சவுதியின் இன்றைய நிலையும், வரலாற்றைப் புரியாத மனப் பதிவுகளும் !


unnamed

ஒன்றைப் பற்றி முதன் முதலில் எண்ணத்தில் தோன்றும் கருத்தே எண்ணக்கருவாகும். இதன் உருவாக்கம் சார்பு நிலை, எதிர் நிலை என்பதற்கேற்ப ஆளுக்காள் வித்தியாசப்படுகிறது.

இவ்வாறு சார்பு நிலையிலும் எதிர்  நிலையிலும் ஒன்றுக்கொன்று முரணாக நோக்கப்படும் ஒரு சொற்பிரயோகம்தான் வஹாபிஸமாகும். இன்று தஃவாக்களத்தில் ஈடுபடுகின்றவர்கள் அனைவரும் அதன் உண்மைநிலையினை அறிந்திருப்பது அவசியமாகும்.

வஹாபிஸம் என்ற சொல் இமாம் முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் என்ற சன்மார்க்க அறிஞரின் சமயப் பணியினால் தோன்றியதாகும். இவர் கி.பி 1703 இல் அரபு  தீபகற்பத்தில் உயைனா என்ற இடத்தில் பிறந்தார். இவரது குடும்பத்தைச் சேர்ந்த பலர் இஸ்லாமிய அறிஞர்கள்.

இவரது காலத்து அரேபியாவின் அரசியல் நிலை –

இக்காலத்தில் உஸ்மானியப் பேரரசின் மேலாண்மை முஸ்லிம் உலகெங்கும் மேலோங்கியிருந்தது. அனைத்துத் துறைகளிலும் துருக்கியர்களின் செல்வாக்கே மிகைத்திருந்தது. இஸ்லாத்தின் புனித நகர்களாகிய மக்கா மதீனா பலஸ்தீன் என்பன இவர்களது நேரடிப் பராமரிப்பின்கீழ் இருந்தன. அரபுத்தீபகற்பத்தின் பல பகுதிகளும் இவர்களால் நியமிக்கப்பட்ட அமீர்களால் நிறுவகிக்கப்பட்டன. அமீர்களுக்கிடையே சச்சரவுகள் ஏற்பட்டன. அவ்வப்போது யுத்தங்களும் மூண்டன. இவ்வரசியற் போட்டிகள் தீபகற்பத்தினுள் அரசியல் இஸ்திரமின்மையை ஏற்படுத்தின.

சமய நிலை-

மார்க்க ரீதியில் மக்கள் மிகவும் பிளவுபட்டிருந்தனர். மத்ஹப் வெறியும் தரீக்கா வெறியும் வேரூன்றியருந்தன. அறியாமை இருள் சூழ்ந்திருந்தது. ஏகத்துவத்தை நிலைநாட்டிய ஸஹாபாக்களதும் இமாம்களதும் பெயரில் ஏகத்துவம் ஒளியிழந்து சென்று கொண்டிருந்தது.

இவர்களது கப்றுகள் மேல் மக்கள் குப்பாக்களை எழுப்பி அவற்றை வழிபட்டுக் கொண்டிருந்தனர். கடமையான தொழுனையை விட இவற்றுக்கே அதிக முக்கியத்துவம் வழங்கினர். மஸ்ஜிதுல் ஹராமிலே ஒவ்வொரு மத்ஹபினருக்காகவும் வெவ்வேறு நேரங்களில் இமாம் ஜமாஅத் நடாத்தப்பட்டது. மக்களைத் தலைமை தாங்கியவர்களுக்கு இவற்றை சீர் திருத்த வேண்டும் என்ற தேவை இருக்கவில்லை. நாளுக்கு நாள் மூடநம்பிக்கைகளும் அவற்றின் அடிப்படையில் அமைந்த வழிபாடுகளும் வளர்ந்து கொண்டே இருந்தன.

இந்நிலையில் ஒரு மார்க்க அறிஞரின் பணி, மார்க்க நம்பிக்கைகளையும் வழிபாடுகளையும் சீர்திருத்தி மார்க்க அறிவைப் போதிப்பதைவிட வேறெதுவாக இருக்க முடியும். இதைத் தான் இமாம் முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் அவர்கள் மேற்கொண்டார்கள்.

