முஸ்லிம் பிரதிநிதிகள் – மகாநாயக்க தேரர்கள் ; திறந்த கலந்துரையாடலுக்கான தேவை


02

வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் கடந்த ஞாயிறன்று கண்டி அஸ்கிரிய மற்றும் மல்வத்து விகாரைகளுக்கு புரிந்துணர்வு விஜயமொன்றை மேற்கொண்டு மகாநாயக்க தேரர்களுடன் கலந்துரையாடலொன்றை மேற்கொண்டிருந்தார்.

நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் உட்பட பெரும்பாலான சிங்கள பௌத்த அமைச்சர்கள், அரசியல்வாதிகள், அரச பணிப்பாளர்கள் மற்றும் இராஜதந்திரிகள் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசிர்வாதம், ஆலோசனை பெறுவது வழக்கம். அதிலே, மத நம்பிக்கைகள் கடந்த அரசியல் நோக்கம்தான் இருந்தாலும் பெரும்பான்மை சிங்கள பௌத்தர்களின் ஆதரவை இலகுவாகப் பெறுவதற்குரிய ஒரே வழியும் அதுவாகும்.

இலங்கை சிங்கள பௌத்தர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பல்லின சமூகங்கள் வாழும் நாடாகும். இலங்கையின் சமூக, அரசியல், பொருளாதார காரணிகளில் பௌத்த மதம் தாக்கம் செலுத்துவதை மறுப்பதற்கில்லை. பௌத்த மதத்தின் செல்வாக்கை பாதுகாத்து, உறுதிப்படுத்துவதில் மகாநாயக்கர்கள் பெரிதும் பங்காற்றுகின்றனர். நாட்டில் எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும், அரசாங்கத்தை ஆட்டிப்படைக்கும் முதன்மை அமுக்கக் குழுவாக பௌத்த பீடங்களே விளங்குகின்றன. இதன் காரணமாக, ஆட்சியாளர்களும் பௌத்த பீடங்களையும் மகாநாயக்கர்களையும் திருப்திப்படுத்த முயற்சிக்கின்றனர்.

இலங்கையின் சிறுபான்மை தமிழ், முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் தலைமைகள் ஒருசில சந்தர்ப்பங்கள் தவிர்ந்து, மகாநாயக்கர்களை சந்தித்ததோ, ஆலோசனைகளைப் பெற்றதோ, பிரச்சினைகளை நடுநிலைமையாக அவர்களுக்கு எத்திவைத்து, அவர்களின் ஆதரவு, பெரும்பான்மையினர் மத்தியிலான நல்லெண்ணத்தை கட்டியெழுப்ப முயற்சித்ததோ இல்லையென்றுதான் கூறவேண்டும்.

அதனடிப்படையில், வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரனின் பௌத்த பீடங்களின் மஹா விகாரைகளுக்கான புரிந்துணர்வு விஜயம் மற்றும் தேரர்களுடனான கலந்துரையாடல் என்பன ஒரு சிறந்த ஆரம்பமாகும்.

தமிழ், முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகள், தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் பிரச்சினைகளை நாட்டுக்கு அறியச் செய்வதற்கு இவ்வாறான சந்திப்புக்கள் நல்ல வாய்ப்பாகும்.

மகாநாயக்கர் வரகாகொட ஞானரத்தன தேரர் தலைமையிலான 12 தேரர்கள் கொண்ட குழுவைச் சந்தித்த வட மாகாண முதலமைச்சர், இனப்பிரச்சினைக்கான தீர்வு அதிகார பரவலாக்கல், சமஷ்டி அடிப்படையிலான அரசியலமைப்பு, உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்கான போராட்டம் போன்றன குறித்து தெளிவுபடுத்தியுள்ளார்.

மேலும், தம்மிடம் பிரிவினைவாதம், மதவாதம், இனவாத கொள்கைகள் இல்லை என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளும் முதலமைச்சர் விக்னேஷ்வரனின் நடைமுறையிலிருந்து கற்றுக்கொள்ளவேண்டிய படிப்பினைகள் உள்ளன. நாட்டில் முஸ்லிம்களுகெதிரான அநீதிகள் காலத்துக்கு காலம் கட்டவிழ்த்துவிடப்படுகின்றன. அநேகமானவை சிங்கள அல்லது பௌத்த மதத்தின் பெயரால் ஆரம்பமாகும் இனவாத செயற்பாடுகளேயாகும்.

அவ்வாறான சந்தர்ப்பங்களின் போது, முஸ்லிம்களின் பக்க நியாயங்களோ, முஸ்லிம்களுக்கெதிரான அநீதிகளோ மகாநாயக்கர்களையோ, பெரும்பான்மை மக்களையோ சென்றடைவதில்லை. சிங்கள ஊடகங்களும் முஸ்லிம்களின் பிரச்சினைகளை வெளிச்சத்துக்கு கொண்டுவருவதில்லை. இவ்வாறான சந்தர்ப்பங்களின்போது முஸ்லிம் அரசியல்வாதிகள் மகாநாயக்கரை சந்திக்கும்போது, சிங்கள ஊடகங்களும் சந்திப்பு குறித்து பேச ஆரம்பிக்கும். முஸ்லிம்களின் பிரச்சினைகளும் வெளிச்சத்துக்கு வர ஏதுவாக அமையும்.

தமிழ், முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் ஆட்சியாளர்களுக்கு அழுத்தம் கொடுக்கும் மகாநாயக்கர்கள் காதுக்கு எட்டவேண்டும். இவ்விடயத்தில் முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் அதிக அக்கறையுடன் செயற்பட வேண்டும். அதேநேரம், தம் தனித்துவம் பாதிக்காத முறையில் மக்கள் பிரச்சினைகள் எத்திவைக்கப்பட முயற்சியெடுக்க வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். (ஸ)

– ஆதில் அலி சப்ரி –

2 comments

  1. Salahudeen Adnan Mohamed

    அவனகளுக்கு அவன்கள்ர பிரச்சினைய தீர்க்கேவ நேரம் இல்ல அதுல ேவர இது….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>