விஜயகலா மீது கல்லெறிந்ததன் பின்னர்…


vijayakala

இப்போது அனைவரும் ஒன்றிணைந்து இராஜாங்க அமைச்சர் விஜயகலா மஹேஷ்வரன் மீது கல் எறிந்து முடித்துவிட்டனர். பாராளுமன்றத்தின் 224 பேரும் ஒரே பக்கத்தை எடுத்து விஜயகலாவுக்கு கல் எறிந்ததாக அரசியல் ஆய்வாளரொருவர் எமக்கு தெரிவித்தார்.

இலங்கையின் சட்டப்படி, விஜயகலா மஹேஷ்வரன் தவறொன்று புரிந்துள்ளதாக அவர்கள் கூறுகின்றனர். அது, நாட்டில் தடைசெய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பு மீண்டும் புத்துயிர் பெறவேண்டுமென்று பொதுத்தளத்தில் கூறியதாகும். யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் அமைச்சர் வஜிர அபேவர்தனவும் கலந்துகொண்டிருந்த நிகழ்வில் அவர் அவ்வாறு கூறியதால், அனைவரும் அவருடன் மோதிக்கொண்டு அரசியல் ரீதியாக அவரை கொலை செய்கின்றனர். மேலும் நடவடிக்கைகள் தொடர்கின்றன.

அண்மையில் கொல்லப்பட்ட சிறுமியின் விடயத்தில் ஆவேசம் மற்றும் வேதனையடைந்தே விஜயகலா உரையாற்றியிருக்கக் கூடும். விடுதலைப் புலிகள் அமைப்பு இருந்திருப்பின் இவ்வாறு நடந்திருக்காது என அவர் கூறிய கருத்து விமர்சனத்துக்குள்ளாகினாலும், 88-89 காலத்தில் தேசப்பற்றுள்ள மக்கள் செயற்பாடுகள் பலம்பெற்றிருந்த போது, தெற்கு சிங்கள மக்களும் இவ்வாறான எண்ணத்தில் இருந்ததை மறந்துவிடக்கூடாது.

தேசப்பற்றுள்ள மக்கள் இயக்கத்தில் மதுபானம் (கசிப்பு) தயாரிக்கவும், பெண் கற்பழிப்புகளுக்கும் இடமில்லை. பெண்கள் பயமின்றி பாதையில் செல்லலாம் போன்ற கதைகளை அப்போது கேட்கக் கிடைத்தது. கதை உண்மையாக இருக்கவும் கூடும். உலக நாடுகளில் உருவாகும் கெரில்லா நடவடிக்கைகள் மக்கள் ஆதரவைப் பெறும் வேலைகளைச் செய்வதாகும். குற்றங்களுக்கு இடமில்லை என்று கூறுவதாகும். குற்றங்களுக்கு தண்டனை மரணம் என்று குற்றவாளிகளும் பயந்திருப்பர். விடுதலைப் புலிகள் பலம் பெற்றிருந்த காலத்தில் வடக்கில் நடைபெற்றதும் அதுவே. எனினும், விடுதலைப் புலிகள் சிறிது ஜனநாயக முறையில் அவர்களுக்கென குற்றச் சட்டங்களை உருவாக்கி, நீதிமன்ற முறையொன்றையும் செயற்படுத்திச் சென்றனர். பொலிஸ் சேவையொன்றும் இருந்தது. அப்போதும் வடக்கில் குற்றங்கள் இருக்கவில்லை என்று கூறுபவர்கள் இல்லை.

சிறுமியொருவர் கொலை செய்யப்பட்டதற்கு ஆவேசமாக பேசிய விஜயகலாவுக்கு, கடந்த காலத்தில் சிறுமி வித்தியா கொலையாளிகளை காப்பாற்றிய குற்றச்சாட்டொன்றும் இருப்பதை சிலர் நினைவூட்டினர்.

