‘பொஹோம ஸ்தூதி’


fff
- ஆதில் அலி சப்ரி -

– ஆதில் அலி சப்ரி –

‘முஸ்லிம்கள் இங்கு வியாபாரத்தில் ஈடுபடுவதை விரும்பாதவர்களே கடைகளை அடையாளம் காட்டி, தாக்குதலுக்கு உதவினர். அவை தினமும் சந்தித்துக்கொள்ளும் முகங்கள். அவர்கள் அடுத்தநாளே எம் முன் வந்துசெல்ல நிர்ப்பந்திக்கப்பட்டனர். நாம் அவர்களுக்கு கூறியதெல்லாம் ‘பொஹோம ஸ்தூதீ’ (மிக்க நன்றி) என்பது மாத்திரமே!’

கொழும்பிலிருந்து ஊடகவியலாளர் குழுவொன்று கண்டியில் சிங்கள இனவாதிகளால் தாக்கப்பட்ட பல்வேறு இடங்களுக்கும் விஜயம்செய்து- சம்பவங்களை ஆவணப்படுத்தவும், அதிகமான போலி செய்திகளுக்கு மத்தியில் மக்களின் உண்மையான பிரச்சினைகளை வெளிக்கொண்டுவரவும் முயற்சித்தோம்.

அதனடிப்படையில் தாக்குதலுக்குள்ளான பள்ளிவாசல்கள், வீடுகள், வியாபார நிலையங்களை பார்வையிட்டோம். நிர்க்கதிக்குள்ளாகியுள்ள மக்களிடம் உரையாடினோம். அவர்களின் துக்கத்தில் பங்கெடுத்தோம். முடியுமானவரை அவர்களுக்கு ஆறுதலும் கூறினோம். கண்டியில் தாக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள மக்களின் குரல்களை இங்கே தொகுத்து தருகின்றேன்.

நான் கட்டுரையை ஆரம்பித்துள்ள பொஹோம ஸ்தூதீ என்ற பகுதி, கண்டி மெனிக்ஹின்ன பள்ளிவாசல் தலைவர் அப்துல் றவூப் என்னிடம் உரையாடியபோது தெரிவித்த கருத்துக்களின் ஒரு பகுதியாகும்.

கட்டுகஸ்தோட்டையில் இருந்து வத்தேகம பாதையில் இருக்கும் ஊரே மெனிக்ஹின்ன. இங்கு 18 முஸ்லிம் குடும்பங்களே வாழ்ந்து வருகின்றன. நகரில் முஸ்லிம்களுக்கு சொந்தமான 22 கடைகள் உள்ளன.

மெனிக்ஹின்ன பள்ளிவாசலுக்கு தீவைக்க முயற்சித்துள்ளனர். பொலிஸார் உடன் செயற்பட்டதால் குறைந்த பாதிப்புகளுடன் பள்ளிவாசல் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மெனிக்ஹின்ன பள்ளிவாசலின் தலைவர் அப்துல் றவூப் மேலும் கருத்து தெரிவித்ததாவது,

_DSC0010

‘இந்த பள்ளிவாசல் 114 வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்டதாகும். பள்ளிவாசலை அழிக்கும் முயற்சியை பொலிஸார் முறியடித்தனர். சம்பவத்தில் பொலிஸார் பொறுப்புடன் நடந்துகொண்டதை தெரிவிக்க விரும்புகின்றேன். இப்பிரதேசத்தில் முஸ்லிம்கள் வியாபாரத்தில் ஈடுபடக்கூடாதென்பதே இனவாதிகளின் நோக்கம். மஹசோன் பலகாயவின் தலைவர் அமித் வீரசிங்கவும் மெனிக்ஹின்னவைத் சேர்ந்தவர்.

இங்கிருந்த சிங்களவர்கள் முஸ்லிம் கடைகளை அடையாளம் காட்டினர். அதனடிப்படையில் 4 கடைகளும் 1 வீடும் தாக்கப்பட்டன.

