தொகுதிவாரி தேர்தல் முறைமை – அன்றும், இன்றும்


Sri-Lanka-Election

1970ஆம் ஆண்டு காலப்பகுதியானது இலங்கை வரலாற்றில் திருப்புமுனையான காலகட்டங்களில் ஒன்றாகும். 1972ஆம் ஆண்டு புதிய அரசியல் யாப்பு ஒன்றை அறிமுகப்படுத்திய சிறீமாவோ பண்டார்நாயக அம்மையார் இலங்கையில் மூடிய பொருளாதாரக் கொள்கையை நடைமறைப்படுத்தினார். இப்பொருளாதாரக் கொள்கை இலங்கைக்கு உகர்ந்ததாகக் காணப்பட்டாலும் அது தீவிரமாக நடைமுறைப் டுத்தப்பட்டதால் அக்கால இலங்கை மக்கள் கடுமையான பாதிக்கப்பட்டனர். இது அவருடைய அரசாங்கத்தின் மீது மக்களை வெறுப்புக் கொள்ளச் செய்தது. இந்த வெறுப்பு, 1977ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் ஜே. ஆர். ஜயவர்தனவின் தலமையில் போட்டியிட்ட ஐக்கிய தேசியக் கட்சியை அதிகூடிய பெரும்பான்மை வாக்குப் பலத்துடன் வெற்றி பெற வைத்தது. ஜே. ஆர் ஜயவர்தன இப்பெரும்பான்மை பலத்தின் அனுக்கிரகத்துடன் முக்கியமான இரண்டு விடயங்களை இந்நாட்டுக்கு அன்பளிப்பு செய்தார். ஒன்று புதிய அரசியல் யாப்பாகும். மற்றையது புதிய தேர்தல் முறையாகும்.

இந்த புதிய தேர்தல் முறை எந்த ஒரு கட்சியும் அதிகூடிய பெரும்பான்மையை பெற்று ஆட்சியமைக்கும் வழியை அடைத்துவிட்டிருந்தது. இது விகிதாசார தேர்தல் முறையாகும். தொகுதிவாரி முறையில் அதிகூடிய பெரும்பான்மைப் பலத்துடன் ஆட்சிக்கு வந்த அதற்கு முன்னைய அரசாங்கங்கள் தமது பெரும்பான்மை பலத்தை ஏதேர்ச்ச வசமாக பயன்படுத்தியதன் காரணமாகவோ என்னவோ ஜே. ஆர் ஜயவர்தன இந்த விகிதாசார தேர்தல் முறைமையை அறிமுகப்படுத்தி இருக்கலாம். விகிதாசார தேர்தல் முறை நடைமுறைப்படுத்தப்பட்டதன் பின்னர் நடைபெற்ற எந்தப் பொதுத் தேர்தலிலும் எந்த ஒரு அரசாங்கமும் அதிகூடிய பெரும்பான்மைப் பலத்தை பெற்று 2010ஆம் ஆண்டு வரை ஆட்சியமைக்கவில்லை. அதற்கு அவற்றுக்கு சிறுபான்மை கட்சிகளின் ஒத்துழைப்பு அவசியப்பட்டன. உதாரணமாக 1994ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்ஸின் உதவி பொதுஜன ஐக்கிய முன்னணிக்கு கிடைக்காமல் ஐக்கிய தேசிய கட்சிக்குக் கிடைத்திருந்தால் ஐக்கிய தேசியக் கட்சியே ஆட்சி அமைத்திருக்கும். ஆனால் 2010ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த விகிதாசார தேர்தல் முறையில் முன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்று ஆட்சியமைத்தார். இதற்கு யுத்த வெற்றியுடன் கிடைத்த மக்கள் அபிமானமும் சிறந்த முறையில் ஒழுங்குபடுத்தப்பட்ட பிரச்சார உத்திகளும் காரணமாகின. விகிதாசாரத் தேர்தல் முறை மாகாணசபை தேர்தல்களிலும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களிலும் அது அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலே நடைமுறைப்படுத்தப்பட்டது.