தனி நாட்டுக்காக போராடி, தடை செய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் மீண்டும் புத்துயிர் பெறவேண்டுமென்று கூறிய விஜயகலா விடயத்தை விசாரணை செய்யுமாறு சபாநாயகர் சட்ட மா அதிபரைக் கோரியுள்ளார். பிரதமர் கூறியது போன்று, பொலிஸ் அதிகாரிகள் 600 பேரை கொலை செய்த கருணாவுக்கு கட்சியின் உப தலைவர் பதவி கொடுத்தவர்கள், விஜயகலாவுக்கு எதிராக ஆயுதமேந்தியுள்ளனர். 2005ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கு கப்பம் வழங்கி, ஆட்சிக்கு வந்தவர்கள் விஜயகலாவை எதிர்க்கின்றனர். அவருக்கு எதிராக நடவடிக்கையெடுக்க கட்சி தீர்மானித்துள்ளதாகவும் பிரதமர் பாராளுமன்றில் தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சியினரும் அவரை எதிர்த்தனர். இப்போது அவரது அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. வெளிப்படையாக பார்க்கும் போது விஜயகலா அரசியலமைப்புக்கு முரணாக செயற்பட்டுள்ளதாக எவராலும் கூறலாம். எனினும் அரசியலமைப்பின் வசனங்களுக்கு சென்று பார்க்க வேண்டும்.

ஆறாவது திருத்தத்தின் மூலம் அரசியலமைப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ள 157(அ) பகுதியின்படி, இலங்கை தேசத்தினுள் வேறொரு தேசத்தை உருவாக்க, வெளிப்படையாக அல்லது மறைமுகமாக, இலங்கையினுள் அல்லது அதற்கு வெளியே உதவியளித்தல், பலமளித்தல், ஆதரவளித்தல், பணம் வழங்கல், நம்பிக்கையூட்டல் மற்றும் சொற்பொழிவாற்றல் என்பன எவராலும் மேற்கொள்ளப்படலாகாது. இந்த விதிமுறைகளை மீறுவோரை குற்றஞ்சாட்டி, வழக்கு விசாரணையின் பின்னர், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் குற்றவாளியாக பிரகடனப்படுத்தப்படின் 7 வருடங்களுக்கு குறைந்த கால குடியுரிமையை இரத்து செய்யலாம். உயிர் வாழ்வதற்கு அத்தியாவசியமானவை என நீதிமன்றம் தீர்மானிக்கும் விடயங்கள் தவிர ஏனைய அசையும், அசையா சொத்துக்களை அரசுடமையாக்கலாம். பாராளுமன்ற உறுப்பினர் பதவியும் இல்லாது போகும்.

அரசியலமைப்பின் 6ஆவது திருத்தத்திற்கு அமைய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் வழங்கும் சத்தியப் பிரமானம், “… ஆகிய நான் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பை பாதுகாத்து, பின்பற்றுவேன் என்றும், இலங்கை தேசத்தினுள் வேறொரு தேசத்தை உருவாக்க, வெளிப்படையாக அல்லது மறைமுகமாக, இலங்கையினுள் அல்லது அதற்கு வெளியே உதவியளித்தல், பலமளித்தல், ஆதரவளித்தல், பணம் வழங்கல், நம்பிக்கையூட்டல் மற்றும் சொற்பொழிவாற்றல் என்பன மேற்கொள்ள மாட்டேன் என்று மரியாதையுடன் சத்தியப் பிரமானம் செய்கின்றேன்”.

விஜயகலாவின் பகிரங்க உரையில், இலங்கை தேசத்தினுள் வேறொரு தேசத்தை உருவாக்க, வெளிப்படையாக அல்லது மறைமுகமாக, இலங்கையினுள் அல்லது அதற்கு வெளியே உதவியளித்தல், பலமளித்தல், ஆதரவளித்தல், பணம் வழங்கல் மற்றும் நம்பிக்கையூட்டல் போன்றவற்றை செய்யவில்லையென்று எவராலும் கூறலாம். அதுவிடயத்தில் சொற்பொழிவாற்றவும் இல்லை. விடுதலைப் புலிகளுக்காய் கதைத்தார் எனக் கருதினாலும், இப்போது விடுதலைப் புலிகள் அமைப்பு இல்லை. அதனால், அவ்வமைப்புக்கு உதவ முடியாது. அது தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலில் உள்ளது. விடுதலைப் புலிகள் உள்ள காலத்தில் மேற்கொள்ளப்பட்ட உரையாக கருதியே அதிகமானோர் முடிவுக்கு வருகின்றனர். எதிர்காலத்தில் விடுதலைப் புலிகள் உருவாகினால் என்ற முடிவில் கதைக்கின்றனர். மீண்டும் புலிகள் உருவாகுதல், அது குறித்த பீதியை சமூகத்தில் உருவாக்குதல் அல்லது இதுவிடயத்தில் தேவையுள்ளது யாருக்கு என்பது தெளிவு. அவ்வாறானவர்களின் தேவைக்கு ஏனையவர்கள் ஆடுவதே இப்போது நடைபெறுகின்றது.

