இறுதி பஸ்ஸையும் தவறவிட்டால்…


4e64feb0c630182ccd22eafbee59cb3e_XL
- ஆதில் அலி சப்ரி -

– ஆதில் அலி சப்ரி –

நாட்டில் புதியதோர் அரசியலமைப்பொன்றிற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. முழுப் பாராளுமன்றமும் அரசியலமைப்பு சபையாக மாற்றப்பட்டுள்ளது. மக்கள் கருத்துக்களைத் திரட்டும் ஆணைக்குழுவொன்று தாபிக்கப்பட்டு- பொது மக்கள், சிவில் சமூகத்தின் கருத்துகள் திரட்டப்பட்டு, தொடர் கலந்துரையாடல்களைத் தொடர்ந்து இடைக்கால அறிக்கையொன்று தயாரிக்கப்பட்டது. இடைக்கால அறிக்கை மீதான ஐந்து நாட்கள் விவாதத் தொடரொன்றும் பாராளுமன்றில் நடைபெற்றது.

புதியதோர் அரிசியலமைப்பல்ல. திருத்தமும் அல்ல. அரசியலமைப்பு குறித்த இடைக்கால அறிக்கையொன்று பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு, அதன்மீதான விவாதங்கள் தொடரும் போதே, நாட்டைப் பிளவுபடுத்தும் அரசியலமைப்பொன்று வேண்டாமென்று கோஷங்கள் எழுவதற்காக மக்கள் பிழை யாக வழிநடத்தப்பட்டனர்.

2000ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் அரசியலமைப்பைத் தயாரித்தவர்கள், தற்போது பாராளுமன்றத்தில் இடைக்கால அறிக்கை தொடர்பான விவாதத்தில் பாரிய எதிர்ப்புக்களை முன்வைக்காதவர்கள், அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவில் வினைத்திறனுடன் இயங்குபவர்கள், பாராளுமன்றத்திற்கு வெளியில், பொது மக்கள் மத்தியில் புதியதோர் அரசியலமைப்பை பூதாகரமாக காட்ட முற்படுகின்றதன் அரசியல் பின்னணி என்ன? அரசியலமைப்பு விடயத்தில் அரசியல் கட்சிகள் செய்யவேண்டியதென்ன? என்பதைப் பற்றி சுருக்கமாக நோக்குவோம்.

2015 ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பெற்றுக்கொண்ட மக்கள் அங்கீகாரத்தால் அரசியலமைப்பில் மாற்றம் கொண்டுவர முடியுமா? என்ற கருத்து முரண்பாடு தொடர்கின்றன. மக்கள் வாக்கெடுப்புக்கு இட்டுச் செல்லாத அரசியலமைப்பு மாற்றமொன்றே தேவை, 2015 மைத்திரி பெற்ற மக்கள் ஆதரவால் முழுமையான புதிய அரசியலமைப்பொன்று கொண்டுவந்து, நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை முற்றாக இல்லாதொழித்து, பாராளுமன்றில் மூன்றில் இரண்டு பலத்துடன் மக்கள் வாக்கெடுப்பொன்றுக்கும் சென்றே அரசியலமைப்பொன்றை நிறைவேற்ற வேண்டுமென்று ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மைத்திரி அணியினரிடையே இரு கருத்துகள் நிலவுகின்றன. இவ்விரு சாராருமே புதியதோர் அரசியலமைப்புக்கு ஆதரவானவர்கள்.

வேறு சிலர்- இலங்கையின் வழக்கப்படி, வரலாறு ரீதியாகவும் எம்மவர்கள் செய்துவந்த பணியை அரசியலமைப்பு விடயத்திலும் சிறப்பாக மேற்கொள்ள முற்படுகின்றனர். வரலாற்று ரீதியாக தொடர்ந்த தவறுகளை இவர்கள் தொடர்கின்றனர். அரசியலமைப்புக்கு கைவைக்க கூடாது, அரசியலமைப்பில் எவ்வித மாற்றமும் தேவையில்லை, அதிகாரப் பகிர்வு தேவையில்லை, பௌத்த மதத்துக்கு முன்னுரிமை, பௌத்த மதத்துக்கு ஆபத்து போன்ற இனவாத கோசங்களுடன் மக்களை தவறான பாதையில் செலுத்துகின்றனர்.