காலப் போக்கில் விகிதாசார தேர்தல் முறைக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இது விருப்பு வாக்குப் போட்டியை ஏற்படுத்தி அபேட்சகர்களிடையே குரோதத்தை ஏற்படுத்துவதாகவும் அரசியல்வாதிகளை பணக்காரர்களின் அடிமைகளாக்குவதாகவும் பணம் படைத்தவர்களுக்கே இதனால் பாராளமன்றத்துக்கு செல்ல முடியும் என்றும் குற்றச் சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இந்த தேர்தல் முறையின் கெட்ட விளைவுகளை கடந்த மூன்று தசாப்தங்களாக கண்டிருக்கிறோம். 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் இந்தத் தேர்தல் முறையை மாற்றி தொகுதிவாரி தேர்தல் முறையை நடைமுறைப்படுத்துவதும் ஜனாதிபதி மைத்ரீபால சிரிசேனவின் தேர்தல் வாக்குறுதிகளில் முக்கியமான ஒன்றாகக் காணப்பட்டது. இப்போது புதிய எல்லைகள் நிர்ணயம் செய்யப்பட்டு தொகுதிவாரி முறையில் எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. ஆனால் இலங்கையின் தற்போதைய சூழ்நிலையில் தொகுதிவாரி தேர்தல் முறை ஆபத்தானதாக உள்ளது. இது பல இனங்கள் கலந்து வாழும் தொகுதிகளில் இனவாதத்தை கூர்மைப்படுத்தும். அதற்கான ஆதாரங்களை இக்குறுகிய கால தேர்தல் பிரசாரத்தில் அவதானிக்கக் கூடியதாகவும் உள்ளது.

தொகுதிவாரி தேர்தல் முறை நடைமுறைப்படுத்தப்பட்ட ஆரம்பகாலப்பகுதியில் அதாவது 1980ஆம் ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் இனத்தை மையப்படுத்திய கட்சிகள் காணப்படவில்லை. இரண்டு பெரும்பான்மை கட்சிகளே பிரதானமாக இருந்தன. அக்கட்சிகளில் இனவாதக் குழுக்கள் செயற்பட்டாலும் ஒரு இனத்தை மையப்படுத்திய கட்சிகளாக அவை காணப்படவில்லை. மாறாக அவற்றில் இரண்டு பொருளாதாரக் கொள்கைகளே முக்கியத்துவப்படுத்தப்பட்டன. அக்காலத்தில் காணப்பட்ட சிறிய கட்சிகளும் இன அடிப்படையில் பாகுபட்டதாகக் காணப்படவில்லை. அவை சமூகத்தின் ஒவ்வொரு வகுப்பினரையும் கொள்கைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தியதாகக் காணப்பட்டன. (இக்கட்டுரையில் நான் தமிழரசுக் கட்சியைக் கருத்தில் கொள்ள வில்லை. அது வட கிழக்கினை மையப்படுத்தியது). தேர்தல்களின் போது அந்த இரண்டு கட்சிகளிலும் எல்லா இனங்களையும் சேர்ந்த அபேட்சகர்கள் முன்னிறுத்தப்பட்டனர். அங்கே இனரீதியாக வாக்கைப் பயன்படுத்துவதை விட கட்சியைப் பார்த்தே மக்கள் வாக்குப் போட்டனர். இந்த இரண்டு கட்சிகளும் இலங்கை மக்களின் உதிரங்களில் ஒரு சமய நம்பிக்கையைப் போல் கடுமையாக ஊறிப் பேயிருந்தன. எனவே இந்த தொகுதிவாரி முறை அந்த காலத்துக்கு பொருத்தமானதாகக் காணப்பட்டது.

