அபிவிருத்தி எனும் மாயை


ff
- ஆதில் அலி சப்ரி -

– ஆதில் அலி சப்ரி –

இலங்கையை ஆசியாவின் ஆச்சரியம் என்றனர். கொழும்பை தெற்காசியாவில் வேகமாக வளர்ச்சியடையும் நகரம் என்றனர். ஆட்சியை நல்லாட்சி என்றனர். உலகின் மூன்றாவது உறுதியான தகவல் அறியும் உரிமை என்றனர். ஆசிய பசுபிக் சிறந்த நிதி அமைச்சர் என்றனர். அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக் கேற்ப காலா காலமாக ஏதோவொன்று மூலம் மக்கள் திசை திருப்பப்படுகின்றனர். அபிவிருத்தியென்ற பிம்பத்தில் காட்டப்படும் அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகளும் இதற்கு விதிவிலக்கானவையல்ல.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை, கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையைத் தொடர்ந்து கடவத்தையில் இருந்து கண்டி வரையான மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகள் ஆரம்பமாகியுள்ளன. கடந்த அரசாங்கத்தைப் போன்றே, அபிவிருத்தியென்ற போர்வையில் நெடுஞ்சாலைகளை காட்டிக்கொண்டாலும், நெடுஞ்சாலைகளின் மறுபக்கமொன்றும் உள்ளது.

இலங்கையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் நெடுஞ்சாலைகள் குறித்த விமர்சனங்களுக்கு முன்னர் அதிவேக நெடுஞ்சாலைகளின் வரலாற்றை நோக்குவோம். உலகின் முதலாவது நெடுஞ்சாலை நிர்மாணப் பணி 1908 ஆம் ஆண்டு அமெரிக்காவின் நிவ்யோர்க் நகரில் ஆரம்பிக்கப்பட்டு, 1911இல் பூரணப்படுத்தப்பட்டது. கார் பந்தயங்களில் அதிக ஈடுபாடு காட்டிய வில்லியம் கே. வென்டர்பீ என்ற தனிமனிதரின் தனியார் சாலையாகவே இது அமைக்கப்பட்டது. இந்த சாலை நெடுந்தூர கார் பந்தயங்கள் நடத்தவேண்டுமென்ற நோக்கில் 110கிலோமீட்டர் தொலைவில் உள்ள லோங் ஐலன்ட்டிற்கு அமைக்கப்பட்டது. வருடத்தின் அனைத்து நாட்களிலும் கார் பந்தயங்கள் இல்லாத காரணத்தினால், சாதாரண மக்களும் பணம் செலுத்தி பயணிக்கும் சாலையாக மாற்றினார். அரசுக்கு வரி செலுத்தாது இயங்கிவந்த காரணத்தினால் 1930களில் நிவ்யோர்க் பிராந்திய அரசுடமையாக்கப்பட்டது.

அதிவேக நெடுஞ்சாலைகள் நிர்மாணிக்கத் தொடங்கிய காலம் தொட்டே வாகன நெறிசலும், வீதி விபத்துக்களும் குறையுமென்று எதிர்பார்த்தனர். விளைவு களோ எதிர்மறையாக இருப்பதை குறுகிய காலத்தில் உணர்ந்துகொண்டனர். இதற்கு மாற்றீடுகள் குறித்து சிந்திக்க ஆரம்பித்தபோது மேம்பாலங்களில் பயணிக்கும் வகையில் சாலைகளை அமைக்க தீர்மானித்து, அமெரிக்காவின் மன்ஹட்டன் பிரதேசத்தில் முதலாவது மேம்பால அதி வேக நெடுஞ்சாலையமைக்கப்பட்டது. மில்லர் ஹைவே என்றழைக்கப்பட்ட இதன் வேலைகள் பூர்த்தியடைய 22 வருட காலம் எடுத்தது. தொடர்ந்து பிரதான நாடுகளும் நகரங்களை இணைக்க இத்திட்டத்தை பயன்படுத்தின.

