தனித்துவத்தை ஊதிப் பெருப்பிப்பதே முரண்பாடுகளுக்கு மூல காரணம் – பேராசிரியர் ஹுஸைன் இஸ்மாயில்


DR.-A.G.-HUSAIN-ISMAIL (2)1
- ஆதில் அலி சப்ரி -

– ஆதில் அலி சப்ரி

ஒவ்வொரு சமூகத்துக்கும் தனித்துவங்கள் இருக்கின்றன. அவை பாதுகாக்கப்படவேண்டும். எனினும் தனித்துவத்தை ஊதிப் பெருப்பித்து, மற்றவர்களிடமிருந்து ஒதுங்கி வாழமுற்பட்டால் தப்பபிப்பிராயங்களும் முரண்பாடுகளும் ஏற்படுகின்றன. எமது தனித்துவத்தை சிலர் ஊதிப் பெருப்பித்து காட்ட முற்படுகின்றனர் என்று தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உப வேந்தர் பேராசிரியர் ஹுஸைன் இஸ்மாயில் தெரிவித்தார்.

இலங்கை முஸ்லிம்களின் கல்வி, சமூக விடயங்கள் குறித்து வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். பேராசிரியர் ஹுஸைன் இஸ்மாயிலின் முழுமையான செவ்வியை இங்கே தருகின்றோம்.

கேள்வி: உங்களைப் பற்றிய சிறு அறிமுகமொன்று?

பதில்: என்னைப் பற்றி எந்தப் பார்வையில் அறிமுகம் செய்வதென்று எனக்குப் புரியவில்லை. இருந்தாலும் சிறியதோர் வரலாற்று அறிமுகத்தைத் தருகின்றேன். நான் பேருவளையைச் சேர்ந்தவன். ஆரம்பக் கல்வியை பேருவளை மாலிகாஹேன பாடசாலையில், தமிழ் மொழியில் கற்றேன். இடைநிலைக் கல்விக்காக கொழும்பு ஸாஹிராவில் இணைந்து பேராதனை பல்கலைக்கழகம் தெரிவானேன். அங்கு கௌரவப் பட்டமும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் முதுமாணிப் பட்டமும், கல்வித் துறையில் கலாநிதிப் பட்டத்தையும் பெற்றுக்கொண்டேன். பிற்காலத்தில் அவுஸ்திரேலியா, நோர்வே, ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகளுக்குச் சென்று ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறேன். இதுவே என்னுடைய கல்விப் பாதை.

அதேபோன்று என்னுடைய தொழில் துறையை எடுத்துக்கொண்டால், நான் அக்கரைப்பற்று முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் பட்டதாரி ஆசிரியராக இணைந்துகொண்டேன். அதன்போது, பேராதனை பல்கலைக்கழகத்தில் தற்காலிக விரிவுரையாளராக, அளுத்கமை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் உளவியல் போதகராக, கொழும்பு பல்கலைக்கழகம், திறந்த பல்கலைக்கழகம் என்பவற்றில் நீண்ட காலம் பேராசிரியராக சேவையாற்றி, இறுதியில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் துணை வேந்தராக நியமிக்கப்பட்டேன். அங்கு 6 வருடங்கள் பணியாற்றினேன். மலேசியா இஸ்லாமிய விஞ்ஞான பல்கலைக்கழகத்திலும் பேராசிரியராக 7 வருடங்கள் தொழிற்பட்டு, இப்போது நாட்டுக்கு வந்துள்ளேன். இங்கு வந்ததும் பாராளுமன்றத்தின் பகிரங்க சேவை ஆணைக்குழுவில் நியமனம் கிடைத்துள்ளது. அது அரசியல் கலப்பில்லாத நியமனம் என்பதால் நான் பொறுப்பேற்று, செயற்பட்டு வருகின்றேன்.

கேள்வி: இலங்கை முஸ்லிம்களின் கல்வி நிலை எவ்வாறுள்ளது?