நாம் நாளாந்தம் முகம் பார்த்து கதைப்பவர்களே எமக்கு இவ்வாறு செய்தனர். அவர்களிடம் கூறவேண்டியது போஹோம ஸ்தூதி (மிக்க நன்றி) என்பதே-’ என்று கூறிமுடித்தார். முஸ்லிம்களுக்கெதிராக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட இனவாத தாக்குதல்கள் குறித்து வெளியான செய்திகளில் பல உண்மைகளும் இருட்டடிப்பு செய்யப்பட்டிருந்தன.

அதுகுறித்து நம்பகத்தன்மையான அறிக்கையொன்றை முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீ லங்கா வெளியிட்டுள்ளது. அதனடிப்படையில் கண்டி பிராந்தியத்தில் முஸ்லிம் ஒருவர் உயிரிழந்துள்ளார். 12 பேர் காயங்களுக்குள்ளாகியுள்ளனர். 300க்கு அதிகமான குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன. 62 வீடுகள் முற்றாக வும், 79 வீடுகள் பகுதியாகவும், 17 பள்ளிவாசல்கள், 91 வியாபார நிலையங்கள் முற்றாகவும், 22 வியாபார நிலையங்கள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளதுடன் முஸ்லிம்களுக்கு சொந்தமான 60 வாகனங்கள் தாக்கப்பட்டுள்ளன.

திகன மஸ்ஜிதுன் நூர் பள்ளிவாசல் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் குறித்து திகன ரஜவெல பிரதேசவாசி எஸ்.எம்.நியாஸ் கான் கருத்து தெரிவிக்கும்போது,

‘ஆயிரத்துக்கு மேற்பட்ட சிங்கள இனவாதிகள் ஊர்வலமாக வந்தனர். பள்ளிவாசல் பாதுகாப்புக்கு இருந்த ஊர் மக்களை விசேட அதிரடிப் படையினர் வீடுகளுக்கு அனுப்பினர். எனது வீடு பள்ளிவாசலுக்கு அருகாமையில் இருந்ததால் நான் பள்ளிவாசலில் இருந்தேன்.

அவர்களின் ஊர்வலத்தை வீடியோ செய்த முஸ்லிம் இளைஞன் ஒருவரை தாக்குவதற்கு விரட்டி வந்தனர். பள்ளிவாசல் அருகே இருந்த நான் அவர்களிடம் பிடிபட்டதும் இளைஞன் தப்பிவிட்டான். என்னை அதிகமானோர் சூழ்ந்து தாக்கினர். ஒரேயொரு பொலிஸ் உத்தியோகத்தரைத் தவிர வேறு யாரும் என்னைக் காப்பாற்றவில்லை. 20க்கு மேற்பட்ட விசேட அதிரடிப்படையினர் கடமையில் இருக்கும்போதே மஸ்ஜிதுன்
நூர் பள்ளிவாசலை தாக்கி தீயிட்டனர். அல்குர்ஆன் பிரதிகளை தீயிட்டு, அதன்மேல் சிறுநீர் கழித்துள்ளனர்.

பள்ளிவாசலில் 45 நிமிடங்களுக்கு மேல் அட்டகாசம் அரங்கேறியுள்ளது. சம்பவ தினத்தன்று அதிகாலை 5மணியில் இருந்து விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர். அவர்களுக்கான காலை உணவும், பகல் உணவும் பள்ளிவாசலில், ஊர் மக்கள் இணைந்து சமைத்து வழங்கினர். அனைத்தும் முடிந்தபின்னரே ஆகாயத்துக்கு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர். விசேட அதிரடிப் படையினர் பள்ளிவாசலில் சாப்பிட்ட சாப்பாட்டுக்காவது விசுவாசமாக இருந்திருக்கவேண்டுமே!’ என்றார்.

