அரசாங்கத்தின் சாணக்கியமிக்க திருவிளையாடலே ரவியின் இராஜினாமா !


New Picture (1)

நல்லாட்சி அரசாங்கத்தை அமைக்க உயிரைக் கொடுத்து உழைத்ததாக கூறப்படும் ஒரு சிலரில் அமைச்சர் ரவி கருணாநாயக்கவும் முக்கியமானவர். அப்படியான ஒருவருக்கு இன்று பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரும் அளவுக்கு நாட்டில் எதிர்ப்புக்கள் வழுத்துள்ளன.

கடந்த இயற்கை அனர்த்தங்கள் மறந்து குப்பைப் பிரச்சினையும் மக்களின் சிந்தையை விட்டும் நீங்கி தற்பொழுது அரசாங்கத்துக்கு எதிராக எரிந்துகொண்டிருக்கும் பிரச்சினைகளில், பிரதான ஒன்றாக அமைச்சர் ரவியின் மத்திய வங்கி முறி மோசடி குற்றச்சாட்டு பாரியளவில் மக்கள் மேடையில் இன்று பேசப்படுகின்றது.

இப்பிரச்சினைக்கு வெளிப்படையான ஆதரவாளர்கள் இருப்பது போல, மறைமுக ஆதரவாளர்களும் இல்லாமல் இல்லை. இந்த மறைமுக ஆதரவாளர்கள் அரசாங்கத்தின் பங்காளிகளும், சொந்தக் கட்சியின் உறுப்பினர்களும் என்று ஒருவர் கூறினால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

மத்திய வங்கி முறி மோசடி தொடர்பில் விசாரணை செய்ய அமைக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகளை துரிதப்படுத்தியுள்ளது. இந்த விசாரணைத் தொடரில் நிதி அமைச்சராக இருந்த தற்போதைய வெளிவிவகார அமைச்சர் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்தார். முக்கிய ஒரு அமைச்சராகவுள்ள நிலையில் ஆணைக்குழுவில் ஆஜராவது என்பது அவருக்கு சிக்கலாகவே இருந்திருக்க வேண்டும். ஆணைக்குழுவின் முதலாவது அழைப்பிற்கு அவரால் ஆஜராக முடியவில்லை.

இரண்டாவது அழைப்பின் போது தான் அவர் ஆஜராகியிருந்தார். இவ்வாறு ஆணைக்குழுவில் ஆஜராகிய அவர் மன்னிப்புக் கோரியிருந்தார். இது அவருடைய பெருந்தன்மையைக் காட்டியதாக அரசாங்க தரப்பினரும் ஊடகங்களும் எடுத்துக்காட்டின.

கடந்த அரசாங்க காலத்தில் நாட்டின் முக்கிய பொறுப்பிலுள்ள அமைச்சர் ஒருவர் ஆணைக்குழுவொன்றில் ஆஜராவது என்பது நினைத்துக் கூடப் பார்க்க முடியாத ஒரு விடயமாகும் என அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆணைக்குழுவிலிருந்து வெளியேறி ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் கூறியிருந்த விடயம் மக்களுக்கு நினைவிருக்கும்.

மத்திய வங்கி முறி மோசடி என்பது பல கோடிக் கணக்கான மக்கள் நிதி என்ற கருத்துக்கு, கூட்டு எதிர்க் கட்சி கொடுத்த அழுத்தம், மக்கள் மேடையில் பெரும் எதிர்ப்பலையாக மாறியதுவே அமைச்சர் ரவி கருணாநாயக்கவை ஆணைக்குழுவில் ஆஜராக்கியது என எதிர்த் தரப்பு அரசியல் விமர்சகர்கள் தெரிவித்திருந்த கருத்தையும் பெரும்பாலானவர்கள் மறுக்க மாட்டார்கள்.

கூட்டு எதிர்க் கட்சியின் 54 எம்.பி.க்களும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டிருந்தால், அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் தொடர்புபடும் இந்த மோசடிகளுக்கு என்ன நடந்திருக்கும். தகவலே இல்லாமல் மூடிமறைக்கப்பட்டிருக்கும் என முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல நேற்று (09) ஊடகவியலாளர் சந்திப்பில் சுட்டிக்காட்டியிருந்தார்.