அவர் அரசியலமைப்புக்கு முரணாக செயற்பட்டுள்ளார் என்பதை, வழக்கைத் தொடர்ந்து நீதிமன்றமே தீர்மானிக்கும். விமல் வீரவன்சயோ, ரணில் விக்ரமசிங்கவோ அல்லது மஹிந்த ராஜபக்ஷவோ அல்ல. எனவே, இதுதொடர்பாக பாராளுமன்றத்தில் அல்லது வெளியே இடும் கூச்சல்கள் அர்த்தமற்றவை.

நிவ்யோர்க் டைம்ஸ் வெள்ளப்பெருக்கில் அடிபட்டுச் செல்லும்போது கிடைத்த புற்பதரொன்றாக கூட்டு எதிரணியினர் விஜயகலாவின் உரையை நோக்கினர். பொது மக்கள் செலுத்தவேண்டிய கடனில் ராஜபக்ஷக்களின் தேர்தல் பணிகளுக்கு 7.6 மில்லியன் டொலர்கள் பெற்றதாக கூறும் நிவ்யோர்க் டைம்ஸ் கதையால் பின்னடைந்திருந்தவர்கள் விஜயகலாவுக்கு எதிராக பாராளுமன்றத்திலும், வெளியிலும் கூச்சலிட ஆரம்பித்தனர்.

ஐக்கிய தேசிய கட்சி வலையில் சிக்கியுள்ளது. பிரிவினைவாதிகளின் தேவைக்கேற்ப செயற்படும் அரசாங்கம் என்ற எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டிலிருந்த தப்பிக்க வழியின்றி இருக்கும் தோல்வியடைந்த கட்சி. விஜயகலாவின் கூற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைக்கு விழுந்த இடியாகவே உள்ளது. இதனால், ஏனையோருடன் இணைந்து கட்சியும் விஜயகலாவுக்கு கல் எறிந்தனர். விஜயகலாவை பாதுகாக்க வசனமொன்றேனும் கூறுவது தற்கொலைக்கு சமம். பிரதமர் அவ்விடயத்தில் இருந்தே ஆரம்பித்தார்.

ஜனாதிபதி சிறிசேன இவ்விடயமாக என்ன நிலைப்பாட்டில் உள்ளார் என்பது தெரியாது. அவர் கருத்து தெரிவிக்கும் போது அது எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்துமென்று பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.
இப்போது கசப்பான உண்மைக்கு வருவோம். விஜயகலாவின் வீரசிங்கம் மண்டப உரை, அரசாங்கத்தின் முக்கிய இரு அமைச்சர்களுக்கு முன்னால் கூறிய வெளிப்படையான உரையாகும். சிங்களத்துக்கு மொழிபெயர்த்தபோது, அவர் அங்கே 1144 சொற்கள் கதைத்துள்ளார். எனினும், இந்த சர்ச்சைக்குரிய கதை 66 சொற்களைக் கொண்டது. பிரிவினைவாத, தேசப்பற்றுள்ளவர்கள் 66 சொற்களுக்காகவே நாட்டை தீவைத்து, விஜயகலாவுக்கு கல் எறிய ஆரம்பித்தனர்.

எனினும் அவரது முழு உரையிலும் கூறப்பட்டது என்ன? வடக்கு மக்களின் காணிகள் மீளக் கையளிக்கப்பட்டதுக்கு நன்றி தெரிவித்த அவர், அரசாங்கம் வடக்கு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மீறியதைக் கூறினார். பெண்களின் துன்பங்களை அறிந்துள்ள இன்னொரு பெண்ணாக கவலைகளை கூறினார். அவரது முழு உரையும் தான் அங்கம் வகிக்கும் அரசாங்கத்தை குற்றம்சாட்டுவதற்காகவே ஒதுக்கப்பட்டிருந்தது. அவரது குற்றச்சாட்டுக்களை ஒவ்வொன்றாக பார்ப்போம்.