ஆனால் அன்றைய காலத்தைப் போல் இன்றைய காலம் காணப்படவில்லை. 1980ஆம் ஆண்டுக்குப் பின்னர் தான் இலங்கையில் இனவாதக் கட்சிகள் தோற்றம் பெற்றன. இலங்கையில் இனவாதம் தூண்டப்பட அரசியலும் ஊடகமும் பிரதான காரணிகளாகும். இனவாதத் தூண்டலின் காரணமாக நாட்டின் நலன் என்று சிந்திக்கின்ற மக்களை விட இனத்தின் நலன் என்று சிந்திக்கின்ற மக்களே இன்று தோற்றம் பெற்றுள்ளனர். நல்லிணக்கம் தொடர்பான என்ன வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டாலும் ஒவ்வொரு இனமும் மற்றைய இனத்தை சந்தேகக் கண்கொண்டு பார்க்கின்ற நிலையே காணப்படுகின்றது. இன்று பகிரங்கமாகவே இனவாதம் செயற்படுகிறது. முகப் புத்தகம் இக்கருத்துக்கு நல்ல சான்றாகும். இனவாதம் தூண்டப்பட்ட சூழ்நிலையை தமக்கு கிடைத்த வரப்பிரசாதமாக பயன்படுத்திக் கொள்ளுகின்ற வகுப்பினராக அதிகமான அரசியல்வாதிகள் காணப்படுகின்றனர். அவர்கள் இதற்கு இன்னும் தீணி போடுவர். இச்சூழ்நிலையில் 2010ஆம் ஆண்டுக்குப் பின்னர் மேல் எழுந்துள்ள இனவாத சிந்தினை நாட்டின் மூளை முடுக்கெல்லாம் இன்னும் ஊறிப்போவதற்கு தொகுதிவாரித் தேர்தல் முறை காரணிகளை அமைத்துக் கொடுக்கும். அதிகமான அரசியல்வாதிகள் இதனை நுதலாகக் கொண்டே பிரச்சாரம் செய்வர். இதற்கு அனுபவம் ஆதாரமாகும். இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நிலமையில் தொகுதிவாரி தேர்தல் முறை ஒரு இனத்தை மற்றைய இனம் சந்தேகக் கண்கொண்டு பார்க்கின்ற நிலையை இன்னும் கூர்மைப்படுத்தும் என்று எதிர்வுகூற முடியும். இத்தொகுதிவாரி முறை தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டால் நாட்டின் இன நல்லிணக்கத்துக்கு இன்னும் படுபாதகமான விளைவுகளையே இது ஏற்படுத்தும். எனவே இந்த உள்ளூராட்சித் தேர்தல் முடிய இத்தேர்தல் முறையை வேறு ஒரு வடிவில் சீர்திருத்தப் பொறுப்பு வாய்ந்தவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதில் இலங்கை மக்களின் மனோநிலை தற்போது எவ்வாறு அமைந்துள்ளது என்பதை முக்கியமாகக் கருத்தில் கொள்ள வேண்டும். எந்த ஒரு நடவடிக்கையும் இனங்களிடையே முரண்பாடுகளை வளர்க்காத விதத்தில் அமைய வேண்டும்.

தற்போதுள்ள தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேஷப்பிரய தேர்தலின் போது நல்ல சட்டதிட்டங்களை அறிமுகப்படுத்தும் ஒருவராகக் காணப்படுகின்றார். சமயத்தின் அடிப்படையில் மக்கள் கூடும் இடங்களாக சமய நிறுவனங்கள் காணப்படுகின்றன. சில அபேட்சகர்கள் தொகுதிகளில் காணப்படும் இனங்களின் பரம்பலை இலக்கு வைத்து இவ்வாறான இடங்களில் இனவாதத்தை முன்னிறுத்திய கருத்துகளை முன்வைப்பதற்கு நாட்டம் கொண்டுள்ளது போன்ற ஒரு தன்மையை அவதானிக்கக் கூடியதாகவும் உள்ளது. இதனையும் தேர்தல் ஆணையாளர் கருத்தில் கொள்வது நல்லது. தேர்தல் பிரசாரங்களுக்கு சமயஸ்தலங்களை பயன்படுத்துவதை தவிர்க்க தேர்தல் ஆணையகம் நடவடிக்கை எடுப்பது நன்று. அது இனங்களிடையேயான ஒற்றுமைக்கு ஆரோக்கியமாக அமையலாம்.

-மபாஸ் சனூன்-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>