லகுகலை காணி வழக்கில் நீதி வழங்கிய தீர்ப்பு என்ன?


lahugala

அம்பாறை மாவட்டத்திற்குட்பட்ட லகுகலை பிரதேசத்தில் லகுகலை வட்டார வன அதிகாரியினால் பொத்துவில் 18, பசறிச்சேனையில் வசிக்கும் மீராசாகிபு செயினப்பும்மா என்பவருக்கெதிராக வன இலாகா திணைக்கத்திற்குச் சொந்தமான காணியில் அத்துமீறி விவசாயம் செய்த குற்றச்சாட்டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு கடந்த நவம்பர் மாதம் 9 ஆம் திகதி பொத்துவில் நீதிவான் நீதிமன்றில் நீதிவான் முஹம்மது இஸ்மாயில் வஹாப்தீன் முன்னிலையில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த வழக்கில் நீதிவான் வழங்கிய உத்தரவுகள் தொடர்பில் குறித்த நீதிவான் பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். நீதிவான் ஒருவர் வழங்கும் உத்தரவுகள் தொடர்பில் ஆட்சேபனைகள் இருப்பின் மேன்முறையீடு செய்வதற்கான நீதிக் கட்டமைப்புகள் இருக்கின்ற நிலையில் எதுவித முன்னறிவித்தலுமில்லாது நீதிச் சேவை ஆணைக்குழுவினால் விசாரணைக்கு அழைக்கப்பட்ட நிலையிலேயே அவர் பதவியிலிருந்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந் நிலையில் அன்றைய தினம் இடம்பெற்ற வழக்கில் முன்வைக்கப்பட்ட வாதங்கள் மற்றும் வழங்கப்பட்ட உத்தரவுகள் தொடர்பான விபரங்களை இங்கு தருகிறோம்.

இந்த வழக்கு 09.11.2017 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சந்தேக நபர் சார்பில் சட்டத்தரணிகளான கபூர், முனாசுதீன் மற்றும் சாதிர் ஆகியோர் மன்றில் ஆஜராகினர்.

இச் சந்தர்ப்பத்தில் சந்தேக நபர் சார்பில் சட்டத்தரணி முனாசுடீன் மன்றில் வாதாடுகையில், இந்த வழக்கு வனப்பரிபாலன திணைக்களத்தினால், குறித்த சந்தேக நபர் வனப்பரிபாலன திணைக்களத்திற்கு உட்பட்ட பிரதேசத்திற்குள் அத்துமீறி உட்சென்றதாக குற்றம் சாட்டப்பட்டு தற்போது குறித்த சந்தேக நபர் மன்றில் ஆஜர் செய்யப்பட்டுள்ளார்.

தற்போது வன இலாகா உரிமை கோருகின்ற குறித்த அந்தப் பிரதேசமானது கடந்த 30 வருடங்களாக சுமார் 63 குடும்பத்தலைவர்களால் விவசாயம் செய்யப்பட்ட ஒரு வேளாண்மை செய்யப்பட்ட வட்டை என்பதனை மிகவும் பொறுப்புடன் இந்த நீதிமன்றத்திற்கு முன்வைக்கின்றேன்.

குறித்த விவசாய அமைப்பானது பள்ளியடிவட்டை கமக்கார அமைப்பு என்று விவசாயத் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த காணிப் பதிவு ஆவணத்தை மன்றில் சமர்ப்பிக்கின்றேன்.

அதேபோன்று குறித்த பிரதேசமானது லகுகலை பிரதேச செயலாளரின் ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசம் என்பதனால் அந்தக் காணிக்குள் கடந்த 30 வருடங்களாக சுமார் 63 நபர்கள் விவசாயம் செய்து வருவதாக லகுகலை பிரதேச செயலாளரினால் வனத்திணைக்களத்திற்கு எழுத்து மூலம் அனுப்பப்பட்ட கடிதத்தை இங்கு முன்வைக்கிறேன்.