தனது ஊரில் பெரும் சவால்களை எதிர்கொண்ட இமாம் அவர்கள் ஊருக்கு வெளியே பிரச்சாரப்பணிக்கு இடம் தேடினார்.

அப்போதுதான் தர்இய்யா என்ற பிரதேசத்தின் அமீர் முஹம்மத் பின் ஸுஊதுடன் இமாம் அவர்களுக்குத் தொடர்பு ஏற்படுகிறது. அரபுத் தீபகற்பம் எங்கிலும் ஏகத்துவத்தை நிலைநாட்டல் இமாமவர்களின் தேவையாக இருந்தது. தன் அரசைப் பலப்படுத்தலும் விரிவுபடுத்தலும் அமீரின் தேவையாக இருந்தது. அமீர் இமாமிடம் இரு விடயங்களைக் கோரிக்கையாக முன்வைத்தார்.

1. கடைசிவரை அமீருடன் இருக்க வேண்டும்.
2. தர்இய்யா மக்களிடமிருந்து வரி அறவிடுவதைத் தடுக்கக் கூடாது

முதல் நிபந்தனையை இமாம் அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். இரண்டாவதை ஏற்காமல், கலிமா மேலோங்குவதற்காக உதவுங்கள். மக்களிடமிருந்து பெறும் வரியை விட மேலானதை வெற்றிகள் மூலம் அல்லாஹ் உங்களுக்குத் தருவான் என்றார்கள். இதை ஏற்றுக்கொண்ட அமீர், இமாம் அவர்களுக்கு அடைக்களம் கொடுத்தார். இமாமவர்கள் தன் கற்பித்தல் பணியை தர்இய்யாவில் தொடர்ந்தார்கள். பல பிரதேசங்களில் இருந்தும் மாணவர்கள் அவர்களைச் சூழ்ந்து கொண்டனர்.

இமாமவர்களின் பணி கற்பித்தலாக மட்டும் இருக்கவில்லை. உள்ளங்களிலும் கப்றுகளிலும் கட்டப்பட்டிருந்த ஷிர்க்கின் அடையாளங்களை உடைப்பதிலும் தீவிரமாக ஈடுபட்டார். இதன் போதெல்லாம் அமீர் முஹம்மத் ஸுஊத் இமாமுக்குப் பக்கபலமாக இருந்தார். வெற்றிகளும் வந்தன. செல்வமும் வந்து குவிந்தன. இமாமவர்களின் ஆலோசனைக்கமையவே அவை செலவிடப்பட்டன. மக்கள் நன்மையடைந்தார்கள். தஃவா வளர்ச்சி பெற்றது.

இமாம் முகம்மதின் தஃவாவும் அமீர் முகம்மதின் அரசியலும் நஜ்த் தேசத்தை ஒன்றுபடுத்தின. அதுவே அமீர் முஹம்மதின் தந்தை ஸுஊதின் பெயரில் பிற்காலத்தில் ஸுஊதி என்ற நாடு உருவாவதற்கும் காரணமாகியது. இருப்பினும், நஜ்தியர்களுக்கு எதிராக சூழ உள்ள பிரதேசங்களில் இருந்து எதிர்ப்பலைகள் வந்துகொண்டே இருந்தன. அதற்கான காரணங்கள் பல

1. ஷிர்க்குக்கு எதிரான இமாமவர்களின் தீவிரப் போராட்டம்
2. நஜ்தின் வெற்றி ஏனைய அமீர்களையும் மக்காவை ஆட்சிசெய்த ஷரீப்களையும் அச்சுறுத்தியமை
3. இரு புனிதஸ்தலங்களை உள்ளடக்கிய ஹிஜாஸ் மாநிலம் பிரிந்து விடலாம் என்ற உஸ்மானியப் பேரரசின் அச்சம்

அக்காலத்தில் அதிகமானவர்கள் அநாச்சாரங்கள் நிறைந்த நம்பிக்கைகளையும் வழிபாடுகளையுமே இஸ்லாம் எனக்கருதினர். ஆகவே, இமாமவர்களின் பிரச்சாரத்தை இஸ்லாத்திற்கெதிரான புதிய மார்க்கம் என்றே கருதினர். எனவே, அதை வஹாபிசம் (வஹாபிய சிந்தனை) என்று வேறுபடுத்திக்காட்டினர்.