Ahamed shibly

பள்ளிவாசல் மீது பெற்றோல் குண்டுகள் எறியப்பட்டுள்ளன. வெடிப்புகள் இடம்பெற்றுள்ளன. இவ்வாறிருக்கையில் பள்ளிவாசலை சுத்தப்படுத்தி மக்கள் பாவனைக்காக விடுவது ஆபத்தானதாகும். முழுமையாக புனர்நிர்மாணம் செய்வதே வணக்கவழிபாடுகளுக்காக ஒன்றுதிரளும் மக்களுக்கு பாதுகாப்பளிக்கும். பள்ளிவாசலின் சேத விபரங்களை வெளிப்படையாக நோக்குவதைவிட, தர நிர்ணய அறிக்கையொன்று பெறுவதே பாதுகாப்பானதாகும். அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றோம். இங்கு வந்த பிரதமரும், அமைச்சர்களும் நஷ்டஈடு வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்வதாக வாக்களித்தனர். அவை பேச்சுக்களுடன் மாத்திரம் நின்றுவிடாது செயற்படுத்தப்படவேண்டும் என்று கேட்டுக்கொள்வதாக திகன மஸ்ஜிதுன் நூர் பரிபாலன சபைத் தலைவர் அஹமத் ஷிப்லி தெரிவித்தார்.

இனவாதிகளின் அட்டூழியங்களால் பல வியாபார நிலையங்களும் தாக்கப்பட்டுள்ளதை மேலே உள்ள அறிக்கையில் பார்த்தோம். கடைகள் தீக்கிரையாக்கப்பட்டவர்களின் பொருளாதாரம் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. எவ்வித தடையும் இன்றி உழைத்து, வாழ்ந்துவந்த மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளன. அவர்களில் சிலரது குரல்களுக்கு செவிதாழ்த்தக் கிடைத்தது.

முற்றாக தீக்கிரையாக்கப்பட்ட திகன ஷாக்கிரா மோட்டர்ஸ் உரிமையாளர்களுள் ஒருவரான முஹம்மத் நிலாம் கருத்து தெரிவிக்கும்போது:

m.nilam
‘நாம் ஷாக்கிரா மோட்டர்ஸ் என்று எமது தங்கையின் பெயரில் வாகன உதிரிப்பாகங்கள் விற்பனை நிலையமொன்றை நடத்தி வந்தோம். நான், நானா மற்றும் தந்தையும் இணைந்தே இந்த கடையை நடத்தி வந்தோம். அவர்களின் ஊர்வலம் வரும் போது கடையை அடைக்க கூறினர். நாம் கடைகளை மூடிவிட்டோம். அவர்கள் எமது பொருளாதாரத்தை முழுமையாக அழித்துவிட்டனர். ஊரின் வியாபாரிகள் பலரினதும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. நஷ்டஈடு தருவதாக வாக்களித்துச் செல்கின்றனர். நாம் இன்னுமே பதற்றத்துடன் வாழ்ந்து வருகின்றோம்.’

17 வருட உழைப்பு முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாகவும், இவ்வாறானதொரு நிலைமைக்கு தனது வியாபாரத்தை கொண்டுவர மேலும் 17 அல்லது 20 வருடங்களை செலவழிக்கவேண்டியேற்படும் என வியாபாரி முஹம்மத் மலிக் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கும்போது, ‘செவ்வாயன்று 6ஆம் திகதி இரவு 11மணிக்கு எனது வியாபார நிலையத்திற்கு தீவைக்கப்பட்டுள்ளதாக தொலைபேசி அழைப்பொன்று வந்தது. ஊரார் தீயணைக்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். வாகன உதிரிப்பாகங்கள் அனைத்துமே தீக்கிரையாகியுள்ளன. கடையின் 95 வீதமான பொருட்கள் தீக்கிரையான பின்னரே தீயணைப்புப் படையினர் தலத்தை வந்தடைந்துள்ளனர்.

