நாளை உயர் தரப் பரீட்சை எழுதும் முஸ்லிம் மாணவிகளின் கவனத்துக்கு


exa

பாடசாலை வாழ்க்கையில் மாணவர்கள் தாண்டும் மூன்றாவதும் இறுதியுமான முக்கிய பரீட்சையே கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையாகும். பாரிய இலக்குகளுடன் கனவுகளுடனும் மாணவர்கள் இப்பரீட்சைக்கு தயாராகின்றனர்.

பெரும் போட்டித் தன்மையுள்ள ஒரு பரீட்சையாக உயர் தரப் பரீட்சை காணப்படுகின்றது. கடந்த வருடத்தில் 27 ஆயிரத்து 603 மாணவர்கள் மாத்திரமே அரச பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்பட்டதாக பல்கலைக்கழகங்கள் மானிய ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டி சில்வா அறிவித்திருந்தார்.

கடந்த வருடத்தில் மொத்தம்    மூன்று லட்சத்து 9 ஆயிரத்து 69 பரீட்சார்த்திகளிலிருந்தே சுமார் 28 ஆயிரம் பேர் தெரிவு செய்யப்பட்டனர் என்பது போட்டித் தன்மையின் எல்லைக்கு சிறந்த உதாரணமாகும்.

இப்படியான போட்டித் தன்மையின் உறுதிப்பாட்டைப் பேணுவதற்கு பரீட்சைகள் திணைக்களம் பாரிய பிரயத்தனங்களை எடுத்துவருகின்றது.  இவ்வருட உயர்தரப் பரீட்சையை நடாத்துவதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளும் நிறைவடைந்துள்ளதாகவும்  நாளை (08) பரீட்சை நாடளாவிய ரீதியில் ஒரே நேரத்தில் ஆரம்பமாகும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இவ்வருடப் பரீட்சை  நாடு முழுவதும் 2230 பரீட்சை நிலையங்களில் பரீட்சை நடைபெறுகின்றது. விசேட தேவையுள்ளவர்கள் 260 பேர் உட்பட இம்முறை பரீட்சைக்கு மூன்று லட்சத்து 15227 பேர் தோற்றுகின்றனர். இப்பரீட்சைக் கடமைகளில் 28 ஆயிரம் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் கூறியுள்ளது.

பரீட்சை சரியாக காலை 8.30 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளதனால், பரீட்சார்த்திகள் காலை 8.00 மணிக்கே பரீட்சை மண்டபத்துக்கு சமூகமளிக்க வேண்டும்  என  பரீட்சைகள் திணைக்களம் மாணவர்களைக் கேட்டுள்ளது. பரீட்சை அனுமதி அட்டை, ஆள் அடையாள அட்டை என்பவற்றை பரீட்சார்த்திகள் கட்டாயம் எடுத்துவர வேண்டும்  எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

எந்தவொரு பரீட்சார்த்தியாவது ஸ்மார்ட் போன், கைத் தொலைபேசி மற்றும் தொழில்நுட்பக் கருவிகள் போன்றவற்றை பரீட்சை மண்டபத்துக்குள் எடுத்து வந்தால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என திணைக்களம் பரீட்சைக்கு முகம்கொடுக்கும் மாணவர்களை எச்சரித்துள்ளது.

அவ்வாறானவர்களுக்கு 5 வருட காலத்துக்கு பரீட்சைத் திணைக்களத்தினால் நடாத்தப்படும் எந்தவொரு பரீட்சைக்கும் தோற்ற முடியாதவாறு பரீட்சைத் தடை பிறப்பிக்கப்படும் எனவும் திணைக்களம் கடுமையாக அறிவித்துள்ளது.

எமது நாட்டில் வாழ்கின்ற சகலரும் பாக்கியசாலிகள் என்பதை உள்ளார உணர்ந்த தேசப் பற்றாளர்கள் ஏராளமானோர் உள்ளனர். பல்லின சமூகம் வாழும் எமது நாட்டின் கல்வி அளவீட்டு முறையில் எந்தவித பாகுபாடும் காட்டப்படுவதில்லை. சகலரும் அந்தத்த சமூக கலாசாரங்களுக்கு ஏற்றவிதமான தோற்றப்பாடுகளுடன், இப்பரீட்சைக்கு முகம்கொடுக்கும் பாக்கியத்தைப் பெற்றுள்ளனர்.

இந்தவகையில், முஸ்லிம் பெண் மாணவிகள் தங்களுடைய தனித்துவமான ஆடை ஓழுங்குகளுடன் எந்தவிதப் பிரச்சினையும் இன்றி பன்னெடுங்காலமாக பரீட்சைக்கு முகம்கொடுத்து வருகின்றனர். அண்மைக் காலமாக பல சர்சைகள் இது தொடர்பில் எழுந்தவண்ணமுள்ளன.

இனவாத கடும்போக்காளர்கள் தங்களுக்கு அசைபோட எங்கு ஆதாரம் கிடைக்கின்றது என்று பார்த்துள்ளனர். நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிரான சக்திகள் செயற்படும் விதம் குறித்து விளக்கவேண்டியதில்லை. அவ்வாறன நிலையில் முஸ்லிம் பெண் மாணவிகள் ஒரு சிலர் பரீட்சை மண்டபத்துக்குள் வெளிப்படுத்தும் மோசமான நடத்தைப் பிறழ்வினால், முழு முஸ்லிம் சமூகமும் உரிமைக் குரல் எழுப்பும் நிலைக்கு ஆளாவது மிகவும் கவலையான ஒன்றாகும்.

