வளர்ச்சி பாதையில் கட்டார் இலங்கை இராஜ தந்திர உறவுகள் !


Maithri Qatar visit
Inamullah

கலாநிதி இனாமுல்லாஹ் மஸிஹுத்தீன்

(கத்தார் தேசிய தினத்தை முன்னிட்டு இக்கட்டுரை பதிவிடப்படுகின்றது)

கத்தார் இலங்கை இராஜதந்திர உறவு 1976 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டாலும் 1997 ஆம் ஆண்டே இலங்கைக்கான தூதுவராலயம் கத்தார் தலை நகர் தோஹாவில் திறந்து வைக்கப்பட்டது, அதே போல் 2004 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 28 ஆம் திகதியன்றே இலங்கை மற்றும் மாலை தீவிற்கான தூதுவராலயம் கொழும்பில் திறந்து வைக்கப்பட்டது.

கத்தார் இலங்கை இருதரப்பு உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தக்கூடிய பல்வேறு உயர்மட்ட விஜயங்கள் பல கடந்த காலங்களில் இரு நாடுகளுக்கிடையிலும் இடம்பெற்றுள்ளன, குறிப்பாக 2012 ஆம் ஆண்டு அன்றைய அமீர் தற்போதைய அமீரின் தந்தை ஹமாத் பின் கலீபா அல்-தானி 2012 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கைக்கு விஜயம் செய்தார், அதே வருடம் மே மாதம் அன்றைய இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கத்தார் நாட்டிற்கு உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார்.

2015 மார்ச் மாதம் தற்போதைய கத்தார் அமீர் தமீம் பின் ஹம்மாத் அல்-தானி இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டதோடு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களை கத்தார் நாட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்தார், அதற்கமைய 2017 ஆண்டு அக்டோபர் மாதம் 24- 26 காலப்பிரிவில் உயர்மட்ட தூதுக் குழுவுடன் கத்தார் அரச விருந்தினராக இலங்கை ஜனாதிபதி தோஹா பயணமானார்.

தற்போதைய கத்தார் தூதுவர் ராஷித் ஷாபிஈ அல்-மர்ரீ அவர்கள் இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகளை வலுப்படுத்துவதில் அதிக கரிசனை செலுத்துவதோடு இலங்கை அரச பிரதிநிதிகளோடு நெருக்கமான உறவை கொண்டிருப்பது அண்மைக் காலமாக செய்து கொள்ளப்பட்ட HE.Rashid Shafea Al-marri with HE the Presidentஇருதரப்பு புரிந்துணர்வு உடன்பாடுகளின் மூலம் புலப்படுகிறது, தற்போதைய கத்தார் அமீர் ஷெய்க் தமீம் பின் ஹம்மாத் அல்தானி அவர்களின் இலங்கை விஜயம் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் கத்தார் விஜயம் ஆகியவற்றை வெற்றிகரமான விஜயங்களாக சாத்தியப் படுத்துவதில் இலங்கைக்கான கத்தார் தூதுவரின் பங்களிப்பு மகத்தானதாகும்.

1976 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற அணிசேரா நாடுகளின் உச்சி மாநாட்டிற்கு பின்னர் இலங்கைக்கு அரபுலக தலைவர்கள் வருகை தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும், அந்த வகையில் வளைகுடா அறபு நாடொன்றின் தலைவர்கள் இலங்கைக்கு வருகை தருவது முக்கியத்துவம் பெறுகிறது.

மேற்படி உயர்மட்ட விஜயங்களின் போது இருதரப்பு வர்த்தகம், இரட்டை வரிவிதிப்பு தவிர்த்தல், எரிபொருள் மற்றும் சக்தி, கருப்பு பண பரிமாற்ற தடுப்பு, விமானப்போக்குவரத்து, கல்விகலாசாரம், சுற்றுலாத்துறை, இளைஞர் விவகாரம், விளியட்டுத் துறை, பயங்கரவாத மற்றும் போதைவஸ்து ஆட்கடத்தல் தடுப்பு, முதலீட்டு ஊக்குவிப்பு, இராஜதந்திர நிபுனத்துவ கற்கைகள் மற்றும் பயிற்றுவிப்புகள், தொழில் தொழில் நுட்ப ஒத்துழைப்பு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு, சட்ட நிபுணத்துவ ஒத்துழைப்பு, செய்தி தகவல் தொழில் நுட்ப பரிமாற்றம், இருதரப்பு பயண அனுமதிபத்திர சலுகை, நீர்வளங்கள் போன்ற பல்வேறு துறைகளில் சுமார் 25 ற்கும் மேற்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கைகள் இரு நாடுகளிற்குமிடையில் செய்து கொள்ளப்பட்டுள்ளன.