அமைச்சர் ரவிக்கு எதிராக மக்களின் எதிர்ப்பு பலப்பட்டுள்ளது. இதனால், எதிர்க் கட்சிகள் எடுத்ததையெல்லாம் எதிர்க்கின்றார்கள் என்ற கருத்தைக் கூறி அரசாங்க தரப்புக்கு தப்பித்துக் கொள்ள முடியாது. மக்கள் மேடையில் முறி மோசடிக்கு எதிராக எழுந்துள்ள எதிர்ப்புக்கு, மக்கள் பிரதிநிதியாக இருந்து ஆதரவு வழங்காது போனால், வாக்கு வங்கி திரும்பிவிடும் என்பது அரசாங்கத்திலுள்ளவர்களையும் எதிராக தூண்டிவிட்டது என்பதுவே யதார்த்தமாகும்.

ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ளவர்களும் இராஜினாமா செய்வது சிறந்தது என்ற கருத்தை மௌமாக கூறியது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள அமைச்சர்களில் பெரும்பாலானவர்கள் அமைச்சர் ரவிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு வழங்குவது என்ற தீர்மானத்தை முன்னதாகவே அறிவித்திருந்தனர். சிலர் ஜனாதிபதி இது தொடர்பில் மக்களின் பக்கத்தில் இருந்து தீர்மானத்தை எடுப்பார் என எதிர்வு கூறியிருந்தனர்.

இறுதியாக அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை சபையில் கொண்டுவருவதாக இல்லையா? என்பது குறித்த இறுதித் தீர்மானம் நாளை 11 ஆம் திகதி கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்படும் என சபாநாயகர் அறிவித்திருந்தார்.

அமைச்சர் ரவி கருணாநாயக்க இராஜினாமா செய்வது தான், அரசாங்கத்துக்கு எதிராக கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க காத்திருக்கும் அரசாங்க தரப்பிலுள்ள அமைச்சர்களையும், பிரதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களையும் வாக்களிக்காமல் தடுப்பதற்கான ஒரே வழியாகும் என்பது அரசியல் சாணக்கியமுள்ளவர்களின் அரசாங்கத்துக்கு சார்பான ஆலோசனையாகும்.

இந்நிலையில் நேற்று(09) அவசரமாக ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் அமைச்சர் ரவியுடன் சந்தித்து பேச்சுவார்தையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சாணக்கியவான்களின் ஆலோசனை நிச்சயம் இப்பேச்சுவார்த்தையின் கருப்பொருளாக இருந்திருக்கும் என்பதை ஊகிப்பதற்கு எவருக்கும் எந்த தடையும் இருக்காது.

ஜனாதிபதி, பிரதமர் மேற்கொண்ட சந்திப்பின் பின்னர் மேல் மாகாண முதலமைச்சர் இசுர தேவப்பிரிய வெளியிட்டுள்ள கருத்து அரசியல் நிலவரத்தின் புரிதலை திசை திருப்புகின்றது.

அமைச்சர் ரவிக்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கொண்டு வரவேண்டிய தேவையில்லை. அமைச்சர் ரவிக்கு ஜனாதிபதி தீர்மானம் ஒன்றை எடுக்குமாறு கூறியுள்ளார்

அமைச்சர் ரவி நிதி அமைச்சராக இருந்தபோது எனக்கு மட்டுமல்ல, சகல முதலமைச்சர்களுக்கும் பிரச்சினை இருந்தது. எது எப்படிப் போனாலும், அவர் இந்தக் குற்றச்சாட்டில் தவறு இழைத்துள்ளார் என்பதை இந்த நாட்டு மக்கள் அறிகின்றனர்.

ரவி கருணாநாயக்கவின் நிதி அமைச்சுக் காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் மத்திய வங்கி முறி மோசடி விசாரணையை உரிய முறையில் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்தே அமைச்சர் ரவிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கூட்டு எதிர்க் கட்சி  கையளித்திருக்கிறது.

தற்பொழுது அமைச்சர் ரவி இராஜினாமா செய்தால், நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப் பார்த்ததன் நோக்கம் நிறைவேறும் என மேல் மாகாண முதலமைச்சர் நேற்று(09) ஊடகங்களிடம் கூறியிருந்தார்.

அமைச்சர் ரவியின் இராஜினாமாவின் பின்னர் அவருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்று மீண்டும் பாராளுமன்றத்தில் கொண்டு வருமாறு கோரத் தேவையில்லை.

