வாப்பா எங்களுக்கு இன்று பெருநாளா? – பிறைக் குழப்பம் ஒர் பார்வை


images (1)

ஒரு மாதம் அல்லாஹ்வுக்காக நோன்பிருந்து, தக்வாவை நிரப்பிக் கொண்ட ஈமானியச் சமூகம், பெருநாள் என்ற மகிழ்ச்சிகரமான தினத்தைத் தீர்மானிப்பதில் இழுபறி நிலைமையை வெளிப்படுத்துவது கவலையான ஒரு அம்சம் என யாராவது கூறினால், அதற்கு அதிக வாக்குகள் கிடைக்கும் என்பது உறுதியாகும்.

எமது நாட்டில் நேற்றிரவு இடம்பெற்ற ஷவ்வால் தலைப் பிறை தொடர்பான தீர்மானத்தில் பல்வேறு கருத்துக்கள் எழுந்திருந்தன. சமூக சிந்தனையுள்ளவர்கள் எமது சமூகத்தின் ஒற்றுமை சீர்குலைகிறது என கவலைப்பட்டனர். நல்லுள்ளம் படைத்த சிலர், இல்லை சத்தியத்தை நிலைநாட்டுவோம் என உறுதியாக நின்றனர். தீர்மானம் எடுக்க அதிகாரம் கொண்ட குழு அதனை தீர்மானிக்கட்டும் என பொது மக்கள் உட்பட படித்த பலரும்   எதிர்பார்த்திருந்தனர்.

பிறைக்குழு உரிய நேரத்தில் கூடிய போது, நாட்டின் எப்பாகத்திலும் பிறை கண்டதற்கான தகவல்கள் உறுதி செய்யப்பட வில்லையென எடுத்த தீர்மானத்தால் இன்று (15) நோன்பு என ஏகமனதாக முடிவு செய்தனர். அதுவரையில் சமூக வலைத்தளங்களில் வெளியான பிறைகண்ட தகவல்கள் எதுவும் தமக்கு கிடைக்க வில்லையென பிறைக்குழுப் பொறுப்பாளர்கள் தெரிவித்திருந்த கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் இன்னும் இருக்கின்றன.

பெண்கள் பிறை கண்டதனால் ஏற்க முடியாது, பிறை கண்டதாக தெரிவிக்கப்பட்ட தகவல்கள் முரண்பாடானது, இருவேறு இடங்களிலும் பிறை கண்ட நேரத்தில் சிக்கல் உள்ளது, உறுதியான தகவல்கள் ஏன்? காலம் தாமதமாகி வெளியாகின என்ற கேள்வி, பிறைக் குழுவின் தீர்மானத்தைக் குழப்ப ஒரு சதிகார குழு செயற்படுகின்றது என நாளை பெருநாள் எடுக்க முடியாது என்பதற்கு நியாயங்கள் கூறப்பட்டன.

பள்ளிவாயல் உறுதிப்படுத்தலுடன் வெளியான பிறை கண்ட தீர்மானம், பிறையைக் கண்டவர்கள் வெளியிட்ட கருத்துக்கள், பல இடங்களில் பிறை கண்ட செய்தி என்பனவற்றை வைத்து இதற்கு மேல் ஷவ்வால் பிறையைத் தீர்மானிக்க வேறு என்ன வேண்டும் என கூறிய சில உலமாக்களும், சில தஃவா அமைப்புக்களும் நாளை பெருநாள் எடுக்க வேண்டும் என தீர்மானம்  எடுக்க முற்பட்டனர்.

அகில இலங்கை பிறைக்குழு மஃரிப் வேளையில் எடுத்த தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யுமா? என இறுதி நேரம் வரை எதிபார்த்தவர்கள், இறுதியில் தங்களது அமைப்பு ரீதியாக எடுத்த தீர்மானங்களை தங்களது கருத்துச் சார்ந்தவர்களுக்கு அனுப்பி நாளை பெருநாள் என்ற செய்தியை அறிவிக்க முற்பட்டனர்.

