விஜேதாசவின் பதவி நீக்கம் : முஸ்லிம் சமூகத்தில் முடிச்சுப் போட சதி ..!


New Picture

ஊடகங்களின் உச்சச் செய்தியாக முன்னாள் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ இன்று மாறியுள்ளார். உசுப்பிவிடும் சூடான செய்திகளை இந்த அரசாங்கம் தொடர்ந்தும் தந்துகொண்டிருப்பது மூன்றாவது கண்ணான ஊடகத்தை தூங்கவிடாமல் விழிக்கச் செய்துள்ளது என்றே கூறவேண்டும்.

நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் இராஜினாமா பிரச்சினையின் சூடு தணிய முன்னர் நீதி அமைச்சரின் பதவி குறித்த சர்ச்சை மக்களின் கவனத்தைத் திசைதிருப்பியுள்ளது. இவ்வரசியல் பிரச்சினையில், ஆளும் கட்சியும் எதிர்க் கட்சியும் தொடர்புபடுவதை நிறுத்திக் கொள்ளாது, மூன்றாவதாகவுள்ள முஸ்லிம் சமூகத்தையும் சுயலாபம் தேடி பூசிக்கொள்ள முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவது, சர்ச்சையின் பின்னால் மறைந்துள்ள இனவாத சக்திகளின் செல்வாக்கை இரகசியமாக காட்டி நிற்கின்றது.

அரசியலில் குளிர்காய்வதற்கான ஊர்காயாக எமது நாட்டில் இனப் பிரச்சினை காணப்படுகின்றது. அமைச்சர் விஜேதாச மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஐக்கிய தேசியக் கட்சியின் பின்னாசன எம்.பி.க்கள் கொண்டு வந்தபோது, அதற்கு இனச் சாயம் பூசுவதற்கு பல இனவாத அமைப்புக்கள் முயற்சித்தன.

நீதி அமைச்சர் விசேடமாக வடக்கு, கிழக்கு பௌத்த உரிமைகளுக்கு குரல் கொடுத்தார். ஐ.எஸ். பயங்கரவாதம் தொடர்பில் கருத்துத் தெரிவித்தார். பொதுபல சேனாவுக்கு ஆதரவாக செயற்பட்டார். இதுபோன்ற காரணங்களுக்காக, சர்வதேச, உள்நாட்டு முஸ்லிம் அடிப்படைவாதிகளின் அழுத்தத்தின் கீழ் அமைச்சர் விஜேதாசவை பதவி நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது என்ற குற்றச்சாட்டை சில இனவாத அமைப்புக்கள் முன்வைத்திருந்தன. மட்டுமல்லாது, சில ஊடகங்களும் அதனை தூக்கிப் பிடித்தன என்பது மறுக்க முடியாத உண்மைகளாகும்.

நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தயாராவதாக செய்திகள் வெளியானபோதே அஸ்கிரிய பீடத்தின் பதிவாளர் மெதகம தம்மானந்த தேரரும் இனரீதியான கருத்தை சூசகமாக முன்வைத்திருந்தார். அமைச்சர் விஜேதாசவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை பாராளுமன்றம் தவிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் தேரர் கோரிக்கை விடுத்திருந்தார். பொதுபல சேனாவின் செயலாளர் ஞானசார தேரரின் கைதுக்கு எதிராக குரல் கொடுத்த பாணியிலேயே இந்தக் கோரிக்கையும் அமைந்திருந்தது என்பதை ஊடகங்களுடன் உறவு வைத்திருப்பவர்கள் அறியாதவிடயமல்ல.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், இவ்வரசாங்கத்தில் நீதி அமைச்சராக நியமனம் பெற்ற விஜேதாச ராஜபக்ஷ ஏன் பதவி நீக்கம் செய்யப்பட்டார் ? என்பது அனைவரும் அறிந்த இரகசியமாகும்.

நீதி அமைச்சர் பயங்கரவாதச் சட்டம் தொடர்பில் அரசாங்கத்துக்கும், சர்வதேச சமூகத்துக்கும் எதிரான ஒரு கொள்கையை கடைபிடித்தார் என்பதை அரசாங்கத்திடம் போய்க் கேட்கத் தேவையில்லை. ஊடக செய்திகள் பொது மக்களுக்கு போதிய விளக்கத்தை அளித்தன.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மாற்ற வேண்டும் என்பதில் சமரச புரிந்துணர்வு சர்வதேச அமைப்புக்கள் மற்றும் இலங்கை அரசாங்கம் என்பவற்றுக்கிடையில் காணப்பட்டது.  இச்சட்டத்தை முழுமையாக நீக்கிவிடுவதற்கு முடியாது என நீதி அமைச்சர் கடந்த 2017 ஜூன் 29 ஆம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டிருந்தார்.

