சுய லாபத்துக்காக இனச் சாயம் பூசுவது சிறந்த அரசியல் பண்பாடல்ல !


law-court_2900691b

நவீன ஜனநாயக முறைமை கொண்ட நாடுகளில் அரசு, அரசாங்கம் என இரு பிரதான துறைகள் காணப்படுகின்றன. அரச துறை நிரந்தரமானதாகவும், அரசாங்கத் துறை மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப வாக்களிப்பினால் தீர்மானிக்கப்படுகின்ற ஒன்றாகவும் காணப்படுகின்றது. இத்துறை நிரந்தரமற்ற ஒன்றாகும்.

எமது நாட்டிலும் அண்மைய “சில் ஆடை” வழக்குத் தீர்ப்பு இவ்விரு துறைகளும் எப்படியிருக்க வேண்டும் என்பதற்கான ஒரு சிறந்த முன்மாதிரியாக அமைந்திருந்தது என பலரும் கருத்துக்கள் தெரிவிக்காமல் இல்லை. இவ்வழக்கில் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்ட இருவரும் அரச நிருவாக துறையைச் சேர்ந்தவர்கள். அதில் ஒருவர் ஜனாதிபதி செயலாளர். மற்றவர் அரச நிறுவனத்தின் தலைவர்.

அரசியல்வாதிக்கு விலை போகும் அரச துறை அதிகாரிகளுக்கு சிறந்ததொரு பாடம் இதுவெனவும் கருத்துக்கள் எழாமல் இல்லை. இந்த இருவரின் மீதான தீர்ப்பானது அரச துறையிலுள்ள சகல அதிகாரிகளுக்கும் ஒரு அபகீர்த்தியாகும் எனவும் கூட்டு எதிர்க் கட்சியினர் கருத்துக்களை வீசி வருகின்றனர்.

இவர்கள் மீதான தீர்ப்புக்கு எதிர்ப்புத் தொரிவித்து இன்று கூட்டு எதிர்க் கட்சியினர் மேன்முறையீட்டு மனுவொன்றையும் தாக்கல் செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அரச துறையினர் அரசியல்வாதிகளின் தாலத்துக்கு ஆட ஆரம்பிக்கும் போது பொது மக்களின் சொத்துக்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாகும்.

அரசியல்வாதிகளின் தேவைகளுக்கு ஏற்ப செயற்படும் போது சுய நலன்களுக்கே முன்னுரிமை வழங்கப்படுகின்றது. பொது மக்களுக்காகவுள்ள நாட்டின் பொது நிருவாக சேவையிலுள்ள அரச அதிகாரிகள், மக்களின் நலன்களுக்கும் அநீதமிழைக்கும் நிலைமை உருவாகின்றது.

இந்த வழக்கின் தீர்ப்பானது இதன்பிறகு அரச அதிகாரிகள் அரசியல்வாதிகளின் வால்பிடித்து செயற்படாது, சிந்தித்து செயற்படுவதற்கு ஒரு தூண்டுதலாக அமையும் என்பது எல்லோரினதும் எதிர்பார்ப்பாகும்.

இந்த வழக்குத் தீர்ப்புக்கு எதிரானவர்கள் மக்கள் மத்தியில் இன ரீதியிலான ஒரு தவறான சிந்தனையை தூண்டுவதற்கு முயற்சிகள் எடுத்து வருகின்றனர். இந்த நாட்டின் அரசியல் யாப்பில் பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. பௌத்த மதம் சார்ந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு காலம் நேரம் அவசியமில்லை.

ஏற்கனவே, திட்டமிடப்பட்ட ஒரு நடவடிக்கையே இந்த “சில் ஆடை” விநியோக நடவடிக்கை. தேர்தலை மையமாக வைத்து மேற்கொள்ளப்பட்டதல்ல. இந்த அரசாங்கம் பௌத்த எதிர்க் கொள்கையொன்றைக் கடைபிடிப்பதன் எதிர்விளைவே இந்த வழக்கின் தீர்ப்பாகும் எனவும் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.

சட்டம் ஒழுங்காக செயற்படுத்தப்படும் போது, அது தனக்கும், தனது நெருங்கியவர்களுக்கும் எதிராக அமைகின்றது எனக் காண்கின்ற வேளையில், அதற்கு இனச் சாயம் கலந்து அத்தீர்ப்புக்கு எதிராக மக்கள் ஆதரவு தேடும் வழக்கம் மிக மோசமான ஒன்றாகவே பார்க்கப்பட வேண்டும்.

நாட்டின் உயர்ந்த சகலராலும் மதிக்கப்படும் நீதித் துறையில் பொது மக்களுக்கு சந்தேகம் ஏற்படும் விதமாக நடந்து கொள்வதும், குற்றம் நிரூபிக்கப்பட்டதன் பின்னர் குற்றவாளிகளுக்காக குரல் கொடுப்பதும் சிறந்த அரசியல் பண்பாடு அல்ல என்பதில் யாரும் கருத்து முரண்பட மாட்டார்கள்.

– கஹட்டோவிட்ட முஹிடீன் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>