அறிவீனர்கள், ஆட்சியாளர்கள், தெளிவற்ற மார்க்க அறிஞர்கள் ஆகிய அனைவரும் வஹாபிஸம் என்ற சொல்லை அருவருப்பான ஒன்றாகவே மக்கள் மத்தியில் பரப்பினர். காலப்போக்கில் இச்சொல் இமாமவர்களின் பிரசாராரத்தை சுட்டும் அடையாளமாக நிலைத்துவிட்டது. அவரது ஆதரவாளர்கள் அனைவரும் வஹாபிகள் என அழைக்கப்பட்டனர்.

இமாமவர்களின் உடன்பிறந்த சகோதரர் ஸுலைமான் என்பவரும் இமாமுக்கு எதிராகவே இருந்தார். இமாமுக்கு எதிரான அவரது ஆக்கங்கள் ‘வஹாபிஸத்திற்கு எதிரான தெய்வீகப் புயல்’ என்ற பெயரில் அச்சிடப்பட்டுள்ளன. விநோதம் என்னவென்றால் வஹாபிஸம் என்ற சொல் இருவரினதும் தந்தையாகிய அப்துல் வஹ்ஹாபின் பெயரை அடிப்படையாகக் கொண்டமைந்தமையாகும்.  பின்னர் இவர் தவறுகளுக்காக மன்னிப்புக் கேட்டு இமாமவர்களுடன் இணைந்து கொண்டார்.

1765 இல் அமீர் முஹம்மத் வபாத்தானார். அவரைத் தொடர்ந்து அவரது மகன் அப்துல் அஸீஸ் பின் முஹம்மத் நஜ்தின் ஆட்சியைப் பொறுப்பேற்றார். இமாமின் வழிகாட்டலில் வளர்ந்த இவரது காலம் எதிர்ப்புக்களும் வெற்றிகளும் நிறைந்த காலமாக இருந்தது. இவரது ஆட்சிக்காலத்திலேயே இமாமவர்கள் 1792 இல் வபாத்தாகின்றார்.

அமீர் அப்துல் அஸீஸ் மேற்கொண்ட போர்கள் மார்க்கத்தின் பேரில் உருவான அநாச்சாரங்களுக்கு எதிராகவே ஆரம்பிக்கப்பட்டன. இதற்கு கர்பளாவில் நிகழ்ந்த யுத்தம் சிறந்த எடுத்துக்காட்டாகும். இருப்பினும், அதன் கோர முடிவுகள் முஸ்லிம்கள் மத்தியில் அமீருக்கு எதிராக விமர்சனங்களை ஏற்படுத்தின. 1803 இல் அமீர் அப்துல் அஸீஸ் தொழுது கொண்டிருந்த போது ஒரு ஈரானிய சீயாவினால் கொலை செய்யப்படுவதற்கும் அதுவே காரணமாகியது.

அப்துல் அஸீஸுக்குப் பின் அவரது மகன் ஸுஊத் ஆட்சியைப் பொறுப்பேற்கிறார். தந்தை வழியியே சென்ற இவருக்கும் பல வெற்றிகள் கிடைத்தன. நஜ்த் தேசம் துரித வளர்ச்சியைக் கண்டுகொண்டிருந்தது. இக்காலத்தில் உஸ்மானிய கிலாபத்தின் பெயரில் எகிப்தை ஆட்சி செய்த கொடூரமானவர் என வர்ணிக்கப்படும் முஹம்மத் அலி ஹத்யவி வஹாபிகளை அடக்குவதற்காக  தன்மகன் தூஸூனை அனுப்பினார். அவரால் இவர்களை வெற்றிகொள்ள முடியவில்லை. பின்னர் முஹம்மத் அலியே படையெடுத்து வந்தார். அப்போதும் வெற்றி கிடைக்கவில்லை. எனினும் 1714 இல் அமீர் ஸுஊத் மரணமானார். இது முஹம்மதலிக்கு வாய்ப்பாக அமைந்தது.

