ஞானசார தேரரை குத்தும் பேனாக்கள் !


hghj

கடந்த மாதம் 14ஆம் திகதி பொதுபலசேன அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் ஒரு வருட கடூழிய சிறை தண்டனை வழங்கப்பட்டு சிறைச்சேதம் செய்யப்பட்டார். ஊடகவியலாளரான பிரகீத் எக்னாலிகொடவின் மனைவி சந்தியா எக்னாலிகொடவை ஹோமகம நீதி மன்றத்துக்கு முன்னால் அச்சுறுத்தியமை தொடர்பிலே அவர் சிறைச்சேதம் செய்யப்பட்டார் என்று சொல்லப்படுகின்றது.

இந்த விடயம் முஸ்லிம்கள் சார்பாக கருத்துக்கள் வெளியிடும் ஊடகங்களுக்கும் முஸ்லிம்கள் சார்ந்த ஊடகங்களுக்கும் அதிகமான முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கும் முக்கியமான பேசு பொருளாகின. அண்மைக்காலமாக ஞானசார தேரரின் செயற்பாடுகள்இ அவருடைய அசைவூகள்இ அவரைச் சார்ந்த விடயங்கள் இவ்வாறான ஊடகங்களுக்கும் இவ்வாறான ஊடகவியலாளர்களுக்கும் முக்கியமான பேசு பொருள்களாகவே காணப்படுகின்றன. அவரைச் சார்ந்த விடயங்கள் ஒரு நொறுக்குத் தீனி போல் இவ்வாறான ஊடகங்களாலும் இவ்வாறான ஊடகவியலாளர்களும் தொடர்ந்து அரைக்கப்படுகின்றன.

கடந்த 22ஆம் திகதி வெளியான முஸ்லிம்கள் சார்பான பத்திரிகை ஒன்றில் இக்கைது தொடர்பாக எழுதப்பட்ட கட்டுரை ஒன்று பின்வருமாறு ஆரம்பிக்கின்றது. “பார்த்தீர்களா அல்லாஹ்வின் ஆற்றலை? ஐந்து வருடங்களாக முஸ்லிம்களுக்கு எதிராக சொல்லொணாக் கொடுமைகளை இழைத்தவரை ஒரு சிங்களப் பெண் மூலம் அதே சமூகத்தைச் சேர்ந்த நீதிவானால் தண்டித்திருக்கின்றான்.” அந்தக் கட்டுரையை எழுதியவர் அந்தக் கட்டுரை பிரசுரிக்கப்பட்ட அதே தினத்திலே ஞானசார தேரர் பிணையில் விடுதலை செய்யப்பட்டமை தொடர்பாக அல்லாஹ்வுடன் சம்பந்தப்படுத்தி எதனைச் சொல்லுவார்? என்று நான் அறியவில்லை. இதனால் நான் அல்லாஹ்வை அவமதிக்கவில்லை. இந்தக் கட்டுரையாளரின் நிலமையைக் கூறுகின்றேன். இவ்வாறான ஊடகவியலாளர்கள் முஸ்லிம்களுக்கு இருக்கின்ற பெரும் பிரச்சினையாக ஞானசார தேரரை காணுகின்றனர். இவ்வாறான ஊடகங்களும் முஸ்லிம்களுக்கு இருக்கின்ற பெரும் பிரச்சினையாக ஞானசார தேரரைச் சித்தரிக்கின்றது.