மேற்படி உடன்பாடுகளை அமுலுக்கு கொண்டுவருவதற்கான இருதரப்பு இணைப்புக் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

சுமார் 150,000 இலங்கையர்கள் கத்தார் நாட்டில் தொழில் புரிகின்றார்கள், அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த கத்தார் அரசின் தொழிற்துறை தூதுக்குழுவினர் சர்வதேச நியமங்களிற்கு ஏற்ப தொழிலாளர் உரிமைகள் நலன்களை மேம்படுத்துவதற்காக கத்தார் அரசு அறிமுகப்படுத்தியுள்ள புதிய ஏற்பாடுகள் குறித்து அறிமுகம் செய்ததோடு பொறியியல், கணக்காய்வு, சுகாதாரம், முகாமைத்துவம், வைத்திய உப சேவைகள், தகவல் தொழில் நுட்பம் போன்ற துறைகளில் நிபுணத்துவம் பெற்ற தொழிலாளர்களுக்கு அதிக தொழில் வாய்ப்புகளை பெற்றுத் தர முடியும் என்பதனையும் இலங்கை அதிகாரிகளிடம் தெரிவித்ததோடு இலங்கை வழங்கும் அவ்வாறான தொழில் தகைமைகளை அங்கீகரிப்பதற்கான பொறிமுறைகளை கண்டறிவதற்கும் தாம் விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.

இரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தக உறவுகளைப் பொறுத்தவரை சுமார் 9000 மில்லியன் ரூபாய்கள் பெறுமதியான இருதரப்பு வர்த்தகம் இடம் பெறுகிறது, அண்மைக்காலமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற இருதரப்பு உடன்படிக்கைகள் இரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தக உறவுகளை மென்மேலும் விருத்தி காணச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.qatar - sri lanka

அதேவேளை மனிதாபிமான உதவிகளைப் பொறுத்தவரை கத்தார் அரசு மற்றும் அங்குள்ள மனிதாபிமான சமூக சேவைகள் நிறுவனங்கள் இலங்கையில் பல்வேறு அபிவிருத்தி மற்றும் மனிதாபிமான, அனர்த்த நிவாரண பணிகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றன, குறிப்பாக யுத்தத்தினால் இடம் பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு விவாகரங்களில் அதிக கரிசனை செலுத்தப் படுகின்றது.

இருநாடுகளுக்குமிடையிலான அரசியல் இராஜ தந்திர உறவுகளைப் பொறுத்தவரை சர்வதேச அரங்குகளில் பரஸ்பரம் ஒத்துழைக்கின்ற புரிந்துணர்வுகள் காணப்படுகின்றன, போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் சர்வ்காதேச விசாரணைகளை மேற்கொள்தல் தொடர்பான அழுத்தங்கள் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை அமைப்பினால் இலங்கை மீது மேற்கொள்ளப்பட்ட பொழுது இலங்கைக்கு கத்தார் அரசு ஆதரவளித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

கத்தார் அரசிற்கு எதிராக சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், எகிப்து ஆகிய நாடுகள் மேற்கொண்ட அரசியல் இராஜதந்திர மற்றும் பொருளாதார் தடைகளின் பொழுது இலங்கை அரசு பல்வேறு அழுத்தங்களிற்கு முகம் கொடுத்த பொழுதும் நடுநிலைமையை கடைப் பிடித்ததோடு கடந்த மாதம் இலங்கை ஜனாதிபதி திட்டமிட்டிருந்தபடி கத்தாருக்கான விஜயத்தை மேற்கொண்டமை இரு நாடுகளிற்குமிடயிலான நல்லுறவுகளிற்கு சான்றாக கருதப்படுகின்றது.

ஐக்கிய நாடுகள் தாபனத்தின் உப அமைப்பான ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பின் யுனெஸ்கோ (UNESCO) நிறைவேற்றுக் குழுவில் இலங்கை இடம் பெறுவதற்கு கத்தார் அரசு உதவியதோடு அண்மையில் அவ்வமைப்பின் பணிப்பாளர் நாயகம் போட்டியிட்ட கத்தார் வேட்பாளர் கலாநிதி அஹ்மத் அப்துல் அசீஸ் அல்-கவாரி அவர்களிற்கு இலங்கை அரசும் உதவியது, என்றாலும் குறிப்பிட்ட வாக்கெடுப்பில் கத்தார் பிரதிநிதி இரண்டாம் இடத்தையே பெற முடிந்த பொழுதும் பிராந்தியத்தில் கத்தார் எதிர் கொண்டுள்ள நெருக்கடி நிலைமையில் மேற்படி ஆதரவு கத்தாருக்கு கிடைத்த இராஜதந்திர வெற்றியாகவே கருதப்படுகின்றது.