அடுத்து அப்துல்லாஹ் பின் ஸுஊத் ஆட்சியைப் பொறுப்பேற்றார். இவரது எழுச்சியை அடக்குவதற்காக முஹம்மத் அலி தன் அடுத்த மகன் இப்ராஹீம் பாஷாவை அனுப்பினார். அப்துல்லாஹ்வின் இராணுவ நடவடிக்கைகள் தந்தையின் உபதேசத்திற்கு முரணாக இருந்தது. இதுவே இப்ராஹீமுக்கு முன்னால் தோல்வியைச் சந்திக்கக் காரணமாகியது.

வெற்றிகொண்ட எகிப்தியர் நஜ்தை முற்றாக அழித்தனர். வஹாபிகளைப் படுமோசமாகக் கொலை செய்தனர். கைதுசெய்யப்பட்ட அமீர் முஹம்மதும் இன்னும் பல முக்கியஸ்த்தர்களும் இஸ்தான்பூலுக்கு அனுப்பப்பட்டு அங்கு 1818 இல் தூக்கிலடப்பட்டனர். இத்தோடு நஜ்தில் வஹாபிய ஆட்சி முற்றுப் பெறுகிறது. எகிப்தியர்களும் துருக்கியர்களும் இவர்களை நடாத்திய மனிதாபிமானமற்ற விதம் தோல்வியடைந்த நஜ்தியர் உள்ளத்தில் பெரும் காயத்தை ஏற்படுத்தியது. துருக்கியருக்கு எதிரான வைராக்கியத்தை வளர்த்தது.

இக்காலத்தில் இந்தியா பிரித்தானியாவின் கிழகிந்திய வர்த்தகக் கம்பனியின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. ஆங்கிலேய அரசு வஹாபிகளை வெற்றிகொண்ட இப்ராஹீம் பாஷாவுக்கு வாழ்த்துத் தெரிவித்து ஜோஜ் பொரஸ்டீர் என்பவரின் தலைமையில் தூதுக் கோஷ்டியொன்றையும் அனுப்பினர். ஏனெனில், வஹாபிகளின் தோல்வியை ஆங்கிலேயர் தமக்கு ஒரு வெற்றியாகவே கருதினர்.

வஹாபிஸத்தை கடைபிடித்த ஸுஊத் குடும்பத்தினர் மீண்டும் எழுச்சி பெறுவர் என்று அப்போது யாராலும் நினைக்க முடியாமல் இருந்தது. ஆனாலும் சிறையில் இருந்து தப்பிய ஸுஊதின் மகன் முஷாரி ரியாத்தில் தனது ஆதரவாளர்களை ஒன்றுதிரட்டி போராட ஆரம்பித்தார். அவருக்கு பல வெற்றிகள் கிடைத்தன. ரியாதைத் தலைநகராகக் கொண்டு மீண்டும் ஆட்சியமைத்தார். சஊதிக் குடும்பத்தின் இரண்டாம் காலகட்ட ஆட்சி எனப்படும் இவரகளது ஆட்சி 1819 முதல் 1891 வரை தொடர்ந்தது.

ஸுஊத் குடம்பத்தின் முதல் கட்ட ஆட்சியாளர்களும் இரண்டாம் கட்ட ஆட்சியாளர்களும் இமாம்கள் என்றே அழைக்கப்பட்டனர். இரண்டாம் கட்டத்தில் இவர்களின் ஆட்சி இஸ்திரமானதாக இருக்காவிட்டாலும் வஹாபிஸம் பல பகுதிகளுக்கும் பரவ உதவியாக இருந்தது.

ஸுஊத் குடும்பத்தினரின் இரண்டாம் கட்ட ஆட்சி அப்துர்ரஹ்மான் பின் பய்ஸால் உடன் நிறைவு பெறுகிறது. ரியாதில் தன் அதிகாரத்தைப் பறிகொடுத்த அவர், தன்மனைவி பிள்ளைகளை குவைத்தில் பாதுகாப்பாக விட்டுவிட்டு தனது அரசியல் நகர்வுகளை முன்னெடுத்தார். பெரிய வெற்றிகளை அவரால் அடைய முடியவில்லை. இச்சந்தர்ப்பத்தில்தான் அவரது மகன் அப்துல் அஸீஸ் 1902 இல் மூன்றாம் முறையாக தம் பரம்பரை ஆட்சியை நிலைநிறுத்துவதற்காக முன்வருகிறார்.

