கத்தார் நெருக்கடியில் சிக்கியுள்ள வளைகுடா ஒத்துழைப்புச் சபை தப்பிப் பிழைக்குமா?


unnamed
- லதீப் பாரூக் -

– லதீப் பாரூக் –

தற்போது ஆட்டம் கண்டுள்ள வளைகுடா ஒத்துழைப்புச் சபை சவூதி அரேபியாவால் தோற்றுவிக்கப்பட்டுள்ள கத்தார் நெருக்கடியில் இருந்து தப்பிப் பிழைக்குமா? அல்லது அது பாலைவன மணலுக்குள் புதையுண்டு போய்விடுமா? இந்தப் பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் தற்போது கேட்கப்படுகின்ற முக்கியமான கேள்வி இதுதான்.

ஏற்கனவே சவூதி அரேபியா, பஹ்ரேன், ஐக்கிய அரபு இராச்சியம் இவற்றால் உருவாக்கப்பட்ட எகிப்தின் மதச்சார்பற்ற சர்வாதிகாரம் மற்றும் குவைத் ஓமான் என்பன ஒரு பிரிவாகவும் வளைகுடா ஒத்துழைப்புச் சபை (GCC) ஆட்டம் கண்டுள்ளது.

சவூதி அரேபியாவும் அதன் கூட்டாளிகளும் 2017 ஜுன் 5ல் முன்வைத்த மிகவும் எதிர்ப்பார்க்கப்படாத குறுகிய நோக்கு கொண்ட கத்தாரை அச்சுறுத்தும் வகையிலான 13 அம்ச கோரிக்கை மற்றும் கத்தார் மீது விதிக்கப்பட்ட ராஜதந்திர மற்றும் வர்த்தக ரீதியான தடைகள் இந்தப் பிராந்தியத்தில் பல தசாப்தங்களாகக் காணப்படாத பாரியதோர் ராஜதந்திர நெருக்கடியை உருவாக்கியது.

தெட்டத்தெளிவாக இவை கோரிக்கைகள் அல்ல அவமானங்கள் என்று அல் ஜஸீராவின் சிரேஷ்ட அரசியல் ஆய்வாளர் மர்வான் பிஷாரா தெரிவித்துள்ளார்.

அல்ஜஸீரா ஒளிபரப்பை முற்றாக மூடுதல், ஈரானுடனான உறவுகளை கணிசமாகத் துண்டித்தல், கத்தார் மண்ணில் இருந்து துருக்கி படைகளை வெளியேற்றல், இஸ்லாமிய சகோதரத்துவ இயக்கம் போன்ற அமைப்புக்களுடனான உறவுகளை துண்டித்தல், மாதாந்தம் தனது செயற்பாடுகளை மீளாய்வு செய்ய அனுமதித்தல் என்பன கத்தார் மீது விதிக்கப்பட்ட சில நிபந்தனைகளாகும். இந்த நிபந்தனைகளை நிறைவேற்ற பத்து நாட்கள் அவகாசம் இல்லையேல் விளைவுகளைச் சந்திக்க வேண்டும் என்ற அச்சுறுத்தல் கத்தாருக்கு விடுக்கப்பட்டது. பல வருடங்களாக இஸ்ரேல் விதித்து வரும் நிபந்தனைகளும் இவைதான்.

ஈரான் மீதும் இதேபோன்ற பொருளாதார மற்றும் ராஜதந்திர தடைகளை சவூதி அரேபியாவும் அதன் கூட்டாளிகளும் விதித்தன. ஈரானை தனிமைப்படுத்தி பிராந்தியத்தில் ஊடகங்களையும் அந்நியப்படுத்தின. தனது மக்களின் தேவைக்காக இயற்கை எரிவாயு வளம் மிக்க கத்தார் உணவையும் ஏனைய பொருள்களையும் கடல் வழியாகவும் ஆகாய வழியாகவும் இறக்குமதி செய்ய வேண்டிய நிர்ப்பந்த நிலைக்கு ஆளானது. இன்று தனது தேவைகளுக்காக கத்தார் ஈரானிலும் துருக்கியிலும் தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்தத் தடைகாலவரையற்றவை என்பதால் இந்தத் தடைகளையும் மீறி தனது செல்வத்தின் பலத்தால் நீண்டகாலம் தனித்திருக்க முடியும் என்பதை நிரூபிக்க வேண்டிய நிர்ப்பந்தம் கத்தாருக்கு உள்ளது.

