‘ஐக்கியமே பாக்கியம்’ – கல்முனை சாஹிராவின் மாபெரும் நடைபவனி


Kalmunai Zahira college

கல்முனை சாஹிராக் கல்லூரியில் ‘ஐக்கியமே பாக்கியம்’ எனும் தொனிப்பொருளில் எதிர்வரும் 14ஆம் திகதி சனிக்கிழமை காலை 8.00 மணிமுதல் நடைபவனி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கல்முனை சாஹிராவின் வரலாற்றில் முதற்தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இவ் விழிப்புணர்வு நடைபவனி, கல்லூரியில் இருந்து காலை 8.00 மணிக்கு ஆரம்பமாகி சாய்ந்தமருது கல்யாண வீதி ஊடாக மாளிகைக்காடு சந்திவரை சென்று பின்பு அங்கிருந்து பிரதான வழி ஊடாக கல்முனை சுற்றுவரை சென்று பிறகு அங்கிருந்து கல்முனை சாஹிராக் கல்லூரியை வந்தடையும்.

கல்லூரியின் அதிபர் எம். எஸ். முஹம்மத் அயராத முயற்சி செய்து ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்வில், பிரதியமைச்சர் எச். எம். எம். ஹரீஸ் உட்பட இம்முறை உள்ளூராட்சிமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்களது பூரண ஒத்துழைப்பை வழங்கவிருப்பதாக கல்லூரியின் அதிபர் எம். எஸ். முஹம்மத் தெரிவித்தார்.

மனக் கசப்பு மற்றும் வெறுப்புகளை மறந்து கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது முதல் இற்றை வரை கல்வி கற்ற, கற்றுக் கொண்டிருக்கின்ற மாணவர்கள், முன்னாள் அதிபர்கள், முன்னாள் – இந்நாள் ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், ஊர்ப்பிரமுகர்கள், வர்த்தகப்பிரமுகர்கள், உலமாக்கள் என பலதரப்பட்டோரும் இந்நிகழ்வில் தவறாது இணைந்து கொள்ளுமாறு அன்பான வேண்டுகோள் விடுப்பதாகவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வினூடாக பழைய மாணவர்களை ஒன்றுபடுத்தல், பாடசாலை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல், பழைய மாணவர்களைக் கொண்டு பாடசாலையின் அபிவிருத்திப் பணிகளுக்கு உதவிகளைப் பெறல் போன்ற செயற்பாடுகளை வலுப்படுத்தவே இந்நடைபவனி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடட் குழுவினர், பாண்ட் வாத்தியக் குழுவினர், சாரணியர், பொல்லடி, பாவா ரபான் குழுவினர் ஆகியோரின் நிகழ்ச்சிகள் இந்நடைபவனியில் இடம்பெறவுள்ளது.

இம்முறை க.பொ.த சாதாரண தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் இந்நிகழ்வில் விஷேடமாக இணைந்து கொள்கின்றனர்.

இந்நிகழ்வுக்காக T – சேட் அச்சிடப்பட்டுள்ளதுடன் அன்றைய தினம் அதற்கான விற்பனையும் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. (நு)

– எம். எஸ். எம். ஸாகிர் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>