மியன்மாரில் முஸ்லிம்கள் மீதான இனச் சுத்திகரிப்பு ஒரு பாடநூல் உதாரணம்


Myanmar

• மியன்மாரில் முஸ்லிம்கள் மீதான இனச் சுத்திகரிப்பு ஒரு பாடநூல் உதாரணத்தைப் போல் அமைந்துள்ளது என ஐ.நா மனித உரிமை ஆணையாளர் வர்ணிப்பு

• றோஹிங்யா முஸ்லிம்களை இனச்சுத்திகரிப்பு செய்யும் ஆங் சோங் சூகியை ஆதரிக்கும் இந்தியா, சீனா மற்றும் இஸ்ரேல்

மியன்மாரின் ஆயுதப் படையினரும் அவர்களின் கைக்கூலிகளான கொலைகார காடையர் கும்பல்களும் சேர்ந்து அந்த நாட்டின் சிறுபான்மை இன றோஹிங்யா முஸ்லிம்களைக் கொன்று குவிக்கத் தொடங்கி சுமார் இரு வாரங்கள் கழிந்த நிலையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செயித் றாத் அல் ஹுசைன் கடந்த 11ம் திகதி அதுபற்றி கருத்து வெளியிடுகையில் மியன்மாரில் அரங்கேற்றப்படும் இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் இனச் சுத்திகரிப்பு என்றால் என்ன என்று ஒரு பாடப் புத்தகத்தில் கூறப்படும் உதாரணங்களாக அமைந்துள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.

இப்படி நடக்கும் என்று ஏற்கனவே இது எதிர்வு கூறப்பட்ட ஒரு விடயம். எனவே இதை முற்றாகத் தவிர்த்திருக்கலாம் என்று மனித உரிமை ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார். ஐ.நா மனித உரிமை பேரவையில் பேசும் போது தற்போதைய சூழலை முழுமையாக மதிப்பிட முடியாத நிலை உள்ளது. மியன்மார் மனித உரிமை விசாரணைகளுக்கு வழிவிடாமல் இருப்பதே அதற்கு முக்கிய காரணம் என்றும் அவர் கூறியுள்ளார். பாரிய அளவில் பெண்கள் மீதான கூட்டுப் பாலியல் வல்லுறவு, குழந்தைகள் சிறுவர்கள் உற்பட வயது மற்றும் பால் வித்தியாசமின்றி மேற்கொள்ளப்பட்டுள்ள படுகொலைகள், இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட கொடூரமான தாக்குதல்கள், பலவந்தமாக மக்கள் காணாமல் ஆக்கப்பட்டமை, துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும், வாளால் வெட்டியும், கூரிய ஆயுதங்கள் மற்றும் சம்மட்டிகளால் தாக்கியும் மக்கள் கொல்லப்பட்டமை, உயிரோடு எரிக்கப்பட்டமை, தாக்குதலின் பின் குற்றுயிராகக் கிடந்தவர்கள் உயிரோடு சவக் கிடங்குகளில் போட்டு எரிக்கப்பட்டமை, வீடுகளில் இருந்து துரத்தப்பட்டமை, அதன் பிறகு அந்த வீடுகள் சூறையாடப்பட்டமை, இறுதியில் நூற்றுக்கணக்கான வீடுகளும் கிராமங்கள் பலவும் தீக்கு இரையாக்கப்பட்டமை, சிறுவர் சிறுமியர் முன்பாக தாய்மார் கற்பழிக்கப்பட்டமை, அதை தடுக்க முயன்ற பாலகர்கள் கொல்லப்பட்டமை, தாயிடம் பால் அருந்திக் கொண்டிருந்த நிலையில் சிசுக்களின் கழுத்துகள் வெட்டிக் குதறப்பட்டமை என நாகரிகமான மனித இனம் நினைத்தும் கூடப் பார்க்க முடியாத சம்பவங்கள் நடந்துள்ளன. அவை அனைத்தும் மனித உரிமை பேரவைக்கு முன்னால் ஆவணமயப்படுத்தப் பட்டும் உள்ளன.

