அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்ட மூலம் : ஓர் அலசல்


image_1486352520-35e9945f24

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 1978 ஆம் ஆண்டு அரசியல் யாப்பின் பிரதான அம்சமாக காணப்படும் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்கும் வகையில் மக்கள் விடுதலை முன்னணியினால் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டள்ள 20 ஆவது திருத்தச் சட்ட மூலம் குறித்த கருத்துக்கள் தற்பொழுது அரசியல் மேடையைச் சூடுபிடிக்கச் செய்துள்ளன.

20 வது அரசியலமைப்பு சீர்திருத்த சட்டமூலம் தனிப்பட்ட பிரேரணையாக பாராளுமன்ற செயலாளர் மற்றும் சபாநாயகரிடம் கடந்த மே 25 ஆம் திகதி மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்கவினால் ஒப்படைக்கப்பட்டது.

குறித்த சட்ட மூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு மேற்பார்வை குழுவில் ஆராயப்பட்டு சம்பந்தப்பட்ட அமைச்சின் அறிக்கையை பெற்று, நீண்ட செயற்பாடுகளின் பின்னரேயே பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் என பாராளுமன்ற செயலாளர் நாயக அலுவலகம் அறிவித்திருந்தது.

இச்சட்ட மூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படுதவற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலம் தேவைப்படுகின்றது என்பது முக்கிய அம்சமாகும். அத்துடன், சர்வஜன வாக்கெடுப்புக்கு விட வேண்டும் எனவும் கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன.

ஜே.வி.பியினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இருபதாவது திருத்தச் சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டால் அரசாங்கத்தின் பிரதானி என்ற அந்தஸ்தை ஜனாதிபதி இழந்து விடுவதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த அரசியலமைப்பு நிறைவேற்றப்படுமாக இருந்தால்,

  • சிறைக் கைதிகளுக்கு விடுதலை வழங்கும் அதிகாரமும் ஜனாதிபதியிடமிருந்து நீக்கப்படுகின்றது.
  • ஜனாதிபதி பொதுத் தேர்தலினால் தெரிவு செய்யப்படாமல், பாராளுமன்றத்தினால் தெரிவு செய்யப்படுகின்றார்.
  • ஜனாதிபதி பாராளுமன்றத்துக்கு பொறுப்புச் சொல்ல வேண்டிய கடப்பாடுடையவராக மாறுகின்றார்.
  • புதிய பாராளுமன்றம் ஆரம்பிக்கப்பட்டு நான்கு வாரங்களுக்குள் பெரும்பான்மை வாக்குகளினால் பாராளுமன்றத்தில் ஜனாதிபதி தெரிவு இடம்பெறும். இதற்காக இரகசிய வாக்கெடுப்பும் பயன்படுத்த முடியும்.
  • 20 ஆவது திருத்தத்தின்படி, பிரதமரின் ஆலோசனையின் படி, அமைச்சரவையை அமைக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது.
  • பாராளுமன்ற கூட்டத்தொடரை முடித்து வைக்கும் அதிகாரம், பாராளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் என்பன ஜனாதிபதியிடமிருந்து நீக்கப்பட்டுள்ளன.
  • ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுபவர் அரசியல் கட்சியில் எந்தப் பொறுப்பையும் வகிக்காதவராகவும், எந்தவொரு அரசியல் கட்சியிலும் உறுப்புரிமை பெறாதவராகவும் இருத்தல் வேண்டும்.
  • வெளிநாட்டு தூதுவர்கள், உயர் ஸ்தானிகள் நியமனத்தின் போதும் வெளிநாட்டு தூதுக் குழுக்கள் அமைக்கும் போதும் பிரதமரினால் அமைக்கப்படும் அமைச்சரவையின் ஆலோசனைப்படி அமைய வேண்டும்.
  • பாராளுமன்றத்தில் அதிகமான ஆசனங்களைப் பெற்ற கட்சியிலிருந்தே பிரதமர் நியமிக்கப்பட வேண்டும்.

