மாணவர்களுக்கு ஏற்படும் அநீதிகள் குறித்து அதிகாரிகள் உடனடி கவனம் செலுத்த வேண்டும் – ஜனாதிபதி


maithripala sirisena

ஜனாதிபதி என்ற வகையில் தனக்கு வரும் கடிதங்கள், தொலைபேசி அழைப்புக்கள் மற்றும் சில கலந்துரையாடல்களின் போது தெரிவிக்கப்படும் விடயங்களுக்கேற்ப ஆசிரியர், மாணவர் தொடர்பு குறித்தும், ஆசிரியர்களின் மூலம் மாணவர்களுக்கு ஏற்படும் தொந்தரவுகள், அநீதிகள் குறித்தும் பல்வேறு தகவல்கள் கிடைக்கப்பெற்றிருப்பதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

இந்த நிலைமை குறித்து அதிகாரிகள் உடனடிக் கவனம் செலுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

இன்று (23) பிங்கிரிய வயம்ப தேசிய கல்வியியற் கல்லூரி விஞ்ஞான பீடத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

ஆசிரியர் தொழிலை ஒரு உன்னதமான பணியாக கருதிய அன்றைய யுகத்திற்கும் ஆசிரியர் தொழிலை தொழிலாக மட்டுமே கருதுகின்ற இன்றைய யுகத்திற்குமுள்ள வேறுபாட்டை விளக்கிய ஜனாதிபதி, ஆசிரியர் தொழில் என்பது தேசத்தை கட்டியெழுப்புகின்ற பொறுப்பு வழங்கப்பட்டுள்ள எந்தவொரு தொழிலுக்கும் இரண்டாம் பட்சமாக கருத முடியாத உன்னதமான தொழிலாகும் என்று தெரிவித்தார்.

இன்று ஆசிரியர் சேவையிலுள்ள 250,000க்கும் மேற்பட்டவர்களிடையே அந்த உன்னதமான தொழிலுக்கு பொருத்தமற்ற எட்டு அல்லது ஒன்பது வீதமானவர்கள் இருப்பதாக ஆய்வுகளின் மூலம் தெரியவந்திருப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, அது கல்வித் தகைமைகளுக்கேற்ற வகையில் அல்லாது தமது சேவையின் மீது இருக்கும் மதிப்பு, அர்ப்பணிப்பு மற்றும் திறன்கள் மீது காட்டும் பலவீனத்தின் அடிப்படையிலாகும் என்று குறிப்பிட்டார்.

ஆசிரியர் தொழிலிலும் அரசாங்க சேவையிலும் அரசியல் துறையிலும் உள்ள இந்த குறைபாடுகளை நிவர்த்தி செய்து முன்னேற்றத்தை நோக்கி பயணிக்க வேண்டியது மிகவும் அவசியமாகும் என குறிப்பிட்ட ஜனாதிபதி, எந்தவொரு துறையினதும் அங்கீகாரமும் கௌரவமும் பாதுகாக்கப்படுவது அத்துறையிலிருக்கின்றவர்கள் சமூகத்திற்கு வழங்கும் பண்பாடு மற்றும் முன்மாதிரியின் மூலமேயாகும் என்றும் குறிப்பிட்டார்.

பிங்கிரிய வயம்ப தேசிய கல்வியியற் கல்லூரி விஞ்ஞான பீடத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள நீர் சுத்திகரிப்பு நிலையத்தை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதியின் தலைமையில் இடம்பெற்றது.

2018 ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி பிங்கிரிய தேவகிரி ரஜமகா விகாரையில் இடம்பெற்ற அரச வெசாக் விழாவில் பங்குபற்றுவதற்காக சென்ற ஜனாதிபதி, வயம்ப விஞ்ஞான பீடத்தின் விளையாட்டு மைதானத்தில் தரையிறங்கிய போது அம்மாணவர்கள் முன்வைத்த கோரிக்கைக்கு ஏற்ப இந்த நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு தேவையான நிதி ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரில் வழங்கப்பட்டதுடன், இலங்கை கடற்படையினரின் உதவியுடன் நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த வகையில் 2000ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட வயம்ப தேசிய கல்வியியற் கல்லூரி விஞ்ஞான பீடத்தில் ஆரம்பத்திலிருந்து இருந்துவந்த சுத்தமான குடிநீர் தேவைக்கான தீர்வு 20 வருடங்களின் பின்னர் அம்மாணவர்களுக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.

அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற நிகழ்வில் விஞ்ஞான பீடத்தில் திறமைகளை வெளிக்காட்டிய மாணவர்களுக்கு ஜனாதிபதியினால் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன. ஜனாதிபதிக்கும் விசேட நினைவுச் சின்னம் ஒன்று வழங்கி வைக்கப்பட்டது.

கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், வடமேல் மாகாண முதலமைச்சர் தர்மசிறி தஸநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, முன்னாள் பிரதியமைச்சரும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் இளைஞர் முன்னணியின் தலைவருமான சாந்த பண்டார, கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிறிமவன் ரணசிங்க ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். (நு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>