வடக்கில் சமுர்த்தி பயனாளர்களை அதிகரிக்க நடவடிக்கை – பிரதியமைச்சர் காதர் மஸ்தான்


K. Kader Masthan

இறுதி யுத்தத்தில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டம் உட்பட வட மாகாணத்துக்கான சமுர்த்தி பயனாளர்களை அதிகரிக்க நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மீள் குடியேற்ற புனர்வாழ்வு மற்றும் வடக்கு மாகாண அபிவிருத்தி பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.

சமூக வலுவூட்டல் அமைச்சினூடாக சமுர்த்தி பயனாளிகளின் குறைகளை அறிந்து அவர்களது தேவைகளை நிவர்த்தி செய்யும் முகமாக மேற்கொள்ளப்படும் முதலாவது நிகழ்வு முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் தலைமையில் இன்று மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதியமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் பிரதியமைச்சர் மஸ்தான் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

யுத்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் அதிக குடும்பங்களை கொண்ட மாவட்டங்களில் முல்லைத்தீவும் ஒன்றாகும்.

அந்த அடிப்படையில் புதிதாக வழங்கப்படவுள்ள 150000 சமுர்த்தியில் முல்லைத்தீவு மாவட்டம் உட்பட வட மாகாணத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் அதிகமான பயனாளர்கள் உள்வாங்கப்படுவார்கள் என சமூக வலுவூட்டல் அமைச்சர் ஹரிசன் அவர்கள் வாக்குறுதி வழங்கியுள்ளார்.

அந்தவகையில் அமைச்சர் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவிப்பதோடு அந்தந்த பிரதேச சமுர்த்தி கிளைகள் ஊடாக அதிகாரிகள் தேவையின் அடைப்பிடையில் பயனாளர்களைத் தெரிவு செய்யுமாறும் கேட்டுக்கொள்கின்றேன்.

உண்மையிலேயே வறுமைக்கோட்டின் கீழ் உள்ள குடும்பங்களுக்கு சமுர்த்தி வழங்கப்படுவது அவர்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்தி ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு பின்னர் அவர்களுடைய சமூர்த்திய இரத்து செய்து மற்றுமொரு பாதிக்கப்பட்டவருக்கு வழங்கப்படுவதே நோக்கமாகும்.

எனினும் ஒரு சில குறிப்பிட்ட நபர்கள் அவ்வாறு நீங்கிக்கொள்வது இல்லை என்பதுடன் நல்ல நிலையிலுள்ள சிலரும் சமுர்த்திக்கு விண்ணப்பிக்கும் நிலையும் காணப்படுகின்றது. அவர்கள் மனசாட்சியின் அடிப்படையில் ஏழைகளுக்கு விட்டுக்கொடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுகின்றேன்.

அத்துடன் வன்னி மாவட்ட மக்கள் விவசாயத்தை ஜீவனோபாயமாக கொண்டு வாழ்வதால் கடந்த இரண்டு வருடங்களாக போதுமான மழை இன்மையால் அதிகமான நல்ல நிலையில் வாழ்ந்த விவசாய குடும்பங்களும் இன்று சமுர்த்தி கொடுப்பனவுகளையும் , வறட்சி நிவாரணங்களையும் எதிர்பார்கும் சமூகமாக மாற்றப்பட்டுள்ளனர்.

இவ்வாறு வறட்சியாலும், வறுமையாலும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அமைச்சரவையில் விசேடமாக அமைச்சரவை பத்திரம் கொண்டுவரப்படுவதன் மூலம் இவர்களது வாழ்வாதாரம் உயர்த்தப்பட்டு எதிர்பார்ப்பில்லாத சமூகமாக இம்மக்களை உருவாக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் இந்த நிகழ்வுக்கு வருகை தந்த சமூக வலுவூட்டல் அமைச்சர் ஹரிசன் அவர்களுக்கு முல்லைத்தீவு மக்கள் சார்பாக தாம் நன்றியை தெரிவித்துக்கொள்வதாகவும் பிரதியமைச்சர் காதர் மஸ்தான் மேலும் தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் சிறப்பாக செயற்பட்ட சமுர்த்தி உத்தியோகத்தர்கள் பாராட்டி சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், சமுர்த்தி பயனாளிகளுக்கான கடனுதவிகளும் வழங்கிவைக்கப்பட்டன.

இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக சமூக வலுவூட்டல் அமைச்சர் பி.ஹரிசன், சிறப்பு விருந்தினராக பிரதியமைச்சர் காதர் மஸ்தான் கலந்துகொண்டதுடன் அவ்வமைச்சின் செயலாளர் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட பிரதேச செயலாளர்கள் , சமுர்த்தி வங்கிக் கிளைகளின் முகாமையாளர்கள் உள்ளிட்ட உயரதிகாரிகள் உத்தியோகத்தர்கள், மக்கள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.(ச)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>