வளைகுடா இராஜ தந்திர நெருக்கடி

2017 ஜூன் மாதம் சவூதி அரேபியா ஐக்கிய அரபு அமீரகம் பஹ்ரைன் ஆகிய மூன்று வளைகுடா நாடுகளும் எகிப்தும் கதார் நாட்டின் மீது இராஜதந்திர பொருளாதார மற்றும் விமான போக்குவரத்து பயணத் தடைகளை விதித்தமை வளைகுடா நாடுகளுக்கிடையில் நெருக்கடி நிலைமையினைத் தோற்றுவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கத்தார் பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதாக முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுகளை காட்டார் அமீர், கட்டார் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சர்கள் திட்டவட்டமாக மறுத்திருந்ததொடு தமக்கெதிராக புனையப்பட்ட குற்றச் சாட்டுகள் முன்வைக்கப்படுவதனை இராஜ தந்திர வட்டாரங்களூடாகவும் ஊடகங்கள் வாயிலாகவும் ஊர்ஜிதப் படுத்தியிருந்தனர்.

இராஜதந்திர நெருக்கடியை பேச்சு வார்த்தை மூலம் முடிவிற்கு கொண்டுவர தாம் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ள கத்தார் அரசு எந்தவொரு சந்தர்பத்திலும் தமது நாட்டின் இறைமை சுயாதிபத்தியத்தை விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை என்பதனை அறிவித்துள்ளது. குவைத் மன்னர் அஹமத் ஸபாஹ் முன்னெடுத்துள்ள சமாதான முன்னெடுப்புகளிற்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவதாகவும் கட்டார் அறிவித்துள்ளது.

கத்தார் அரசு பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் அமெரிக்காவுடன் ஒத்துழைப்பதாகவும் குறிப்பாக ஐ எஸ் ஐ எஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான போராட்டத்தில் பங்கெடுத்துள்ளதாகவும் வளைகுடா நெருக்கடிய தங்களுக்குள் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்விற்கு கொண்டு அமெரிக்க இராஜாங்க அமைச்சு தெரிவித்திருந்தது. அதே போன்று ஜூலை மாதம் 11 ஆம் திகதி கட்டாருக்கு விஜயம் செய்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரெக்ஸ் டில்லேர்சன் கத்தாருடன் பயங்கரவாதத்திற்கெதிரான இருதரப்பு பாதுகாப்பு உடன் பாடு ஒன்றிலும் கையெழுத்திட்டமை கத்தார் அடைந்த இராஜ தந்திர வெற்றியாகும்.

கத்தார் அமீர் தமீம் பின் ஹமத் அல்-தானி அவர்களை மேற்கோல் காட்டி கட்டார் செய்தித் தளம் வெளியிட்டதாக கூறப்படும் ஒரு செய்தியே நெருக்கடிக்கு பிரதானமான காரணமாக கூறப்பட்டாலும் பின்னர் செய்திச் சேவை மீது ஊடுருவல் மேற்கொள்ளப்பட்டிருப்பதனை புலனாய்வுத் தகவல்கள் ஊர்ஜிதப்படுத்தியிருந்தனை 16 ஜூலை வெளிவந்த வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை தெரிவித்திருந்தது.

கட்டார் மீது விதிக்கப்பட்டுள்ள முன்னறிவிப்புகள் இல்லாத பொருளாதாரத் தடைகள் சர்வதேச வர்த்தக உறவுகள் நியமங்களை மீறுவதாக அமைந்துள்ளதாக (WTO) உலக வர்த்தக அமைப்பிடம் முறையிட்டுள்ள கத்தார் அரசு, சர்வதேச விமானப்போக்குவரத்து தொடர்பான 1940 ஆண்டு சிகாகோ உடன்பாடுகளை மீறுவதான விமானப் போக்குவரத்து தடைகள் விதிக்கப்பட்டுள்ளமை குறித்து (ICAO) சர்வதேச விமானப்போக்குவரத்து அமைப்பிடம் முறையிட்டுள்ளது.