உலக யுத்தத்தைத் தொடர்ந்து ஜப்பானும் தலைதூக்க ஆரம்பித்தது. ஜப்பான் புதிதாக நிர்மாணிக்கும் பிரதான நகரங்களுக்கு அதிவேக நெடுஞ்சாலைகளையே நிர்மாணித்தது. ஜப்பான் ஒசாகா நகரில் அதிவேக நெடுஞ்சாலையொன்றை அமைக்கும்போது எதிர்கொண்ட சவாலையும், அது எவ்வாறு ஜனநாயக முறைப்படி தீர்க்கப்பட்டதென்பதும் இலங்கைக்கு முன்மாதிரியாக அமையலாம்.

இலங்கையில் அதிவேக நெடுஞ்சாலையொன்றோ, வீதி விஸ்தரிப்போ, அரச நிர்மாண செயற்திட்டமொன்றோ மேற்கொள்ளப்படும்போது அப்பிரதேசங்களில் வாழும் மக்கள் வெளியேற்றப்பட்டு, வாழ்வாதாரம், விவசாயம் பாதிக்கப்பட்டு, வீடு, காணி இழந்து, முறையான நட்டஈடு வழங்கப்படாது, வாழும் உரிமையிழந்து மக்கள் நிர்க்கதிக்குள்ளாக்கப்படுவதை பார்க்கிறோம்.

ஜப்பானின் ஒஸாகா நகரில் பிரபல்யமான மேம்பால நெடுஞ்சாலையொன்றுள்ளது. அது 16 மாடிகளைக்கொண்ட கட்டடமொன்றில் 5ஆம் மாடியால் செல்கின்றது. சாலை வேலைகள் ஆரம்பிக்க முன்னரே கட்டடம் இருந்துள்ளது. அரசின் திட்டத்திற்கமைய கட்டடத்துக்கு நேராகவே சாலையமைக்கப்பட இருந்தது. தான் பல்வேறு திட்டங்களுடன் கட்டிய கட்டடத்தை சாலையமைக்க அகற்ற முடியாதென்று உரிமையாளர் உறுதியாக இருந்தார். அரச நட்டஈட்டுக்கும் அவர் உடன்படவில்லை. இறுதியாக அரசும் உரிமையாளரும் வந்த உடன்பாடொன்றுக்கமைய கட்டடத்தின் 5ஆம் மாடியால் நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது.

அங்கு ஜனநாயகம் அப்படியிருக்க, இங்கு அரசாங்கம் எதை வேண்டுமென்றாலும் செய்யலாம் என்ற கழுதைச் சுதந்திரத்துடன் செயற்படுவதைக் காணலாம். நிலத்தின் பூர்வீக உரிமை மக்களையே சாரும். நாம் வாக்களித்து ஆட்சியாளர்களை நியமிப்பது நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கேயன்றி நினைத்ததெல்லாம் செய்வதற்கல்ல. ஆனால், அபிவிருத்தியென்ற பெயரில் மேற் கொள்ளப்படும் அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணங்கள் மக்களின் வாழும் உரிமையை கேள்விக் குறியாக்கியுள்ளது.

உலக நாடுகள் மேம்பாலங்களில் பயணிக்கும் நெடுஞ்சாலைகளின் தோல்வியை உணர்ந்து நிலக்கீழ் பாதைகள் குறித்து சிந்திக்க ஆரம்பித்துள்ள கட்டத்திலேயே இவற்றை எமக்கு அபிவிருத்தியாக காட்ட முற்படுகின்றனர். சாலைகளால் எதிர்பார்த்த வாகன நெறிசல், விபத்துக்கள் அற்ற போக்குவரத்து சாத்தியமாகவில்லை. மாற்றமாக, அதிவேக நெடுஞ்சாலைகள் சாரதிகளை வேகமாக வாகனம் செலுத்த வேண்டுமென்ற மனநோய்க்கு தள்ளிவிட்டுள்ளது. இலங்கையில் நாளொன்றுக்கு 5 பேர் வரை சாலை விபத்துக்களால் உயிரிழக்கின்றனர்.