ஐ.நாவுக்கான கத்தார் தூதுவர் ஷேகா அல்யா அஹமத் பின் ஷைப் அல் தானி தனது நாடு பயங்கரவாதத்துக்கு துணை போவதாக கூறப்படும் குற்றச்சாட்டு ஒரு சதியாகும் என்று குறிப்பிட்டுள்ளார். உலகத்துடனான எமது உறவுகளை சீர்குலைக்க செய்யப்பட்ட சதி என அவர் வர்ணித்துள்ளார். பயங்கரவாதம் என்ற அட்டையைப் பாவித்து மேற்குலகத்துடனான எமது கீர்த்தியையும் உறவுகளையும் சிதைக்கும் ஒரு முயற்சி என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். மேற்குலகத்தின் கவனத்தை ஈர்க்க அவர்கள் பாவித்திருக்கும் சுலோகமே பunnamed (1)யங்கரவாதம். இதில் பிரதான குறிக்கோளாக இருப்பது எமது ஊடகத்தையும் எமது வெளிப்படைத் தன்மையையும் அடக்கி ஒடுக்க வேண்டும் என்பதாகும். ‘நாங்கள் சிறிய நாடு ஆனால் ஒன்றிணைக்கப்பட்டவர்கள். ஒரு தீர்மானம் வருமென்று நம்புகின்றோம். ஆனால் நிலைமைகள் நீண்டகாலத்துக்கு உறை நிலையில் இருக்கலாம்’ என்றும் அவர் அச்சம் தெரிவித்துள்ளார்.

தன்னை மூடி விட வேண்டும் என்ற கோரிக்கையை அல்ஜஸீரா வன்மையாகக் கண்டித்துள்ளது. இது இந்தப் பிராந்தியத்தில் கருத்து சுதந்திரத்துக்கு சாவு மணி அடிக்க எடுக்கப்படும் ஒரு முயற்சியே அன்றி வேறில்லை. மேலும் மக்களின் தகவல் அறியும் உரிமையை குழி தோண்டி புதைக்க எடுக்கப்படும் ஒரு நடவடிக்கையாகும் என்று அல் ஜஸீரா தெரிவித்துள்ளது.

பலஸ்தீனத்தில் தான் மேற்கொள்ளும் அட்டூழியங்களை உலகம் அறியாமல் மூடி மறைப்பதற்காக அல் ஜஸீராவை இழுத்து மூட வேண்டும் என்பது இஸ்ரேல் பல வருடங்களாக முன் வைத்து வருகின்ற ஒரு கோரிக்கையாகும். அந்த வகையில் சவூதி அரேபியா முன்வைத்துள்ள 13 அம்சக் கோரிக்கையை சற்று ஆழமாக நோக்குகின்ற போது அவை இஸ்ரேலினால் எழுதப்பட்டு சவூதி அரேபியா மூலம் முன்வைக்கப்பட்டவையா, வேண்டுமென்றே இஸ்ரேல் பிராந்தியத்தில் குழப்பத்தை தூண்டிவிட முயற்சிக்கின்றதா என்ற ஒரு சந்தேகமும் மேலோங்குகின்றது. காரணம் இஸ்ரேல் சவூதி அரேபியா ஆகிய இரண்டு நாடுகளுமே அல்ஜஸீரா மூடப்பட வேண்டும் என்ற ஒரே கோரிக்கையை முன்வைத்துள்ளன.

இஸ்ரேல் இழைத்துள்ள யுத்தக் குற்றங்களை சவூதியும் அதன் நேச நாடுகளும் மறந்துள்ளமைதான் இங்கு மிகவும் கவலைக்குரியது. மத்திய கிழக்கு பயங்கரவாதத்தின் ஞானத் தந்தைகளான இஸ்ரேல் இது வரை பலஸ்தீன மக்களுக்கு எதிராக 63 பாரிய படுகொலைச் சம்பவங்களைப் புரிந்துள்ளது. பலஸ்தீன மக்களின் பூர்வீக காணிகளைப் பறித்தும் அவர்கள் மீது வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத அளவு கொடூரங்களைப் புரிந்தும் நிர்க்கதி நிலைக்கு கொண்டு வந்தமைக்கு மேலதிகமாகவே இந்தப் படுகொலைகளும் புரியப்பட்டுள்ளன. இந்தக் கொடுமைகளை கண்டிக்கத் தவறிய, அவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தவறிய சவூதியும் அதன் நேசர்களும் இப்போது கத்தாருக்கு எதிராக கூட்டுச் சேர்ந்துள்ளனர். முஸ்லிம் நாடுகளில் கொழுந்து விட்டு எரியும் பல பிரச்சினைகளில் சுதந்திரமானதோர் கண்ணோட்டத்தை கொண்டுள்ள நாடு கத்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் இருந்தே இஸ்ரேலியர்கள் இஸ்லாத்துக்கு எதிரான போக்கை கொண்டுள்ளனர். இந்தக் கொள்கையின் படிதான் அவர்கள் எகிப்தின் இஸ்லாமிய சகோதரத்துவ இயக்கத்தை பயங்கரவாத இயக்கமாகப் பார்க்கின்றனர். ஆனால் இஸ்ரேல் செய்தது போல் எந்தவொரு பயங்கரவாத செயலையும் இதுவரை சகோதரத்துவ இயக்கம் புரிந்ததில்லை. இப்போது இஸ்ரேலின் குரலின் எதிரொலியாக சவூதி அரேபியாவும் அதன் நேச அணிகளான பஹ்ரேன், ஐக்கிய அரபு இராச்சியம், எகிப்து என்பனவும் சகோதரத்துவ இயக்கத்தை பயங்கரவாத இயக்கமாகப் பார்க்கின்றன. இது இந்த முஸ்லிம் நாடுகளின் ஒட்டுமொத்த வெட்கக் கேட்டையே வெளிப்படுத்தி நிற்கின்றது.