ப: முஸ்லிம்கள் 1,100 வருடங்களுக்கு முன்னதாகவே இலங்கை வந்ததாக கூறப்படுகின்றது. அவர்களுடைய கல்வி ஆரம்பத்தில் ஈராக் மற்றும் அரபு நாடுகளில் இருந்த கல்வி முறைமைதான் இலங்கையிலும் இருந்திருக்கின்றது. 1,500ஆம் ஆண்டுகளில் இலங்கை மேலைத்தேய ஆதிக்கத்துக்குட்பட்டபோது, அவர்கள் கல்வியை சமயப் பிரசாரம் செய்யும் ஊடகமாக மிசனரி வேலைகளுக்கு பயன்படுத்தத் தொடங்கினர். போர்த்துக்கீசர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் பாடசாலைகளுக்குச் சென்றால் எமது பிள்ளைகள் ஈமானை இழந்து விடுவார்கள் என முஸ்லிம்கள் அச்சமடைந்தனர். அந்த அச்சத்தில் எவ்வித பிழையும் காணமுடியாது. ஏனெனில் எந்த முன்னேற்றத்தையும் இழந்து சமூகம் எதிர்பார்த்தது மார்க்கத்தைப் பாதுகாக்கவே. இதனால் ஏனைய சமூகங்கள் குறித்த கல்வி வாய்ப்புகளை பயன்படுத்தி மேலோங்கின. அங்கேயே முஸ்லிம்கள் கல்வியில் பின்தங்கினர்.

இலங்கையின் கண்டிச் சிங்களவர்கள், முஸ்லிம்கள் மற்றும் தோட்டப்பகுதி மக்கள் கல்வியில் பின்தங்கியிருப்பதாக சோல்பரி ஆணைக்குழு தெரிவித்தது. சமூகத்தின் சனத்தொகை 8 வீதமாக இருக்க, பல்கலைக்கழக நுழைவு குறைவாகவே உள்ளது. பல்கலைக்கழங்களில் மாணவர்களின் தொகையும் இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளன. முஸ்லிம் மாணவர்களின் தொகை அதிகரிக்கவில்லை.

கல்வியை புறக்கணிக்கும் தன்மை இப்போது முஸ்லிம்களிடம் இல்லை. கல்வி தேவை என்ற விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. எனினும் எதிர்பார்த்த வளர்ச்சியை அடையவில்லை என்றுதான் கூறவேண்டும்.

கே: முஸ்லிம் பெண்களுக்கு சமூகத்தில் கல்வி வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றதா?

ப: முஸ்லிம்கள் எல்லோரும் கல்வி விழிப்புணர்வு பெற்றுவிட்டார்கள் என்றும் கூற முடியாது. பாடசாலைகளிலுள்ள சாதாரண, உயர்தர புள்ளி விபரங்களை பார்க்கும்போது பெண் பிள்ளைகளே அதிகமாக உள்ளனர். ஆண் மாணவர்களின் பற்றாக்குறை கவலைக்குரிய விடயமும்கூட. இன்றும், சிலர் பெண்கள் படிக்கவேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறார்கள்.

அதிகமான முஸ்லிம் பாடசாலைகள் கலவன் பாடசாலைகளாகவே இருக்கின்றன. சிங்களவர்கள்கூட ஆரம்ப காலங்களில் கலவன் பாடசாலைகளை விரும்பவில்லை. பல பாலிகா வித்தியாலயங்கள் இருப்பதைக் காணலாம். கிறிஸ்தவர்களுக்கும் கொன்வன்ட்கள் இருக்கின்றன. எம் பெண்களுக்கென்று அந்தக் காலத்தில் பாடசாலைகளை ஆரம்பிக்க தவறிவிட்டனர். வளர்ச்சியடையாத நிலையில் ஆங்காங்கே பாடசாலைகளில் ஆண்களும் பெண்களும் கற்கும் நிலைமை தொடர்ந்தன. இப்போது ஆண், பெண் பாடசாலைகள் என பிரித்துக்கொள்ள வேண்டுமென்ற மனப்பாங்கு ஏற்பட்டுள்ளது. அதனை நாமும் விரும்புகின்றோம். ஆனால், வெவ்வேறாக படித்துவிட்டு பல்கலைக்கழகம் சென்றால், அங்கு ஒன்றாகத்தான் படிக்க வேண்டும்.
கல்வியை மார்க்க ரீதியாக ஊக்குவிக்க வேண்டுமே தவிர, குழப்பிவிட முயற்சிக்க வேண்டாம்.

இலங்கை முஸ்லிம்கள் கல்வியில் பின்தங்கியிருந்தபோது சித்திலெப்பை, ஏ.எம்.ஏ.அஸீஸ், அப்துல் காதர் போன்றோர் கல்வி மறுமலர்ச்சியை ஏற்படுத்தினர். எனினும், இன்று சில உலமாக்கள் பாடசாலைக் கல்வி தேவையில்லை, பாடசாலைக்குச் செல்ல வேண்டாம், அது யூதர்களின் கல்வி என்ற பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இது சமுதாயத்தை அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்லும் செயலாகும். நான் இதனை வன்மையாக கண்டிக்கிறேன்.