அதேவேளை தமது நாட்டின் யாத்திர்கர்கள் ஹஜ் உமரா பயணங்களை மேற்கொள்வதில் உள்ள நெருக்கடி நிலைமைகளை கருத்தில் கொண்டு சர்வதேச மனித உரிமைகள் அமைப்பிடமும் (OHCHR) கத்தார் தேசிய மனித உரிமைகள் அமைப்பு முறையீடு செய்துள்ளது. வளைகுடா நாடுகளில் உறவுகளை கொண்டுள்ள கட்டார் பிரஜைகளிடமிருந்து நஷ்டஈடுகள் கோரும் சுமார் 3000 முறையீடுகளுக்கு மேல் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கத்தார் தேசிய மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

கத்தாரில்2022 இல் இடம்பெறவுள்ள உலகக் கிண்ண கால்பந்து (FIFA) போட்டிகளை நிறுத்துமாறு ஒருசில அறபு நாடுகள் வேண்டுகோள் விடுத்த பொழுதும் அதனை தாம் ஏற்றுக் கொள்ளவில்லை என சர்வதேச கால்பந்து சம்மேளனம் அறிவித்தது.

கட்டார் மீது மேற்கொள்ளப்பட்ட பொருளாதாரத் தடைகளை அடுத்து உடனடியாக துருக்கி பாகிஸ்தான் உற்பட ஏனைய பல அண்டைய நாடுகளிடமிருந்து அத்தியாவசிய உணவுப் பொருட்களை கத்தார் அரசு இறக்குமதி செய்ததோடு காட்டார் மக்களையும் அங்கு குடியிருப்போரையும் தொழிலாளர்களையும் அச்சமின்றி அன்றாட வாழ்வை கொண்டு செல்லுமாறு காத்தார் அரசு கேட்டுக் கொண்டது.

எந்தவொரு பொருளாதார நெருக்கடிகளுக்கும் முகம் கொடுக்கக் கூடிய நிலையில் கத்தார் மத்திய வங்கியின் வெளிநாட்டு நாணய சேமிப்பு இருப்பதாகவும் சுமார் 340 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீட்டு ஊக்குவிப்பு மத்திய நிலையத்திடம் இருப்பதாகவும் மத்திய வங்கி ஆளுனர் அறிவித்திருந்தார்.

காத்தார் மீது விதிக்கப்பட்ட இராஜதந்திர மற்றும் பொருளாதார தடைகள் பல்வேறு பரிமாணங்களில் நன்மைகளை கொண்டுவந்திருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றார்கள், ஏனைய வளைகுடா நாடுகளில் தங்கியிருக்கும் நிலையிலிருந்து விடுபட்டு உள்நாட்டு உற்பத்திகளை ஊக்குவிக்கவும், பல்நாட்டுச் சந்தைகளுடன் வர்த்தக உறவுகளை மேம்படுத்தவும், தேசிய வருவாய்களை பல்வகைபடுத்தவும் கத்தார் அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

அதேபோன்று அண்டை நாடுகளுடனும் சர்வதேச சமூகத்துடனும் சர்வதேச அமைப்புக்களுடனும் வெளியுறவுகளை பல்வேறு பரிமாணங்களில் பலப்படுத்திக் கொள்ளும் கட்டாயமும் தேவையும் கட்டார் அரசிற்கு ஏற்பட்டுள்ளது.

அண்மையில் திறந்து வைக்கப்பட்டுள்ள கத்தார் ஹமாத் துறைமுகம் பல்வேறு உலக நாடுகளின் துறைமுகங்களோடு நேரடி வர்த்தக உறவுகளை மேற்கொள்ளும் சகல வசதிகளையும் உட்கட்டமைப்புகளையும் களஞ்சியசாளைகளையும் கொண்ட நவீன துறைமுகமாகும்.

கத்தார் மற்றும் வளைகுடா நாடுகளுக்கிடையிலான விரிசல்கள் துரிதமாக பேச்சு வார்த்தைகள் மூலம் முடிவிற்கு கொண்டுவரப்படுவதனையே இலங்கை அரசும் மக்களும் எதிர்பார்க்கின்றனர்.

இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகள் மென்மேலும் வலுவடையவும் இலங்கை மக்கள் கத்தாரின் இன்றைய தேசிய தினத்தில் இதய சுத்தியுடன் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறார்கள்.  (நு)

-கலாநிதி இனாமுல்லாஹ் மஸிஹுத்தீன்-

EmirMaithri Qatar visit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>