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள உயர் அதிகாரிகளிடம் இப்பிரச்சினை தொடர்பில் வினவிய போது, பிறைக்குழுவே இது குறித்து தீர்மானிக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

நடுவில் மாட்டிக் கொண்ட பொது மக்கள், மஃரிப் வேளையில் பிறைக்குழுவின் நோன்பு பிடிப்பது என்ற தீர்மானத்தை வைத்து ஸஹர் உணவைத் தயாரிக்க ஆரம்பித்தனர். இடையில் சமூக வலைத்தளங்களில் வெளியான செய்திகளை வைத்து பெருநாள் ஏற்பாடுகளையும் சேர்த்தே மேற்கொள்ள ஆரம்பித்தனர். ஏனெனில், கடந்த காலத்தில் அகில இலங்கை பிறைக்குழுவினால் ஸஹர் நேரத்தில் பெருநாள் என அறிவிக்கப்பட்ட வரலாற்றை அவர்கள் அறிந்திருந்தார்கள்.

கிராமத்திலுள்ள வியாபாரிகளும் தங்களது கடைகளை மூடிவிடுவதா? இல்லையா? என்ற திண்டாட்டத்தில் நேற்றிரவு மூழ்கியிருந்தனர். வீட்டிலுள்ள சிறு பிள்ளைகள், வாப்பா ! நாளை பெருநாளா? என கேள்வி கேட்டவர்களாகவே இருந்துவிட்டு, இரவு 11.00 மணிக்கு முடிவு தெரியாமல் தூக்கத்தில் ஆழ்ந்து விட்டனர்.

நள்ளிரவாகின்ற போது ஒரு பள்ளிவாயல் ஒலிபெருக்கியில் தக்பீர் ஒலிக்கிறது. நாளை காலை பெருநாள் தொழுகை என அறிவிப்பும் விடுக்கப்படுகின்றது. வீட்டில் தூக்கத்தில் இருந்த பிள்ளை எழுந்து வாப்பா நாளைக்கு பெருநாளா? என சந்தோஷமாக கேள்வி கேட்க, இன்னும் தெரியாது என அந்த பிஞ்சு உள்ளத்தில் எழுந்த பெருநாள் ஆர்வத்துக்கு அப்படியே அடி கொடுக்கப்படுகின்றது.

நள்ளிரவும் தாண்டிய நிலையில் கொழும்பு பெரிய பள்ளிவாயலில் பிறைக்குழு மீண்டும் கூடுவதாக சமூக வலைத்தளத்தில் நம்பகமான ஒரு செய்தி பரவுகின்றது. ஸஹரா? பெருநாள் காலைச் சாப்பாடா? என்ற தீர்மானம் இன்றி கதிரையில் அரைத் தூக்கத்தில் இருந்த மனைவியை தட்டி எழுப்பி, பிறைக்குழு மீண்டும் கூடுகிறதாம். நாளை பெருநாள் ஆகுமோ தெரியாது என்ற புதிய தகவலை பரிமாறிக் கொள்கின்றார் கணவர்.

சிறிது நேரத்தில், பிறைக்குழுவின் தீர்மானத்தில் மாற்றம் இல்லையாம். நாளை நோன்பு என்பது உறுதியாம் என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் குரல் பதிவுகளாக காட்டுத் தீ போன்று பரவியது.

இப்போது பல பகுதிகளுக்கும் தொலைபேசி அழைப்புக்கள் எடுக்கப்படுகின்றன. முதலில் குடும்பத்திலுள்ளவர்களிடம் நாளை பெருநாளா? இல்லையா? பிறைக்குழுவின் தீர்மானம் இது. இன்ன அமைப்பு நாளை பெருநாள் தொழுகை என அறிவித்துள்ளது. “நாமும் என்ன செய்வதென்றே யோசித்துக் கொண்டிருக்கின்றோம்” என குடும்பத்திலுள்ளவர்கள்  பதிலளிக்கிறார்கள்.