இலங்கையின் முதலாவது அதிவேக நெடுஞ்சாலைக்கான நிர்மாணப் பணிகள் 2006ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 2012இல் பூர்த்தியானது. இலங்கையின் நெடுஞ்சாலை நிர்மாண பணிகளுக்கு உலக வங்கி, ஜெய்கா, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் சீனாவின் எக்ஸிம் வங்கி ஆகியன நிதி உதவிகளை மேற்கொண்டு வருகின்றன. இலங்கையின் அதிகவேக நெடுஞ்சாலைகள் உலகின் ஏனையவையிலிருந்து தெளிவாக வேறுபடுகின்றதை சுற்றாடலியலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். மண் மேடுகள் அமைத்து நெடுஞ்சாலைகள் நிர்மாணிப்பதை உலகில் எங்கும் கண்டுகொள்ள முடியாது.

இலங்கையின் நெடுஞ்சாலைகள் அமைக்க ஆரம்பித்த காலத்தில் ஒரு கிலோ மீட்டருக்கு 1 பில்லியன் ரூபாய்கள் செலவிடப்பட்டதோடு, 5 வருடங்களில் குறித்த தொகை 10 மடங்காக அதிகரித்து கிலோ மீட்டரொன்றுக்கு 10 மில்லியன் வரை செலவிடப்படுகின்றது. இறுதியாக கடவத்தை- கெரவலபிடிய பகுதி நிர்மாண பணிகளில் கிலோமீட்டர் ஒன்றுக்கு 10 பில்லியன் வரை செலவிடப்பட்டுள்ளது.

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஆய்வு முடிவுகளின்படி உலகின் எப்பாகத்தில் நெடுஞ்சாலையொன்று நிர்மாணிக்கப்பட்டாலும் கிலோ மீட்டரொன்றுக்கு 7.5 டொலர் மில்லியன், அதாவது இலங்கைப் பெறுமதியில் 1 பில்லியன் போதுமானதாக இருக்கும். அதைவிட அதிக தொகை செலவிடப்படுகின்றதென்றால் அங்கு ஊழலைத் தவிற வேறொன்றும் இல்லை என்றும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை இலங்கையர்களின் முதல் அனுபவம். மக்கள் அதனை எதிர்க்கவில்லை. சுற்றாடல் பாதிப்புகள் பற்றியும் அறிந்திருக்கவில்லை. மக்களுக்கு அதீத எதிர்பார்ப்பு வழங்கப்பட்டிருந்தது. சிலர் தெற்கு அதி வேக சாலையோரங்களில் வியாபார முயற்சிகளை ஆரம்பிக்க எதிர்பார்த் திருந்தனர்.

கடந்த கால வெள்ள அனர்த்தங்களின் பின்னரே இதன் பாதிப்புகள், உயிரிழப்புகளை முழு நாடும் உணரத் தொடங்கின. 300க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தால் உயிரிழந்தனர். இதன்மூலம், தொடரும் அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணங்களின் பாதிப்புகளை ஊகித்துக்கொள்ள முடியும். தெற்கு அதிவேகத்தை போன்றே மத்திய அதிவேகமும் நீர் வளம் நிறைந்த பிரதேசமொன்றை ஊடறுத்துச் செல்கின்றது. வெள்ள அனர்த்தமொன்று ஏற்படாது, அழிவுகள் ஏற்படாதென்று யாராலும் உறுதிப்படுத்த முடியாது.

125 கிலோ மீட்டர் தூரம் கொண்ட மத்திய அதிவேக நெடுஞ்சாலையமைக்க 3 கோடி 45 இலட்சம் கன மீட்டர் மண் நிறப்பப்படவேண்டியுள்ளது. பொத்துபிடிய, வில்கமுவ, தம்பதெனிய இராசதானி இருந்த பகுதிகளில் இதுவரையில் 7 மேட்டுநிலங்களை நில மட்டத்துக்கு இடித்து மண் பெறப்பட்டுள்ளது. மேலும் 13 மேட்டு நிலங்களை இடிக்க ஆரம்பித்துள்ளனர். இயற்கை மேட்டு நிலங்களும்நீர் நிலைகளும் இவ்வாறு அழிக்கப்படும் போது நீர் வளமும், சுற்றாடல் சமநிலையும் பாதிக்கப்படுகின்றது. மழை காலத்தில் பாரிய வெள்ள அனர்த்தத்தையும், கோடை காலத்தில் வறட்சியையும் தடுக்க முடியாது போய்விடும் என்று சுற்றாடலியலாளர்கள் எச்சரிக்கின்றனர்.