றோஹிங்யாக்கள் மீதான மியன்மார் இராணுவத்தின் இந்த வெறித்தனமான காட்டுமிராண்டி நடவடிக்கைகள் காரணமாக ஆங் சோங் சூகி உலக அளவில் கண்டனத்துக்கும் தலை குனிவுக்கும் ஆளாகி உள்ளார். நோபல் சமாதான பரிசு வென்ற பல பிரமுகர்கள் அண்மையில் ஆங் சோங் சூகிக்கு பகிரங்கமாக ஒரு கடிதத்தை கூட்டாக எழுதி உள்ளனர். ராக்கின் மாநிலத்தில் றோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்டு வருவது ஒரு இனச் சுத்திகரிப்பு நடடிக்கை. இவை அனைத்தும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள். இவற்றை உடனடியான நிறுத்த நடநடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

“இராணுவத்தின் கொடூரமான நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டு வருமாறு மியன்மார் அரசை நான் உடனடியாக வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். றோஹிங்யா மக்களுக்கு எதிரான எல்லா வன்முறைகளுக்கும் அவர்கள் பொறுப்புச் கூற வேண்டும்” என மனித உரிமை ஆணையாளரும் வலியுறுத்தி உள்ளார். அத்தோடு றோஹிங்யா மக்கள் நாட்டை விட்டுத் தப்பிச் செல்ல முடியாத வகையில் பங்களாதேஷ் எல்லையில் மியன்மார் இராணுவம் கண்ணி வெடிகளைப் புதைத்து வருகின்றமை தன்னை பெரும் கவலைக்கு ஆளாக்கியுள்ளதாகவும், இந்தச் செய்தி கேட்டு தான் அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும் ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

வன்முறை காரணமாக நாட்டை விட்டு வெளியேறும் றோஹிங்யா முஸ்லிம் மக்கள் தமது பிரஜா உரிமைகளை நிரூபித்தால் மட்டுமே மீண்டும் திரும்பி வர அனுமதிக்கப்படுவார்கள் என்று ஒரு விசித்திரமான அறிவிப்பையும் மியன்மார் அரசு தற்போது விடுத்துள்ளது. இதுவும் உலக அளவில் கண்டனத்துக்கு ஆளாகியுள்ளது. தற்போது மியன்மார் என அழைக்கப்படும் முன்னாள் பர்மா 1962 முதல் றோஹிங்யா மக்களின் விரிவான பல உரிமைகளைப் பறித்து வந்துள்ளது. அதில் பிரதானமானது அவர்களின் குடியுரிமை. இந்நிலையில் தற்போதைய அறிவிப்பானது பெரும்பாலான மக்கள் மீண்டும் தமது சொந்த இடங்களுக்கு திரும்பி வருவதை முற்றாகத் தடை செய்யும் ஒரு முயற்சியாகவே அமைந்துள்ளது.

இதே விதமான கொடுமைகளுக்கு சீனாவால் உள்ளாக்கப்படும் திபெத் மக்களின் ஆன்மிகத் தலைவர் தலாய் லாமா கூட முஸ்லிம்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். புத்த பிரான் இந்தக் காலப்பகுதியில் வாழ்ந்திருந்தால் நிச்சயமாக அவர் உயிரைக் காப்பாற்ற ஓட்டம் பிடித்திருக்கும் முஸ்லிம்களுக்கு தான் ஆதரவுக் கரம் நீட்டியிருப்பார் என்று தலாய் லாமா குறிப்பிட்டுள்ளார். முஸ்லிம்களுக்கு மியன்மாரில் இந்தக் கொடுமைகள் இழைக்கப்படுவது புத்தரை பின்பற்றும் பௌத்தர்கள் பெரும்பான்மையாக வாழும் மியன்மாரில் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

உலகின் முன்னணி பௌத்த தலைவர்களுள் ஒருவராக மதிக்கப்படுபவர் தான் தலாய் லாமா. அவரும் சமாதானத்துக்கான நோபல் பரிசு வென்றவர் என்பதும் நினைவூட்டத்தக்கது. இன்றைய நிலைக்கு சமாதானமான ஒரு முடிவை காணுங்கள் என்று தலாய் லாமா சூகிக்கு உருக்கமானதோர் கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார். சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தின் அடிப்படையில் உங்கள் நாட்டில் வாழும் எல்லா மக்கள் பிரிவினரோடும் நற்பு ரீதியான உறவு முறையை கட்டி எழுப்ப எல்லா சமூகங்களுடனும் இணைந்து பணியாற்ற முன்வாருங்கள் என்று தலாய் லாமா சூகிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

பின்னர் தலாய் லாமா நோபள் சமாதான பரிசு வென்ற இன்னொரு உலகப் பிரபலமான தென் ஆபிரிக்காவின் டெஸ்மன் டுடு வுடன் இணைந்து சூகிக்கு பிரத்தியேகமான மற்றொரு கடிதத்தையும் அனுப்பி வைத்துள்ளார். சூகி தலையிட்டு மியன்மார் கொடுமைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்று இந்த கடிதத்தில் இருவரும் கூட்டாகக் கேட்டுள்ளனர்.

