இலங்கையில் இறைச்சிக் கடை ஒரு சாபக்கேடா? : நியாயங்கள்


download (2)

இஸ்லாம் சாந்தி, சமாதானத்தைப் போதிக்கும் ஒரு நேர்த்தியான மார்க்கமாகும். இது தெய்வீக மார்க்கம் என்பதனால், இதன் வழிகாட்டல்கள் அனைத்தும் மனித வாழ்க்கைக்குப் பொருத்தமானதாக அமைந்துள்ளன. இஸ்லாம் காட்டித் தரும் சட்டங்கள் மற்றும் ஓழுங்கு முறைகள் என்பவற்றில் மனித நலன்களே அடிப்படையாக அமைந்துள்ளன.

முக்காலத்தைப் பற்றிய அறிவுள்ள, பிரபஞ்சத்தையும், அதில் மனிதனையும்,  ஏனைய அனைத்து படைத்துப்படைப்புக்களையும் படைத்த அல்லாஹ்வால், இவ்வுலக வாழ்க்கை ஒழுங்கிற்காக முன்வைக்கப்படும் சட்டதிட்டங்கள் நிறைவானவையாகவே இருக்கும். அதில் எந்தவித குளர்படிகளும் இல்லை. இந்த சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில்தான் வாழ்க்கை இருக்கின்றது என்பது முஸ்லிம்களின் ஆழமான நம்பிக்கையாகும்.

இஸ்லாத்தின் இந்த இயல்பு தன்மைகள் காரணமாக இதனை ஆழ்ந்து ஆராய்கின்றவர்கள் இந்த புனித மார்க்கத்துக்குள் பிரவேசிப்பது தவிர்க்க முடியாத ஒன்றாக காணப்படுகின்றது. இஸ்லாத்தின் ஆரம்பம் முதல் அதன் வளர்ச்சியில் எந்தவொரு வீழ்ச்சியையும் காண முடியாதுள்ளது.

இந்த வளர்ச்சியில் பொறாமை கொண்டவர்கள் காழ்ப்புணர்ச்சி கொண்டு இஸ்லாத்தின் கொள்கைகளையும், நடைமுறைகளையும் தவறாக முன்வைத்தும், விமர்சித்தும் பிரச்சாரம் செய்து வருவதைக் காண்கின்றோம். இத்தகையவர்களின் விமர்சனத்துக்குள்ளாகும் சில விடயங்கள் உள்ளன. அவற்றுள் பலதாரமணம், பெண்கள் நிலை, குற்றமும் தண்டனையும், இஸ்லாமிய புனிதப் போர் முதலானவை குறிப்பிடத்தக்க அம்சங்களாகும்.

இவற்றின் பின்னால், இஸ்லாம் வைத்துள்ள நியாயங்களை ஆராய்ந்து பார்க்கும் எனவரும் மனச்சாட்சியுடன் எந்தவிமர்சனத்தையும் முன்வைக்க மாட்டார்கள். அவ்வாறு, அவர்களால் முன்வைக்கவும் முடியாது. ஏனெனில், இது நிறைவான அல்லாஹ்வின் தெய்வீக சட்டங்களாகும்.

நாம் இந்த நாட்டில் சிறுபான்மையாக வாழ்ந்து வரும் ஒரு சமூகம் ஆகும். இந்த நாட்டிலுள்ள பெரும்பான்மையினர், முஸ்லிம் சமூகத்துடன் பன்னெடுங்காலமாக மிக அன்னியோன்னியமாக ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். இந்த உறவை சகித்துக் கொள்ளாத சில இனவாதிகள் முஸ்லிம்கள் பற்றிய தவறான கருத்துக்களை பெரும்பான்மை சமூகத்தில் விதைத்து வருகின்றனர். சிலபோது, இவ்வாறு முஸ்லிம்கள் மீது சுமத்தப்படும் தவறான கருத்துக்களுக்கு, எமது சமூகமே சான்று பகர்ந்து கொண்டிருப்பது, அவர்களது வாதங்களை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது. இது எமது சமூகம் விடும் மாபெரும் தவறாகும். இதிலிருந்து நாம் விடுபட வேண்டும்.

இந்தவகையில் எம்மீது இனவாத அமைப்புக்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களுள் பிரதானமான ஒன்று, நாம் மிருக வதைசெய்பவர்கள் என்பதாகும். ஜீவகாரூன்யத்தைப் போதிக்க வந்த இந்த மார்க்கத்துக்கு இப்படியான ஒரு அவப்பெயர் ஏற்படுவதற்கு, எமது இந்நாட்டு முஸ்லிம்களின் நடத்தைகள் காரணமாக இருந்துள்ளன என்பது, எமது புத்திஜீவிகளினால் பல விதத்திலும் உணர்த்தப்பட்டு வரும் ஒரு முக்கிய அம்சமாகும்.