உஸ்மானியப் பேரரசைப் பொறுத்தவரை இக்காலகட்டம் மிகவும் சோதனை மிகுந்ததாகும். ஏனெனில், மறுமலர்ச்சி பெற்ற ஐரோப்பிய நாடுகள் அதனைத் தமக்கிடையே கூறுபோடுவதற்காகக் காத்திருந்தன. இந்நிலையில், நஜ்தில் தோன்றிய சீர்திருத்த சிந்தனையின் பரவல் அவர்களுக்கு பெரும் சவாலாய்  அமைந்தது. நஜ்தியர்களைப் பொறுத்தவரை உஸ்மானியரிடமிருந்து தாம் அனுபவித்த துன்பங்கள் அவர்கள் மனதை விட்டும் நீங்காமல் இருந்தன. இதன் காரணமாக உஸ்மானியரை வெறுத்திருந்தனர்.

இக்காலத்தில் பிராந்தியத்தில் நான்கு பிரதான அரசியல் சக்திகள் தம்மைப் பலப்படுத்திக் கொள்வதற்காகப் போராடிக் கொண்டிருந்தன.

1. உஸ்மானியர்:

உலகின் மிகப்பெரும் சாம்ராஜ்யத்தை நீண்ட காலம் அட்சிசெய்தவர்கள் என்ற பெருமைக்குரியவர்கள். எனினும், இக்காலத்தில் உஸ்மானியப் பேரரசை வீழ்த்தி அதைத் தமக்குள் பங்குபோட்டுக்கொள்ள வேண்டும் என்ற ஐரோப்பியரின் அவாவும், இஸ்ரேலை உருவாக்குவதற்காக முஸ்லிம்களுக்குச் சொந்தமான பலஸ்தீனத்தில் யூதர்களுக்கிருந்த பேராசையும்,  பேரரசின் கீழ் ஆட்சிசெய்த மாநில ஆளுனர்களிடையே எற்பட்ட போட்டியும் சீர்திருத்த சிந்தனை அடிப்படையில் ரியதைத் தளமாகக் கொண்டு போராடும் ஸுஊத் பரம்பரையினரின் எழுச்சியும், துருக்கியுனுள் எழுச்சிபெற்று வந்த தேசிய வாத இயக்கங்களும் பேரரசின் அத்திவாரத்தை ஆட்டிக்கொண்டிருந்தன. எனவே பேரரசைப் பாதுகாப்பதற்காக உஸ்மானியர்கள் கடும்பிரயத்தனங்களை மேற்கொண்டிருந்தனர்.

2. இஜாஸ் மாநிலத்தின் நிறுவாகத்தை வைத்திருந்த ஷரீப்கள்:

இவர்கள் நபி (ஸல்) அவர்களின் பரம்பரையினர் என நம்பப்பட்டவர்கள். ஹிஜாஸின் நிறுவாகம் இவர்களுக்கே ஒப்படைக்கப்பட்டிருந்தது. இருப்பினும் அரபியர்கள் விடயத்தில் துருக்கியர்கள் மேல் இவர்களுக்கேட்பட்ட அதிருப்திகள் காரணமாக யாரது உதவியைப் பெற்றாவது துருக்கியரிடமிருந்து பிரிந்த சுதந்திர அரபு நாடொன்றை உருவாக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

3. வஹாபிஸ சிந்தனையைக் கொண்ட ஸுஊத் பரம்பரையினர்:

கொள்கையால் வேறுபட்ட  இவர்கள் யாரது உதவியைப் பெற்றாவது தம் முன்னோர்கள் இட்ட அத்திபாரத்தில் மீண்டும் தம் இராட்சியத்தைக் கட்டியெழுப்புவதற்காக விடா முயற்சித்துக் கொண்டிருந்தனர். இவர்கள் உஸ்மானியர்களுக்கு எதிராக, சிலபோது ஷரீபுகளுக்கு எதிராக என தமது நலன்களுக்கு ஏற்ப யுத்தம் செய்துகொண்டிருந்தனர்.