இந்த அரசியல் திருத்தச் சட்டம் குறித்து பல்வேறு அரசியல் கட்சிகளும் தமது அபிப்பிராயங்களைத் தெரிவித்து வருகின்றன. ஜனாதிபதி கடந்த 2015 ஆம் ஆண்டு வழங்கிய வாக்குறுதியாக இது நோக்கப்படுகின்றது. கடந்த ஜனாதிபதித் தேர்தல் பல சுயாதீனக் குழுக்கள் இணைந்து முன்னெடுக்கப்பட்ட அரசியல் புரட்சியாக நாட்டு வரலாற்றில் பதியப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக நிறைவேற்று ஜனாதிபதி முறைமை நீக்கம் காணப்பட்டது. இது குறித்து தற்போதைய அரசியல் நிலவரத்தின் கீழ் அரசாங்கத்திலுள்ள கட்சிகளும், சுயாதீனக் குழுக்களும், எதிர்க் கட்சிகளும் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றன.

அரசாங்கத்திலுள்ள பிரதான கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி இதுவரையில் எந்தவித உத்தியோகபுர்வ தீர்மானங்களையும் இது தொடர்பில் வெளியிடவில்லை. ஐக்கிய தேசியக் கட்சிக்கு உடனடியாக எதனையும் கூற முடியாது என அக்கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்திருந்தார்.

அரசியலமைப்பு மாற்றம் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி தற்பொழுது ஆய்வு செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை, இக்கட்சியின் முன்னாள் செயலாளரும் சிரேஷ்ட அமைச்சருமாகிய கபீர் ஹாஷிம் கடந்த 09 ஆம் திகதி 20 குறித்து கருத்துத் தெரிவித்திருந்தார். நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை மாற்ற வேண்டும் என்ற தீர்மானம் மாதுலுவாவே சோபித்த தேரரின் கனவு எனவும் அதனை மாற்ற வேண்டும் என்ற முடிவில்தான் ஐக்கிய தேசியக் கட்சி காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்கும் வகையில் ஜே.வி.பி.யினால் முன்வைக்கப்பட்டுள்ள 20ஆவது திருத்தத்தை எவரும் எதிர்ப்பதற்கான எந்தவித நியாயப்பாடும் இல்லையென அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் உறுப்பினரும், ஐ.தே.க.யின் எம்.பி.யுமான கலாநிதி ஜயம்பதி விக்ரமரட்ன தெரிவித்துள்ளார்.

இருந்தாலும் புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இன்னமும் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புதிய அரசியலமைப்பு சாத்தியமாகாத சூழல் இருப்பதாக ஜே.வி.பி. கருதுமாக இருந்தால், தேவையானால் இருபதாவது திருத்தத்தில் திருத்தங்களை மேற்கொண்டு அதற்கு ஆதரவு வழங்கவும் தயார் எனவும் ஜயம்பதி எம்.பி. மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது திருத்தச் சட்ட மூலம் நாட்டைச் சீர்குலைக்கும் நோக்குடையது என ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையின் கீழ் ஜனாதிபதியின் அதிகாரம் இன்னும் பலப்படுத்தப்பட வேண்டுமே அன்றி அதனை இல்லாமல் செய்யக் கூடாது என்றும் அவ்வாறு குறைப்பது நாட்டை அழிவுக்கு இட்டுச் செல்லும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியினால் முன்வைக்கப்பட்டுள்ள ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை நீக்கும் வகையிலான பிரேரணையையே,  தமிழ் தேசியக் கூட்டமைப்பும், அரச சார்பற்ற அமைப்புக்களும் நீண்ட நாட்களாக முன்வைத்து வருவதாக கடும்போக்கு அரசியல் அமைப்புக்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளன.

மக்கள் விடுதலை முன்னணியினால் முன்வைக்கப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் சிறுபிள்ளையின் கடிதம் போன்றது என பிவிதுரு ஹெல உறுமய அமைப்பின் தலைவர் உதய கம்மம்பில தெரிவித்துள்ளார்.

இந்த 20 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் தன்னுடன்  விவாதத்துக்கு வருமாயின் தான் ஏன் சிறுபிள்ளையின் கடிதம் எனக் கூறினேன் என்பதற்கு விளக்கம் அளிக்க தயாராகவுள்ளதாகவும் அவர் ஊடகவியலாளர் சந்திப்பில் பகிரங்க அறிவிப்பு விடுத்திருந்தார்.