நீதி அமைச்சில்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில், ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி ஒருவர் இலங்கை நீதிமன்றம் தொடர்பில் வெளியிட்டிருந்த அறிக்கைக்கு அமைச்சர் மறுப்புத் தெரிவித்திருந்தார். அந்த அறிக்கையைக் கண்டபோது தனக்கு ஆச்சரியம் ஏற்பட்டது எனவும் அவர் கூறியிருந்தார். நீண்ட காலத்துக்கு முன்னரேயே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டிருந்ததாகவும் விஜேதாச எம்.பி. அன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் சுட்டிக்காட்டியிருந்தார்.

இது போன்ற கருத்துக்கள் அரசாங்கத்தின் நல்லிணக்க சிந்தனைப் போக்கிற்கு முரணாகவே காணப்பட்டன. சர்வதேசத்தில் நல்லாட்சி அரசாங்கத்தின் கீர்த்திக்கு ஒரு கறுப்புப் புள்ளியாக முன்னாள் அமைச்சர் விஜேதாசவின் நடவடிக்கைகள் அமைந்திருந்ததை அரச தரப்பு உணர்ந்து கொண்டது.

நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ கூட்டு எதிர்க் கட்சியின் பொறுப்பொன்றை அரசாங்கத்திலிருந்து கொண்டு நிறைவேற்றிக் கொண்டிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார கடந்த 22 ஆம் திகதி இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பகிரங்கமாக தெரிவித்திருந்தார்.

எதிரியாக தனது வீட்டுக்கு வெளியே உள்ளவருக்கு முகம் கொடுக்க முடியுமாக இருந்தாலும், நண்பனாக வீட்டுக்குள்ளேயே இருப்பவருக்கு முகம்கொடுப்பது கடினமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

கூட்டு எதிர்க் கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கையில் விஜேதாச ராஜபக்ஷ செயற்பட்டுள்ளமைக்கான புலனாய்வுத் துறைத் தகவல்கள் உள்ளதாகவும் நலின் பண்டார எம்.பி. கூறியிருந்தார்.

நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தால், அதற்கு எதிராக வாக்களிக்கப் போவதாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்தே இருந்தார் என்பதும் முன்னைய கருத்துக்களுக்கு வலுச் சேர்ப்பதாகவே அமைந்துள்ளது.

மஹிந்த ராஜபக்ஷ எம்.பி.யின் இக்கருத்து அவருடைய சொந்தக் கருத்து எனவும், கூட்டு எதிர்க் கட்சியின் பொதுவான கருத்து அல்லவெனவும் பாராளுமன்ற உறுப்பினர் வாசு தேவநாணயக்கார இதற்கு மறுப்பும் வெளியிட்டிருந்தார்.

அரசாங்கத்துக்குள் இருந்து கொண்டு அரசாங்கத்தின் கொள்கைக்கு எதிராக செயற்பட்டதாக விஜயதாச மீது குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்தும் எழுந்த வண்ணமே இருந்தன. அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பை மீறிச் செயற்பட்டதற்கான சம்பவங்கள் விரல் விட்டு எண்ண முடியாதளவு அதிகரித்தன.

திருடர் யாராக இருந்தாலும், அவர் திருடர் தான். பச்சை நிறம், நீல நிறம் என்ற வேறுபாடு கிடையாது. யாராக இருந்தாலும் திருடர் திருடர் தான் என  பௌத்த சங்கமொன்றின் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.

இந்த நாட்டில் வழக்கு விசாரணை செய்ய வெளிநாட்டிலிருந்து குழுவொன்றை வரவழைக்க பிரேரணைகள் முன்வைக்கப்பட்டிருந்தன. நீதிமன்றம் சுயாதீனம் இல்லையென்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. எது எவ்வாறிருப்பினும்  எமது நாட்டிலுள்ள சட்டத்திட்டங்களுக்கு அமையவே நாம்  சட்டத்தை நிலைநாட்டுவோம் என கடுமையாக வார்த்தைகளை அளந்திருந்தார்.

மீன் கடையில் சண்டையிட்டுக் கொள்வது போன்றே ஐக்கிய தேசியக் கட்சி கடந்த மத்திய செயற்குழுக் கூட்டத்தின் போது மோதிக் கொள்கின்றனர்.  டீ.எஸ். சேனாநாயக்க ஆரம்பித்த ஐ.தே.கட்சியா இது? என தனக்குள் என்னம் தோன்றியதாகவும் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ அஸ்கிரிய பீட மகாநாயக்கர் வரகாகொட ஞானரத்ன தேரரிடம் முறையிட்டிருந்தார்.

