இலங்கை இன, சமய நல்லிணக்கத்திற்கு முன்மாதிரியாகத் திகழ்கிறது – துருக்கி


01

நாட்டில் இன மற்றும் சமய நல்லிணக்கத்தை ஏற்படுத்தி ஏனைய நாடுகளுக்கு முன்மாதிரியாகத் திகழும் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமைத்துவத்தைத் துருக்கியின் முன்னாள் பிரதமர் அஹ்மட் தாவுத்ஒக்லு பாராட்டியுள்ளார்.

இன மற்றும் சமய கெடுபிடிகளின் காரணமாக பல நாடுகள் பயங்கரவாதத்துடன் போராடிக்கொண்டிருக்கும் நிலையில், ஆசியாவில் மலேசியாவும்  இலங்கையும் சிறந்த நிலையில் உள்ளன என்று அவர் தெரிவித்தார்.

இன்று (09) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன சந்தித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

நேற்று நான் கண்டியில் கண்கவர் தலதா பெரஹரவை கண்டுகளித்தேன். இன்று காலை கொழும்பில் இந்து ஆடிவேல் திருவிழாவைப் பார்வையிடும் சந்தர்ப்பம் கிடைத்தது. இலங்கையில் இத்தகைய இன நல்லிணக்கத்தைக் கண்டு தான் பெரிதும் மகிழ்ச்சியடைந்ததாக தாவுத்ஒக்லு தெரிவித்தார்.

நாட்டில் ஜனநாயகத்தைப் பலப்படுத்தி வருவதற்காகவும் வெற்றிகரமான வெளிநாட்டுக் கொள்கையை கடைப்பிடித்து வருவதற்காகவும் அவர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களைப் பாராட்டியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சர்வதேச மன்றங்களில் இலங்கைக்கு வழங்கிய உதவிகளுக்காக ஜனாதிபதி துருக்கிக்கு நன்றி தெரிவித்தார். மேலும் முதலீடு, வர்த்தகம், விவசாயம், சுற்றுலா மற்றும் விமானசேவை ஆகிய துறைகளில் இருதரப்பு கூட்டுறவை மேலும் பலப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

இலங்கையில் சுற்றுலா துறைக்கு நல்ல வாய்ப்புகள் உள்ள நிலையில், உலகில் ஆறாவது மிகப்பெரும் சுற்றுலா தளமாக விளங்கும் துருக்கி இத்துறையில் இலங்கையுடன் ஒத்துழைக்க முடியும் என்று துருக்கியின் முன்னாள் பிரதமர் தெரிவித்தார்.

இலங்கை இப்பிராந்தியத்தில் ஒரு விமானசேவை மையமாகத் திகழ முடியும் எனத் தெரிவித்த தாவுத்ஒக்லு, ஆசியா மற்றும் ஐரோப்பாவின் நுழைவாயிலில் ஒரு பாரிய விமான மையமாகத் திகழும் துருக்கியுடன் நேரடி தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.

இரண்டு நாடுகளும் உலகில் முக்கிய கடல் மார்க்கங்களில் அமைந்துள்ளன எனக் குறிப்பிட்ட அவர், இந்த அமைவிடத்திலிருந்து உச்ச பயனைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.

அதேவேளை பாக்கீர் மாக்கார் நினைவுப் பேருரையை நிகழ்த்துவதற்காக இலங்கைக்கு வருகை தந்தமைக்காக முன்னாள் துருக்கி பிரதமருக்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்தார். காலம்சென்ற முன்னாள் சபாநாயகர் பாக்கீர் மாக்கார் மிகவும் மதிக்கப்படும் ஒரு சிறந்த தலைவர் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், துருக்கி நாட்டின் தூதுவர் துங்கா ஒசுஹாடர் மற்றும் அஸாம் பாக்கீர் மாக்கார் ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர். (ஸ)

01

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>