தெற்கு அதிவேகப் பாதையை இலங்கையின் அபிவிருத்தியின் உச்சமாக காட்டினர். கொழும்பில் இருந்து மாத்தறை வரையிலான மக்களின் வாழ்வில் அது எவ்வித அபிவிருத்தியை ஏற்படுத்தியது என்பதை சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம். மாற்றங்கள் நிகழ்ந்தன. அதுதான், அடுத்தடுத்த வீடுகளில் இருந்த தாயும் மகளும் ஒருவரையொருவர் சந்திக்க காலி அதிவேக நுழைவாயிலுக்கு சென்று மீண்டும் திரும்பி வர
வேண்டிய மாற்றத்தையே ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் அபிவிருத்தியெனும்போது, முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க 1550 மில்லியன் பெறுமதியான வீடு வாங்குவதோ, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அதி சொகுசு வாகனங்கள் வாங்குவதோ அல்ல. மக்கள் அபிவிருத்தியை உணரும் நிலை வரவேண்டும். சரி, அதிவேக நெடுஞ்சாலைகளால் மக்களுக்கு அபிவிருத்தி தேவையில்லை என்று விட்டுவிட்டு, நாட்டுக்காவது அபிவிருத்தியென்று பார்த்தால் அதுவும் இல்லை. இவற்றின் வருவாயை விட பராமரிப்பு செலவு அதிகம் என்பதால் தனியார் மயப்படுத்தப்படவுள்ளதாக நுழைவாயில்களில் அறிவித்தல் இடப்பட்டுள்ளது.

மக்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தாத, நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு வழு சேர்க்காத, நாட்டின் உற்பத்திகளை தலைநகருக்கு, ஏற்றுமதிக்கு கொண்டுசெல்ல உதவாத அதிவேக நெடுஞ்சாலைகளின் பயன் என்ன?

சில சட்டத்தரணிகள் கூறுகின்றனர், ஒரே நாளில் கொழும்பில் வழக்கொன்றை வாதாடிவிட்டு, காலியிலும் வழக்கொன்றை வாதாட முடியுமாம். அதிவேக நெடுஞ்சாலையொன்றமைக்க பாரியளவு கடன்பட்டு, சுற்றுச் சூழல் அழிக்கப்பட்டு, மலைகள் குடைந்தெடுக்கப்பட்டு, வெள்ளப் பெருக்குகளால் 300 பேரளவில் உயிரிழக்குமளவு சூழல் பாதிப்பொன்றை ஏற்படுத்தி காலிக்கு ஒரு மணி நேரத்தில் செல்வதை மாத்திரமா மக்கள் எதிர்பார்த்தனர். காலியில் இருந்து கொழும்புக்கு 1மணி நேரத்தில் வந்தடைதல் மாத்திரமா? அபிவிருத்தி. இலங்கை மக்களோ, சுற்றாடலியலாளர்களோ அபிவிருத்தியை எதிர்ப்பவர்கள் அல்லர். எனினும், அபிவிருத்தி என்ற நாமம் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட உமா ஓயா, போர்ட் சிட்டி, தெற்கு, கட்டுநாயக்க நெடுஞ்சாலைகள், நுரைச்சோலை அனல் மின் நிலையம், நில்கல வேலைத்திட்டம் போன்றன மக்களுக்கும், சுற்றாடலுக்கும் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை பார்க்கும் இலங்கையில் அபிவிருத்தி என்ற சொல் மீண்டுமொருமுறை வரைவிளக்கணப்படுத்தப்பட வேண்டிய தேவையேற்பட்டுள்ளது. (ஸ)

– ஆதில் அலி சப்ரி –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>