நாட்டின் தேசிய சொத்துக்களை விற்பனை செய்வதற்கு எதிராக குரல் கொடுப்பது, கூட்டுப் பொறுப்பை மீறும் செயலா? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தேசிய வளங்களை வெளிநாட்டவருக்கு வாடகைக்கு வழங்குவதும் விற்பனை செய்வதும் ஒன்றுதான் எனவும், தான் தெளிவாகவே நாட்டை கருத்தில் கொண்டு தீர்மானம் எடுக்கவுள்ளதாவும் அஸ்கிரிய பீட மாகாநாயக்கரிடம் விஜேதாச அமைச்சராக இருந்தபோது எடுத்துக் கூறியிருந்தார்.

தற்பொழுது  நிலவும் அரசியல் கலாசாரத்தினால் நாட்டுக்கு நல்ல எதிர்காலம் ஒன்று இல்லையென திருகோணமலை மொரவெவ, திரியாய சந்தியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் விஜேதாச ராஜபக்ஷ குறிப்பிட்டிருந்தார்.

நாட்டின் தேசிய அரசியலுக்கு தகுதியானவர்களை சரியாக அடையாளம் கண்டு கொள்வது அரசியல் கட்சிகளின் பொறுப்பாகும் எனவும்  கட்சித் தலைமைகள் மீதான தனது அதிருப்தியை வெளியிட்டிருந்தார்.

இவை போன்ற எண்ணிலடங்காத அவரது செயற்பாடுகளே அவர் மீதான அதிருப்திக்கு காரணமாக அமைந்தது என்பது யாரும் அறியாத ஒரு செய்தியல்ல. இது இவ்வாறிருக்கையில்தான், இவரது பதவி நீக்களுக்கு இந்த நாட்டிலுள்ள முஸ்லிம்களை தொடர்புபடுத்த இனவாத சக்திகள் மூக்கை நுழைத்து வருகின்றன. முஸ்லிம் அரசியல் தலைமைகள் இதுபோன்ற நிலைமைகளை விளங்கி சரியாக செயற்பட வேண்டும் என்பதை நன்குணர்ந்துள்ளனர்.

விஜேதாச ராஜபக்ஷவின் பதவி நீக்கம் புதிய ஒரு விடயம் அல்லவென அவரே பகிரங்கமாக தெரியப்படுத்தியுள்ளார். கடந்த சந்திரிக்கா அரசாங்கத்தில் தான் அமைச்சுப் பதவியை பெறவில்லை. மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திலும் அமைச்சுப் பதவி கிடைத்து 5 மாதத்தில் மீண்டும் பறிபோனதாகவும் விஜேதாச ராஜபக்ஷ எம்.பி. தனது இவ்வரசாங்கத்திலும் அமைச்சுப் பதவியைப் பறித்தெடுத்த பின்னர் நினைவு கூர்ந்திருந்தார்.

இதன்பிறகும் அமைச்சர் விஜேதாசவின் பதவி நீக்கத்தை முஸ்லிம் சமூகத்தின் தலையின் மீது வைத்து இனவாத முடிச்சுப் போட இடமளிக்கக் கூடாது. எவர் வேண்டுமானாலும், எந்த நேரத்திலும் தொட்டுக் கொள்வதற்கு இந்த நாட்டிலுள்ள முஸ்லிம் சமூகம் ஊர்காயல்ல என்பதை முஸ்லிம் அரசியல் தலைவர்கள் தலைநிமர்ந்து குரல் எழுப்பும் துணிச்சல் பெற்றிருக்க வேண்டும் என்பது சமூகப் பற்றுள்ள ஒவ்வொரு முஸ்லிமினதும் ஆழ்மனதிலுள்ள எதிர்பார்ப்புக்களாகும்.

— கஹட்டோவிட்ட முஹிடீன்

5 comments

  1. உறுதியான குரல்

  2. Allah karim

  3. Muslim janathawata Aparada karana aya hena pita hena wedilai merenne

  4. Muslim janathawata Aparada karana aya hena pita hena wedilai merenne

  5. Abdul Samad Nafras Nifaz

    ஒங்களுக்கு லூசாடா முஸ்லிம்கள் இந்தநாட்டில் மசிரையும் பிடுங்கமுடியாது என்றீர்கள் இப்ப இந்தலூசை பதவி நீக்கம் செய்தது முஸ்லிம்கள் என்று ஆரம்பிக்கிறீர்கள் ஒன்றை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள் தம்புள்ள பள்ளியை மூட ஆரம்பித்து பன்சலை சீல்வைக்கப்பட்டதை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>