“வெகுமதியுடனான முதலீட்டிற்கு ஓர் வழிகாட்டி” – ஹட்டனில் பயிற்சிப்பட்டறை


cse

கொழும்பு பங்குப்பரிவர்த்தனையின் இரத்தினபுரி கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “வெகுமதியுடனான முதலீட்டிற்கு ஓர் வழிகாட்டி” எனும் தொனிப்பொருளிலான பங்குச்சந்தை தொடர்பான தமிழ் மொழி மூல கல்விசார் பயிற்சிப்பட்டறை இம்மாதம் எதிர்வரும் 21 (21.07.2018) ஆம் திகதி சனிக்கிழமை மு.ப 09.30 மணி தொடக்கம் பி.ப 02.30 மணி வரை ஹட்டன் சீடா வளநிலைய கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த கொழும்பு பங்குப்பரிவர்த்தனையின் இரத்தினபுரி கிளை முகாமையாளர் ஆர்.எம். சிவானந்தன்;

எந்தவொரு முதலீட்டு செயற்பாட்டிலும் தகவல்களைத் திரட்டுவது இன்றியமையாததாகும் விசேடமாக பங்கு முதலீடுகளில் முதலீடு செய்யும் கம்பனிகளில் நன்கு தகவலறிந்திருப்பதற்கு தயாராயிருத்தல் வேண்டும் முதலீட்டில் பாதிப்பினை ஏற்படுத்தக்கூடிய நாட்டில், துறையில் மற்றும் வேறிடங்களில் என்ன நடைபெறுகின்றது என்பதை உணர்ந்திருத்தல் அவசியம் கம்பனிகளின் ஆண்டறிக்கைகள், நிதிக்கூற்றுக்கள், ஏனைய கூற்றுக்களை பகுத்தாராய்வு செய்யும் அடிப்படை திறனை, முதலீடு செய்துள்ள கம்பனி எவ்வாறு செயற்படுகின்றது, அதற்கேற்ப அதன் விலை எவ்வாறு மாற்றமடையலாம் என்பதை புரிந்துகொள்வதற்கான தகவல்களை பெற்றிருத்தலும் வேண்டும்.

எனினும் சில முதலீட்டாளர்கள் எவ்வித தகவல்களையும் பெற்றுக்கொள்ளாமல் பங்குகளில் முதலீடுகளை மேற்கொண்டு சில வேளைகளில் நட்டத்தையும் அடைகின்றனர். எனவேதான் விவேகமுள்ள முதலீட்டாளர்கள் நல்ல தகவலறிந்தவர்கள் எனக் கூறப்படுகின்றது. ஒரு விவேகமுள்ள முதலீட்டாளராயின் எங்கே முதலீடு செய்வது என்று தீர்மானிப்பதற்கு முன்னர் முதலீட்டுக் குறிக்கோள் என்ன என்று தீர்மானித்தல் வேண்டும், குறிக்கோள் தீர்மானிக்கப்பட்டதன் பின்னர் அதனை அடைவதற்கான வழிமுறைகளை கண்டறிய வேண்டும் அத்துடன் சந்தையில் எவ்வகையான முதலீட்டுக் கருவிகள் காணப்படுகின்றன என்பதையும் அவற்றில் நோக்கத்தை அடைவதற்கான சிறந்த முதலீட்டுக் கருவி எது எனவும் தெரிந்து கொள்ளுதல் வேண்டும் என்பதுடன் முதலீட்டுக் குறிக்கோளை நிர்ணயித்த பின்னர் தங்களது தேவைக்குப் பொருத்தமான முதலீட்டுத் தேக்கத்தை உருவாக்கக் கூடிய ஆற்றலையும் முதலீட்டாளர்கள் கொண்டிருக்க வேண்டும். இவ்வாறான விவேகமுள்ள முதலீட்டாளர்களை உருவாக்கும் நோக்குடனும் தற்போதைய முதலீட்டாளர்கள் மத்தியில் பங்கு முதலீடு தொடர்பான சிறந்த அறிவினை ஏற்படுத்தும் முகமாகவுமே இவ்வாறான கல்விசார் பயிற்சிப்பட்டறைகள் நாடளாவிய ரீதியாக நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்

இப்பயிற்சிப்பட்டறையில் பங்குகளில் முதலீடு பற்றிய அறிமுகம், பங்கு முதலீட்டினை ஆரம்பித்தல், கொழும்பு பங்குப்பரிவர்த்தனையின் இணையத்தளத்தினூடாக தகவல்களை பெற்றுக்கொள்ளல், பங்குகள் பற்றிய அறிமுகம், பட்டியல் படுத்தப்பட்ட கம்பனிகள் உள்ளிட்ட பல விடயங்கள் கலந்துரையாடப்படவுள்ளதாவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

பயிற்சிப்பட்டறை மற்றும் பதிவுகள் தொடர்பான மேலதிக விபரங்களுக்கு கொழும்பு பங்குப்பரிவர்த்தனையின் (www.cse.lk ) இணையத்தளத்தைப் பார்ப்பதன் மூலம் அல்லது 075-2352929, 045-2232388 எனும் தொலைபேசி இலக்கத்தினூடாக கொழும்பு பங்குப்பரிவர்த்தனையின் இரத்தினபுரி கிளை முகாமையாளரை தொடர்புகொள்வதன் ஊடாக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.

– ராபி சிஹாப்தீன் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>