தெற்கில் அரசியலமைப்பு விடயத்தை பூதாகரமாக்க முயற்சிக்கும் சக்திகளுக்கு ஈடாக வடக்கிலும் எதிர்க்கும் கூட்டமொன்று இல்லாமல் இல்லை. பாராளுமன்றத்தில் இப்போது கலந்துரையாடப்படும் விடயங்களில் தமிழ் மக்களுக்கு நீதி நிலைநாட்டப்படாது, தீர்வு கிடைக்காது என்ற கோசத்துடன் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் ஐயா குழுவினரை தமிழர்களுக்கு துரோகமிழைத்தவர்களாக காட்ட முற்படுகின்றனர்.

எது எவ்வாறிருப்பினும் முழுப் பாராளுமன்றமும் அரசியலமைப்பு சபையாக மாற்றப்படும்போது மௌனித்திருந்தவர்கள், அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவொன்று தாபிக்கப்பட்டு, அரசியலமைப்பொன்றுக்கான செயன்முறையில் இணக்கம் காணப்பட்டு, வழிநடத்தல் குழுவில் அனைத்து கட்சிகளினதும் பிரதிநிதிகள் அங்கம் வகிக்கின்றபோது, பாராளுமன்றத்துக்கு வெளியே அரசியலமைப்புக்கு எதிராக செயற்படுவது போலி நாடகமாகும்.

புதிய அரசியலமைப்பொன்றே வேண்டாமென்று கூச்சலிடும் பொது எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான
தினேஷ் குணவர்தன, பிரசன்ன ரணதுங்க ஆகியோரும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசியலமைப்பு வழிநடத்தல் குழு செயற்பாடுகளில் வினைத்திறனுடன் செயற்படுகின்றனர். பாராளுமன்றத்துக்கு வெளியே எதிராக செயற்படுகின்றனர். இது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆட்சிக் கதிரைக்கு கொண்டுவரும் நாடகமே தவிர வேறில்லை.

புதிய அரசியலமைப்பு தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியைத் தவிர ஏனைய தமிழ் தேசிய கூட்டமைப்பு, தேசிய ஹெல உருமய, சுதந்திர கட்சி, மக்கள் விடுதலை முன்னணி என அனைத்து கட்சிகளுமே தமது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளன. ஐக்கிய தேசிய கட்சியின் நிலைப்பாட்டை வெளியிடாது மௌனம் காப்பது பௌத்த மகா சங்கத்தினர், பொது எதிரணியினர், பொதுமக்கள் அரசியலமைப்பை சந்தேக கண்கொண்டு பார்க்க காரணமாக அமைந்துள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் இச்செயற்பாட்டின் பின்னால் மறை கரங்கள் செயற்படுவதில்லை என்பதை நிலைப்பாட்டை வெளியிட்டு தெளிவுபடுத்த வேண்டும்.

அரசியலமைப்பு இடைக்கால அறிக்கை மீதான விவாதத்தின்போது, அரசியல் கட்சிகளின் நிலைப்பாடும், கட்சிகளுக்கிடையிலான முரண்பாடுகளையும் தாண்டி ஒவ்வோர் கட்சிகளில் உள்ள தனி உறுப்பினர்களின் நிலைப்பாடுகளும் முரண்படும் சந்தர்ப்பங்களை கண்டுகொள்ள முடிந்தது.

நாட்டின் பிரதான கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி ஆகியன தற்காலிகமாகவேனும் இணைந்து ஆட்சியில் உள்ள காலப்பகுதி இதுவாகும். இவ்விரு கட்சிகளும் 2020ஆம் ஆண்டு வரை இணைந்து பயணிக்கவுள்ளதாகவே கூறிக்கொள்கின்றன. இரு கட்சிகளுக்குமிடையே பனிப்போரொன்றும் தொடர்கின்றது. இணக்கப்பாட்டு அரசியல் எவ்வளவு காலம் தொடருமென்பது கேள்விக்குறியே. இணக்கப்பாட்டை முரண்பாடாக்க முடியுமான அனைத்து முயற்சிகளையும் பொது எதிரணி மேற்கொண்டு வருகின்றது.

