குடும்ப உறவைப் பேணி நடப்பது இஸ்லாத்தில் ஓர் அமல் – ஏ.சீ. அகார் முஹம்மத்


Agar Mohamed

குடும்பங்கள் அனைவரும் அடிக்கடி ஒன்று கூடி உறவைப் பேணி நடப்பது இஸ்லாத்தில் இபாதத் ஆக கணிக்கப்படுகிறது என அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் பிரதித்தலைவரும் ஜாமியா நளீமியா கலாபீடத்தின் பிரதிப் பணிப்பாளருமான அஷ்ஷெய்க் ஏ.சீ. அகார் முகம்மத் தெரிவித்தார்.

எமன் யூசுப் (பாம்பு மௌலானா) வழி குடும்பத்தைச் சேர்ந்த, இலங்கையில் அனைத்துப் பாகங்களிலுமுள்ள 07 தலைமுறையினரின் பிள்ளைகளான 250 பேர் ஒன்று கூடி இஸ்லாமிய வரையறைக்குட்பட்ட முறையில் விளையாட்டுகளுடன் கூடிய குடும்ப ஒன்று கூடல் ஒன்று கடந்த (06) ஞாயிற்றுக்கிழமை கொம்பனித் தெரு மலே மைதானத்தில் இடம் பெற்றது.

அதில் பிரதம பேச்சாளராகக் கலந்து கொண்டு பேசுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில்;
நீங்கள் குடும்பங்களுடைய அழைப்பை ஏற்றுக் குடும்ப உறவை வளர்த்துக் கொள்வோம், வளப்படுத்திக் கொள்வோம், தமது இரத்த உறவினைப் பேணி தொடர்ந்து முன்னெடுப்போம் என்ற நன் நோக்கோடு நடைமுறைப்படுத்தப்படும் இந்தச் செயற்பாடானது இஸ்லாத்தில் ஓர் அமலாகும்.

“யார் அல்லாஹ்வையும் மறுமையையும் ஈமான் கொண்டவராக இருக்கிறாரோ அவர் தனது குடும்ப உறவை, இனபந்துக்களுடைய உறவைப் பேணி நடந்து கொள்ளட்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். எனவே, இன்று இங்குக் கூடியிருப்பது ஈமானுடைய வெளிப்பாடு. இது ஓர் அமல். “யார் தன்னுடைய ஆயுள் அதிகரிக்க வேண்டும், பொருளாதாரத்திலே வளர்ச்சி வேண்டும் என்று விரும்புகிறாரோ அவர் குடும்ப உறவைப் பேணி நடக்கும்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

ஸலாம் சொல்வதை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள். அதிகமாக ஸலாம் சொல்லுங்கள், அதிகமாக மனிதர்களுக்கு விருந்து கொடுங்கள், குடும்ப அங்கத்தினரோடு சேர்ந்து நடந்து கொள்ளுங்கள். மனிதர்கள் அனைவரும் இரவு வேளைகளிலே தூக்கத்தில் இன்பம் கண்டு கொண்டு இருக்கின்றீர்கள். கியாமுல் லைல், தஹஜ்ஜத் தொழுகைளில் அதிகமதிகம் ஈடுபடுங்கள். சுவனம் நுழையும் பாக்கியத்தை நீங்கள் அனைவரும் பெறுவீர்கள்.

சுவனம் நுழைவதில் முதலாவது அம்சமாக நபி (ஸல்) அவர்கள், அதிகம் ஸலாம் சொல்லுங்கள்; உறவைப் பேணுங்கள்; பகைமை பாராட்டாதீர்கள். அறிந்தவரும் அறியாதவரும் பாகுபாடின்றி நம்முடைய சகோதரர் என்ற ரீதியில் ஸலாம் சொல்லுங்கள் என்று கூறினார்கள்.

இரண்டாவதாக, ஏழைகள், உற்றார், உறவினர், அண்டை வீட்டார்களுக்கு உணவளியுங்கள். குறிப்பாக இனபந்துக்கள் உற்றார் உறவினர்களை ஆதரியுங்கள்; அரவணையுங்கள்; சேர்ந்து நடவுங்கள். மக்கள் தூங்கிக் கொண்டிருக்கும் போது அல்லாஹ்வை நின்று வணங்குகள். இவற்றைறெல்லாம் நீங்கள் செய்தால் சுவனம் நுழைவீர்கள். என்ற நபி மொழிக்கேற்ப நாங்கள் நடந்து கொண்டால் சுவனம் நுழையும் வாய்ப்பை அனைவரும் பெறலாம். என்றும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் இஸ்லாமிய வரையறைக்குட்பட்ட விளையாட்டுக்களும் இடம்பெற்று அதில் வெற்றியீட்டியோருக்கு பரிசுகளும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இவ் ஒன்று கூடல் வருடா வருடம் நடைபெற அங்கத்தவர்கள் அனைவரினாலும் ஏக மனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

– எம்.எஸ்.எம்.ஸாகிர் –

1 2 3 4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>