DR.-A.G.-HUSAIN-ISMAIL (1)

கே: அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாட்டின் வகிபாகம் என்ன?

ப: முஸ்லிம் கல்வி மாநாடு ஆரம்பிக்கப்பட்டு 50 வருடங்களாகின்றன. மர்ஹூம் எஸ்.எல்.எம்.ஷாபி மரிக்காரே அதனை ஆரம்பித்தார். பாடசாலைகளை கட்டிக்கொடுப்பதும் ஆசிரியர்களை நியமிப்பதுமல்ல முஸ்லிம் கல்வி மாநட்டின் நோக்கம். நாட்டிலுள்ள முஸ்லிம்களுக்கு கல்வியில் உள்ள பிரச்சினை என்ன? என்பதை பொதுவான ஒரு தரவை எடுத்து அரசியல்வாதிகளுக்கு கொடுப்போம். இந்த வருடமும் முஸ்லிம் பாராளுமன்ற அங்கத்தவர்களுக்கு நாம் அறிக்கையொன்றை கொடுத்துள்ளோம். அந்த அறிக்கை பாராளுமன்றத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது. அதன் பிறகு சில நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அளுத்கமை கல்வியியற் கல்லூரி 20 வருடங்களாக பராமரிப்பற்ற நிலையில் காணப்பட்டது. அதன் நிலைமைகளை வெளிக்கொணர்ந்தோம். இப்போது அரசாங்கம் அதற்கு முன்னுரிமை கொடுத்து பராமரித்து முன்னேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது.

இலங்கையில் கல்விக் கொள்கைகள், சீர்திருத்தங்கள் முன்வைக்கப்படுகின்றன. முஸ்லிம் கல்வி மாநாடு முஸ்லிம்களுக்கு எவ்வகையான சிக்கல்கள் இருக்கின்றது என்பதை ஆராயும். முஸ்லிம்களின் கலாச்சாரத்திற்கு பாதிப்புகள் ஏற்படாதவாறு கண்காணிக்கின்றோம். பாடப்புத்தகங்களில் முஸ்லிம்கள் தொடர்பான தப்பபிப்பிராயங்கள் உண்டா? என்றும் அவதானிப்போம். 1980ஆம் ஆண்டு வெள்ளையறிக்கையில் சமய பாடங்களை நீக்கிவிட்டு, ஒழுக்கப்பாடங்களை அறிமுகம் செய்தார்கள். அதனை கடுமையாக எதிர்த்தது முஸ்லிம் கல்வி மாநாடே. மர்ஹூம் எஸ்.எல்.எம்.ஷாபி மரிக்கார் ஏனைய மத குருமார்களையும் இணைத்துக்கொண்டு போராடி வெற்றிகண்டார்.

ஹஜ் செல்வதற்கான விடுமுறை, பெண்களுக்கான இத்தா விடுமுறை போன்றவற்றை ஒதுக்கிக்கொடுத்ததும் முஸ்லிம் கல்வி மாநாடே. இத்தா விடுமுறை என்பது எமது சமூகத்துக்கான பிரத்தியேகமாக சம்பளத்துடன் 3 மாதங்களுக்கு வழங்கப்படும் விடுமுறையாகும். முஸ்லிம் ஆசிரியர் சங்கமும் இணைந்து செயற்பட்டது. நோன்பு விடுமுறை, முஸ்லிம் பாடசாலைகளுக்கு முஸ்லிம் அதிபர், ஆசிரியர்களை நியமிக்க முயற்சியெடுத்தல் இப்படியான வேலைகளை மேற்கொள்கின்றோம். கல்வி வழிகாட்டல்களை மேற்கொண்டு வருகின்றோம். இலங்கை பூராகவுமுள்ள முஸ்லிம்களின் கல்வி விடயத்தில் ஓர் ஒருங்கிணைப்பு வேலையை முஸ்லிம் கல்வி மாநாடு செய்துவருகின்றது.

கே: இலங்கை முஸ்லிம்களின் கல்வி தொடர்பாக மேற்கொள்ளப்படும் ஆய்வுகளின் நோக்கம் என்ன?