அதேபோன்று இந்தக் காணிக்குள் விவசாயம் செய்யும் நபர்கள் அடங்கிய பிரதேச செயலாளரினால் வழங்கப்பட்ட பெயர் பட்டியலை அதாவது அந்த குறித்த வட்டையில் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் பெயர் பட்டியலையும் மேலும் வன இலாகா திணைக்களத்தினால் அம்பாறை மாவட்ட வன அதிகாரியினால் குறித்த காணியானது 30 வருடங்களாக செய்கை பண்ணப்பட்டு வருவதாகவும் குறித்து காணிக்குள் விவசாயம் செய்யும் விவசாயிகளை வயல் செய்வதற்கு அனுமதிக்குமாறு வன பாதுகாப்பு சட்டத்தின் பாதுகாப்பை நடைமுறைப்படுத்தும் உத்தியோகத்தர் மாவட்ட வன அதிகாரிக்கு வழங்கிய விவசாயத்தை மாத்திரம் மேற்கொள்வதற்கு வழங்கப்பட்ட கடிதத்தினையும் சமர்ப்பிக்கிறேன்.

பாலையடிவட்டை விவசாய அமைப்பின் விவசாய அபிவிருத்தி சம்பந்தமாக பேச்சுவார்த்தை செய்வதற்கு பொத்துவில் பிரதேச செயலாளரினால் வழங்கப்பட்ட அழைப்புக் கடிதத்தினையும் விவசாயிகள் தொடர்தேர்ச்சியாக வயல் செய்வதற்கு ஏக்கர் வரி கட்டிய ஆவணங்களினையும் அரசிற்கு செலுத்திய ஏக்கர் வரிப் பற்றுச் சீட்டினையும் முன்வைக்கிறேன்.

கடந்த காலங்களில் வேளாண்மை செய்வதற்கு ஆதாரமாக எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் மன்றுக்கு சமர்ப்பிக்கின்றேன். அத்துடன் விவசாயம் செய்வது நாட்டினதும், நாட்டின் பொருளாதாரத்தினதும் அபிவிருத்தியில் ஒரு பங்களிப்பு ஆகும்.

அத்துடன் குறித்த விவசாயிகள் மரங்களை வெட்டுவதற்கோ அல்லது வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கோ சந்தர்ப்பம் இல்லை. இந்தக் காணிக்குள் விவசாய நடவடிக்கையில் ஈடுபடுகின்ற விவசாயிகள் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்கள். ஆதலால் நீதிமன்று இந்த ஏழை விவசாயிகளின் நிலையை கருத்திற் கொண்டு அவர்கள் அந்த வயலை செய்வதற்கு அனுமதிக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன். மேலும் இந்த வழக்கு முடியும் வரை விவசாயிகள் காத்திருந்தால் அவர்கள் மீண்டும் ஒரு வருடம் காத்திருக்க வேண்டும் என்றும், குறித்த வயல் காணிகள் மழையை நம்பி செய்யும் காணிகள் என்றும் இந்த வயலை செய்யாது போனால் குறித்த விவசாயிகள் பாரதூரமான நெருக்கடிக்கு ஆளாவார்கள் என்றும் எடுத்துக் கூறுகின்றேன்.

மேலும் இந்த விவசாயிகள் விவசாயம் செய்வதனால் அரசாங்கத்திற்கோ, வனத்திணைக்கள அதிகாரிகளுக்கோ எந்தவிதமான நட்டமும் ஏற்படாது என்று மன்றின் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன். எனவே மன்றில் முற்படுத்தப்பட்டுள்ள சம்பந்தப்பட்ட ஆவணங்களையும் குறித்த ஏழை விவசாயிகளின் பொருளாதார நலன்களையும் கருத்திற் கொண்டு இந்தக் காணியில் இந்த சந்தேக நபரை விவசாயம் செய்வதற்கு கட்டளை ஒன்றை பிறப்பிக்குமாறு மன்றை கோருகின்றேன்.