இந்தக் குற்றச்சாட்டை நாம் ஏன்? மாற்று வழிமுறையைக் கொண்டு அணுகக் ஊடாது என்பதை ஒரு முறை அனைவரும் சிந்திப்போம். மிருகவதைக்கு எதிரான ஒரு மதத்தைப் பின்பற்றும் பெரும்பான்மை பௌத்த சமூகமும், பசுவைக் கடவுளாக வழிபடும் இரண்டாவது பெரும்பான்மை சமூகமான இந்துக்களும் வாழும் இந்த நாட்டில், வாழும் நாம் மாடு அறுப்பதைப் பற்றிய மாற்றுத் தீர்மானங்களுக்கு ஏன் இன்னும் வராதுள்ளோம் ?

இஸ்லாம் மற்ற சமயத்தை மதிக்கச் சொல்லுகின்ற மார்க்கம். இஸ்லாம் அல்லாதவர்களுடன் புரிந்துணர்வுடன் வாழுகின்ற ஒழுங்குமுறையை முன்வைக்கின்ற மார்க்கம். இப்படியான புனிதமான கொள்கையைச் சுமந்த நாம் சகவாழ்வின் ஒரு நடவடிக்கையாகவாவது, மாடு அறுப்பதை ஏன் இந்நாட்டில் இன்னும் தவிர்ந்து கொள்ளாதிருக்கின்றோம்? இதில், பிடிவாதமாக இருப்பதற்கு என்ன நியாயம் இருக்கின்றது.

இஸ்லாம் உண்பதற்கு அனுமதித்த மாடு அல்லாத எத்தனையோ உணவு வகைகள் இருக்கின்றன. ஏன் நாம் எமது நாட்டின் சூழலைக் கருத்தில் கொண்டு இது குறித்து தீர்மானம் ஒன்றுக்கு வருவதற்க பின்வாங்குகின்றோம். இதனை நாம் ஏன் ஒரு நேர் சிந்தனையாக எடுத்துக் கொள்ளாதிருக்கின்றோம்.

நாம் இந்த மாட்டு இறைச்சி சாப்பிடுவதற்காக இழப்பவைகள் அதிகமாகவே உள்ளன. அதில், பிரதானமானது எமது மார்க்கம் முன்வைக்கும் ஜீவகாரூன்ய சிந்தனையை அவர்களின் பார்வையில் கொச்சைப்படுத்துகின்றோம்.

இறைச்சிக் கடைக்கான அனுமதிப் பத்திரத்தைப் பெறுவதற்கு வருடத்துக்கு பல இலட்சம் ரூபாவை அரசாங்கத்துக்கு வரியாக செலுத்துகின்றோம். இந்த பணம் இறைச்சியின் விலையோடு சேர்த்து எம்மிடமே உரிஞ்சப்படுகின்றது.

அறுப்பதற்கான மாடுகளை எடுத்துச் செல்வதில் பேணப்படும் ஒழுங்கு மீறல்கள் காரணமாக நஷ்ட ஈடு செலுத்திக் கொண்டும், குறுக்கு வழியில் தேவையற்ற செலவுகளை சுமந்து கொண்டும், சிலபோது சமூகத்தின் அடையாளப்படுத்தலுடன் குற்றவாளிக் கூண்டில் இருத்தப்பட்டும், கஷ்டப்படுகின்றோம். ஏன் வீண் சிரமத்தை ஏற்க வேண்டும்?

இவ்வளவு இழப்புக்களையும் செய்து கொண்டு, நாம் ஏன் இந்நாட்டில் சில இனவாத சக்திகளினால் மாட்டிறைச்சிச் சமூகமாக இன்னும் கேவலப்பட வேண்டும்? அவர்களுக்கு இதன் உண்மைத் தன்மையை விளக்குவதற்கு எடுக்கும் முயற்சியை ஒரு தஃவா முயற்சி என்று கூறுவது எவ்வளவு தூரம் பொருத்தமானது? இந்நாட்டில் செய்யப்பட வேண்டியுள்ள எத்தனையோ கருமங்களுடன் ஒப்பிடும்போது இதனை முன்னுரிமைப்படுத்த முடிகின்றதா?

download

இன்று எமது நாட்டில் மாடு அறுப்புக்கு எதிராக அங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. உண்ணாவிரதப் போராட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றன. இது குறிப்பாக, மாடு அறுக்கின்ற முஸ்லிம் சமூகத்தை நோக்கி முன்னெடுக்கப்படுகின்ற ஒரு எதிர்ப்பு நடவடிக்கையாகவே நோக்கப்படுகின்றது.

