அப்புஹாமியை “அப்புஹாமி” என்றழைப்பதற்காக சுதுபண்டா குழப்பமடைய அவசியமில்லை


Capture
- ஆதில் அலி சப்ரி -

– ஆதில் அலி சப்ரி –

மஹர பிரதேச சபையின் பல அங்கத்தவர் தேர்தல் தொகுதியான அக்பர் டவுன் மற்றும் என்டேரமுல்ல தொடர்பான சர்ச்சையொன்று ஏற்பட்டுள்ளது. மஹர பிரதேச சபையின் நான்கு கிராம சேவையாளர் பிரிவுகள் ஒன்றிணைக்கப்பட்டு, பல அங்கத்தவர் தேர்தல் தொகுதியாக அக்பர் டவுன் என பெயரிடப்பட்டதே பிரதேசத்தின் சிங்கள மக்கள் பதற்றமடையக் காரணம்.

அக்பர் டவுன், என்டேரமுல்ல கிழக்கு, என்டேரமுல்ல தெற்கு, பின்னமெத ஆகிய கிராம சேவகர் பிரிவுகளே இணைக்கப்பட்டு அக்பர் டவுன் என எல்லை நிர்ணய ஆணைக்குழு பெயரிட்டுள்ளது. எல்லை நிர்ணய நடவடிக்கைகள், எல்லை நிர்ணய முரண்பாடுகளை தீர்க்க இரண்டாம் தடவையாக நியமிக்கப்பட்ட எல்லை நிர்ணய மேன்முறைப்பாட்டு குழுவிலும் இதற்கெதிராக முரண்பாடுகள் முன்வைக்கப்பட்டிருக்கவில்லை. எனினும் தேர்தல் காலம் வந்ததும் இப்பிரச்சினை தலைதூக்கியுள்ளது.

தேர்தலில் பல அங்கத்தவர் தொகுதியை இலக்கு வைத்து பிரதேசத்தில் இனவாத தீயை பரப்பும் முயற்சியில் ஒரு குழுவினர் செயற்பட்டு வருகின்றதாக நடுநிலை பிரதேசவாசிகள் குறிப்பிடுகின்றனர். அக்பர் டவுன் பல அங்கத்தவர் தொகுதியில் உள்ள சிங்கள வாக்குகளை கொள்ளையடிக்க முயற்சிப்பவர்களே இவ்விடயத்தை பூதாகரமாக்கியுள்ளனர். அக்பர் டவுன் பல அங்கத்தவர்கள் தொகுதியாக குறிக்கப்பட்டுள்ளதும் முஸ்லிம்களுக்கு பிரதிநிதித்துவமொன்று வழங்கவே. தேர்தல் பிரசாரத்தை மையமாக வைத்தே அக்பர் டவுன் என்ற பெயரில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளனர்.

இப்பிரதேசத்தின் பெயர் குறித்த உரிமையை நியாயப்படுத்த சிங்கள, முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவம் என மூவின மக்களும் பல சம்பவங்களையும் கதைகளையும் கொண்டுள்ளனர்.

என்டேரமுல்லையின் வரலாறு மன்னர் களனிதிஸ்ஸ காலத்திலிருந்து தொடர்வதாகவும், மன்னனின் மாடுகளை பராமரித்து வந்த எடேர் என்பவன் இப்பிரதேசத்தில் வசித்து வந்ததால் என்டேரமுல்ல எனப் பெயர் பெற்றதாக சிங்கள மக்கள் குறிப்பிடுகின்றனர்.

இப்பிரதேசம் அக்பர் டவுன் என பெயர் பெற்றது இப்பிரதேசத்தில் வசித்து வந்த நீதியரசர் அக்பரைத் தொடர்ந்தேயாகும். நாட்டின் உயர்நீதிமன்ற நீதியரசராக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவராகவும், பெரும் செல்வந்தராகவும் இருந்த அக்பர் பிரதேச மக்களுடன் இன, மத பேதமின்றி வாழ்ந்ததாக இப்போதுள்ள சிங்கள மக்களும் கூறுவதுண்டு.

அதேபோன்று, இப்பிரதேசத்தில் பெரிய கிறிஸ்தவ தேவாலயங்கள் இரண்டும் உள்ளன. கிறிஸ்தவ மதத்தில் எடேரா என்ற பெயர் முக்கியம் பெறுகின்றது. என்டேரமுல்ல என்ற பதமும் அதிலிருந்தே வந்திருக்க வேண்டும் என கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர்.