மேலும் தற்போது இந்த விவசாயிகள், விவசாயம் செய்வதற்கு ஆயத்தம் செய்து கொண்டு தங்களது ஆரம்ப நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையிலேயே வனத் திணைக்களத்தினர் கைது செய்து கொண்டு வந்திருக்கின்றனர். இந்தப் பிரதேசத்தில் வயல் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றது. ஆகவே மன்றானது இந்த விவசாயிகளின் காணிகளில் வயல் செய்வதற்கு அனுமதி வழங்கி கட்டளை பிறப்பிக்க வேண்டும் என்றார்.

சட்டத்தரணி கபூர் இங்கு வாதிடுகையில், இந்த வழக்கு வனத்திணைக்களத்தினரால் சந்தேக நபருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டு குற்றச்சாட்டுப்பத்திரம் தாக்கல் செய்வதற்கு வழக்குத் தொடுனரினால் தவணை கோரப்பட்டுள்ளது. சந்தேக நபர் உடைமை கொள்கின்ற காணியானது வனத்திணைக்களத்திற்குச் சொந்தமானது என்றும், அவர் குறித்த வனத்திணைக்களச் சட்டத்தினை மீறி உள்ளார் என்றும் அவரை தண்டிக்கும் படியும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குற்றவியல் நடைமுறைச் சட்டக் கோவையின் பிரிவு 136 இன் கீழ் வழக்குத் தாக்கல் செய்வதற்கு வழக்குத் தொடுனர் முகத்தோற்ற அளவில் ஒரு வழக்கைக் கொண்டிருக்க வேண்டும். அதாவது குறித்த குற்றம் புரியப்பட்டதற்கான சான்றுகளை முகத்தோற்ற அளவில் காட்டிய பின்னரே வழக்குத் தாக்கல் செய்திருக்க வேண்டும்.

ஆகவே இங்கு வழக்குத் தொடுனர் குறித்த காணி வனத் திணைக்களத்தின் சட்ட ஏற்பாடுகளின் கீழ் எவ்வாறு உட்பட்டது என்ற விடயம் அதாவது வனப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இந்தக் காடு கிராமியக் காடா, பேணல் காடா என்ற விடயங்களை தெளிவாக சொல்லியிருக்க வேண்டும்.

மேலும் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட அல்லது விநியோகிக்கப்பட்ட ஒரு புதினப் பத்திரிகை அல்லது வேறு ஏதாவது வர்த்தமானியினையோ அல்லது ஒரு சட்டத்தினை முற்படுத்தியோதான் அந்தக் குற்றச்சாட்டுப் பத்திரம் தாக்கல் செய்யப்பட வேண்டும்.

இந்தக் காணியானது முன்பு இந்த விவசாயிகளால் விவசாயம் செய்யப்பட்ட காணியாகும். இந்தக் காணி சம்மந்தமாக 2000(46) இலக்க விவசாய அபிவிருத்தி கட்டளைச் சட்டத்தின் கீழ் விவசாய பணிப்பாளர் நாயகத்தினால் பதிவு செய்யப்பட்டு பள்ளியடிவட்டை என்ற கமக்கார அமைப்பிற்கு உட்படுத்தி 2000(46) ஆம் இலக்க சட்ட ஏற்பாடுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிகார எல்லைக்கு உட்பட்ட இவ்வாறான விவசாய பதிவு மன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் லகுகலைப் பிரதேச அரச காணிகளுக்கு பொறுப்பான லகுகலை பிரதேச செயலாளரினால் தெளிவாக குறித்த காணி சந்தேக நபருக்குச் சொந்தமான விவசாயம் செய்யப்படுகின்ற காணி என்ற பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. அதாவது சந்தேக நபரின் காணிகளுக்குள் வன அதிகாரிகளின் தேவையற்ற முறையிலான தொந்தரவுகள், குழப்பங்களை தவிர்ப்பதற்காக குறித்த வட்டையில் பயிர் செய்துவரும் விவசாயிகளின் பட்டியலை சிங்கள மொழியில் தயார் செய்து லகுகலை பிரதேச செயலாளர் வழங்கியுள்ளார்.