4. ஐரோப்பியர்:

இவர்களது நோக்கங்கள் பல. ஒன்று. உஸ்மானியப் பேரரசை வீழ்த்துதல். இரண்டாவது: பிரித்தானியாவும் பிரான்ஸும் சேர்ந்து அரபுநாடுகளைப் பங்கிட்டுக்கொள்ளல். மூன்றாவது: பாலஸ்தீனில் யூதநாட்டை ஏற்படுத்திக் கொடுத்தல். தம் நோக்கங்களை அடைந்து கொள்வதற்காக இவர்கள் முதலில் ஷரீபுகளுடனும் ஸுஊதுகளுடனும் தனித்தனியாகத் தொடர்பு கொண்டு கிலாபத்துக் கெதிரான அரபியப் புரட்சியொன்றை ஏற்படுத்த முயற்சித்துக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில் அப்துல் அஸீஸ் தன்னைப் பலப்படுத்திக் கொள்வதற்காக ஆங்கிலேயருடன் கூட்டுச் சேர்ந்தார். இதன் மூலம் சஊதி அரேபியா என்ற இராட்சியத்தை அவரால் உருவாக்க முடியுமாக இருந்தது. இவ்வரசு இமாம் அப்துல் வஹ்ஹாபின் கோட்பாடுகளைத் தீவிரமாக நடைமுறைப்படுத்தியது. இவ்வகையில் அப்துல் அஸீஸின் அரசு இஸ்லாமிய அரசாக நோக்கப்பட்டது. எனினும் துருக்கியத் தரப்பில் இருந்தும், பிழையான பாரம்பரிய நம்பிக்கையாளர்களிடமிருந்தும் இவ்வரசுக்கெதிராக மிகமோசமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

ஸுஊத் குடும்பம் இஸ்லாமிய கிலாபத்தை வீழ்த்துவதற்காக ஆங்கிலேயர்களின் ஊழியர்களாக செயற்பட்டனர் என்ற விமர்சனம் மிகவும் ஊண்டி வைக்கப்பட்ட ஒன்றாகும். இதன்காரணமாக அங்கிலேயருடன் எவ்விதத் தொடர்பும் இல்லாதிருந்த இமாம் முஹம்மத் பின் அப்துல் வஹாபைக் கூட விட்டுவைக்காமல் அவரும் ஆங்கிலேயரின் ஊழியன் எனக் கதை கட்டப்பட்டதுடன் வஹாபிஸத்திற்கெதிரான பிரச்சாரம் உலகெங்கும் பரப்பப்பட்டன.

சரியான அரசியல், வரலாற்று, இஸ்லாமிய பின்புலம் உள்ளவர்கள் உஸ்மானியப் பேரரசின் வீழ்ச்சிக்கு ஒருபோதும் வஹாபிகளைக் குறைகூறமாட்டார்கள். உஸ்மானியப் பேரரசின் வீழ்ச்சிக்கு இறுதிக்கால சாணக்கியமற்ற உஸ்மானிய கலீபாக்களே காரணமாவர். இவர்களில் சுல்தான் அப்துல் ஹமீத் மாத்திரம் ஒரு விதிவிலக்கு. அவர் ஓர் அற்புதமான அரசியல் வாதியாகவும் இஸ்லாமியப் பற்றுள்ளவராகவும் இருந்தும் கூட அவராலும் துருக்கியின் வீழ்ச்சியைத் தடுக்க முடியாமல் போனது. ஸியோனிஸ வாதிகள் துருக்கியின் அரச இயந்திரத்தினுள் நுழைந்து அதனைத் தவறான வழியில் நடாத்திமை தோல்விக்கான இன்னொரு பிரதான காரணியாகும்.

