அக்கரைப்பற்றுக்கு ஓர் முழுமையான திட்டம் தேவை – சிராஜ் மஷ்ஹூர்


siraj mashoor photo

அக்கரைப்பற்றில் அடிக்கட்டுமான அபிவிருத்தித் திட்டங்களுக்கான ஒருங்கிணைக்கப்பட்ட திட்டங்கள் இல்லாததன் காரணமாகவே, சில பிரதேசங்களில் வெள்ளங்கள் ஏற்பட்டு மக்கள் பெரும் தொலைக்கு உள்ளாகும் நிலை காணப்பட்டது. நமது நகருக்கான ஒரு சிறந்த முழுமையான திட்டம் (மாஸ்டர் ப்ளேன்) தேவைப்படுகின்றது என நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிரதித் தவிசாளர் சிராஜ் மஷ்ஹுர் தெரிவித்தார்.

நேற்று (7) அக்கரைப்பற்றில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் தெரிவித்த அவர்:

அக்கரைப்பறில் மாநகர சபையின் வேலைத்திட்டங்கள் தனியாகவும், பிரதேச செயலகத்தின் வேலைத் திட்டங்கள் தனியாகவும் நடைபெறுகின்றன. இவற்றுக்கிடையிலான ஒருங்கிணைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும். நமது நகருக்கான ஒரு சிறந்த திட்டம் (மாஸ்டர் ப்ளேன்) தேவைப்படுகின்றது.

நான் இயற்கை அனர்த்தங்கள் தொடர்பிலான ஆசிய நிறுவனத்தின் உறுப்பினராக இருந்துள்ளேன். இயற்கை அனர்த்தங்களிலிருந்து பாதுகாப்பு பெறுவது தொடர்பிலான பயிற்சியைப் பெற்றிருக்கின்றேன். வெள்ளத்தின்போதான பாதுகாப்பு குறித்து பங்களாதேசில் நேரடியாக களத்தில் சென்று அவதானித்திருக்கின்றேன். இந்தப் பின்னணியிலிருந்து ஒரு விடயத்தைச் சொல்ல விரும்புகின்றேன்.

அதாவது, ஊரின் அபிவிருத்தி குறித்துப் பேசுகின்றவர்களுக்கு நான் ஒரு விடயத்தை குறிப்பிட்டுக் காட்ட விரும்புகின்றேன். ஏன் இந்த நகரின் அடிக்கட்டுமானத்தின் மிக முக்கிய விடயமான வடிகாண் அமைப்பை முறையாகச் செய்யாமலிருக்கின்றீர்கள்?.மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தால், முதலில் செய்யப்பட வேண்டிய பல விடயங்களில் இதுவும் ஒன்று.

எந்தவொரு அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்வதாக இருந்தாலும், அது சுற்றுச் சூழலிலும், சமூகத்திலும் ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்த பகுப்பாய்வு மேற்கொள்ளப்படும். இது உலக வழமையாக உள்ளது. ஆனால், எமது பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்களில் எந்தவொரு நியமங்களையும் பின்பற்றாது, கமிஷன்களைப் பெறும் திரு. 10சதவீதங்களாகவே எல்லோரும் உள்ளனர்.

ஒலுவில் துறைமுகத்தை அமைக்கும்போது, இந்த சுற்றுச் சூழல் மற்றும் சமூக தாக்கங்கள் குறித்த பகுப்பாய்வுகளை ஓரம்தள்ளிவிட்டுத்தான் துறைமுகம் அமைக்கப்பட்டது. எனவேதான், இப்போது ஒலுவில் கடற் கரையோரம் கரைந்து, நிலத்தை நோக்கி வந்த வண்ணம் இருக்கின்றது. இதன் தாக்கம் திருகோணமலை வரை நீளும் என்று இது குறித்த ஆராய்ச்சியில் ஒரு ஆய்வாளர் கூறினார்.

இப்போது மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்கள், எந்தவொரு நியமங்களையும் பின்பற்றாது, கமிஷன்களைப் பெற்றுக்கொள்வதற்காகவே மேற்கொள்ளப்படுகின்றன. முன்பெல்லாம் ஊழல், மோசடி என்பன அபிவிருத்தித் திட்டங்களின் பக்க விளைவுகளாக இருந்தன. ஆனால், இன்று ஊழல், மோசடி, கமிஷன்களுக்காகவே அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்ற துரதிஷ்டமான நிலை நிலவுகின்றது. இப்படி ஊழல், மோசடி, கமிஷன்களுக்காக அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வது மக்களை ஏமாற்றும், நயவஞ்சகத்தனமாக வேலையாகும். – என்று தெரிவித்தார். (ஸ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>