தகவல் அறியும் உரிமைக்கு ஒரு வருடம்! பொதுமக்கள் கவனத்தைப் பெற்றுள்ளதா?


RTI DC

தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கு பாராளுமன்ற ஒப்புதல் வழங்கப்பட்டு, சட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டு ஒரு வருட காலம் கடந்துள்ளது.

2015 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கம் முன்வைத்த தேர்தல் வாக்குறுதிகளில் தகவல் அறியும் உரிமை முக்கியமானதாக இருந்தது. 2016 ஜூன் மாதம் 24ஆம் திகதி பாராளுமன்றம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை அடிப்படை உரிமைகளில் ஒன்றாக அங்கீகரித்து, அரசியலமைப்பு திருத்தமாக ஏற்றுக் கொண்டது. அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் 4ஆம் திகதி சபாநாயகர் கரு ஜயசூரிய ஒப்புதலளித்து ஒரு வருடம் கடந்துள்ளது.

சபாநாயகரின் ஒப்புதலைத் தொடர்ந்து இலங்கையின் 69ஆவது சுதந்திர தினத்துடன் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி தகவல் அறியும் உரிமை சட்டம் உத்தியோகபூர்வமாக நடைமுறைக்கு வந்தது.

தகவல் அறியும் உரிமை நடைமுறைக்குவர முன்னரும், அறிமுகப்படுத்தப்பட்டபோதும், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களாலும், அரசாங்க தகவல் திணைக்களங்களாலும் இது என்ன? இதன் பயன்பாடுகள், எவ்வாறு பயன்படுத்துவது? போன்ற விடயங்களில் மக்களை விழிப்பூட்ட நடவடிக்கையெடுக்கப்பட்டன.
இலங்கையில் வழங்கப்பட்டுள்ள தகவல் அறியும் உரிமை உலகின் நான்காவது பலமான உரிமையாகும் எனக் கூறப்பட்டது. அரசாங்கத்தின் பிரபல்யத்திற்கும் பயன்படுத்தப்பட்டது. பல அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசியல்வாதிகளும் தகவல் அறியும் விண்ணப்பங்களை பயன்படுத்தினர். அதுவே சிலகாலம் ஊடக கண்காட்சியாகவும் இருந்தது.

ஆரம்பத்தில் பொதுமக்களும் அரச சார்பற்ற நிறுவனங்களும் அரசியல்வாதிகளின் சொத்து விபரம்
கோரல், விலை மனு கோரல் மற்றும் வழங்குதல் தொடர்பான தகவல், அமைச்சர்களுக்கான கொடுப்பனவுகள், இலஞ்சம், ஊழல் குறித்து அதிக கவனம் செலுத்தியதை அவதானிக்க முடிந்தது.

தகவல் அறியும் உரிமை தொடர்பான கருத்தரங்குகள், தொலைக்காட்சி விளம்பரங்கள், குழு கலந்துரையாடல்கள், சமூக வலைத்தள பதிவுகள் என கருத்துருவாக்கங்கள் நடைபெற்றன. இலங்கையில் வாரா வாரம், மாதா மாதம் ஏதோவொரு விடயம் வெகுவாக பேசப்படும். இதற்கு தகவல் அறியும் உரிமையும் விதிவிலக்கல்ல என்பது போன்று காலப்போக்கில் முக்கியத்துவம் குறைந்துபோனதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

தகவல் அறியும் உரிமை என்பது ஜனநாயகத்தின் முக்கிய கூறுகளில் ஒன்றாகும். இலங்கையில் பல முன்னெடுப்புகளுக்கு பிறகு கிடைக்கப்பெற்றுள்ளது. இதற்கு போதிய முக்கியத்துவமளிக்கப்பட்டு, பயன்படுத்தப்படுகின்றதா? என்ற கேள்வி எழுகின்றது.

தகவல் அறியும் உரிமை எனும் ஆயுதத்தை இந்தியா, பங்களாதேஷ் போன்ற அயல்நாடுகள் சிறந்த முறையில் பயன்படுத்தி வருகின்றன. இந்தியாவில் பாடசாலை மாணவர்களும் இவ்விடயத்தில் அதிக கவனம் செலுத்துகின்றனர்.

இந்த ஆண்டு இந்தியாவில் அதிக தகவல் விண்ணப்பங்களை முன்வைத்துள்ள பெருமையும் 16 வயது இளைஞனொருவனையே சாரும்.

இலங்கைக்கு கிடைக்கப்பெற்றுள்ள இந்த உரிமை சரிவர பயன்படுத்தப்பட வேண்டும். இவ்விடயத்தில் பொதுமக்களை விழிப்படையச் செய்ய அரச, அரச சார்பற்ற அமைப்புகள் அதிக அக்கறையெடுக்க
வேண்டும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். (நு)

-ஆதில் அலி சப்ரி-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>