இலங்கை முஸ்லிம்களுக்கு பல பிரச்சினைகள் காணப்படுகின்றன. கல்விஇ அரசியல், சமயம் பொருளாதாரம் போன்ற இன்னும் பல துறைகளில் பல்வேறுபட்ட பிரச்சனைகள் காணப்படுகின்றன. சமயக் கொள்கைகளின் வேறுபாடுகள் காரணமாக பிற்பட்ட காலத்தில் முஸ்லிம்கள் பாரியளவில் இரத்தம் சிந்தக் கூடிய நிலைகள் கூட ஏற்படலாம். அதற்கான முன்னேற்பாடுகளும் நடைபெற்றுள்ளன. வாழைச் சேனையில் நோன்பு காலத்தில் வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஒரு சமயப் பிரிவினரை இன்னமொரு சமயப் பிரிவினர் சென்று தாக்கி இருக்கின்றனர். கா. பொ. த (சாதாரணதரம்) பரீட்சையை எழுத வேண்டியவர்கள் புறா வளர்ப்பில் ஈடுபடுகின்றனர். இளம் தலை முறையினரை போதைப் பொருள் ஆக்கிரமித்துக் கொண்டு வருகின்றது. ஒரு சமயப் பண்டிகையையாவது ஒழுங்காகக் கொண்டாடத் தெரியாதவர்கள் என்று சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் மத்தியில் முஸ்லிம்கள் தங்களைத் தாங்களே நிரூபித்துள்ளனர். ஏனோ தானே என்று பாடசாலைக்குச் செல்லும் ஒரு சந்ததியினர் தோற்றம் பெற்றுள்ளனர். சமூகத்தின் எதிர்காலம் எவ்வாறு போனாலும் அவர்களுடைய எதிர்காலம் தொடர்பாகவாவது அவர்கள் அக்கறை இன்றி இருக்கின்றனர். இலங்கையில் முஸ்லிம்களின் எதிர்காலம் சவால்கள் மிக்கதாகவே காணப்படுகின்றது. மியன்மாரைப் போன்ற ஒரு நிலையும் இலங்கையில் ஏற்படலாம் என்றும் சில புத்திஜீவிகள் கருத்து தெரிவித்து வருகின்ற நிலையில் ஆபத்துக்கள் வருகின்ற போது மாத்திரம் கல்லுகளையும் பொல்லுகளையும் தேடுபவர்களாக முஸ்லிம்கள் இருக்கின்றனர். நிலமை ஆறிய பின்னர் நடந்த சங்கதி மறைந்து போகின்றது. இளம் தலைமுறையினர் இங்கே என்ன நடக்கின்றது என்று அறியாமல் சமயக் கொள்கைச் சண்டைகளில் தீவிரமாக இருக்கின்றனர். நிம்மதியாக வாழ்ந்தவருக்கு மரணித்த பின்னர் நிம்மதியாக மண்ணறைக்குச் செல்ல முடியாத நிலை காணப்படுகின்றது. இதற்குச் சமயக் கொள்கைச் சண்டை காரணமாகக் காணப்படுகின்றது. ஞானசார தேரரை முஸ்லிம்களின் பெரும் பிரச்சினையாக காணும் முஸ்லிம்கள் சார்பாக கருத்துக்கள் வெளியிடும் ஊடகங்களுக்கும் முஸ்லிம்கள் சார்ந்த ஊடகங்களுக்கும் அதிகமான முஸ்லிம் ஊடகவியலாளர்களும் இவற்றை முஸ்லிம்களின் பிரச்சினையாக இனம் காணவில்லை.

