தேசிய பிரச்சினையாக மாறியுள்ள உள்வீட்டுப் பிரச்சினை !


Maithre6

நாட்டின் அரசியல் நிலவரத்தை தீர்மானிக்கும் சக்தியாக ஊடகம் காணப்படுகின்றது. மக்கள் எதனை அரசியலாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் ஊடகத்தினால் தான் தீர்மானிக்கப்படுகின்றது. மக்களின் .உண்மையான பிரச்சினையை மூடி மறைப்பதிலும், வெளிக்கொண்டுவருவதிலும் ஊடகத்தின் பங்கு அலாதியானது என்பதை இன்று அறியாதவர்கள் எவரும் இல்லை.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று முன்தினம் (30) ஆற்றிய உரை ஊடகங்களில் காட்டுத் தீ போன்று பரவியது. அடுத்த நாள் (31) அரசியல் களத்தில் முக்கிய பேசு பொருளாக ஜனாதிபதியின் உரை காணப்பட்டது. நாட்டின் அரசியல் போக்கை திசை திருப்பும் ஒரு விடயமாக ஜனாதிபதியின் உரை அமைந்திருந்ததை அரசியல் கண்ணோட்டம் கொண்ட எவராலும் இலகுவாக விளங்க முடிந்திருக்கும்.

ஜனாதிபதியின் உரை குறித்து பல தரப்பினரும் பல்வேறு விதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் காணப்படும் அதிகாரப் போட்டி நிலைமை, இன்றைய அரசியலில் தேசிய பிரச்சினையாக மாறியுள்ளமை அனைவராலும் விமர்ஷிக்கப்படும் ஒன்றாக மாறியுள்ளது.

நாட்டின் அபிவிருத்தி, நாட்டு மக்களின் பிரச்சினைகள் என்பது எங்கோ ஒரு மூலையில் மறைந்து ஒழிந்து கிடக்கின்றன. எழுந்து நின்று எட்டிப் பார்க்கக் கூட முடியாத அளவுக்கு அவை பலவீனப்படுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் உரையும் அரசாங்கத்தின் கூட்டணி சேர்ந்துள்ள இரு கட்சிக்குள் நடைபெறும் அதிகாரப் போட்டியை மையமாகவே கொண்டிருந்தன. அரசாங்கத்தின் பங்காளியான ஐ.தே.க. புரிந்த தவறுகள் பலவற்றை ஜனாதிபதி தனது உரையில் சுட்டிக்காட்டினார்.

  1. தான் பதவியேற்றவுடன் செய்யப்பட வேண்டி இருந்த முக்கிய பணி, பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தல் ஒன்றை நடாத்துவதாகும். இதற்குத் தடையாக ஐ.தே.க. அறிமுகப்படுத்திய 100 நாள் வேலைத்திட்டம் காணப்பட்டது. இந்த வேலைத்திட்டம் மடத்தனமான ஒரு நடவடிக்கை.
  2. பொது வேட்பாளரை ஜனாதிபதியாக்கி, மத்திய வங்கியைக் கொள்ளையடிக்குமாறு சோபித்த தேரர் சொல்லவில்லை.
  3. கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வைக்க ஐ.தே.க.யில் யாரும் இல்லாததனாலேயே தன்னைப் பொது வேட்பாளராக போட்டியிட வைத்தனர்.
  4. ஜனாதிபதியானவுடன் அறிமுகம் செய்யப்பட்ட 100 நாள் வேலைத்திட்டம் குறித்து தான் எதுவும் அறிந்திருக்க வில்லை.
  5. அரச வங்கிகளின் நிதியை தனியார் வங்கிக்கு மாற்ற ஐ.தே.க. முயற்சித்தது. அதற்கு தான் இடமளிக்க வில்லை.
  6. நாட்டின் கலாசாரத்துக்குப் பொருத்தமில்லாத பல விடயங்களை அறிமுகம் செய்ய ஐ.தே.க. முயற்சித்தது. அதற்கும் தான் இடமளிக்க வில்லை.
  7. தான் ஜனாதிபதியானவுடன் 47 ஆசனங்களுடன் பாராளுமன்றத்தில் காணப்பட்ட ஐ.தே.க. தலைவரை பிரதமராக நியமித்தேன்.
  8. ஸ்ரீ ல.சு.க.யின் தலைமைப் பதவியை நான் பொறுப்பேற்ற போது என்னை ஐ.தே.க.யினர் விமர்ஷித்தனர். அவ்வாறு தான் பொறுப்பேற்காதிருந்திருந்தால், அரசியல் யாப்பு மாற்றத்தை செய்திருக்க முடியாது. (19 ஆவது திருத்தச் சட்டம்)

இந்த அரசாங்கத்துக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான பனிப்போர் அண்மையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை முதல் புகைந்து புகைந்து தீ வெளியே வந்தவண்ணம் உள்ளது.

இருப்பினும், ஜனாதிபதியின் உரைக்கு அடுத்த நாள் (31) கூடிய ஐ.தே.க.யின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் பிரதமர் தமது கட்சி உறுப்பினர்களுக்கு தெரிவித்திருந்த கருத்து அரசியல் மட்டத்தில் முக்கியமாக நோக்கப்பட்டது.