சிவில் அமைப்புகள் ம.வி.முன்னணியினால் முன்வைக்கப்பட்டுள்ள திருத்தச் சட்டத்தை ஆதரித்து தமது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றன. இந்த 20 இற்கு எதிராக கருத்துத் தெரிவித்துள்ள கடும்போக்கு அமைப்பின் உறுப்பினரான சம்பிக்க ரணவக்கவின் கருத்தை சிவில் அமைப்புக்கள் கடுமையாக விமர்சித்துள்ளன.

“சம்பிக்கவின் கனவு 2025 இல் ஜனாதிபதி ஆகுவதே என பிரஜைகளின் சக்தி அமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் காமினி வியங்கொட தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி பதவிக்கு வரும் வரை ஜனாதிபதி முறையை தான் மாற்றுவதாக கூறும் அனைவரும் பதவிக்கு வந்ததன் பின்னர் இரண்டாவது தடவையாகவும் தான் ஜனாதிபதியாக வர வேண்டும் என்றே ஆசைப்படுகின்றனர்.

சம்பிக்க ரணவக்க போன்றோர் ஜனாதிபதி முறைமையை மாற்றுவதற்கு எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். 2025ல் இந்த நாட்டு ஜனாதிபதி ஆவதற்கு தன்னால் முடியும் என சம்பிக்க ரணவக்க நினைத்துக் கொண்டிருக்கிறார் எனவும் பிரஜைகளின் சக்தி அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு சிவில் அமைப்புக்கள் சார்பில் கருத்து வெளியிட்டுள்ள பேராசிரியர் சரத் விஜேசூரியவும் தமது விசனத்தை வெளியிட்டுள்ளார்.

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்கும் பிரேரணையை மக்கள் விடுதலை முன்னணியினால் கொண்டுவரும் வரை தாமதித்தமைக்காக ஜனாதிபதியும் பிரதமரும் வெட்கப்பட வேண்டும் எனவும் பேராசிரியர் சரத் விஜேசூரிய சுட்டிகாட்டியுள்ளார்.

மறைந்த சோபித்த தேரரின் இறுதிக் கிரியை நிகழ்வின் போது ஆற்றிய உரையில், நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குவதாக சபதமிட்ட ஜனாதிபதி, ஒரு வருடத்துக்குப் பின் நடைபெற்ற அவரது நினைவு நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போது, அது தொடர்பில் ஒரு வார்த்தையையேனும் பேசவில்லை.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு தயார் இல்லை. அவர் அதில் தொடர்ந்தும் நிலைத்திருப்பதற்கே எதிர்பார்ப்பதாகவும் பேராசிரியர் கூறியுள்ளார்.

நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோல்வியடையச் செய்ததன் பின்னர், பிரதமருக்கு மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்ற நினைப்பு  பிறந்துள்ளதாகவும்  பேராசிரியர் சரத் விஜேசூரிய பிரதமரின் நிலைப்பாட்டுக்கு தனது விசனத்தைத் தெரிவித்துள்ளார்.

மனச்சாட்சியுள்ள ஒரு அரசியல் வாதி இருக்கின்றார் எனின், அவருடைய சரியான அரசியல் போக்கை காட்டுவதற்கு இது சிறந்த தருனம். ஜனாதிபதி முறைமையை நீக்குவதனால், நாடு ஸ்தீரமற்றுச் செல்லும் எனக் கூறும் அரசியல் வாதிகள், எதிர்காலத்தில் ஜனாதிபதிக் கதிரைக்கு ஆசை கொண்டுள்ளவர்கள். நாட்டில் இன்று உண்மையான தேசிய தலைவர்கள் அழிந்து விட்டனர் எனவும் சரத் விஜேசூரிய ஊடகவியலாளர்களிடம் கூறியிருந்தார்.

மக்கள் விடுதலை முன்னணியினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட மூலத்துக்கு எதிராக வாக்களிப்பது என்ற தீர்மானத்தை கூட்டு எதிர்க் கட்சி கடந்த 30 ஆம் திகதி இரவு கூடியபோது எடுத்துள்ளது.

மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கடந்த 30 ஆம் திகதி இரவு கூடிய கூட்டு எதிர்க் கட்சியின் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இதில், குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், இடது சாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார கடந்த காலங்களில் இந்த நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்தார். அதற்கான சந்தர்ப்பம் கனிந்துள்ளபோது, அவர் இது ஜே.வி.பியினால் உள்நோக்கத்துடன் கொண்டுவரப்படும் ஒன்று எனவும், இதற்கு ஆதரவு வழங்க முடியாது எனவும் கூறியுள்ளார்.