_DSC0153

ஒரு கோடிக்கு அதிகமான பொருட்கள் அழிந்துபோயுள்ளன. எனது 17 வருட உழைப்பு சில நிமிடங்களில் அழிக்கப்பட்டுள்ளது. இஸ்லாத்திற்கு முரணான காரணத்தால் எவ்வித காப்புறுதிகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. அமைச்சர் றவூப் ஹக்கீம் மடவளையில் தங்கியிருந்து நிலைமைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்துக்கொண்டிருந்தார். எனது வியாபார நிலையம் எரிக்கப்பட்டபோதும், நான் ஸ்தலத்திற்கு வரமுன்னர் அமைச்சரவர்கள் இங்கு வந்து தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்தார்.’

திகன இனவாத சம்பவத்தின் கோர நிகழ்வாக பதிவாகியிருந்தது மஸ்ஜித் லாபிர் பள்ளிவாசலுக்கு அருகில் உள்ள வீட்டில் உயிரிழந்திருந்த 24 வயதுமிக்க அப்துல் பாசித்தின் சம்பவமே திகன இனவாத அட்டூலியத்தின் உச்சமாகும். நாம் அப்துல் பாசித்தின் தந்தையை சந்தித்தோம். விடயங்கள் குறித்து பேசினோம். எமது ஸலாத்திற்கு பதில் கூறிய அவரது வாயிலிருந்து அழுகையைத் தவிர வேறேதும் வெளிப்படவில்லை. அப்துல் பாசித்தின் சகோதரன் பாஸில் மௌலவி எங்களுடன் உரையாட ஆரம்பித்தார்.

சம்பவம் குறித்து பாஸில் மௌலவி தெரிவித்ததாவது,
‘இது மிகவும் கவலைக்குரிய சம்பவமாகும். எமது தந்தை ஓர் இருதய நோயாளி. தம்பியின் மரணம் அவரை மேலும் பலவீனப்படுத்தியுள்ளது. சம்பவம் நடைபெறும் போது, வயோதிபர்களான எம் தாய், தந்தை மற்றும் அப்துல் பாசித் ஆகியோர் வீட்டினுள்ளே இருந்துள்ளனர். இனவாதிகள் எமது வீட்டு முன்கதவை உடைத்து வீட்டிற்கு தீவைத்துள்ளனர். வீட்டின் பின்புறமாக வெளியேற வாயில்கள் இல்லை. வீட்டிற்குப் பின்னால் தோட்டத்தில் இருந்த மற்றுமோர் சகோதரன் இவர்களை காப்பாற்ற, வீட்டு பின்பக்க கூரையை உடைத்துள்ளார். தாய், தந்தையர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். தீக்காயங்களுக்கு உள்ளான சகோதரன், அப்துல் பாசித் வீட்டினுள் அகப்பட்டுள்ள விடயத்தை பாதுகாப்பு தரப்பினரிடம் கூறியுள்ளார். எனினும் அப்துல் பாசித்தை மீட்க முடியாது போயுள்ளது. தீக்காயங்களுக்கு உள்ளான சகோதரன் கண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். அவரது இரண்டு கைகள், கால்களில் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவர் இந்த திடீர் சம்பவம் மற்றும் தம்பியின் மரணத்தால் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார்.

அருகாமையில் உள்ள வீடுகள் தாக்கப்படுகின்றது. வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டுள்ளது. என் வீட்டு கதவையும் உடைக்கிறார்கள் என்பதே அப்துல் பாசித் இவ்வுலகத்தில் பேசிய கடைசி வார்த்தைகள்.

இப்பிரதேசத்திற்கு வந்த பிரதமர் எம் வீட்டிற்கு வரவில்லை. நாம் அவர்களிடம் பொருளாதாரத்தை கேட்கவில்லை. விரக்திடைந்துள்ள எம் பெற்றோருக்கு ஆறுதலையும், நீதியையும் நிலைநாட்டுங்கள் என்றே கேட்கின்றோம்- என்றார்.’