மேலும் இந்த பிரதேசத்தில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக விவசாயம் செய்தது சம்மந்தமாக அரசாங்கத்திற்குச் செலுத்திய ஏக்கர் வரிப் பற்றுச்சீட்டும் சட்டத்தரணியினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த காணி மழையை நம்பி விவசாயம் செய்யப்படுகின்ற ஒரு போக காணியாகும். இது சம்பந்தமாக நெற்காணி தொடர்பான கூட்டத்தீர்மானம் தொடர்பாக கமநல அபிவிருத்தி உத்தியோகத்தரினால் வழங்கப்பட்ட அறிக்கை மற்றும் பொத்துவில் பிரதேச செயலகத்தினால் அதாவது பொத்துவில் பிரதேச அபிவிருத்தி சம்பந்தமாக விவசாய மட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் பொத்துவில் பிரதேச செயலாளரினால் நடாத்தப்பட்டு பிணக்கிற்குட்பட்ட காணி அபிவிருத்தி சம்பந்தமாக தற்போது 2016 ஆம் ஆண்டு பிரதேச செயலாளர் என்.எம்.எம். முசாரத் கைப்பட எழுதிய அம்பாறை அரச அதிபருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் ஒரு பிரதியினையும் சமர்ப்பிக்கின்றேன்.

இந்த பொத்துவில் பிரதேசத்திற்கு உட்பட்ட காணிக்குள் பயங்கரவாத காலகட்டத்தில் விவசாயம் செய்வதற்கு செல்ல முடியாத நிலை காணப்பட்டதாகவும், இந்தக் காணிகள் கட்டுக்குள் கிடந்து, பின்னர் 2008 ஆம் ஆண்டு குறித்த காணிகள் அரசாங்கத்தின் உதவியுடன் பொது மக்களுக்கு மீண்டும் பெற்றுக் கொடுக்க வேண்டும் என அதாவது கட்டுக்குள் இருந்த காணிகளை பொது மக்களுக்கு விடுவிக்க வேண்டும் என்று வனத் திணைக்களம், பிரதேச செயலாளர், பிராந்திய வன உத்தியோகத்தர், விவசாய அமைப்பு தலைவர் போன்றவர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதனையும் சமர்ப்பிக்கிறேன்.

மேலும் கடந்த காலங்களில் விவசாயச் செய்கை மேற்கொண்ட போது இலங்கை “கெத்தட்ட அருண” வேலைத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பசளை மானியம் வழங்கப்பட்ட பட்டியலையும் இந்த பசளையானது குறித்த வட்டை விவசாய காணிகளுக்கு பொத்துவில் கமநல சேவை மத்திய நிலையத்தினால் PLR பதிவு செய்யப்பட்டு PLR பதிவு செய்யப்பட்ட பட்டியல் மூலமே விவசாயிகளுக்கு பசளை மானியம் வழங்கப்பட்டது.

அத்துடன் எமது சான்றியல் கட்டளைச் சட்டத்தின் பிரிவு 114 இன் ஏற்பாடுகளின் கீழ் மேற்படி சான்றுகளும் அனுமதி வழங்கப்பட்ட ஆவணங்களும் முறையாக வழங்கப்பட்டுள்ளன என்று முகத்தோற்ற அளவில் சந்தேக நபர் சார்பில் மன்றுக்கு அறியக்கூடியதாக உள்ளது. இந்த ஆவணங்கள் அனைத்தும் அரசாங்கத்தினால் முறையாக வழங்கப்பட்டுள்ளது. அவைகள் சிறந்த சான்றுகளாகும் என்று கூறப்படுகின்றது. இவைகள் தரம் குறைவான சான்றுகள் என்றாலே அவைகளை மறுதலிக்க முடியும்.

