது. மக்களின் இன்றைய டெங்கு நோய் பீதி பலவீனமாகப் பயன்படுத்தப்படுகின்றது. ஒரு புறத்தில் அச்சம் காரணமாக பணம் வாரியிறைக்கப்படுகின்றது. அரசாங்க வைத்தியசாலைகளும் டெங்கு நோயாளர்களால் நிரம்பி வழிவதனால், மக்கள் இப்போது தனியார் வைத்தியசாலைகளையே நாட வேண்டிருக்கின்றது. இன்று ஏற்பட்டிருப்பது நெருக்கடியானதொரு நிலைமையாகும்.

டெங்கு நோயானது நாட்டுக்கே பெரும் சவாலாக மாறியிருக்கின்றது. இச்சவாலை எவ்வாறாயினும் முறியடித்தே தீர வேண்டும். மக்களின் ஒத்துழைப்புடன் பாரிய திட்டத்தை முன்னெடுக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உண்டு. (நு)

-பா.மலரம்பிகை-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>