2017 செப்டம்பர் 7 என திகதியிடப்பட்ட இந்தக் கடிதத்தில் அன்பின் சகோதரியே அரசியல் ரீதியான உச்ச நிலையை நீங்கள் தக்க வைத்துக் கொள்வதற்கு உங்கள் மௌனம் தான் விலை என நீங்கள் கருதினால் அந்த மௌனம் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும். ஒரு நாட்டுக்குள் சமாதானம் இல்லை என்றால், அந்த நாடு அதன் மக்களின் கௌரவத்தை ஏற்றுக் கொண்டு அதை பாதுகாத்து தனது மக்களின் பெறுமதியை நிலைநிறுத்த தவறினால் அது ஒரு சுதந்திரமான நாடாக இருக்க முடியாது. ஒழுக்கவிழுமியங்கள் மிக்கவர்களால் அத்தகைய ஒரு நாட்டுக்குத் தலைமை தாங்கவும் முடியாது. எம்மை பெரிதும் வேதனைக்கு உள்ளாக்கும் விடயமும் இதுதான். பயங்கர நிகழ்வுகள் கண்முன்னே அரங்கேறுவதை நாம் காணுகின்றோம். மீண்டும் நீங்கள் அதை எதிர்த்துப் போராடும் குணம் உள்ளவராகவும் துணிச்சல் உள்ளவராகவும் மாற வேண்டும் என நாம் பிரார்த்தனை புரிகின்றோம். நீங்கள் நீதிக்காகவும், மனித உரிமைக்காகவும் உங்கள் மக்களின் ஐக்கியத்துக்காகவும் மீண்டும் குரல் கொடுக்க வேண்டும். அதிகரித்து வரும் வன்முறைகளை நிறுத்த நீங்கள் தலையிட வேண்டும். மீண்டும் உங்கள் மக்களை நீங்கள் சரியான பாதையில் வழி நடத்த வேண்டும் என நாம் பிரார்த்திக்கின்றோம் என இந்தக் கடிதத்தில் இருவரும் குறிப்பிட்டுள்ளனர்.

பங்களாதேஷின் வெளிவிவகார அமைச்சர் அப்துல் ஹஸன் மஹ்மூத் அலியும் றோஹிங்யாவில் நடப்பவற்றை இனச் சுத்திகரிப்பு என வர்ணித்துள்ளார். சர்வதேச சமூகம் இதனை இனச் சுத்திகரிப்பு என்றே கூறுகின்றது. நாங்களும் அதைத்தான் அங்கு காணுகின்றோம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த இனச் சுத்திகரிப்புக்கு காரணம் மியன்மார் இராணுவமும் அதனோடு இணைந்த பௌத்த குழுக்களுமே என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இதனிடையே மியன்மார் இராணுவத்துக்கு தேவையான ஆயுதங்களை இஸ்ரேல் விநியோகிக்கத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது ஒன்றும் ஆச்சரியப்படத்தக்க விடயம் அல்ல. காரணம் முஸ்லிம்கள் எங்கெல்லாம் கொடுமைக்கு உள்ளாக்கப் படுகின்றார்களோ அங்கெல்லாம் ஏதோ ஒரு வகையில் இஸ்ரேலின் பிரசன்னம் காணப்படும். யுத்த தாங்கிகள் அவற்றுக்குத் தேவையான ஆயுதங்கள், படகுகள், எல்லைப் பகுதியில் பொலிஸாரின் பயன்பாட்டுக்கான ஹெலிகொப்டர்கள் என்பனவற்றை இஸ்ரேல் மியன்மாருக்கு வழங்கியுள்ளதாக மியன்மார் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும் இதை ஊர்ஜிதம் செய்துள்ளன.

அதுமட்டுமன்றி தற்போது ராக்கின் மாநிலத்தில் கடமையில் உள்ள மியன்மார் இராணுவத்தின் விஷேட படைப்பிரிவுக்கு தேவையான பயிற்சிகளையும் இஸ்ரேல் வழங்கியுள்ளது. இஸ்ரேலின் ஆயுதக் கம்பனிகள் இதற்கான பொறுப்பை ஏற்றுள்ளன. இந்த ஆயுதக் கம்பனிகளின் இணையத் தளங்களில் இதற்கு ஆதாரமான படங்கள் வெளியாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இனச் சம்ஹாரத்தின் சூத்திரதாரியான தற்போதைய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விஜயத்தின் பின்பே இந்த நிலைமைகள் உருவாகியுள்ளன. றோஹிங்யா முஸ்லிம்கள் மீதான கொடுமைகளுக்கான அங்கீகாரத்துக்கான அடையாளச் சின்னமாகவே நரேந்திர மோடியின் மியன்மார் விஜயம் அமைந்திருந்தது.

