ரோஹிங்கிய விவகாரத்தில் தளிர்விடும் இனவாதம்


Screen Shot 2017-09-18 at 4.24.16 PM

மியன்மாரில் அடக்குமுறைகளை எதிர்கொண்டுள்ள ரோஹிங்கிய முஸ்லிம்களை இலங்கைக்கு அழைத்துவந்து குடியேற்ற நடவடிக்கையெடுத்து வருவதாக போலியான வதந்திகள் ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பரவிவருகின்றன.

கடந்த சில தினங்களாக சிங்கள மற்றும் பௌத்த கடும்போக்கு அமைப்புகள் எவ்வித அடிப்படை ஆதாரங்களும் அற்ற வதந்திகளை பரப்பி, இனவாதத்தை தூண்டிவருகின்றன.

ரோஹிங்கிய முஸ்லிம்கள் இலங்கையில் குடியேற்றப்படவுள்ளதாகவும், அதனை தடுத்து நிறுத்துமாறு அரசுக்கு அழுத்தம்கொடுக்கும் ஆர்ப்பாட்டமொன்றையும் மேற்படி பௌத்த அமைப்புகள் கொழும்பில் ஏற்பாடு செய்துள்ளன.

இலங்கை முஸ்லிம் பிரதிநிதிகள், தலைமைகள் அல்லது பொது மக்களோ ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு இலங்கையில் அடைக்கலம் கொடுக்கவேண்டுமென்ற கோரிக்கையை முன்வைக்காத நிலையில், வில்பத்துவில் ரோஹிங்கிய முஸ்லிம்கள் குடியேற்றப்படவுள்ளதாக கூறி மேற்படி எதிர்ப்புப் பிரசாரங்களும், இனவாத நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நாட்டின் இறைமை, ஆள்புலத்தைப் பாதுகாப்பதற்காக செயற்பட்ட வடபுல முஸ்லிம்கள் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த இடங்களிலிருந்து விடுதலைப் புலிகளால் விரட்டியடிக்கப்பட்டு 27 ஆண்டுகள் கடந்தும் பூர்வீகங்களில் மீள்குடியமர்த்தப்படாத சோகம் தொடரும் நிலையில், இன்னோர் நாட்டு மக்களை இங்கு குடியமர்த்துமாறு கோரிக்கை விடுப்பார்களா?

யதார்த்தத்தை புரிந்துகொள்ளாது முஸ்லிம்கள் மீது இவ்வாறான அபாண்டமான குற்றச்சாட்டுக்களை சுமத்துவதேன்? உண்மையில், இதன் பின்னணியில் இருக்கும் சக்திகள் இலங்கையில் மீண்டுமோர் இனவாத மோதலை ஏற்படுத்தி குளிர்காய முற்படுகிறார்கள்.

இலங்கை முஸ்லிம்கள் தாய் நாட்டில் நிம்மதியாகவும், சுதந்திரமாகவும் வாழும் சூழ்நிலை இல்லாதபோது, ரோஹிங்கிய அகதிகளை இந்த நாட்டுக்கு கொண்டுவந்து குடியேற்ற நடவடிக்கையெடுப்பதாக இனவாதிகள் பரப்பிவரும் போலி ஊடக பிரசாரங்கள் இருக்கின்ற அற்ப சொற்ப நிம்மதியையும் சீர்குலைப்பதற்கேயென்று தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

ரோஹிங்கிய முஸ்லிம்கள் விவகாரத்தில் இலங்கை முஸ்லிம்கள் தமது உணர்வுகளை வெளியிடும்போது, நம்மோடு ஆயிரம் வருடங்களுக்கு மேலாக வாழும் பௌத்த மக்களது உணர்வுகள் புன்படாதவகையில் செயற்படுவது அவசியமாகும். மியன்மார் ஒரு பௌத்த நாடு. இலங்கையிலும் பௌத்தர்களே பெரும்பான்மையினராக வாழ்ந்து வருகின்றனர். ரோஹிங்கிய முஸ்லிம்கள் மீதான வன்முறைகள் அரசியல் ரீதியானவை. அது இஸ்லாத்துக்கும் பௌத்தத்துக்குமான மோதலாக இல்லை. இலங்கை முஸ்லிம்களின் இருப்புக்கு அச்சுறுத்தலாக, இருப்பை கேள்விக்குறியாக்கும் விதத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்துவது, சமூக வலைத்தள கண்டனங்களை வெளியிடுவது என்பவற்றை தவிர்ந்துகொள்ள வேண்டும்.

இவ்விடயத்தில் முஸ்லிம் சமூக தலைமைகளின், இஸ்லாமிய இயக்கங்களின், முகநூல் காட்போர்ட் வீரர்களின் செயற்பாடுகள் சிங்கள பௌத்த இனவாதிகளுக்கு தீனி போடுவதாகவும், நடுநிலைமையான பௌத்தர்களை வெறுப்படையச் செய்பவையாகவும் அமைந்துவிடக்கூடாது.

அதேநேரம், ரோஹிங்கியர்களை இலங்கை முஸ்லிம்கள் இங்கு குடியேற்ற முற்படுவதாக இல்லாத பொய்களைக் கூறி, நாட்டில் இனங்களுக்கிடையே முரண்பாட்டையும், மோதலையும் ஏற்படுத்த முனையும் சக்திகள் குறித்து சட்டமும், ஒழுங்கும் நடவடிக்கையெடுப்பதில் தயக்கம் காட்டக்கூடாது. (ஸ)

– என்.எம்.அமீன் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>