எனவே எதிரி சார்பில் இணைக்கப்பட்ட 11 ஆவணங்கள் சான்றியல் கட்டளைச் சட்டத்தின் பிரிவு 114 இன் கீழ் சிறப்பான சான்றுகளாக உள்ளன. இந்த சான்றுகளை மேலோங்கக் கூடிய வகையில் எந்தவித ஆவணங்களும் வழக்குத் தொடுனர் தரப்பில் முன்வைக்கப்படவில்லை.

மேலும் இந்தக் காணிகளுக்குள் குற்றம் புரிந்ததாக கூறப்படுகின்ற எதிரியிடமிருந்து வழக்குத் தொடுனர் எந்த ஒரு சான்றுப் பொருட்களையோ அல்லது உபகரணங்களையோ அல்லது ஏதாவது ஒன்றையோ புலன் விசாரணையில் மன்றில் சமர்ப்பிக்கவில்லை. மேலும் குறித்த பள்ளியடிவட்டைக்குச் சொந்தமான காணிகளை வனத் திணைக்களத்தினர் உரிமை கோருவது வெளிப்படையாக சட்டத்திற்கு முரணானது என்றும் இந்த வழக்கை கொண்டு நடாத்த அவர்களுக்கு உரிமை இல்லை என்றும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

எது எவ்வாறு இருப்பினும் இந்த வழக்கின் நிலையினை கவனத்திற் கொண்டு இந்த விவசாயிகள் வழக்கு முடியும்வரை அவர்களுக்குரிய விவசாய நடவடிக்கையினை மேற்கொள்வதில் மன்றுக்கு சட்டத்தில் எந்தத் தடையும் இல்லை.

இதேபோன்று பொத்துவில் நீதிமன்றத்தில் வேகாமம் காணி தொடர்பான பிரச்சினையின்போது முன்பிருந்த நீதிவான் அவர்களினால் வழக்கின் தீர்ப்பு வரும்வரையில் விவசாயம் செய்வதற்கு அனுமதி வழங்கி கட்டளையிடப்பட்டிருந்தது. முன்பிருந்த அதே பிரச்சினைதான் தற்போதும் வந்துள்ளது.

இந்த விவசாயிகள் ஜீவனோபாய தொழிலாக விவசாயம் செய்கின்றார்கள். இந்தக் காணிகள் மழையை நம்பி ஒரு போகம் செய்யப்படுகின்ற காணிகளாகும். இந்த விவசாயிகளின் நிலைமையினை கருத்திற் கொண்டு தீர்ப்பளிக்குமாறு சந்தேக சபர் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இதனையடுத்து வழக்கு தொடுனர் தரப்பில் பின்வருமாறு கூறப்பட்டது. இந்த வனமானது வனப் பரிபாலனத்திற்குச் சொந்தமான கும்புக்கன் பேணல் காடாகும். வனக் கட்டளைச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் இது பாதுகாக்கப்பட்ட வனப் பரிபாலனத்திற்குச் சொந்தமான வனமாகும். குறித்த விடயமானது 2009.02.17ம் திகதி விசேட வர்த்தமானியின் இலக்கம் 1589/9 என்ற வர்த்தமானியில் பேணல் காடு என்று பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அது வனப் பரிபாலனத் திணைக்களத்தின் எல்லாக் கட்டுப்பாடுகளுக்கும் உட்பட்ட பாதுகாப்பு வனாந்தரமாகும்.

குறித்த வனத்திற்குச் சொந்தமான காணிகள் சம்பந்தமாக வனப்பரிபாலன திணைக்களத்திற்கு லகுகலை பிரதேச செயலாளரினால் வழங்கப்பட்டிருப்பதாக வனத் திணைக்களத்திற்கு எந்த அறிவித்தலும் சொல்லப்படவில்லை. இந்தக் காட்டுப் பிரதேசம் லகுகலை பிரதேச செயலாளரின் ஆளுகையின் கீழ் உள்ள இடமாக உள்ளது.