இந்தோனேஷியாவின் பாலி தீவில் உலக நாடுகளின் பாராளுமன்ற பிரதிநிதிகள் கலந்து கொண்ட ஒரு மாநாட்டில் மியன்மார் முஸ்லிம்கள் மீது வன்முறைகள் இடம்பெறுவதாகக் குறிப்பிட்டு ஒரு தீர்மானம் முன்வைக்கப்பட்டது. அந்த மாநாட்டில் கலந்து கொண்ட உலக நாடுகளின் பிரதிநிதிகள் எல்லோரும் அதை ஏற்றுக் கொண்டனர். இந்தியாவைத் தவிர. இது இந்தியப் பிரதமர் மோடியின் சுயரூபத்தை மீண்டும் ஒரு தடவை பறைசாற்றியது. இந்த அமர்வில் பங்கேற்ற இந்திய குழுவின் தவைரான பாராளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன் நிலையான அபிவிருத்தி தொடர்பாக உலகப் பாராளுமன்ற பிரதிநிதிகள் அமர்வில் முன்வைக்கப்பட்ட இந்தப் பிரகடனத்தை நிராகரித்தமை இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்தப் பிரகடனத்தை இந்தியா நிராகரித்த அதே தினம் தான் இந்தியப் பிரதமரின் மியன்மார் விஜயத்தின் கடைசித் தினமாக அமைந்திருந்து. உலகப் பிரதிநிதிகளால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு தீர்மானத்தை இந்தியா நிராகரித்த அதே தினத்தில் மோடி மியன்மாருக்கான தனது ஆதரவையும் ஒத்துழைப்பையும் மியன்மாரில் பிரகடனம் செய்தார்.

எவ்வாறாயினும் இந்தியாவின் கொல்கத்தா நகரில் உள்ள மியன்மார் தூதரகத்துக்கு வெளியே திரண்ட ஒரு பிரிவினர் மியன்மாருக்கான தமது எதிர்ப்பை அங்கு காட்டினர். இந்தியப் பிரதமர் மோடியின் மியன்மார் விஜயத்தையும் அவர்கள் கண்டித்தனர்.

சின்ஜியான் மாநிலத்தில் வசிக்கும் முஸ்லிம்களை கொடுமைகளுக்கு உள்ளாக்கி வரும் சீனா ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் தனக்குள்ள வீட்டோ அதிகாரத்தை பாவித்து மியன்மாரை கை கொடுத்து காப்பாற்றி வருகின்றது. மியன்மார் முஸ்லிம்கள் மீதான அநீதிகளைக் கண்டித்து பாதுகாப்புச் சபை வாய்திறக்காமல் சீனா பாதுகாப்பாகவும் பக்கபலமாகவும் இருக்கின்றது. மியன்மார் அரசு முஸ்லிம்களுக்கு இழைத்து வரும் கொடுமைகளுக்கு ஆதரவாக சீனா பாதுகாப்புச் சபையில் கருத்துக்களை முன்வைத்துள்ளது. சீனாவைப் பொறுத்தமட்டில் றோஹிங்யா முஸ்லிம்கள் இன ரீதியாக அழிக்கப்படுவதுதான் மியன்மாரில் அமைதியைக் கொண்டு வர சிறந்த வழி எனக் கருதுகின்றது.

அந்த வகையில் இஸ்ரேல், இந்தியா, சீனா ஆகிய மூன்று நாடுகளும் மியன்மாருக்கு ஆதரவாக உள்ளன. இந்தியாவில் எப்படி நரேந்திர மோடியின் தலைமையிலான இந்து தீவிரவாத ஆர்எஸ்எஸ் அரசு முஸ்லிம்கள் மீது தீர்க்க முடியாத வெறுப்புணர்வை கொண்டுள்ளதோ அதேபோல் தான் மியன்மாரின் பௌத்தர்களுள் ஒரு பிரிவான மாபாதா பௌத்த வெறியர்களும் முஸ்லிம்கள் மீது இனம் புரியாத தீவிர வெறுப்புணர்வு கொண்ட ஒரு வகை மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இஸ்ரேல் அடுத்தடுத்து தொடராக பலஸ்தீனர்களை கூட்டம் கூட்டமாகக் கொன்று குவித்த வரலாறைக் கொண்டது. 1947க்குப் பின் இந்திய சுதந்திரம் மற்றும் பிரிவினை என்பனவற்றை அடுத்து முஸ்லிம்களையும் அவர்களின் பொருளாதார வளங்களையும் அழிப்பதில் கங்கனம் கட்டி செயற்படும் ஒரு அமைப்பே ஆர்எஸ்எஸ்.