உஸ்மானியப் பேரரசின் வீழ்ச்சியைத் தொடர்ந்து சஊதி அரேபியாவைத் தவிர ஏனைய அனைத்து முஸ்லிம் நாடுகளிலும் நாஸ்திகமும் சடவாதமும் வேகமாகப் பரவ ஆரம்பித்தது. ஐரோப்பாவின் அறிவியல் வளர்ச்சிக்கு முன்னால் இஸ்லாமிய நம்பிக்கைகள் தோல்வியுற்றதாகப் பலரும் கருத ஆரம்பித்தனர். எனவே, ஒருசாரார் நாஸ்திகர்களாக மாற இன்னொரு சாரார் மூடநம்பிக்கைகளில் நாட்டம் கொண்டனர்.

இந்நிலையில் முஸ்லிம் உம்மத் அதன் அடித்தள நம்பிக்கைக் கோட்பாட்டில் இருந்தே சீர்திருத்தப்பட வேண்டியிருந்தது. எனினும், இத்தகைய சீர்திருத்தப்பணிகள் அனைத்தும் வஹாபிஸம் ஆகவே நோக்கப்பட்டது. ஆகவேதான் லிபியாவின் உமர் முக்தார் உட்பட இமாம் ஹஸனுல் பன்னா, மௌலானா மௌதூதி, மௌலானா இல்யாஸ் போன்றோர்களது சீர்திருத்தப் பணிகளும் வஹாபிஸமாகப் பார்க்கப்பட்டன.

1953 இல் அப்துல் அஸீஸ் மரணிக்கிறார். அதைத் தொடர்ந்து 1964 வரை அவரது மகன் ஸுஊத் ஆட்சி செய்தார். அவரது மரணத்திற்குப் பின் அடுத்த மகன் பைஸால் ஆட்சியைப் பொறுப்பேற்றார். இவரைப் பற்றி எனது வார்த்தையில் கூறுவதாயின் ஸுஊத் குடும்பம் உலகிற்களித்த நவீன உமர் இப்னு அப்துல் அஸீஸ்; என்றே குறிப்பிடுவேன். ஏனெனில், இஸ்லாமிய ஆளுமைப் பண்புகளில்; இருவரும் ஏரத்தாள ஒரேவிதமாகவே உள்ளனர்.

மன்னர் பைஸால் அவர்கள் முஸ்லிம் உலகின் பிரச்சினைகள் என்ன? அதன் நண்பர்கள் யார்?; அதன் சீர்திருத்த வாதிகள் யார்? எதிரிகள் யார்? என்பவற்றை நன்கு இனம்கண்டார். துணிகரமான முறையில் பிரச்சினைகளை எதிர்கொண்டார்.

பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பினார். கலா நிலையங்களை உருவாக்கினார். முஸ்லிம் உலகிற்குள் முறிந்து போன அரசியல் உறவுகளை சீர்செய்ய முனைந்தார். பலஸ்தீனப் பிரச்சினையை இஸ்லாமியக் கோட்பாட்டின் அடிப்படையில் நோக்கினார். உலகின் நாலா புறங்களிலும் ஒடுக்கப்பட்ட முஸ்லிம்களுக்காக மனமிறங்கினார். வஹாபிகள் என ஒதுக்கப்பட்ட இக்வான்களையும் ஜமாஅதே இஸ்லாமியையும் ஆதரித்து அடைக்களம் கொடுத்தார். அதுமட்டுமல்ல அவர்களிடமிருந்து தனது நாட்டின் அபிவிருத்திக்கான அறிவியல் ஆன்மிகப் பங்களிப்புக்களைப் பெற்றுக்கொண்டார். இவையனைத்தையும் மேற்கொள்வதற்கு அவருக்கு உரமூட்டியது  வஹாபிசம்தான் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். இவரது காலமே வஹாபிஸத்தின் பொற்காலமாக விளங்கியது.

இப்போது வஹாபிஸம் பற்றிய உங்கள் எண்ணக்கரு எப்படியிருக்கிறது?