விரலின் அளவுக்கு ஏற்ப வீங்க வேண்டும் என்று சிங்கள மொழியில் ஒரு பழமொழி காணப்படுகின்றது. முஸ்லிம்கள் மூன்றாவது சிறுபான்மையினராகவே இலங்கையில் வாழுகின்றனர். இதனை உணராத வகையிலே இவ்வாறானவர்களின் ஆக்கங்களும் கட்டுரைகளும் அமைகின்றன. இது ஏதோ சவுதி அரேபியாவைப் போன்ற ஒரு நாடு என்ற பிரக்ஞையில் அவர்கள் கட்டுரைகளை எழுதுகின்றனர். ஞானசார தேரரை கட்டுரைத் தலைவராகக் கொண்டு இவர்கள் எழுதும் கட்டுரைகள் ஞானசார தேரரை நோவினை செய்வதில்லை. மாறாக இந்த நாட்டில் பெரும்பான்மையினராக இருக்கும் சிங்கள பௌத்தர்களின் உள்ளங்களை நோவினை அடையச் செய்கின்றது. அதிகமான முஸ்லிம்கள் பெரும்பான்மையான சிங்களவர்களுக்கு மத்தியிலே வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர். இவற்றை உணராது இவர்கள் கட்டுரைகளை எழுதிக் கொண்டும் கட்டுரைகளை பிரசுரித்துக் கொண்டும் இருக்கின்றனர். தேரர்கள் என்போர் சிங்கள மக்களின் சமயத் தலைவர்களாக மட்டும் காணப்படவில்லை. அவர்கள் சிங்கள மக்களின் சிவில் தலைவர்களாகவும் இருக்கின்றனர். இதுதான் இலங்கையின் 2500 வருடங்களான பாரம்பரியம். இந்த 2500 வருடங்களான பாரம்பரியத்தில் அரசனை விட அந்தஸ்துக் கூடியவர்களாக இலங்கையில் தேரர்களே காணப்பட்டனர். மன்னராட்சிக் காலத்தில் தேரர் ஒருவர் அரசசபைக்கு வந்தால் மன்னன் சிம்மாசனத்தில் இருந்து எழுந்து அதற்கு வெள்ளைக் கம்பளம் விரித்து அதனைத் அந்தத் தேரர் அமர்வதற்கு வழங்க வேண்டும். 2500 வருடங்கள் இருந்த பாரம்பரியங்கள் சுமார் ஆங்கிலேயரின் நூறு வருட ஆட்சியில் மாறிப் போகாது என்பதனை இவ்வாறான ஊடகவியலாளர்களும் இவ்வாறான ஊடகங்களும் உணர வேண்டும். கடந்த ஆட்சியில் தேரர்களுக்கு தொந்தரவுகள் ஏற்பட்ட நிலையில் “தேரர்கள் பிரதேசத் தலைவர்கள் போன்று வரலாற்றில் இருந்தே இலங்கையில் இருந்தனர். அவர்களுக்கு இந்த ஆட்சியில் தொல்லைகள் நடக்கின்றது” என்று தற்போதைய அமைச்சர் அர்ஜூண ரணதுங்க அன்று தெரிவித்தார். பாராளமன்ற உறுப்பினர் ஒருவருக்கோ அல்லது அமைச்சர் ஒருவருக்கோ ஆற்ற முடியாமல் இருந்த காரியங்களை தேர்கள் ஆற்றிய வரலாறுகளும் இலங்கையில் இருக்கின்றன.

தேரர்களின் செல்வாக்கே இவ்வாறு இருக்கின்ற நிலையில் ஞானசார தேரர் சிங்கள மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு வாய்ந்தவராக இருக்கின்றார். குறிப்பாக அவர் சிங்கள இளைஞர்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு வாய்ந்தவராக இருக்கின்றார். அவர்கள் மீதெடுவத்தே குணாநந்த தேரர்இ அநாகரிக தர்மபால போன்றௌரை ஒத்த ஒரு வீரராகவே அவரைக் கருதுகின்றனர். இதற்கு அவர்களுடைய முகப் புத்தகங்கள் சான்று பகர்கின்றன. முஸ்லிம்களுக்கு எதிராகச் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிடும் ஞானசார தேரர் பெரும்பான்மை மக்கள் மத்தியில் இவ்வாறு செல்வாக்கைப் பெற்றுக் கொண்டு வருவது முஸ்லிம்களின் எதிர்காலம் தொடர்பான அவதான நிலமைகளை தோற்றுவிக்கும் அச்சுறுத்தல்கள் காணப்படுகின்றன. நல்லாட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு துணிச்சல்கரமாக வெளியேறிய அமைச்சர் துமிந்த திசாநாயக கடந்த 14ஆம் திகதி கைது செய்யப்பட்ட ஞானசார தேரரை சுகம் விசாரிப்பதற்கு கடந்த 20ஆம் திகதி வெலிகடை சிறைச்சாலைக்குச் சென்றார். அங்கே “வெள்ளிக் கிழமைக்கு இடையில் ஞானசார தேரரை வெளியில் கொண்டு வருவோம்” என்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்து இருக்கின்றார். ஞானசார தேரருக்கு கடந்த 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிணை வழங்கப்பட்டது. பல முக்கியமான அரசியல்வாதிகள் ஞானசார தேரர் சிறையில் இருக்கும் போது அவரைச் சுகம் விசாரிப்பதற்கு சென்றிருக்கின்றனர். இது ஞானசார தேரர் அரசியல் மட்டத்தில் செல்வாக்குப் பெற்றுக் கொண்டு வருகின்றார் என்று காட்டுகின்றது.