ஜனாதிபதியின் கருத்துக்கு எந்தவகையிலும் யாரும் பதிலளிக்கச் செல்ல வேண்டாம். தமது கட்சியின் அரசியல் தலைவர்கள் செய்ய வேண்டியது ஜனாதிபதிக்கு பதிலளிப்பது அல்ல, மக்களின் தேவைக்கு ஏற்ப பணியாற்றுவதாகும் எனவும் பிரதமர் தமது கட்சி உறுப்பினர்களுக்கு உத்தரவிட்டிருந்தார்.

ஜனாதிபதியின் உரை குறித்து பல தரப்பினரும் பல்வேறுபட்ட கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.

நாட்டில் அரசாங்கம் ஒன்று இல்லையென்பது தற்பொழுது தெளிவாக விளங்குவதாகவும், பொதுத் தேர்தல் ஒன்றை நடாத்தி தகுதியான அரசாங்கம் ஒன்றை அமைப்பதே இதற்கான ஒரே வழி எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியின் உரை குறித்து கேட்டதற்கு இவ்வாறு கூறியிருந்தார்.

ஜனாதிபதியின் உரையில் அரசாங்கத்தின் நிலைமை தெளிவாக விளங்குகின்றது. பிரதமர் ஒரு பக்கமும், ஜனாதிபதி இன்னுமொரு பக்கமும் உள்ள நிலையில் நாட்டைக் கொண்டு செல்ல முடியாது. இதுபோன்ற நிலையில் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது எனவும் மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டியிருந்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்பொழுது செய்ய வேண்டியுள்ள மிகச் சிறந்த நடவடிக்கை,  தேர்தல் ஒன்றை நடாத்தி எமக்கு பொருத்தமான ஒருவரை நியமித்துக் கொள்வதற்கான உரிமையைப் பெற்றுத் தருவதாகும் என ஜனாதிபதியின் உரைக்கு அல்லே குணவங்ச தேரர் விளக்கம் கொடுத்திருந்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எமது கிராமத்து கவிதை வரிகளின் சுவையை உணர்ந்த ஒருவர் எனவும், தாமரை இலையில் சோறு சாப்பிட முடியுமான ஒருவர் எனவும், குளத்தில் குளிக்கக் கூடிய ஒருவர் எனவும், காவியுடையின் வாசம் அறிந்தவர் எனவும் தேரர் வர்ணித்தார்.

இப்படியான ஒருவர் போய், முட்கரண்டியால் பாற்சோறு  சாப்பிடுகின்ற, “இஸ்ட்ரோ”வைப் பயன்படுத்தி இளநீர் குடிக்கின்ற, கிராமத்துக் கவிதைகளுக்குப் பதிலாக மைக்கல் ஜெக்ஸனின் பாடல்களைக் கேட்கின்ற பொருத்தமில்லாத குழுவுடன் சேர்ந்ததன் விளைவுதான் ஜனாதிபதியின் இத்தகைய உரைக்கான காரணம் எனவும் தேரர் சுட்டிக்காட்டியிருந்தார்.

மறைந்த சோபித்த தேரரின் இறுதிக் கிரியை நிகழ்வின் போது ஆற்றிய உரையில் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குவதாக சபதமிட்ட ஜனாதிபதி, அவரது நினைவு நிகழ்வில் அது தொடர்பில் ஒரு வார்த்தையையேனும் பேசவில்லையென பேராசிரியர் சரத் விஜேசூரிய தனது விமர்ஷனத்தை முன்வைத்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு தயார் இல்லை. அவர் அதில் தொடர்ந்தும் நிலைத்திருப்பதற்கே எதிர்பார்ப்பதாகவும் பேராசிரியர் மேலும் குற்றம்சாட்டியுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தை சிறுபான்மை மக்கள் இணைந்து அமைப்பதற்கு பல காரணங்கள் இருந்தன என்பதை இந்நாட்டு மக்கள் அனைவரும் நன்கு அறிந்தே வைத்துள்ளனர். சிறுபான்மை மக்கள் எதிர் நோக்கியுள்ள தேசிய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் எல்லோரிடத்திலும் இருந்தது. அந்தக் கனவுகள் இன்றைய அரசியல் நிலைமைகளைப் பார்க்கும் போது காணல் நீராக மாறிக் கொண்டு செல்வதாகவே உணர முடிகின்றது.

நாட்டில் அரசாங்கத்தை அமைப்பதும், மக்கள் தமது வாக்குகளை அதற்காக வழங்குவதும் நாட்டை அபிவிருத்திப் பாதையில் செலுத்துவதற்கும், மக்களின் பிரச்சினைகளுக்கு விடிவு கிடைப்பதற்குமேயாகும். ஆட்சிக் காலத்தை கட்சிப் பிரச்சினைகளில் கழித்துவிட்டு, காலம் முடியும் போது காரணம் கூறி வாக்குக் கேட்டு வருவதற்கு அரசியல்வாதிகள் எண்ணிவிடக் கூடாது.

தமது பணியை மறந்து, உட்கட்சிப் பிரச்சினையை மக்கள் மேடையில் போட்டு, தீர்வை எதிர்பார்த்த மக்களுக்கு தொடர்ந்தும் நிலாச் சோறு ஊட்டுவதற்கு அரசியல் தலைவர்கள் முயற்சிக்கக் ஊடாது என்பது சிறுபான்மை மக்களின் உளக் குமுறல்களாகும்.

  • கஹட்டோவிட்ட முஹிடீன் இஸ்லாஹி M. A. (Cey)


 


 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>