பரீட்சை சட்டத்திட்டங்கள் மாணவர்களுக்கு தெளிவாக அறிவிக்கப்பட்டுள்ளன. பரீட்சை சட்ட மீறல்கள் இடம்பெறாமல் தடுப்பதற்கு பரீட்சைகள் திணைக்களம் நியாயமான நடைமுறைகளை எடுத்துள்ளன. இப்படியிருக்கையில், யாராவது ஒரு மாணவர் இச்சட்டத்தை மீறுவது என்பது தண்டிக்கப்பட வேண்டிய குற்றம் என்பதில் இருகருத்துக்கள் இருக்க மாட்டாது.

பரீட்சை எழுதச் செல்லும் முஸ்லிம் மாணவிகள் பொறுப்புடன் நடந்துகொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தனியாளாக பரீட்சை மண்டபத்துக்குள் செல்வதில்லை. முஸ்லிம்களின் சமூக ஆடை அணிந்து, சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தியே பரீட்சை மண்டபத்துக்குள் நுழைகின்றனர். இந்நிலையில் இம்மாணவர்கள் செய்யும் தவறு சமூகத்தையும் அடையாளப்படுத்தியே ஊடகங்களில் சுட்டிக்காட்டப்படுகின்றது.

அண்மைய வருடங்களில் பரீட்சை மண்டபத்துக்குள் ஒருசில முஸ்லிம் மாணவிகளின் சட்ட முரணான நடந்துகொண்டதன், எதிரொலிகள் இன்னும் ஆங்காங்கே முஸ்லிம் சமூக அமைப்புக்களின் சமூகத்துக்கான உரிமைக் குரல்களாக கேட்டவண்ணமுள்ளன. ஒரு சிலர் விடுகின்ற தவறு முழு சமூகமும் உரிமைக்காக மண்டியிட வழிவகுக்கின்றது என்பதை மாணவர்கள் தங்களது மனதிற் கொள்ள வேண்டும்.

முஸ்லிம் மாணவிகள் பர்தா எனும் விசேட ஆடை அணிந்து செல்கின்றனர். இந்த ஆடையை பரீட்சை மண்டபத்துக்குள் உள்ள மேற்பார்வையாளர்கள் யாரும் பரிசோதிப்பதில்லை. இதனை ஒருசில விஷமத்தனமான மாணவிகள் தங்களுக்கு பரீட்சை சட்டத்தை மீறுவதற்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர்.

கடந்த காலத்தில் பரீட்சை மண்டபத்தில் பர்தா அணிந்திருந்த மாணவி ஒருவரின் காதில் “புலூடூத்” (Bluetooth) கருவி வைத்து பரீட்சை எழுதும்போது பிடிபட்டமை ஊடகங்களில் பகிரங்கமாக பேசப்பட்டமை கசப்பான ஒரு சம்பவம் ஆகும்.

அதேபோன்று விடைத் தாள்கள் எடுத்து வருதல், தடை செய்யப்பட்ட கருவிகள் என்பவற்றை பதுக்கி வைத்தல் என்பவற்றுக்கு இக்கலாசார ஆடை பயன்படுத்துவது தவிர்க்கப்படல் வேண்டும்.

எமது சமூகத்துக்கு இந்நாட்டு சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள சலுகைகளை தங்களது முறையற்ற செயற்பாடுகளினால் இல்லாமல் ஆக்கிக் கொள்ளும் ஒரு துர்ப்பாக்கிய நிலைக்கு முஸ்லிம் மாணவர்கள் சென்று விடக் கூடாது.

இஸ்லாம் பரீட்சையிலும் கூட நீதமாக நடந்துகொள்ளுமாரே பணிக்கின்றது. ஒழுங்குகளை மீறுவதை கடுமையான சட்டவிரோதமாக இஸ்லாம் பார்க்கின்றது. இஸ்லாம் பற்றிய தறவான ஒரு கண்ணோட்டத்தை ஏனைய சமூகங்களுக்கு வழங்கும் நிலைமைக்கு செல்வதிலிருந்து மாணவர்கள் தவிர்ந்து கொள்ள வேண்டும். மாணவர்களின் பெற்றோர்களும், பாடசாலை அதிபர் ஆசிரியர்களும் இது குறித்து கூடிய கவனம் செலுத்த வேண்டும்.

குறிப்பிட்ட சிலர் குற்றம் செய்து தண்டனை அனுபவிப்பது என்பது ஒன்று. முழு சமூகத்தின் தனித்துவங்களுக்கும் பாதிப்பு ஏற்படுவதென்பது மற்றொன்று. தவறு இடம்பெற்றதன் பின்னர், உரிமைகளும், சலுகைகளும் இழக்கப்படும் போது முஸ்லிம் அமைப்புக்கள் அவற்றுக்காக குரல் எழுப்புவதும் அரசாங்கத்துக்கு அறிக்கை விடுவதும் உசிதமன்று. தவறுகளிலிருந்து தவிர்ந்து, சட்டத்தை மதித்து கௌரவமாக பரீட்சைக்கு முகம்கொடுக்க எமது மாணவர்களை வழிநடாத்துவோம். இதுவே இன்றைய காலத்தின் தேவையுமாகும். (மு)

  • கஹட்டோவிட்ட முஹிடீன்

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>