அத்தகைய காணிக்கு பொத்துவில் பிரதேச செயலாளரினால் வழங்கப்பட்ட குழுக்கூட்டக் கடிதத்தினை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. லகுகலை பிரதேச செயலாளரின் கீழுள்ள காணிக்கு பிரதேச செயலாளர் முசாரத்தினால் குழுக்கூட்டத்திற்கு வழங்கப்பட்ட கடிதத்தை சட்டத்தரணி காட்டியிருந்தார். அந்த எல்லைக்கு உட்பட்ட காணிகள் காடு பேணல் பிரதேசமாகும். மேலும் இந்தக் காணிகள் விவசாயக் காணிகள் என்பது சம்பந்தமாக வட்டார வன அதிகாரிக்கு எந்த ஆவணங்களும் சமர்ப்பிக்கப்படவில்லை. குறித்த காணியானது பாதுகாக்கப்பட்ட கும்புக்கன் பேணல் காடாகும்.

இந்த சந்தேக நபர்கள் அத்துமீறி காடு வெட்டி விவசாயம் செய்துள்ளார்கள். இவர்களுக்கு வழக்குத் தாக்கல் செய்து ‘B’ அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வனத் திணைக்களத்திற்குச் சொந்தமான காணிகள் அழிக்கப்பட்டு வருவதாகவும், வன ஜீவராசிகளின் பாதுகாப்பிற்காக அரச காடுகளை பாதுகாக்குமாறு வர்த்தமானியில் கூறியுள்ளார். ஆகவே மன்றானது சந்தேக நபர்களுக்கு குற்றச்சாட்டுப் பத்திரம் சமர்ப்பிப்பதற்கு ஒரு தினம் தருமாறும், அத்துமீறி காட்டிற்குள் செல்லாமல் இருப்பதற்கு உத்தரவு பிறப்பிக்குமாறும் மன்றை வேண்டுகின்றோம்.

இதனையடுத்து நீதிவான் தனது கட்டளையை பின்வருமாறு முன்வைத்தார்.

இந்த வழக்கின் தன்மையானது குற்றவியல் தன்மையினைக் கொண்டதாகும். குற்றவியல் வழக்கு ஒன்றில் சந்தேக நபருக்கு எதிரான குற்றச்சாட்டை நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் நிரூபிக்க வேண்டியது வழக்குத் தொடுனரின் பொறுப்பாகும். எனினும் இன்றைய தினம் “B” அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் குற்றச்சாட்டுப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு குற்றச்சாட்டுப் பத்திரம் சந்தேக நபருக்கு வாசித்துக் காண்பிக்கப்பட்டு பின்னர் தான் தொடர் நடைமுறைகள் பின்பற்றப்படும்.

எனினும் சந்தேக நபர் சார்பில் சட்டத்தரணியினால் செய்யப்பட்ட சமர்ப்பணங்களையும் அதேபோல் வழக்குத் தொடுனர் தரப்பில் அளிக்கப்பட்ட பதிலையும் மன்று கவனமாக பரிசீலனை செய்கின்றது. எந்த ஒரு வழக்கு நடவடிக்கையிலும் “சமாதானம்” (Peace) ஏற்படுத்தப்படுவது கடமையாகும். அது குற்றவியல் வழக்காயினும் சரி, குடியியல் வழக்காயினும் சரி அவ்வாறான நடவடிக்கையினை மேற்கொள்வது நீதிமன்றத்தின் கடமையாகும்.