கூட்டு எதிர்க் கட்சியானது அமைச்சர் ரவிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை எனும் போர்வையில், வேறு நோக்கங்களை நிறைவேற்ற முனைவதாயின் அதற்கு ஒரு போதும் ஸ்ரீ ல.சு.க. இடமளிக்க மாட்டாது எனவும் முதலமைச்சர் நேற்று (09) தெரிவித்திருந்தார்.

அமைச்சர் ரவி கருணாநாயக்க இன்று (10) பாராளுமன்றத்தில் ஆற்றிய சிறப்புரையைத் தொடர்ந்து தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். உண்மையில், தன்னால் உருவாக்கப்பட்ட ஒரு அரசாங்கம் ஆட்சியில் இருக்கையில், விசாரணையொன்றுக்காக தனது அமைச்சுப் பதவியை விட்டுக் கொடுக்க ரவி கருணாநாயக்க எடுத்துள்ள தீர்மானம் அவர் மீது அவரது கட்சிக்குள்ள நன்மதிப்பை அதிகப்படுத்தும் என்பதில் இருகருத்துக்கு இடமிருக்காது.

முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தனது தற்போதைய வெளிவிவகார அமைச்சுப் பதவியை 5 நிபந்தனைகளை முன்வைத்தே இராஜினாமா செய்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தான் தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்ததன் பின்னர் தனது அமைச்சின் காரியாலய ஊழியர்களை அவ்வாறே கலைத்துவிடாமல் வைத்திருத்தல், மத்திய வங்கி முறி மோசடி விசாரணை ஆணைக்குழுவின் நடவடிக்கைகளை 3 மாதங்களுக்குள் நிறைவு செய்தல் என்பனவும் அந்த ஐந்து நிபந்தனைகளில் அடங்குவதாகவும் அவ்வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கூட்டு எதிர்க் கட்சி அரசாங்கத்துக்கு எதிராக எரியும் நெருப்புக்களில் ஒதுங்கியொதுங்கி குளிர்காய எடுத்த முயற்சிகளில் வெற்றியளிக்கும் நிலைக்கு முன்னேறிவந்த ஒன்றாக அமைச்சர் ரவிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை காணப்பட்டது.

மக்கள் விடுதலை முன்னணி, அரசாங்கத்துடன் உள்ள சுதந்திரக் கட்சி உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள், ஐ.தே.கட்சியின் சிலருடைய ஆதரவு என்பன இந்தப் பிரேரணைக்கு ஆதரவாக கிடைக்கும் என்ற நிலைமை காணப்பட்டது. இவ்வளவு ஆதரவுடன் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்படுமாக இருந்தால், அரசாங்கத்தின் எதிர்காலத்துக்கு ஒரு பெரும் சவாலாக அமையும் என்பதை விளங்க முடியாத அரசியல் அறிவுபடைத்த எவரும் இருக்கமாட்டார்கள்.

தற்பொழுது வழுக்கட்டாயமாக இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டாலும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள எவரும் அதற்கு வாக்களிக்க மாட்டார்கள்.

இதனால், அரசாங்கம் அதனை இலகுவாக தோற்கடிக்கச் செய்ய முடியும். அரசாங்கத்தின் சாணக்கியமிக்க ஒரு திருவிளையாடலே அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் இந்த இராஜினாமா? என கூட்டு எதிர்க் கட்சி குற்றச்சாட்டை முன்வைக்கும் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும்.

  • கஹட்டோவிட்ட முஹிடீன் M.A. (Cey)

2 comments

  1. முன்னாள் திருடர்கள் நீதி முன் நிறுத்தப் படுவார்கள் என்ற அமைச்சர் கௌரவ மனோ கணேசன் அவர்களின் அறிவிப்பு நல்லாட்சியின் நிலைப்பாட்டைத் தெளிவு படுத்தியுள்ளது. மக்களின் கனவு நனவாகும்காலம் அண்மித்து விட்டது.

  2. முன்னாள் திருடர்கள் நீதி முன் நிறுத்தப் படுவார்கள் என்ற அமைச்சர் கௌரவ மனோ கணேசன் அவர்களின் அறிவிப்பு நல்லாட்சியின் நிலைப்பாட்டைத் தெளிவு படுத்தியுள்ளது. மக்களின் கனவு நனவாகும்காலம் அண்மித்து விட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>