புதிய கல்வியாண்டை ஆரம்பிக்க 15000 மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் அன்பளிப்பு


Zam Zam (6)

ஆறு குழந்தைகளின் தாய் ஒருவர் தனது பிள்ளைகளுக்கு புதிய கல்வியாண்டிற்காக பாடசாலை உபகரணங்களை வாங்க வசதி இல்லை என்ற காரணத்தால் நில்வலா கங்கையில் குதித்து தற்கொலை செய்ய முயற்சித்தார். மாத்தறை பொலிஸார் அவரைக் காப்பாற்றிய செய்தியை கடந்த வருடம் சிங்கள நாளிதழ் ஒன்று வெளியிட்டிருந்தது.

வருமானம் குறைந்த குடும்பங்களில் பிள்ளைகளின் கல்விச் செலவை பெற்றோர்களால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை என்பதற்கு இச் சம்பவம் சிறந்த உதாரணம்.

ஸம் ஸம் பவுண்டேஷன் School with a smile எனும் வேலைத் திட்டத்தினூடாக வருமானம் குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவச் செல்வங்களுக்கு 3000 ரூபா பெறுமதியான பாடசாலை உபகரணங்களை கடந்த நான்கு வருடங்களாக வழங்கி வருகின்றது. இவ்வருடத்துடன் 46,000 மாணவர்கள் பயனடைந்துள்ளனர். ஒரு பாடசாலைப் பொதியில் ஒரு புத்தகப் பை, அப்பியாசக் கொப்பிகள், காகிதாதிகள் மற்றும் 1000 ரூபா பெறுமதியான சப்பாத்துக்கான ஒரு வவுச்சர் என்பன உள்ளடங்குகின்றன.

அந்தவகையில் 2018 ஆம் கல்வியாண்டை புன்னகையுடன் ஆரம்பிக்க 15000 மாணவச் செல்வங்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வுகள் அண்மையில் நடைபெற்றன.

இவ்வருடம் பண்டாரவளை, மொனராலை, உடுநுவரை, வத்தேகமை, ஹொரோவ்பொதானை, புத்தளம், நீர்கொழும்பு, ரக்வானை, வெலிகமை, பொலன்னறுவை, கொழும்பு ஆகிய பிரதேசங்களில் தெரிவு செய்யப்பட்ட மாணவ மாணவிகளுக்கு இவ் உதவிகள் வழங்கப்பட்டன.

கடந்த வருடம் முதல் ஸம் ஸம் நிறுவனத்துடன் இணைந்து இப் பணியை முன்னெடுப்பதற்கான அழைப்பு விடுக்கப்பட்டது. அந்தவகையில் இம் முறை உடுநுவரை அபிவிருத்தி நிதியம், பண்டாரவளை Doornation நிறுவனம், வெலிகமை அபிவிருத்தி நிதியம், புத்தளம் அஸ் ஸபா பவுண்டேஷன், நீர்கொழும்பு அல் ஹிலாலியன் நிறுவனம், மொனராகலை பைதுல் ஹைர் பவுண்டேஷன், கோகிலாபுற ஐக்கிய ஒன்றியம் ஆகிய நிறுவனங்கள் இம்முறை ஸம் ஸம் நிறுவனத்துடன் இணைந்து கொண்டன.

ஸம் ஸம் பவுண்டேஷன் “மதங்களைக் கடந்த மனித நேயம்“ என்ற தொணிப்பொருளிலேயே தனது எல்லாப் பணிகளையும் முன்னெடுத்து வருகின்றது. அந்தவகையில் இத் திட்டத்தில் 30 வீதமான உதவியை முஸ்லிம் அல்லாதவர்களும் பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வருடம் “சூழலை சுத்தமாக வைப்போம், டெங்கு பரவுவதைத் தடுப்போம்“ என்ற தொனிப்பொருளில் அப்பியாசப் புத்தகங்கள் அச்சிடப்பட்டிருந்தன.

மாணவர்களின் கல்வி வாழ்க்கை இடைநிறுத்தப்படுவதைத் தடுப்பதற்கும், வறுமைக் கோட்டிற்குக் கீழ் இருக்கும் மாணவர்கள் கல்வியைத் தொடர்வதற்கும், பெற்றோர்களின் சுமையைக் குறைப்பதற்கும் என இத் திட்டம் பல நோக்கங்களுக்காக நடைமுறைப்படுத்தப்படுகிறது. எனைய சமூகங்களும் இத் திட்டத்தினால் பயன்பெறுவதால் சகவாழ்விற்கான விதையை பிஞ்சு உள்ளங்களில் விதைப்பதிலும் நாம் அனைவரும் ஒரே நாட்டின் மக்கள் என்ற உணர்வை ஊட்டுவதிலும் இத் திட்டம் வெற்றியடைந்துள்ளது என்பது எமது அனுபவமாகும்.

இத் திட்டத்திற்காக ரூபா 45 மில்லியன்களை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வசிக்கும் இலங்கையர்கள் மட்டுமே வழங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ் வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு உடலால், பொருளால், பணத்தால் உதவி செய்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் ஸம் ஸம் பவுண்டேஷன் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. (நு)

Zam Zam (6)

Zam Zam (1)

Zam Zam (2)

Zam Zam (3)

Zam Zam (4)

Zam Zam (5)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>