முஸ்லிம் இளைஞர்கள் சிலரின் தாக்குதலால் 42 வயதான சாரதி குமாரசிங்கவின் மரணத்தை தொடர்ந்தே கண்டியில் இனவாத தாக்குதல்கள் ஆரம்பித்தன. இந்த சம்பவங்களால் உயிரிழந்த இருவருமே இன நல்லிணக்கத்துக்கு முன்மாதிரியாக இருந்துள்ளார்கள். அப்துல் பாசித் நல்லிணக்கம் தேசப்பற்று போன்ற விடயங்களில் அதிக கரிசனை கொண்டவர் என்பதை அவரது முகநூலைப் பார்த்த சிங்களவர்களும் புரிந்துகொண்டனர்.

அதேபோன்று, குமாரசிங்கவும் முஸ்லிம்களுடன், பள்ளிவாசல் நடவடிக்கைகளுடன் இணக்கமாக செயற்பட்ட ஒருவர் என பல முஸ்லிம்களும் சான்றுபகர்ந்தனர். மனிதாபிமானத்தை மீறிய இனவாதம் அப்பாவிகள் இருவரது உயிரையே காவுகொண்டுள்ளது.

சம்பவம் குறித்து உயிரிழந்த குமாரசிங்கவின் தந்தை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது,
‘எனது மகன் உயிரிழந்துவிட்டார். சட்டத்தின் மூலம் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. இப்போது நடக்கின்றவைகளை பார்த்து கவலையடைகின்றோம். மகன் முஸ்லிம்களுடன் நெருக்கமான உறவை வைத்திருந்தார். மகனின் மரணத்தால் இவ்வளவு பிரச்சினைகள் நடைபெறுமென்று கனவிலும் நினைத்திருக்கவில்லை. இவ்வாறான இனவாத நடவடிக்கைள் நிறுத்தப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்.’

நாம் கெங்கல்லை பகுதியில் உள்ள முஸ்லிம் வீடொன்றுக்குச் சென்றோம். வீட்டின் வரவேற்பறையில் பல பாத்திரங்களிலும் நீர் நிரப்பி வைத்திருந்தனர். இவ்வாறு நீர் நிரப்பி வைத்திருப்பது ஏன்? என்று நாம் வீட்டுத் தலைவரைக் கேட்க முன்னரே அவர் கதைக்க ஆரம்பித்தார்.

‘நேற்றும் (வெள்ளிக்கிழமை-9) வீட்டுப் பகுதிக்கு நால்வர் வந்தனர். நாம் அவர்களை விரட்ட முற்படும்போது பொலிஸார் எம்மை விரட்டிவிட்டனர். நேற்றிரவும் வீடுகளைக் கொளுத்துவார்களோ! என்ற பயத்திலேயே இருந்தோம். அன்றும் வீடுகளை கொளுத்த முன்னர் குழாய் நீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டிருந்தன. வீட்டைக் கொளுத்தினால் விரைவில் அணைத்துவிடவே இவ்வாறு பாத்திரங்களில் நீர் சேகரித்து வைத்துள்ளோம்’ என்று அவர் கூறி முடிக்க, மனைவியின் கண்களில் இருந்து கண்ணீர் கசித்ததை அவதானித்தோம்.

கட்டுகஸ்தோட்டை எந்தருதென்னை கிராமத்தில் 48 வீடுகளும் 2 பள்ளிவாசல்களும் சேதமாக்கப்பட்டுள்ளன. 350 பேரளவில் பாடசாலையில் தங்கவைக்கப்பட்டிருந்த நிலையில் அவர்கள் வீடுகளை நோக்கிச் சென்றுள்ளனர்.

அவர்களின் வீடுகளின் கதவுகள் முற்றாக சேதமடைந்துள்ள நிலையில் பாதுகாப்பான தங்குமிடமின்றி தவிக்கின்றனர். இன, மத வெறி பிடித்த சிங்கள பௌத்தர்களே இந்த தாக்குதல்களை முன்னெடுத்துள்ளனர். வெளிப் பிரதேசங்களில் இருந்து வந்தவர்களே தாக்குதல்களை முன்னெடுத்ததாகவும் அதிகமானோர் தெரிவித்தனர்.