வெளியிலுள்ள நம்பகமான ஆலிம்களிடம் தொடர்பு கொள்கிறார்கள். அவர்கள் அதுவரை நடந்த நிகழ்வுகள் குறித்து தமது பத்வாக்களை முன்வைக்கிறார்கள்.

பிறை கண்டதன் பின்னர் நோன்பு பிடிப்பது ஹராம். ஊரிலுள்ள அனைவரும் பெருநாள் எடுக்கும் தினத்தில் எல்லோரும் பெருநாளை கூட்டாக கொண்டாடுங்கள். விடுபட்ட நோன்பை பின்னர் கழாச் செய்யுங்கள். நபியவர்களின் காலத்திலும் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன என ஒரு ஆலிம் கூறுகின்றார்.

பிறைக்குழுவுக்கென சில நியாயங்கள் இருக்கின்றன. அவற்றின் அடிப்படையிலேயே அவர்கள் தீர்மானித்துள்ளனர். அவர்களின் தீர்மானத்தை அல்லாஹ்விடம் பொறுப்புச் சாட்டுவோம். அந்த தீர்மானத்தை ஏற்பதே சிறந்தது என மற்றுமொரு ஆலிம் கூறுகின்றார்.

ஷவ்வால் முதல் பிறை தொடர்பாக நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் செய்திகள் வந்துள்ளன. இவை பற்றி விசாரித்து இறுதி முடிவை எட்டுவதில் குழப்ப நிலை இருப்பதாக அறிகின்றோம். எனவே, பிறை கண்டதைப் பற்றிய சாட்சியங்கள் உறுதியாக இருப்பவர்கள் இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) நோன்பு நோற்காது கழாச் செய்து கொள்ளலாம்.

எப்படியும், பெருநாள் பொதுச் சமூகத்துடன் சேர்ந்து கொண்டாடப்பட வேண்டியதாகும். அதனை தனித்து அல்லது தனிக் குழுவாக கொண்டாட முடியாது என தேசிய ரீதியில் செயற்படும் தஃவா அமைப்பொன்று வழிகாட்டலை வழங்கியுள்ளது.

இதன்படி, ஒரே குடும்பத்தில் சிலர் பெருநாள் எனத் தீர்மானித்தனர். மற்றும் சிலர் நோன்பு என்ற தீர்மானம் எடுத்தனர். அதிகாலை 2.30 மணியளவிலும் தூங்காமல் இருந்தவர்களிடத்தில் பிறைக்குழுவின்  தீர்மானம் ஸஹருக்கு மாறலாம் என்ற எதிர்பார்ப்பு இருக்கவே செய்தது.

நோன்பு நோற்ற நிலையில் காலையை அடைந்தவர்கள் தூக்கத்தில் இருந்து எழும்பும்போது, பள்ளியில் ஒலிக்கும் பெருநாள் தக்பீர் ஓசையைக் கேட்டு எல்லோருக்கும் அதில் பங்கெடுக்க முடியவில்லையே என மனதுக்குள் கவலைகொள்கின்றார்கள். தீர்மானம் தெரியாமல் தூங்கிய தனது பிள்ளைகள் ஓடி வந்து வாப்பா எங்களுக்கு இன்று பெருநாள் இல்லையா? எனக் கேட்கின்றார்கள். தந்தையின் கண்ணிலிருந்து கண்ணீரைத் தவிர பதிலளிக்க வார்த்தைகள் எதுவும் வெளிவர மறுத்தன. அவர்கள் பிறை கண்டுள்ளார்கள். நாம் இன்று பிறை பார்ப்போம் என விளக்கம் புரியாத அந்த சின்ன பிஞ்சிடம் தந்தை பதில் கூறி சமூக கவலையை அடக்கிக் கொள்கின்றார்.