மியன்மார் முஸ்லிம்கள் மீதான கொடுமைகள் இன்று நேற்று இடம்பெறத் தொடங்கியவை அல்ல. 1751ம் ஆண்டில் றோஹிங்யா முஸ்லிம்களின் மூன்று வெவ்வேறு பள்ளிவாசல்களில் இருந்து மூன்று இமாம்களைக் கைது செய்த அன்றைய பர்மா பொலிஸார் அவர்களுக்கு பன்றி இறைச்சியை உண்ணுமாறு பலவந்தம் செய்ததாக ஒரு சம்பவம் பதிவாகியுள்ளது. ஆனால் அந்த இமாம்கள் அதை மறுக்கவே அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக வரலாற்றுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே இன்று மியன்மாரில் நடப்பவை ஒன்றும் புதிய விடயங்கள் அல்ல. காலாகாலமாக அங்கு இடம்பெற்று வருபவை.

ஆனால் தங்களை முஸ்லிம் உலகின் தலைவர்கள் என தாமே வர்ணித்துக் கொள்ளும் சவூதி அரேபியா போன்ற சர்வாதிகார முஸ்லிம் நாடுகள் இந்த விடயத்தில் இன்னமும் வாய் திறக்காமல் மௌனம் காக்கின்றமை தான் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக இப்றாஹிம் மைகிதா அப்துல்லாஹ் என்ற பத்தி எழுத்தாளர் றோஹிங்யாக்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க கிறிஸ்தவ தலைவர்களின் அனுமதி கோரும் மன்னர் சல்மான் எனும் தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதி உள்ளார். மியன்மார் முஸ்லிம்களுக்கு ஆதரவாக சவூதி அரேபிய மன்னர்கள் ஒருபோதும் வாய் திறந்ததில்லை என்று அவர் அதில் சுட்டிக்காட்டியுள்ளார்.

முஸ்லிம் தலைவர்களில் துருக்கி ஜனாதிபதி தையிப் எர்டொகன் மட்டுமே மியன்மார் முஸ்லிம்களுக்கு ஏதாவது ஒரு விதத்தில் உதவ வேண்டும் என்ற உணர்வோடும் துடிப்போடும் காணப்படுகின்றார். மியன்மார் முஸ்லிம்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகளைத் தடுக்க முஸ்லிம் நாடுகள் யாவும் அவற்றின் எல்லா வளங்களையும் பயன்படுத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

முஸ்லிம் உலகம் இன்று ஊனமுற்றுள்ளதால் தான் முஸ்லிம்கள் மீதான இத்தகைய கொடுமைகள் சாத்தியமாகின்றன. முஸ்லிம் உலகின் தலைவர்கள் கிறிஸ்தவ மேற்கின் வளர்ப்பு நாய்களாகத் தான் இன்று காணப்படுகின்றனர்.

ஆங்சோங் சூகிக்கு வழங்கப்பட்ட சமாதானத்துக்கான நோபள் பரிசை மீண்டும் அவரிடம் இருந்து பறித்தெடுக்க வேண்டும் என நான்கு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அவரை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன்னால் நிறுத்த வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுள்ளனர். இந்த அழுத்தங்கள் காரணமாக சூகி இவ்வருட ஐக்கிய நாடுகள் அமர்வில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இன்று வரை உலகளாவிய ரீதியில் மியன்மார் அரசுக்கு எதிராக ஆக்ரோஷமான முறையில் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் உலக அரங்கில் இன்று மியன்மார் விடயத்தில் மௌனம் காக்கும் அரசுகளின் வரிசையில் இலங்கை அரசும் இடம் பிடித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. தேசிய மட்டத்தில் பிரதான ஊடகங்களும் இந்த விடயத்தை கண்டு கொள்ளாமல் விட்டுள்ளன.

சிங்கள சமூகத்தை பகைத்துக் கொள்ள வேண்டும் என்ற அச்சம் காரணமாக சில முஸ்லிம் அமைப்புக்களும் இந்த விடயத்தில் அமைதியாக உள்ளன. முஸ்லிம் கவுன்ஸில் மட்டுமே இது தொடர்பாக வாய் திறந்துள்ளது. காத்தான்குடியைச் சேர்ந்த துணிச்சல் மிக்க முஸ்லிம் பெண்கள் குழுவொன்று மியன்மாருக்கு எதிராக வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். இது நாட்டின் ஏனைய பகுதிகளில் வாழும் முஸ்லிம்கள் வெற்கப்பட வேண்டிய ஒன்றாகும். (நு)

-லதீப் பாரூக்-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>