IMG_5155

எமது நாட்டில் இறைச்சிக்கடையை இல்லாமல் செய்வதை ஒரு பெரும் போராட்டமாக கருதும் குழுவினர் உள்ளனர். இதற்கு சிறந்த உதாரணமாக அண்மையில் அம்பிலிப்பிட்டிய நகரில் நடைபெற்ற சம்பவத்தை குறிப்பிடுவது பொருத்தமானது.

கடந்த ஏழு வருடங்களாக மாட்டு இறைச்சி கடைக்கு அனுமதி வழங்காதிருந்த அம்பிலிப்பிட்டிய நகர சபை கடந்த மே 18 ஆம் திகதி நகர சபைக் கூட்டத்தில் வைத்து மீன் வியாபாரக் கடை ஒன்றுக்கு மாட்டிறைச்சியை பொதி செய்து விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கியுள்ளமையை ஜாதிக ஹெல உறுமயவின் முன்னாள் தலைவர் ஓமல்பே சோபித்த தேரர் வன்மையாக கண்டித்திருந்தார்.

ஜாதிக ஹெல உறுமய தேரர் ஒருவர் அங்கு, நகர சபையின் தலைவராக இருக்கும் காலத்தில் மாட்டிறைச்சிக் கடை ஏலத்தில் விடுவதை நிறுத்தியிருந்தார். இது சபையின் பெரும்பான்மைப் பலத்துடன் பெற்ற தீர்மானம். அம்பிலிப்பிட்டிய நகர சபைப் பிரதேசத்தில் 99 வீதமானோர் பௌத்தர்கள். விவசாயம் செய்து அதன் மூலம் வாழும் மக்கள். பௌத்த விவசாயிகளும், இந்து மதத்தினரும் மாட்டிறைச்சி சாப்பிட மாட்டார்கள்.

அந்த அனுமதிப் பத்திரம் வழங்குவதனால் வருமானம் வரும் என்பதற்காக அனுமதிக்கத் தகாத ஒன்றுக்கு அனுமதி வழங்க முடியுமா? எனவும் தேரர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அண்மையில் நம் நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட பொருளாதார ஒழிப்பு நடவடிக்கையின் போது எமது சமூகத்தினர் பாதுகாப்பு கருதி குறிப்பிட்ட இடங்களுக்கு சுற்றுலா செல்வதை சித்திரைக் காலத்தில் தவிர்ந்து கொண்டோம். இதற்காக ஒரு முகப்படுத்தப்பட்ட முறையில் சமூகத்தின் இளைஞர்களும், உலமாக்களும் செயற்பட்டனர். வெற்றியும் கண்டனர்.

இது உள்நாட்டு சுற்றுலா வருமானத்தை பெரிதும் பாதித்ததாக நாட்டில் அரசியல் மேல் மட்டங்களில் பேசப்பட்டதை ஊடகங்களில் கண்டோம். இந்த நடவடிக்கையின் போது சுற்றுலா செல்வது என்ன ஹராமா? என யாரும் பத்வா கேட்கவில்லை. எமது சமூகத்தின் தேவை கருதி முன்னெடுத்தோம். அல்லாஹ் அதில் வெற்றியைத் தந்தான். அல்ஹம்துலில்லாஹ்.

ஏன் இறைச்சிக்கடை விடயத்திலும் நாம் வித்தியாசமாக சிந்திக்கக் கூடாது. அல்லாஹ் ஹலாலாக்கியதை ஹராமாக்குமாறும் கூறுவதல்ல இதன் நோக்கம். மாறாக, அல்லாஹ் ஆகுமாக்கிய தேவை கருதி, அல்லாஹ் ஹலாலாக்கிய இன்னொன்றை நோக்கிச் செல்வது அல்லது மாற்று வழிமுறையைப் பயன்படுத்துவது ஆகும்.

ரமழானைத் தொடர்ந்துள்ள காலங்களில் ஊர் மட்டங்களில் கலந்துரையாடுவோம். பயான்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக மக்களின் அபிப்பிராயத்தை மாற்றுவோம். நிச்சயமாக அல்லாஹ் இதில் நன்மையை வைத்திருப்பான்.

அல்லாஹ் தனது சட்டங்களை மனித நன்மை கருதியே வைத்துள்ளான். இந்த இறை நியதிகளை மாற்றும் போது நெருக்கடிகளையும் ஒழுங்கீனங்களையும் சந்திக்கும் என்பதை சகலரும் உணரும் போது நிச்சயமாக அல்லாஹ்வின் ஒழுங்கில் உண்மையைப் புரிந்துகொள்வார்கள் !

  • முஹிடீன் இஸ்லாஹி M. A. (Cey)

 

 

 

 

One comment

  1. MUSLIM KALIN BADUWA THAN MULLU SAWWU EDAI KURAIPPU KASUKKU THAHUNDA KARI ILLA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>