சமூகமே சிந்திப்போம்…!

இஸ்லாம் மகிழ்ச்சியை வெளிப்படுத்த ஏற்பாடு செய்து தந்த இரு தினங்களை துக்கமும் பிளவும் உள்ள தினங்களாக மாற்றியதற்கு யார் பொறுப்புச் சொல்லப் போகின்றனர்.

பல்லினம் வாழும் இந்த நாட்டில் ஒரு சந்தோஷமான தினத்தை தீர்மானித்துக் கொள்வதில் இழுபறியா? என பலவீனமாக எமது சமூகத்தை காட்டியதற்கு யார் பொறுப்புச் சொல்லப் போகிறார்கள்.

ஒரே ஊரில் ஒரு குழு நோன்பு, இன்னுமொரு குழு பெருநாள் கொண்டாட்டத்தில், பெருநாள் தினத்தில் நோன்பு வைப்பது ஹராம் என்ற பதிவு ஒருபுறம். ஏன் இந்த நிலை?

அரசியல் விவகாரத்திலும், கல்வி மற்றும் உண்டான பல்வேறு நடவடிக்கைகளில் முஸ்லிம் அல்லாத கொள்கையுடையவர்கள் முன்வைக்கும் ஒரு தீர்மானத்தை மனமுவந்து ஏற்றுக் கொள்பவர்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தில் மாத்திரம் ஏன் ? இந்த பிடிவாதமும், வரட்டுத் தீர்மானமும் எடுக்கின்றார்கள்.

இந்த நாட்டில் எத்தனையோ தஃவா அமைப்புக்கள், எத்தனையோ முஸ்லிம் அரசியல் தலைமைகள், அரசினால் ஏற்பாடு செய்து தரப்பட்ட திணைக்களம், அமைச்சு என்பன இருந்தும் ஏன் இந்த சமூகம் எங்களது ஒற்றுமையை காற்றில் பறக்க விடுகின்றது.

ஏன் இந்த ஒரு விடயத்திலாவது திட்டமிடாதிருக்கின்றோம். கலிமாவின் அடிப்படையிலான உம்மத், கொள்கைவாத உம்மத், ஒரே கிப்லாவை முன்னோக்கும் உம்மத், ஒரே அதானுக்கு பள்ளியில் ஒன்று கூடும் உம்மத், ஒரு சில நாட்களில் கூடி நின்று ஹஜ் கடமையை நிறைவேற்றும் உம்மத், ஒரே மாதத்தில் நோன்பு வைக்கும் உம்மத், ஆடையில் ஒரே வகையான ஔரத்தைப் பின்பற்றும் உம்மத் என இத்தனை சர்வதேச ஒன்றுமைகளையும் கொண்ட உம்மத்துக்கு உள்நாட்டில் கூடி ஒரு தினத்தை சந்தோஷமான பெருநாளுக்காக பிரகடனம் செய்து கொள்ள முடியாத நிலையை நினைத்து பல்லாயிரம் உள்ளங்கள் கவலையடைகின்றன.

தக்வா ஒன்றை மாத்திரம் பயிற்சியாக கொண்ட ஒரு மாதத்தை கழித்துவிட்டு அந்த மாதத்தில் நாம் எந்த பயிற்சியையும் எடுத்துக் கொள்ளவில்லையென காட்டுவது போன்ற ஒரு நடவடிக்கையையே பிறை தீர்மானத்தில் காட்டுகின்றோம் என பலரும் அங்கலாய்த்துக் கொள்கின்றனர்.

இந்நிலை எப்போது மாறும் என்ற தினத்தை தீர்மானிக்க இன்னும் தாமதிக்க கூடாது என்பதே எல்லோரினதும் ஒரே எதிர்பார்ப்பாகும்.

  • முஹிடீன் இஸ்லாஹி B.Ed (Hons), Dip in Jour., M.A. (Cey), SLTS,

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>