நனவாகும் ஹுமைதின் கனவு (Photos)


Screen Shot 2018-04-02 at 11.04.39 AM

மகரகம அபேக்ஷா வைத்தியசாலைக்கு புற்றுநோய் எதிர்ப்பு அணி நாட்டு மக்களின் உதவியுடன் கொள்வனவு செய்த சீரீ பெட் ஸ்கேனர் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி ஞாயிற்றுக் கிழமை நேற்று பொதுமக்கள் பாவனைக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

புற்றுநோய் எதிர்ப்பு அணி மற்றும் பல்வேறு துறைகளைச் சார்ந்தோர், முப்படையினர் உட்பட 5000 க்கு மேற்பட்ட மூவின பொது மக்கள் வெள்ளவத்தை ரொக்சி சினிமா அரங்கு அருகாமையில் இருந்து பாத யாத்திரையில் மகரகம அபேக்ஷா வைத்தியசாலைக்குச் சென்ற பின்னரே, சீரீ பெட் ஸ்கேனரை கையளிக்கும் நிகழ்வு நடைபெற்றது. காலை 7.30மணி முதல் பாத யாத்திரையாக சென்று காலை 10.30இல் இருந்து கையளிக்கும் நிகழ்வு ஆரம்பமானது.

200 மில்லியன்கள் பெருமதியான சீரீ பெட் ஸ்கேனரை கொள்வனவு செய்ய கலாநிதி எம்.எஸ்.எச்.முஹம்மத் தலைமையிலான புற்றுநோய் எதிர்ப்பு அணி திட்டமிட்டு, 90 நாட்களில் 252மில்லியன்களுக்கு அதிகமான நிதி திரட்டப்பட்டது. இலங்கை மக்கள் 20 ரூபா தொடக்கம் 30 மில்லியன் வரை தனிப்பட்ட ரீதியிலும், குழுக்களாகவும் இணைந்து நிதியுதவிகளை வழங்கியிருந்தனர்.

கொழும்புக்கு அண்மையில் சுமார் 17 ஏக்கர் நிலப் பரப்பில் அமைந்துள்ள, இலங்கையர்கள் பெற்றுள்ள மிகப் பெரும் வளமே மஹரகம புற்றுநோய் வைத்தியசாலை. அங்கு சிரேஷ்ட புற்றுநோய் வைத்திய நிபுணர்கள் 300பேரும் தியாக மனம் படைத்த தாதியர்கள் பலரும் பணியாற்றி வருகின்றனர். உலகிலேயே புற்றுநோய்க்கான மருந்துகள்தான் விலை உயர்ந்தவை. எனினும் எமது அரசாங்கம் புற்றுநோயாளர்களுக்கு தரமான, மருத்துவ முறைகளையும் மருந்துகளையும் வழங்கி சிகிச்சையளிக்கின்றது. சிலருக்கு வழங்கும் ஓர் ஊசிமருந்தின் பெறுமதி 2 இலட்சங்களாகும். ஒரு நோயாளிக்கு சிகிச்சையளிப்பதற்காக 80 இலட்சம் தொடக்கம் 3 கோடி ரூபாய்கள் வரை அரசாங்கம் செலவுசெய்கின்றது.

கதீஜா பவுன்டேசன் மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு அணியின் தலைவர் கலாநிதி எம்.எஸ்.எச்.முஹம்மதின் மகன் ஹுமைத் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதில் இருந்தே, இலங்கையில் புற்றுநோய்க்கெதிராக போராட ஆரம்பித்தார். பெட் ஸ்கேனருக்கான நிதி திரட்டப்பட்டு, கொள்வனவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கையில் ஹுமைட் இவ்வுலகைவிட்டுப் பிரிந்தது முழு நாட்டையுமே சோகத்தில் ஆழ்த்தியது.

அபேக்ஷா வைத்தியசாலை முகங்கொடுத்துவந்த மிக முக்கியமான பிரச்சினைதான் புற்றுநோயை துல்லியமாக இனங்காண்பதற்கான பெட் ஸ்கேனர் ஒன்று இல்லாமை. அங்கு இருந்த ஸ்கேனர் 17 வீதமான புற்றுநோய் அறிகுறிகளை மாத்திரமே இனங்காட்டக்கூடியதாக இருந்தது.