கடந்த 35-40 வருடங்களில் இப்பிரதேசத்தில் வசிக்கும் பௌத்த, முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மக்கள் எவ்வித முரண்பாடுகளும் இன்றி வாழ்ந்ததாக கூறுகின்றனர். தற்போதும் பிரச்சினையை சமாதானமாக நிறைவுசெய்து தரும்படியே மக்கள் கோருகின்றனர். இது இனங்களுக்கிடையிலான பிரச்சினையொன்றும் அல்ல. எனினும் வாக்கு வங்கியை நிரப்பிக்கொள்ள சிலர் இதன் மூலம் முயற்சிக்கின்றனர் என்பது தெளிவு.

இதுவரை காலமும் அக்பர் டவுன் என அழைக்கப்பட்ட, அதற்கே பழக்கப்பட்ட சிங்கள மக்கள், எல்லை நிர்ணய ஆணைக்குழுவும் அக்பர் டவுன் என பெயரிடும்போது மௌனமாக இருந்தவர்கள் இப்போது கொதித்தெழுவதன் மர்மம் அரசியல்வாதிகள் கையாளும் இனவாத தீயேயன்றி வேறில்லை.

இந்த தொகுதியின் பெரிய கிராம சேவகர் பிரிவே அக்பர் டவுன். அதன் மக்கள் தொகை 3,375 ஆகும். அங்கு 58.52 வீதமான முஸ்லிம்களும்,19.85 சிங்களவர்களும், 19.47 மலே முஸ்லிம்களும் ஏனையவர்கள் 1.12 வீதத்தினரும் வசித்து வருகின்றனர். இதனை மத அடிப்படையில் பார்க்கும் போது அக்பர் டவுனில் 76 வீத முஸ்லிம்களும், 18 வீத பௌத்தர்களுமே வாழ்ந்து வருகின்றனர்.

அதேபோன்று, பின்னமெத எனும் கிராம சேவகர் பிரிவில் 2224, என்டேரமுல்ல கிழக்கே 2829, என்டேரமுல்ல தெற்கே 2404 என சனப் பரம்பலைக் கொண்டுள்ளது. இவற்றிலும் முறையே 48, 47 வீத பெரும்பான்மையினராக முஸ்லிம்களே வாழ்ந்து வருகின்றனர். மேலும் 17 வீத பௌத்த மற்றும் 32 வீத கிறிஸ்தவ சனப் பரம்பலையும் கொண்ட பிரதேசமாகும்.

அப்பிரதேசத்தில் வசித்த அனுபவம் மற்றும் பெயர் அக்பர் டவுன் என குறிக்கப்படுவது சாதாரணம் தானே என்பதை கெபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரஞ்சித் கீர்த்தி தென்னகோன் இவ்வாறு விவரிக்கின்றார்,

“நான் 1991களில் ஹுனுபிடியவில் வசித்து வந்தேன். என் நினைவுகளின்படி அப்பிரதேசத்தின் பெயர் அக்பர் டவுன் அன்றி வேறில்லை. 261 பஸ் நடத்துனர் இதுவரை காலமும் கூவி அழைத்ததும் அக்பர் டவுன் என்றே. நாம் பாதைகளை இனங்காண்பதும் – அக்பர் டவுனில் இருந்து 5 நிமிடங்களில், அக்பர் டவுன் பள்ளிவாசல் அருகே, அக்பர் டவுன் ஹோட்டல் அருகேயென்று தவிர என்டேரமுல்ல என்றோ, பின்னமெத என்றோ அல்ல.

ஹுனுபிடிய- என்டேரமுல்ல வரையிலும், அங்கிருந்து குறுக்கு வழிகளிலும் முஸ்லிம்கள் செறிந்து வாழ்கின்றனர். அவ்வாறிருக்கையில் தொகுதிக்கு அக்பர் டவுன் என அழைப்பதில் எவ்வித பிரச்சினையும் இருக்க முடியாது. அப்புஹாமியை அப்புஹாமி என்று அழைக்கும்போது சுதுபண்டா குழப்பமடைய வேண்டிய அவசியமில்லையே!

எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் மேன்முறையீட்டு நடவடிக்கைகளின் போது குரல் கொடுக்க தவறிய பிரதேச மக்கள், என்டேரமுல்ல பிரதேச சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் பல அங்கத்தவர் தொகுதியில் வாக்கு வங்கிகளை இலக்கு வைத்து செயற்படுவோரின் கயிற்றை விழுங்கி, வீதிக்கிறங்கியுள்ளனர். மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபாவைச் சந்தித்துள்ள என்டேரமுல்ல பிரதேச மக்கள் பிரதிநிதிகள் அக்பர் டவுன் என்ற பெயர் மாற்றப்படவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

அக்பர் டவுன் – என்டேரமுல்ல பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபா அமைச்சரவைப் பத்திரமொன்றை வெளியிட்டுள்ளார். அதனடிப்படையில் தீர்வுக் குழுவொன்றை அமைக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபாவால் நியமிக்கப்படும் குழு பிரதேச மக்கள் பிரதிநிதிகள், சிவில் அமைப்புகள், மதத் தலைவர்களின் கருத்துக்களை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளனர். இதன்படி அக்பர் டவுன் என்ற பல அங்கத்தவர் தொகுதி என்டேரமுல்ல – 2 என பெயரிடப்படும் வாய்ப்பே அதிகமாகவுள்ளது.

ஒரு பிரதேசத்தில் 80 வீதமான முஸ்லிம்கள் வாழ்கின்றபோதும், அனைவரும் ஏற்கனவே அக்பர் டவுன் என பயன்படுத்தி வந்த போதும், பெயர் முஸ்லிம் பெயராக உள்ள ஒரே காரணத்திற்காக பௌத்தர்கள் கிளர்ந்தெழுந்துள்ளனர். இலங்கையில் பௌத்த இனவாதத்தை தூண்ட முஸ்லிம், இஸ்லாம், முஸ்லிம் பெயர் என ஏதாவதொன்று இருந்தால் போதுமென்பதே நியதி.

இதுவரை காலமும் சிங்கள, கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மக்கள் என அனைவரும் நீதியரசர் அக்பரின் நினைவாக இப்பிரதேசத்தை அக்பர் டவுன் என்றே அழைத்தனர். அதில் அவர்களுக்கு பிரச்சினை இருக்கவும் இல்லை. பிரதேசத்தில் 80 வீதமானவர்கள் முஸ்லிம்களாக இருக்கும்போது அக்பர் டவுனை பல அங்கத்தவர் தொகுதியாக மாற்றி அக்பர் டவுன் என அழைப்பது அப்புஹாமியை, அப்புஹாமி என்று அழைப்பது போன்றதாகும். இதற்காக சுதுபண்டா குழப்பமடைய வேண்டிய அவசியமில்லை.”

நீதியரசர் அக்பர்

நீதியரசர் எம்.எஸ்.ஜே.அக்பர் இலங்கையின் முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் மற்றும் சொலிஸிட்டர் ஜெனரல் ஆவார்.

கொழும்பு ரோயல் கல்லூரியில் ஆரம்ப கல்வியை பெற்ற நீதியரசர் அக்பர், இங்கிலாந்தின் புலமைப் பரிசில் பெற்று 1897ஆம் ஆண்டு இலத்திரனியல் பொறியியலாளராக பட்டம் பெற்றார். பின்னர் சட்டக் கல்வியையும் பெற்று, சட்டத்துறையில் சிறந்து விளங்கினார்.

1905இல் இலங்கை வந்த அக்பர், சட்டத்தரணியாகவும், சட்டக் கல்லூரியின் விரிவுரையாளராகவும் பணியாற்றினார். 1907 களில் ஆங்கிலேயர் ஆட்சியில் பதில் சட்டமா அதிபராக செயற்பட்ட பெருமையும் இவரைச் சாரும். இலங்கையின் முதலாவது முஸ்லிம் உயர் நீதிமன்ற நீதியரசரும் அக்பரே.

இலங்கை பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவின் தலைவராக பணியாற்றிய இவர், 1928இல் பல்கலைக்கழகங்களுடன் ஒன்றிணைந்ததாக, விடுதி வசதிகளும் இருக்க வேண்டும் என்ற தீர்மானத்தையும் நிறைவேற்றினார்.

கொழும்பில் ஹுஸைனிய்யா ஆண்கள் பாடசாலை மற்றும் பாத்திமா பெண்கள் பாடசாலை என்பவற்றை உருவாக்கியதும் இலங்கை முஸ்லிம் கல்விச் சமூகத்தை தாபித்ததும் நீதியரசர் அக்பரே.

நீதியரசர் அக்பர் நாட்டுக்காற்றிய சேவையின் பொருட்டே அக்பர் டவுன், பேராதெனிய அக்பர் மண்டபம், பேராதெனிய அக்பர் மைதானம் போன்ற பெயர்கள் பெற்றன. 15.06.1880 ஆண்டு பிறந்த இவர் 22.04.1944 அன்று இவ்வுலக வாழ்வைப் பிரிந்தார். (நு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>