எண்ணக்கரு ஆளுக்காள் மாறுவதுபோலவே காலத்துக்குக் காலமும் அது மாறமுடியும். உதாரணமாக கிலாபத் என்ற சொல்லை எடுத்தால் ISIS வருவதற்கு முன்பு அதுபற்றி மக்களிடம் இருந்த எண்ணக்கருவும் அதற்குப் பின் அதுபற்றி ஏற்பட்டுள்ள எண்ணக்கருவும் மிகவும் வேறுபட்டது. ISIS கிலாபதின் எண்ணக்கருவை மிக மோசமாகக்; கலங்கப்படுத்தியது
.
காலத்திற்குக் காலம், ஆளுக்காள் எண்ணக்கரு மாறக் காரணம் என்ன? உண்மையில் ஒன்றைப் பிரதிநித்துவப் படுத்துபவர்களே அதைப் பற்றிய எண்ணக்கருவை உருவாக்குகின்றனர். கிலாபத்தை ஸஹாபாக்கள் பிரதிநிதித்துவப்படுத்தியபோது அதன் எண்ணக்கரு உயர்வாக இருந்தது. இப்போது ISIS உருவத்தில் மனிதாபிமானமற்ற ஓர் ஆட்சிமுறையாக சித்தரிக்கப்படுகிறது.

இவ்வாறுதான் வஹாபிஸம் என்ற சொல்லும். அதை உயரந்தோர் பிரதிநிதித்துவப்படுத்திய போது அதன் எண்ணக்கரு உயர்ந்ததாக இருந்தது. அதை தகுதியற்றோர் பிரநிதித்துவப்படுத்தும் போது மக்கள் மத்தியில் அதன் எண்ணக்கரு அதற்கேற்ப அமைந்துவிடுகிறது.

வஹாபிஸத்தின் தொடக்கத்தில் இருந்து இன்று வரைக்குமான அதன் ஆன்மீக அரசியல் பங்களிப்புக்களை ஒரு வரைபில் காட்டினால் இமாம் அப்துல் வஹ்ஹாபின் காலம் முதல் அப்துல்; அஸீஸ் வரை (1730 – 1900) படிப்படியான வளர்ச்சியையும் அப்துல் அஸீஸ் முதல் மன்னர் பைஸாலின் மரணம் வரை வேகமான வளர்ச்சியையும் அதற்குப் பின்னர் படிப்படியாக வீழ்ச்சியடைந்து மன்னர் பஹதுக்குப்பின்னர் வீழ்ச்சி வேகம் அதிகரித்து தற்போது இன்னும் வேகமாக வீழ்ந்து செல்வதை அவதானிக்க முடிகிறது.

இந்த வரைபுக்கு ஏற்ப மன்னர் பைஸாலையும் முடிக்குரிய இளவரசன் முகம்மதையும் ஒப்புநோக்கினால் மன்னர் சிகரத்திலும்; இளவரசர் அடித்தளத்திலும் இருப்பதை அவதானிக்கலாம்;. சிலவேளை இவ்வரைபுக்கான குறிகாட்டிகள் என்ன என்ற ஒரு வினா எழலாம். இதோ அக்குறிகாட்டிகள்.

1. மனத்தூய்மை
2. ஒழுக்கம்
3. இஸ்லாம் பற்றிய பார்வை
4. முஸ்லிம் உம்மத் பற்றிய பார்வை
5. பிரச்சினைகளை அணுகும் விதம்
6. அரசியல் அறிவு
7. இஸ்லாமிய அறிஞர்களுடனான உறவு
8. கருத்துச் சுதந்திரம்
9. திட்டங்கள்

வஹாபிஸத்தை விமர்சிப்பவர்கள் அதன் வரலாற்றுப் பின்னணியைக் கட்டாயம் புரிந்து கொள்ள வேண்டும். ஏகத்துவத்தைப் பாதுகாத்ததில் அதன் வரலாற்றுப் பங்களிப்பை மறந்து விடலாகாது. கீழ்மட்டத்தவர்களை மாத்திரம் அளவுகோளாகக் கொண்டு எந்த ஒன்றையும் எடைபோடுவது நியாயமானதல்ல. எனவே, இன்று களத்தில் துள்ளும் இளம் காளைகளை வைத்து வஹாபிஸம் பற்றிய பிழயான எண்ணக்கருவை உருவாக்க வேண்டாம். (மு)

–  அஷ்ஷெய்க் பஸ்லுர் ரஹ்மான் (நளீமி), B.A. Dip in Ed., SLTS

One comment

  1. Important Info

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>