இந்த வழக்கைப் பொறுத்த வரையில் இந்த வழக்கு குற்றவியல் தன்மையினைக் கொண்டது. இந்த வழக்கானது இந்த சந்தேக நபருக்கு எதிராக ஆரம்ப கட்டத்தில் உள்ளது. எனினும் சந்தேக நபர் சார்பில் சட்டத்தரணிகளினால் செய்யப்பட்ட சமர்ப்பணத்தினையும் ஆவணங்களினையும் மன்று கவனமாக பரிசீலனை செய்கின்ற போது புரியப்பட்டதாக கூறப்பட்டுள்ள குற்றம் நடைபெற்ற இடமானது முகத்தோற்ற அளவில் வேளாண்மை செய்கை பண்ணப்படுகின்ற வயல் பிரதேசம் என்று மன்றுக்கு தெளிவுபடுத்தி அதை ஒப்புவிக்கும் வகையில் சந்தே நபர் சார்பில் செய்யப்பட்ட சமர்ப்பணத்தில் இணைக்கப்பட்ட ஆவணங்களின் மூலம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

மேலும் வழக்குத் தொடுனர் தரப்பில் குறித்த காணி, அரச காணி என்றோ, அரச காடு என்றோ எந்தவொரு தெளிவான பதிலும் மன்றுக்கு தெரிவிக்கப்படவில்லை.

இந்த விடயங்களில் மன்று தனது கவனத்தினைச் செலுத்தி இந்த வழக்கில் குறிப்பிடப்பட்ட பிரதேசமானது தற்போது காலத்திற்குக் காலம் நெற்செய்கை பண்ணப்படுகின்ற காணி என்றும், சந்தேக நபர் தனக்குச் சொந்தமான காணியில் நெற்செய்கை செய்வதற்காக ஆயத்தமாகும் போதுதான் வழக்குத் தொடுனர் தரப்பில் கைது செய்யப்பட்டு இந்த வழக்கு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டது என்றும், இந்த சந்தர்ப்பத்தில் இந்த வழக்கு நடவடிக்கைகள் முடிவடையும் வரை காத்திருந்தால் இந்த சந்தேக நபரினால் இந்த காணிக்குள் நெற்செய்கை நடவடிக்கையில் ஈடுபட முடியாமல் போய்விடும் என்றும், இதனால் இந்த சந்தேக நபருக்கு பொருளாதாரத்தில் பாரிய தாக்கம் ஏற்படும் என்றும், இந்த சந்தேக நபர் வேளாண்மை நடவடிக்கையில் ஈடுபட்டால் நெல் உற்பத்தி அதிகரிக்கப்பட்டு நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தினை கொண்டுவரும் என்றும், இந்த வழக்கு நடவடிக்கையினால் சந்தேக நபர் விவசாயம் செய்வதனால் எந்த வகையிலும் யாருக்கும் பாதிப்பு ஏற்படாது என்றும் சமர்ப்பணம் செய்யப்பட்டு ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்டது. அதனை மன்று கவனமாக பரிசீலனை செய்கின்றது.

மேலும் வழக்குத் தொடுனர் தரப்பில் வழங்கப்பட்ட பதிலையும் மன்று கவனமாக பரிசீலனை செய்கின்றது. ஆகவே மேற்கூறிய விடயங்கள் அனைத்தையும் மன்று கருத்திற் கொண்டு இந்த வழக்கில் பின்வருமாறு கட்டளைகளை ஆக்குகின்றது.

சந்தேக நபர்கள் 75,000/= ஆட்பிணையில் செல்ல அனுமதி. சந்தேக நபருக்கு குற்றச்சாட்டுப் பத்திரத்தை வழக்குத் தொடுனர் தாக்கல் செய்யவும்.

இந்த வழக்கு நடவடிக்கைகள் முன்னெடுத்துச் செல்லப்பட்டு இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் வரையில் இந்த சந்தேக நபர் குற்றம் புரிந்ததாக குறிப்பிடப்பட்டுள்ள குறித்த காணியில் தொடர்ச்சியான விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு எந்த தடையும் இல்லை என்று மன்று கட்டளையிடுகின்றது. நீதியின் நலன் கருதி இந்த மூன்றாவது கட்டளையினை மன்று பிறப்பிக்கின்றது. (நு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>