அவ்வாறிருக்கையில் புதியதோர் அரசியலமைப்புக்கான அல்லது அரசியலமைப்பு திருத்தத்திற்கான மூன்றில் இரண்டு பலத்தை பாராளுமன்றத்தை பெற்றுக்கொள்வதற்கான இறுதி சந்தர்ப்பம் இதுவாகும். இதனை இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேராவின் வார்த்கைகளில் கூறுவதென்றால், நாட்டின் இனப் பிரச்சினையை தீர்த்து, அபிவிருத்திப் பாதையில் பயணிப்பதற்கான இறுதி பஸ் இதுவாகும்”. உண்மையில், இதன் பின்னர் எந்தவோர் தேர்தல் முறையில், அது விகிதாசார அல்லது புதிய தேர்தல் முறையாக இருந்தாலும் எந்தவோர் கட்சியும் மூன்றில் இரண்டு பலம் பெறுவதற்கான வாய்ப்பு உருவாகாது.

அரசியலமைப்பு விடயத்தில் இதுவரை காலமும் விடாப்பிடியாக இருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பும் சிறந்த நிலைப்பாட்டிற்கு வந்துள்ளனர். அவர்களின் கருத்து எதுவாக இருந்தாலும் புதியதோர் அரசியலமைப்பு விடயத்தில் பலம் பெரும் கட்சிகள் இரண்டுடனும் கலந்துரையாடல்களினூடாக ஒன்றுபட தயாராகவுள்ளதற்கான சமிக்ஞைகளை காட்டியுள்ளனர்.

நாட்டின் எதிர்காலம், முன்னேற்றம், இனப் பிரச்சினைக்கான தீர்வு, மனித உரிமைகள் என்ற கோணத்தில் பார்க்கும் போது அனைவருமே புதிய அரசியலமைப்பொன்று தேவை என்பதை உணர்ந்துள்ளனர். புதிய அரசியலமைப்புக்காக வினைத்திறனுடன் செயற்படவும் தயாராகவுள்ளனர். பல விடயங்களில் கருத்தொற்றுமையும் நிலவுகின்றது. முரண்பாடான விடயங்கள் குறித்து மாத்திரமே கலந்துரையாடப்பட வேண்டும். இந்நிலையில் அரசியலமைப்பொன்றை உருவாக்க முயற்சிப்பவர்கள் பிளவுபடுத்த முற்படும் சக்திகளின் சூழ்ச்சிகளுக்கு இரையாகிவிடக்கூடாது.

இதனால் நன்மையடைவதும், அரசியல் இலாபமீட்டுவதும் புதிய அரசியலமைப்பொன்று அல்லது திருத்தம் தேவை, அதிகாரப் பகிர்வு தேவை, தேர்தல் முறையில் மாற்றம் தேவை, நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையில் மாற்றம் தேவை என்பவர்கள் அல்ல. மாறாக, மீண்டுமொரு முறை நாட்டை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்லும் இனவாதிகளே.

இனப் பிரச்சினை உட்பட நாட்டின் எதிர்கால நலனுக்கு அரசியலமைப்பொன்று வேண்டுமென்று முனைப்புடன் செயற்படும் பிரிவினரிடையே ஏதாவ
தோர் சிறிய விடயத்தில் முரண்பாட்டை தோற்றுவித்து, முழு முயற்சியையும் தோல்வியடையச் செய்வதில் இனவாதிகளும், இழந்த பலத்தை மீண்டும் பெற்று ஆட்சிபீடமேற தவமிருப்பவர்களும் குறியாயுள்ளனர். ஒன்றுபட முடியுமான விடயங்களில் ஒன்றுபட்டு, 100வீதம் முழுமையான அரசியலமைப்பொன்று இல்லாவிடினும், சிறந்த நேரத்தில் சிறந்த அரசியலமைப்பொன்றை வென்றெடுக்க அனைவரும் ஒன்றுபட வேண்டும்.

வயிற்றுப் பசிக்கு தொடைப் பகுதி இறைச்சிதான் வேண்டுமென்ற தீர்மானத்தில் அனைவரும் தொடர்ந்தால் பட்டினியால் மாயவேண்டியதுதான். (ஸ)

– ஆதில் அலி சப்ரி –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>