இவ்வாறான இன்னும் சில எழுத்தாளர்கள் தம்முடைய கட்டுரைகளின் மூலம் ஞானசார தேரருக்கு பௌத்த சமயம் தொடர்பாகப் போதனை செய்கின்றனர். அன்பு, ஜீவகாருண்யம், அகிம்சை என்பவற்றின் அடிப்படையில் பௌத்த சமயம் எழுப்பட்டுள்ளது என்றும் அவற்றுக்கு எதிராக செயற்படும் ஞானசார தேரர் பௌத்தத் துறவி அல்ல என்றும் துறவிச் சமூகத்தைச் சார்ந்த தீர்ப்புகளைக் அவர்கள் கொடுக்கின்றனர். இவர்கள் பௌத்த சமயத்தைச் சார்ந்தவர்களாகவோ அல்லது பௌத்த சமய மேதாவிகளாகவோ இல்லை. பௌத்த சமயம் தொடர்பாக இவர்கள் ஞானசார தேரருக்கு போதனை செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. பிரிவெனாவில் ஞானசார தேரர் கல்வி கற்கும் காலத்தில் பௌத்த சமயம் தொடர்பாக இவர்களை விட ஆழமாக அவர் கற்று இருப்பார். அவர் இவர்களுடைய இந்த பௌத்த சமயப் போதனைகளைக் கேட்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இவர்கள் தம்முடைய எழுத்துக்களைக் கொண்டு ஞானசார தேரர் ஒரு பௌத்த துறவி அல்ல என்று பிரஸ்தாபிக்க முற்பட்டாலும் அதனை சிங்கள மக்கள் ஏற்றுக் கொள்வதில்லை. தேசிய பிக்கு சம்மேளனம் ஞானசார தேரர் ஒரு பௌத்த துறவியாக இருப்பதன் காரணமாக அவருக்கு சிறைச்சாலையில் கட்டை காற்சட்டையை அணிய வைக்க வேண்டாம் என்றே வலியுறுத்தியது. மகாநாயக தேரர்கள் ஞானசார தேரரை பிக்கு சமூகத்தில் இருந்து நீங்கிய ஒருவராக கருதவில்லை. மாறாக தேரர்களை அவமதிக்கின்ற கருத்துக்களைச் சொல்ல வேண்டாம் என்று அரசியல்வாதிகளை வலியுறுத்தினர். இந்த நிலையில் இவ்வாறான ஊடகவியலாளர்கள் முஸ்லிம்களுக்கு மத்தியில் ஞானசார தேரர் ஓரு தேரரல்ல என்று தம்முடைய பேனைகளைக் கொண்டு பிரஸ்தாபிக்க முயற்சிக்கின்றனர். ஞானசார தேரர் துறவிச் சமூகத்தைச் சார்ந்தவராக இருக்கின்றாரா அல்லது சாராதவராக இருக்கின்றாரா என்பது முஸ்லிம்களின் பிரச்சினை அல்ல. அவதானிக்க வேண்டியதை அவதானிக்க வேண்டும். அதனை எழுத வேண்டும். அநாவசியமானதை அவதானித்து அதனை எழுத வேண்டிய அவசியம் இல்லை.