பிரதேசத்தில் இனவாதிகளை ஆதரிப்போர் முஸ்லிம் வீடு, கடைகளை அடையாளம் காட்டியுள்ளனர். இதேநேரம், முஸ்லிம்களை பாதுகாத்த, வீடுகளில் தங்கவைத்த எத்தனையோ சிங்கள பௌத்த நல்லுள்ளங்களையும் நாம் சந்திக்க தவறவில்லை. அவர்கள் மீது இனவாதிகளின் மோசமான பார்வை திரும்பக் கூடாது என்பதற்காக அவர்களின் விபரங்கள் இங்கு வெளியிடப்படவில்லை.

இலங்கையின் கண்டி உட்பட பல பிரதேசங்களிலும் மேற்கொள்ளப்பட்டுள்ள தாக்குதல்கள் திட்டமிட்ட அடிப்படையில் நடத்தப்பட்டிருப்பதை சாதாரண ஒருவருக்கும் புரிந்துகொள்ள முடியும். பள்ளிவாசல்களை தீக்கிரையாக்க பெரிய லொரி டயர்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. வீடுகளையும் வியாபாரஸ்தளங்களையும் விரைவாக தீ வைப்பதற்கு பைகளில் மரத்தூள் கொண்டுவரப்பட்டுள்ளன. அவற்றில் எஞ்சியவைகள் பாதையில் சிதறிக் கிடப்பதை நாம் கண்டுகொண்டோம். ஏற்கனவே தயாரித்து வைக்கப்பட்டிருந்த 24க்கு மேற்பட்ட பெற்றோல் குண்டுகளையும் பாதுகாப்பு படையினர் மீட்டுள்ளனர்.

அண்மையில் தாக்குதல்களுக்காக பயன்படுத்தப்பட்டுள்ள அனைத்து பெற்றோல் குண்டுகளும் ஒரே வகையைச் சேர்ந்தவை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இவை அனைத்தும் மேற்படி இனவெறி தாக்குதல்கள் முஸ்லிம்களையும், அவர்களின் பொருளாதாரத்தையும் இலக்குவைத்து, மேலும் சில அரசியல் இலாபங்களை அடைந்துகொள்வதற்காக பெரியதோர் குழு பின்னணியில் இருந்து திட்டமிட்டு அரங்கேற்றியுள்ளதையே நிரூபிக்கின்றன.

நல்லாட்சி என்று கூறிக்கொண்டு வந்த அரசாங்கத்தில் இனவாதத்தை ஆதரிக்காத அனைவருமே நம்பிக்கையிழந்துள்ளனர். அளுத்கமைக்கு ஆணைக்குழு அமைத்து, இனவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதாகக் கூறிக்கொண்டு வந்தவர்கள் மேலும் பல ஆணைக்குழுக்களை அமைக்கும் தேவையை ஏற்படுத்திவிட்டனர். இலங்கையில் பல சம்பவங்களுக்கும் ஆணைக்குழுக்கள் நியமிக்கப்படுவதும், நியமிப்பதாக வாக்குறுதியளிப்பதும் வேடிக்கையாகிவிட்டது.

வாக்கு வங்கிகளை நிரப்பிக்கொள்வதற்காக பிணைமுறி மற்றும் பாரிய நிதி மோசடி ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை போட்டிபோட்டுக்கொண்டு வெளியிட்ட அரசாங்கம், தேர்தல் முடிந்ததும் சிபாரிசுகளை செயற்படுத்துவது குறித்த சிந்தனையே இல்லாதிருக்கின்றது.

அதுபோன்றல்லாமல், ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமித்து, அண்மைக்கால இனவாத சம்பவங்கள் அனைத்தையும் ஆராய்ந்து இனவாதத்திற்கு மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும் ‘வத பெஹெத்’ வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றோம். (ஸ)

– ஆதில் அலி சப்ரி –

One comment

  1. U do good job

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>