இருப்பினும், ஜனாதிபதி முறைமையை நீக்க வேண்டும் என்பத்தில் தான் உறுதியாகவுள்ளதாகவும், மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிரணி ஆட்சிக்கு வந்ததன் பின்னர் இந்த நடவடிக்கையை முன்னெடுக்க போராடுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அரசாங்கத்துடன் பங்காளியாக உள்ள நாட்டின் பெரும் அரசியல் கட்சியான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி  நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குவது தொடர்பிலான  திருத்தச் சட்டம் குறித்து ஆராய்ந்து தீர்மானம் ஒன்றை எடுப்பதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின்  மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் கடந்த 07 ஆம் திகதி நடைபெற்ற மத்திய செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

20 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் கடந்த கூட்டத்தின் போது விரிவாக ஆராயப்பட்டுள்ளதுடன், இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும் என மத்திய செயற்குழுவிலுள்ள பெரும்பாலானவர்கள் கருத்துத் தெரிவித்திருந்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட அமைச்சர்களுள் ஒருவரான விஜித் விஜேமுனி சொய்ஷா 20 ஆவது திருத்தச் சட்ட மூலம் தொடர்பில் குறிப்பிட்ருந்த கருத்தும் இதனுடன் சேர்ப்பது பொருத்தமாகும்.

ஜே.ஆர். ஜெயவர்தனாவினால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள தற்போதைய அரசியல் யாப்பில் காணப்படும், ஒவ்வொரு விடயமும் எமது நாட்டின் சலக விவகாரங்களையும் கருத்தில் கொண்டே ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவற்றை மாற்றும் போது ஒரு முறைக்கு நூறு முறை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

இந்த அரசாங்கம் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் செய்த மாற்றம் இதுவரை சீரனிக்க முடியாத பிரச்சினையாக மாறியுள்ளது எனவும் அமைச்சர் உதாரணத்துடன் எடுத்துக் காட்டியிருந்தார்.

சிறுபான்மையோர் காப்பீடாக ஜே.ஆர். ஜெயவர்தனாவினால் அறிமுகம் செய்யப்பட்ட இந்த நிறைவேற்று ஜனாதிபதி முறைமை, பல்லினம் வாழும் இந்த நாட்டுக்கு இதுகால வரையில் பொருத்தமாகவே காணப்பட்டுள்ளது என்று ஒரு அரசியல் விஞ்ஞான பாட ஆசிரியர் கூறினால் அதனை மறுப்பதற்கில்லை.

சிறுபான்மையினரின் கடிவாளத்தை வைத்துக் கொள்வதற்கு இந்த ஜனாதிபதி முறைமை அவசியம் என பேரினவாத அமைப்புக்கள் மறைமுகமாக முன்வைக்கும் அம்சமும் நோக்கத்தக்கது.

உண்மையில் சர்வதேச அரசியல் மாற்றங்களுக்கும், சமூகத்தில் பலமடைந்துள்ள ஜனநாயக கருத்துக்களுக்கும் இடையில் இந்த திருத்தச் சட்ட மூல வாதம் நாட்டின் அபிவிருத்திக்கும் முன்னேற்றத்துக்கும் எவ்வளவு தூரம் சாத்தியமானது என்பதை மேற்படி கருத்துக்களிலிருந்து புரிந்துகொள்ள முடியாதுள்ளது.

ஒவ்வொரு கட்சியும், அரசியல் வாதிகளும் தமது சொந்த நலன்களுக்கும், கட்சியின் நலன்களுக்குமே முன்னுரிமை வழங்கி இந்த திருத்தச் சட்ட மூலத்தை நோக்குகின்றது என்பதையே நோக்க வேண்டியுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியின் தனிநபர் பிரேரணையாக முன்வைக்கப்பட்டுள்ள இந்த திருத்தச் சட்ட மூலம் பெரும்பான்மைக் கட்சிகளின் ஆதரவு இழக்கப்படுமாக இருந்தால், வெறும் காணல் நீராக மாறிவிடும் என்பது இடதுசாரி சிந்தனையுள்ளவர்களுக்கு ஒரு கசப்பான அனுபவமாகும்.

  • கஹட்டோவிட்ட முஹிடீன் B. Ed.(Hons), M.A. (Cey)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>