கத்தார் மீது விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் இந்த நாடுகளின் சர்வதேச ரீதியான உறவுகள் பற்றிய அறிவீனத்தை வெளிப்படுத்துவதாய் அமைந்துள்ளன. அது மட்டுமன்றி ஒரு நாட்டின் இறைமை என்றால் என்ன என்பதை புரிந்து கொள்வதில் இவர்களுக்கு உள்ள அறிவீனத்தையும் இது வெளிப்படுத்துகின்றது. இந்த நாடுகள் எந்த விதமான முன்னேற்பாடுகளும் தயார்படுத்தலும் இன்றியே இவ்வாறான ஒரு ஆவணத்தை இன்னொரு நாட்டின் மீது திணித்துள்ளன என்பதையும் இது உணர்த்துகின்றது.

அமெரிக்காவோ, பிரிட்டனோ அல்லது வேறு எந்த நாடோ இஸ்லாமிய சகோதரத்துவ இயக்கத்தை ஒரு பயங்கரவாத இயக்கமாகப் பார்க்கவில்லை. அவ்வாறான பிரகடனங்களைச் செய்யவும் இல்லை.

தங்களது மடத்தனமான முயற்சி தோல்விகண்டு வருகின்றது என்பதை சவூதியும் அதன் நேச அணிகளும் சுமார் இரண்டரை மாதங்கள் கழித்து உணரத் தொடங்கியுள்ளன. கடந்த மாதம் தாங்கள் முன்வைத்த 13 அம்ச கோரிக்கையை கத்தார் ஏற்க வேண்டும் என்ற நிபந்தனையை இந்த நான்கு நாடுகளும் இதற்கு மேலும் வலியுறுத்தவில்லை. மாறாக ஆறு பாரிய அம்ச கொள்கைகளை கத்தார் ஏற்க வேண்டும் என இந்த நாடுகளின் இராஜதந்திர பிரதிநிதிகள் ஐக்கிய நாடுகள் சபையில் நிருபர்கள் மத்தியில் தெரிவித்துள்ளனர்.

unnamed (2)பயங்கரவாதத்துக்கும் தீவிரவாதத்துக்கும் எதிராகப் போராட வேண்டும் என்ற அர்ப்பணம், ஆத்திரமூட்டல் செயற்பாடுகளைக் கைவிடல் என்பன இதில் அடங்கும். ஆனால் தனது இறைமையை அச்சுறுத்தும் அல்லது சர்வதேச சட்டங்களை மீறும் எந்தவொரு நிபந்தனையையும் தான் ஏற்கத் தயாரில்லை என்று கத்தார் அறிவித்துள்ளது. அத்தோடு தனது அண்டை நாடுகள் தன்மீது விதித்துள்ள தடைகளையும் அது வன்மையாகக் கண்டித்துள்ளது.