ஆரம்ப காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராகச் செயற்பட்டவர்களுக்கு எதிராக முஹம்மத் (ஸல்) அவர்கள் கட்டுரைகளை எழுதவும் இல்லை. அவர்களை எடுத்த எடுப்பிலே தாக்கவும் இல்லை. முஹம்மத் (ஸல்) அவர்களை கொலை செய்வதற்கு அவரை தேடி அலைந்த உமர் (ரழி) அவர்களுக்கு நேர் வழியை அறிவிக்குமாறே அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார்கள். அவர்கள் கஃபாவில் தொழுகையில் இருக்கும் போது தலையிலே குப்பைகளைக் கொட்டிய மூதாட்டியின் பொருட்களை அவர்கள் தன்னுடைய தலையின் மீது வைத்து சுமந்து கொண்டு சென்றார்கள். தாயிபில் அவர்களுக்குக் கல்லால் அடித்தவர்களுக்கு நேர்வழியை அறிவிக்குமாறே அல்லாஹ்விடம் பிரார்தனை செய்தார்கள். ஹூதைபியா உடன் உடன்படிக்கைக்கு மக்கத்துக் காபீர்கள் முறித்த பின்னரே அவர்கள் போர்களைச் செய்தார்கள். முஹம்மத் (ஸல்) அவர்களும் ஆரம்பகால முஸ்லிம்களும் அனுபவித்த வேதனைகளை அனுபவிக்கும் நிலைகள் இன்னும் ஏற்படவில்லை. தொழுது கொண்டு இருக்கும் போது ஞானசார தேரர் குப்பைகளைக் கொண்டு வந்து முஸ்லிம்களின் தலையில் கொட்டவில்லை. முஸ்லிம்களை நோக்கிய ஞானசார தேரரின் அதிகமான குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவையாக இருந்தாலும் ஒரு சில குற்றச்சாட்டுகளில் உண்மைகள் இல்லாமலும் இல்லை. முன்னோரின் சிறந்த முன்மாதிரிகள் இருக்கும் முஸ்லிம்கள் ஞானசார தேரரின் விடயத்திலும் பௌத்த கடும் போக்குவாத அமைப்புக்களின் விடயத்திலும் கருத்துக்களைத் தெரிவிக்கும் போதும் கருத்துக்களை எழுதும் போதும் அவதானமாகவும் பொறுப்புடனும் செயற்படுவது அவசியமானதாகும். அதிகமான முஸ்லிம் சமயத் தலைவர்கள் முஸ்லிம்களை பிழையாக வழிநடத்துவது போல் முஸ்லிம்கள் சார்பாக கருத்துக்கள் வெளியிடும் ஊடகங்களுக்கும் முஸ்லிம்கள் சார்ந்த ஊடகங்களுக்கும் அதிகமான முஸ்லிம் ஊடகவியலாளர்களும் முஸ்லிம்களை பிழையாக வழிநடத்தக் கூடாது. எதிர்காலம் மிகவும் அவதானமாக இருக்கின்ற நிலையையே எதிர்வு கூறுவதற்கு முடியுமாகக் காணப்படுகின்றது. இந்நிலையில் இவர்கள் முஸ்லிம் சமூகத்தை சவச்சாலைக்கு வழி காட்டினார்கள் என்பது போன்ற குற்றச்சாட்டுக்கள் வரக்கூடாது.

ஒரு போர் வீரனின் வாளை விட ஒரு எழுத்தாளனின் பேனையின் நுனி கூர்மையானது என்று முஹம்மத் (ஸல்) அவர்கள் சொன்னார்கள். அந்தக் கூற்றை முஸ்லிம்கள் சார்பாக கருத்துக்கள் வெளியிடும் ஊடகங்களுக்கும் முஸ்லிம்கள் சார்ந்த ஊடகங்களுக்கும் அதிகமான முஸ்லிம் ஊடகவியலாளர்களும் மேற்கோள் காட்டி இந்தக் கட்டுரையை நிறைவு செய்கின்றேன். பேனைகளைக் கொண்டு தலாட்டுப் பாடல்களை மாத்திரம் எழுதுவதால் எந்தப் பயனும் இல்லை என்று கூறி இந்தக் கட்டுரைக்கு முற்றுப்புள்ளி வைக்கின்றேன். (நு)

– பிதாமகர் பீஷ்மர் –

One comment

  1. சிறந்த கட்டுரை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>