ப: ஆய்வுகளை மேற்கொள்வதற்கு முக்கியமான காரணமொன்றுள்ளது. இலங்கை கல்வித் துறையில் மேற்கொள்ளும் ஆய்வுகளில் முஸ்லிம்களின் கல்வி என்ன நிலையில் உள்ளது என்பதை காணமுடியாதுள்ளது. சாதாரண, உயர்தரங்கள் குறித்து கல்வி அமைச்சு சில தரவுகளை தயாரிக்கின்றது. தரவுகள் சிங்கள, தமிழ், தோட்டப் பாடசாலை என்ற விகிதத்தில் பிரிக்கப்படுகின்றன. முஸ்லிம்களைப் பொறுத்தவரை மூன்று பாடசாலைகளிலும் உள்ளனர். இவர்களின் நிலை இலங்கை தேசிய குறிகாட்டிகளுக்கு மேலே அல்லது கீழ் இருக்கின்றதா? என்பதை பார்க்க முடியாதுள்ளது. சரியான தகவல்கள் இன்றி சமூகத்தின் முன்னேற்றத்துக்கான திட்டமொன்றை தயாரிப்பது கடினமாக உள்ளது. கல்வி முன்னேற்றத்துக்கான 10 வருட திட்டமொன்றை தயாரிக்க முனைந்தோம்.

ஆகவே முஸ்லிம் கல்வி மாநாடு 10 தலைப்புகளில் ஆய்வுகளை தொடங்கியுள்ளது. பாடசாலைகளில் இடைவிலகல், பாடசாலைக் கல்வியின் தரம் போன்ற தலைப்புகளில் ஆய்வுகள் நிறைவுறும் கட்டத்தை அடைந்துள்ளன. நாம் இலங்கையின் 56 கிராமங்களுக்கு சென்று தரவுகளை சேகரித்துள்ளோம்.

கே: இலங்கை முஸ்லிம்கள் நாட்டுக்கு பொருத்தமான விதத்தில் வாழ்கின்றனரா?

ப: மிகவும் முக்கியமானதொரு கேள்வி. பதில் கஷ்டமானது. இது ஒவ்வொருவரினதும் பார்வைக்கேற்ப மாறுபடும். என்னுடைய பார்வையில், இது எமது நாடு என்பதோடு, இங்கு பெரும்பான்மையானவர்கள் பௌத்தர்கள் என்பதையும் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். அவர்களுடைய கலாச்சாரங்களை நாம் முற்றும் பின்பற்றுவது அவசியமல்ல. ஆனால், இஸ்லாமிய வரையறைகளுக்குள் இருந்துகொண்டு இலங்கை முஸ்லிம்களாக வாழும் சந்தர்ப்பம் இருக்கின்றது. அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் களனி பல்கலைக்கழக பேராசிரியரொருவர் உரையாற்றும்போது, ஒவ்வொரு சமூகத்துக்கும் தனித்துவங்கள் இருக்கின்றன. அவை பாதுகாக்கப்படவேண்டும். எனினும் தனித்துவத்தை ஊதிப் பெருப்பித்து, மற்றவர்களிடமிருந்து ஒதுங்கி வாழமுற்பட்டால் தப்பபிப்பிராயங்களும் முரண்பாடுகளும் ஏற்படும் என்றார்.

எமது தனித்துவத்தை சிலர் ஊதிப் பெருப்பித்து காட்ட முற்படுகின்றனர். ஆண்களுக்கான உடை, பெண்களுக்கான உடை எது என இஸ்லாம் வரையறுத்துள்ளது. எப்பகுதிகளை மறைக்க வேண்டும், எப்பகுதிகளை திறக்க வேண்டும் என்றும் வழிகாட்டியுள்ளது. எமது ஆடைகளை இஸ்லாமிய வரையறைகளை பேணி, இலங்கையின் கலாச்சாரத்துக்கு ஏற்ப மாற்றிக்கொள்ள வேண்டும். குர்ஆன், ஹதீஸின் அடிப்படையில் உடையின் வடிவத்தை தீர்மானித்துக்கொள்ளலாம். அரபு நாடுகள், பாகிஸ்தான் போன்ற நாடுகளின் உடைகளை அணியும்போது, இவர்கள் இலங்கையர்களா? என்ற சந்தேகம் மேலெழும்.

1000 வருடங்களுக்கு மேலாக இலங்கையில் வாழ்பவர்களிடம் ஏன் திடீர் நடை, உடை, பாவனை மாற்றமென சிங்களவர்கள் சிந்திக்கின்றனர். நாம் ஹலாலான உணவை புசித்து வந்தோம். அதற்கென்று ஓர் புதிய நடைமுறையை உருவாக்கும்போதே பிரச்சினை வந்தது. அவர்கள் முஸ்லிம்கள் ஹலால் புசிப்பதை வேண்டாமென்று கூறவில்லை. சான்றிதழ் வழங்கும் சட்ட அங்கீகாரம் யார் தந்தார்கள் என்றே கேட்டனர்.