1. ஜனாதிபதி அவரது கட்சியை முன்னேற்றுகிறாரே தவிர எங்கள் மக்களை பாதுகாப்பதில்லை.
2. எமது இளைஞர், யுவதிகளுக்கு தொழில்வாய்ப்பில்லை.
3. யுத்தத்தைத் தொடர்ந்து அரசியல்வாதிகளின் வாகனங்களிலேயே வடக்குக்கு போதைப்பொருட்கள் வந்தன. 4. யுத்தத்தால் கணவரை இழந்த குடும்பங்களுக்கு ஜீவனோபாய வழிகள் உருவாக்கப்படவில்லை.
5. சீர்திருத்தப்பட்ட 12,000 முன்னாள் போராளிகளுக்கு ஜனாதிபதி எதுவும் செய்யவில்லை. அவர்களுக்கு ஏதாவது மேற்கொள்ள வேண்டுமென்று வந்த அமைச்சரவை அனுமதியையும் தெற்கு வாக்குகளை இலக்குவைத்து நிராகரித்தார்.
6. வடக்கு பதவி வெற்றிடங்களை தெற்கு இளைஞர்களுக்கே வழங்கப்பட்டுள்ளது.
7. அபிவிருத்தி, தொழில் மற்றும் பதவியுயர்வுகளிலும் ஏனைய பிரதேசங்களுக்கே முதலிடம்.
8. தென்மராட்சிக்கு பிரத்தியேக பிரதேச சபை அமைத்துத் தரும் கோரிக்கைக்கு தீர்வு இல்லை.
9. மாகாண சபைக்கு ஒதுக்கப்படும் நிதியும் அரச திறைசேரியைச் சென்றடைகின்றன.
10. ஜனநாயக நாட்டில் குறித்த நேரத்தில் தேர்தல்கள் நடைபெற வேண்டும்.

விஜயகலாவுக்கு கல் எறிந்தவர்கள் இவ்விடயங்கள் குறித்து கூறுவது என்ன? இவை உண்மையா? பொய்யா? இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களின் அரசியல் பிரதிநிதியாக இருக்கும் அவரது துக்கங்களை வெளிப்படையாக கூறுவது தவிர, எஞ்சியுள்ளது என்ன?

அவரது முழு உரையும் ஜனாதிபதி, பிரதமர் மீது மேற்கொண்ட குற்றச்சாட்டுக்களாகும். துரதிஷ்டவசமாக, அங்கு குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவரான பிரதமரே அவருக்கெதிராக நடவடிக்கையெடுப்பதாக எச்சரித்துள்ளார். சுதந்திர மனப்பாங்குடன் இருப்பவர் எனக் கூறிக்கொள்ளும் அவரது சிந்தனையும் இதனை அரசியல் விமர்சனமாக பாராது, ராஜபக்ஷவினரைப் போன்று சட்டத்தின் எழுத்துக்களால் தீர்வுகண்டு, கரைந்துகொண்டிருக்கும் சிங்கள பௌத்த வாக்குகளை எவ்வாறேனும் பாதுகாத்துக்கொள்வதே.
பெரும்பான்மை சிங்கள பௌத்த வாக்குகளை இலக்குவைத்து அடிக்கடி விகாரைகளில் பயத்துடன் இருக்கும் அரசியல்வாதிகள், விஜயகலாவின் 66 சொற்களுக்கு கல் எறிய அவசரப்பட்டது ஆச்சரியமல்ல.

எனினும், அவரை குற்றவாளிக் கூண்டிற்குள் அனுப்பிய பின்பேனும் அவரது ‘பிழையான வசனத்தின்’ பின்னணியில் உள்ள ‘சரியான உண்மைகளை’ ஆழமாக பார்த்து, தமிழ் மக்கள் பிரச்சினைக்கு சாதாரண தீர்வொன்றைப் பெற்றுக்கொடுக்க அரசியல்வாதிகள் முயற்சியெடுக்க வேண்டும்.

நன்றி – ‘அனித்தா’
(தமிழில்: ஆதில் அலி சப்ரி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>