புதிதாக கொள்வனவு செய்யப்பட்டுள்ள பெட் ஸ்கேனர், புற்று நோயைக் கண்டுபிடித்து, அது என்ன கட்டத்தில் இருக்கின்றது, உடலில் புற்று நோ பரவியுள்ளதா? இல்லையா? என்பதை நிர்ணயிக்கும். உடலின் எப்பகுதியில் புற்று நோ முதலில் உருவாகியது என்பதைக் கண்டுபிடிக்கும். சிகிச்சை முறை குறித்து முடிவெடுக்கும். சிகிச்சையின் பின்னர், புற்றுநோ இல்லாமலாக்கப்பட்டுள்ளதா? என்பதை கண்காணிக்கும். மூளையிலுள்ள அசாதாரண நிலைகள் குறித்து கணிப்பிடும். முக்கியமாக இந்த இயந்திரம் மூலம் புற்றுநோய்க்கான வாய்ப்பை 98 சதவீதம் வரை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும் என்பது சிறப்பம்சமாகும்.

புள்ளிவிபரங்களுக்கமைய இலங்கையில் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை தாண்டிவிட்டது. கடந்த 2017ஆம் ஆண்டு மாத்திரம் 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட புற்றுநோயாளர்கள் புதிதாக இனங்காணப்பட்டுள்ளனர். இலங்கையில் ஒவ்வொரு 10 மரணத்திலும் 4 அல்லது 5 மரணங்கள் புற்றுநோயால் என்பது பாரதூரமான விடயமாகும். 2020ஆம் ஆண்டாகும் போது உயிர்களை காவுகொள்ளும் முதல் தர நோயாக புற்றுநோய் மாறும் அபாயமும் உள்ளது. இதற்கெதிராக புற்றுநோய் எதிர்ப்பு அணி போராடி வருகின்றது. 158 அங்கத்தவர்களைக் கொண்ட அவ்வணியில் மருத்துவர்கள், துறைசார்ந்தோர், வர்த்தகர்கள் ஊடகவியலாளர்கள் என பலரும் அங்கத்துவம் பெற்றுள்ளனர். அவர்கள் ஒவ்வொருவரும் தம்மால் இயன்ற துறையில் புற்றுநோயை வெற்றிகொள்வதற்காக போராடி வருகின்றனர். புற்றுநோய் எதிர்ப்பு, ஒழிப்பு பணிக்கு இலங்கையர்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.
2022ஆம் ஆண்டளவில் தெற்காசியாவின் முதற்தர புற்றுநோய் வைத்தியசாலையாக மகரகம அபேக்ஷாவை மாற்றுவதே புற்றுநோய் எதிர்ப்பு அணியின் திட்டம். அதன்மூலமாக மாத்திரமே கொடிய புற்றுநோயை வெற்றிகொள்ள முடியும். மகரகம வைத்தியசாலைக்கு மேலும் எம்.ஆர்.ஐ ஸ்கேனர், மரபணு ஆய்வகம், உடல் உள்நோக்கி கருவி, கலோனொஸ்கொபி இயந்திரம், ப்ரொன்சொப்கொடி இயந்திரம், அல்ட்ரா சவுன்ட் ஸ்கேனர் போன்ற பல தேவைகளும் பூர்த்திசெய்யப்படவேண்டியிருக்கின்றன.

2016ஆம் ஆண்டு இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டபோது இந்த திட்டம் வெற்றியளிக்கும் என்ற நம்பிக்கை உண்டா? என்று புற்றுநோய் எதிர்ப்பு அணியின் தலைவர் கலாநிதி எம்.எஸ்.எச்.முஹம்மதிடம் கேட்டபோது, ‘ இறைவனின் உதவியை எதிர்பார்த்து, நல்ல நோக்கத்தோடு பயணத்தை ஆரம்பித்துள்ளோம். இன, மத, மொழி வேறுபாடுகளைக் கடந்து இலங்கையில் செயலாற்றிவரும் முதலாவது பெரும் திட்டமாகும். இது வெற்றியளிக்கும் போது வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும்’ என்றார்.

கலாநிதி எம்.எஸ்.எச்.முஹம்மத் கூற்று மற்றும் அவரது மகன் காலஞ்சென்ற ஹுமைதின் கனவுகள் இலங்கை வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும் தருணமே இது. (ஸ)

– ஆதில் அலி சப்ரி –

07 06 05 04 03 02 01

Screen Shot 2018-04-02 at 11.05.04 AM Screen Shot 2018-04-02 at 11.04.57 AM Screen Shot 2018-04-02 at 11.04.46 AM Screen Shot 2018-04-02 at 11.04.39 AM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>