பெரும்பான்மையினரிடத்தில் ஏற்பட்டுள்ள சந்தேகங்களை போக்க 10 நூல்களை ஜம்இய்யதுல் உலமா வெளியிட்டுள்ளது. மாடறுப்பு குறித்தும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. நாம் மாட்டிறைச்சி சாப்பிடுவதற்கான நியாயங்கள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. அவர்கள் தரவுகளை தெரிந்தே வைத்துள்ளனர். எங்களுக்கு
தேவையான உணவை நாம் சாப்பிடுவதற்கு உரிமை உண்டு. அதனை யாரும் மறுக்க முடியாது. ஆனால், அவர்களது மத உரிமையை பாதிக்கும், அவர்கள் விரும்பாத ஒன்றை நாம் செய்வது கட்டாயமா? என்ற மனப்பான்மை எங்களிடம் வரவேண்டும்.

பிரச்சினைகளின் போது நாம் செய்வதை நியாயப்படுத்த முயற்சிக்கிறோமே தவிர, அவர்களின் பக்க நியாயங்கள் குறித்து சிந்தித்து செயற்பட தவறிவிடுவதால் பிரச்சினைகளை தீர்ப்பது கஷ்டமாகவுள்ளது. இவ்வாறான நிலைமையில் சகவாழ்வை எதிர்பார்க்க முடியாது. முஸ்லிம்கள் நாட்டின் சட்டங்களையும் மதிக்கும் நிலை உருவாக வேண்டும்.

கே: இலங்கையில் முஸ்லிம் விவாக விவாகரத்து சட்ட மீள்பரிசீலனை குறித்து பேசப்படுகின்றது. அறிக்கையும் இழுபறி நிலையில் உள்ளது. இதனை எவ்வாறு காண்கின்றீர்கள்?

ப: இஸ்லாமிய சட்டங்கள் குர்ஆன் ஹதீஸை அடிப்படையாக கொண்டது. அது எல்லா காலத்துக்கும் பொருத்தமானது. அதனை எப்போதும் மாற்றத்துக்கு உட்படுத்த முடியாதது. ஆனால், இதற்கான விளக்கங்களை இஸ்லாமிய அறிஞர்கள் காலத்துக்கு காலம் முன்வைத்தார்கள். அவர்கள் முன்வைக்கும் காலங்களில் வாழ்ந்த சமூக பொருளாதார பகைப் புலங்களுக்கு ஏற்ற முறையில் விளக்கங்கள் அமைந்தன.

நாம் இலங்கையில் 1000 வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வருகின்றோம். சவால்களுக்கும் முரண்பாடுகளுக்கும் முகங்கொடுக்கின்றோம். இப்படியான நேரத்தில் நாம் உங்களையும் உரிமைகளையும் பாதுகாத்துக்கொண்டு சமாதானமாக, இஸ்லாமிய வரையறைகளுடன் வாழ்வதற்குத் தேவையான வியாக்கியானங்கள், வழிமுறைகள், சட்டங்கள், துணைச்சட்டங்கள் எங்களுக்கு தேவை. ஷரீஆ சட்டத்தில் மாற்றங்கள் வேண்டுவதில்லை. நாட்டில் அமுல்நடத்துவதில் சிக்கல்கள் நிலவுகின்றன. துஷ்பிரயோகம் நடைபெறுகின்றது.

பலதார மணத்தை முஸ்லிம்கள் துஷ்பிரயோகம் செய்கின்றனர். ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. நான் ஒவ்வொரு மாவட்டங்களிலும் நூற்றுக்கு மேற்பட்ட அனாதரவான குழந்தைகளை சந்தித்துள்ளேன். பிள்ளைகளுக்கான பாதுகாப்பு, மனைவிக்கான உத்தரவாதம், சமனான சொத்துப்பங்கீடு போன்றவற்றை நிறைவேற்றாதவர்களுக்கு கடுமையான சட்டம் தேவை. பலதார மணத்துக்கு இஸ்லாத்தின் வரையறைகளும் வழிகாட்டல்களும் உண்டு. அவை நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. இதற்காகவே துணைச் சட்டங்களும் தேவை. (நு)

நேர்காணல் – ஆதில் அலி சப்ரி 

One comment

  1. நாமல்ஆப்பக்கல்ன்டமுஸ்லீம்வாக்குகிடையாது.முஸ்லீம்மக்கள்.செருப்பால்அடித்துவிரட்டுவாங்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>