1973ல் ஏற்பட்ட எரிபொருள் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து வளைகுடா நாடுகள் சுமார் நூற்றாண்டுகால பின்னடைவில் இருந்து விடுபட்டு முன்னேற்றத்தைக் காணத் தொடங்கின. அதன் பிறகு தான் அவை நவீன உலகில் முன்னணி வகிக்கத் தொடங்கின. மிகப் பெரிய எண்ணெய் செல்வத்தைப் பயன்படுத்தி அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு தமது தேசங்களைக் கட்டி எழுப்பும் திட்டங்களை அவை தொடங்கின. நவீன உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி பாலைவனங்களாகவும் வெறும் தரிசு நிலங்களாகவும் இருந்த தமது பூமியை செல்வம் கொழிக்கும் பூமியாக நவீன உட்கட்டமைப்பு வசதிகளோடு மாற்றி அமைக்கும் திட்டங்களை அவை தொடங்கின. இதன் விளைவாக இரவோடு இரவாக பாலைவனங்களில் நவீன கட்டிடங்கள் பல உருவாகின. ஆட்சியாளர்களதும் பொது மக்களினதும் வாழ்வும் வசதிகளும் கற்பனைக்கு எட்டாத வகையில் நவீனமயம் கொண்டதாக மாறின. அமெரிக்கா முதல் ஐரோப்பா வரையிலும் உலகின் ஏனைய பகுதிகளில் இருந்தும் தலைவர்களும் மக்களும் தமது செல்வங்களைத் தேடி அரபுலக ஆட்சியாளர்களோடு கைகோர்க்க வரிசையாக இந்தப் பிராந்தியத்துக்கு வரத் தொடங்கினர். பொதுவாக படிப்பறிவு குன்றியவர்களாக காணப்பட்ட இந்தப் பிராந்திய மக்களுக்கு உலக அரங்கில் தனியான மவுசு ஏற்பட்டது.

GCC 19891ல் ஸ்தாபிக்கப்பட்டது. ஈரானின் இஸ்லாமியப் புரட்சி அதைத் தொடர்ந்து ஏற்பட்ட ஈரான் – ஈராக் யுத்தம் என்பனவற்றின் பின்னணியில் அது ஸ்தாபிக்கப்பட்டது. அதன் உறுப்பினர்களாக சவூதி அரேபியா, குவைத், ஐக்கிய அரபு இராச்சியம், ஒமான், கத்தார், பஹ்ரேன் ஆகிய நாடுகள் காணப்படுகின்றன. இவை எல்லாமே ஒரே விதமான அரசியல், சமூக மற்றும் கலாசாரப் போக்கினைக் கொண்ட நாடுகள். இவை அடக்குமுறையும் சர்வாதிகாரமும் கொண்ட ராஜதானிகள் அல்லது ஷேக்மாரின் பூமிகள். இங்கு ஒன்றில் அரசியல் பங்குபற்றலே கிடையாது அல்லது மிகவும் வரையறுக்கப்பட்டது.

இந்த GCC நாடுகள் ஒட்டு மொத்தமாக உலக எண்ணெய் வளத்தில் கிட்டத்தட்ட அரைவாசியைக் கொண்டுள்ளன. சவூதி அரேபியாதான் இந்த அமைப்பில் மிகவும் பலம் பொருந்திய நாடு. 2008/9 காலப்பகுதியில் ஏற்பட்ட பொருளாதார சரிவில் சிக்குண்ட முதல் வரிசை நாடுகளுள் இந்த வளைகுடா நாடுகளும் அடங்கும். ஆனால் உலகின் ஏனைய பல நாடுகளில் அது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் எண்ணெய் வளத்தின் பலத்தால் இந்த நாடுகள் அந்த பாரிய சரிவில் இருந்து தப்பிப் பிழைத்தன.

மிகவும் ஆயுத பலமும் மிகவும் கொந்தளிப்பும் கொண்ட ஒரு பிராந்தியத்தை மீண்டும் ஒரு தடவை கத்தார் நெருக்கடி தாக்கியுள்ளது. வாஷிங்டன், லண்டன், பாரிஸ், டெல்அவிவ் அகிய தலைநகரங்களில் யுத்த வெறியர்களின் கரங்கள் மேலோங்கியுள்ள நிலையில் இனி இந்தப் பிராந்தியத்தில் அடுத்து என்ன நடக்கும். அவர்கள் ஒரு யுத்தப் பிரகடனத்துக்கான சந்தர்ப்பத்தை எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர். கடந்த மூன்று தசாப்த காலங்களாக அவர்கள் இந்தப் பிராந்தியத்தில் செய்து வருவது போல் வளைகுடா நாடுகளை மீண்டும் ஒரு தடவை நாசம் செய்து அவற்றின் எண்ணெய் வளத்தை சூறையாடக் காத்திருக்கின்ற பின்னணியில் அடுத்து என்ன நடக்கும் என்பது தான் இன்றைய பிரதான கேள்வி. (நு)

-லதீப் பாரூக்-

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>