சமூக பாதுகாப்புக்கான ஒரு அமுக்கக் குழுவே ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம்.!


SLMMF logo

எமது சமூகத்தின் வரலாற்றில் பல அமைப்புக்கள் காளான் போன்று முளைத்து முகவரி அற்றுப் போயிருக்கின்றன. அவை ஏன் செயலிழந்தன என்பதற்கு பல்வேறு பல்வேறு காரணங்களை பட்டியலிடலாம். ஆனால், எமது சமூகத்தில் கடந்த 22 வருடங்களுக்கு முன்னர் போட்ட ஒரு விதை முளைத்து வளர்ந்து விருட்சமாகியிருப்பது முஸ்லிம் சமூகம் பெற்ற ஒரு பாக்கியம் ஆகும்.

இந்த விதை வளர்வதற்கு பின்னணியாக இருந்த சக்திகளை பட்டியல்படுத்தி பெருமை பேசுவதைவிட அவற்றுக்காக பிரார்த்திப்பதுதான் இன்றைய காலத்தின் தேவையாகும் என்றால் அது மிகையாகாது. இவ்வாறு முட்டிமோதி தியாக நீர் ஊற்றி வளர்த்த அந்த மாபெரும் மரம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் என்ற அமைப்பேயாகும். இலங்கையில் அரசியல் ரீதியாகவும், சமூகத்திலும் செல்வாக்குப் பெற்று ஒரு அமுக்க சக்தியாக இந்த அமைப்பு செயற்படுகின்றது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 22ஆவது வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகத் தெரிவும் கடந்த 21 ஆம் திகதி கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர்கூடத்தில் நடைபெற்றது. அமைப்பின் தலைவர் என்.எம். அமீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பெருந்தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாசிம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

கௌரவ அதிதிகளாக இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி, பிரதி அமைச்சர் அலிசாஹிர் மௌலானா, பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், துருக்கி நாட்டின் தூதுவர் துன்கா ஒஸ்சுஹதார், பொதுஜன பெரமுன கட்சியின் தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், தேசிய ஐக்கிய முன்னணி தலைவர் அசாத் சாலி, சம்மாந்துறை பிரதேசசபை தவிசாளர் நௌசாத் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர். சிறப்பு பேச்சாளராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில பொதுச் செயலாளரும் தமிழ்நாடு கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான எம்.ஏ. முஹம்மத் அபூபக்கரும் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் தலைமையுரை ஆற்றிய அல்ஹாஜ் என்.எம். அமீன் அவர்கள், முஸ்லிம் மீடியா போரம் கடந்து வந்த முட்பாதைகளை நினைவு கூர்ந்தார். இவரது உரையில் கூறப்பட்ட சமூகக் கருத்துக்கள் அனைவரினதும் கவனத்தையும் ஈர்த்த ஒன்றாக காணப்பட்டது.

இந்த நாட்டில் கடந்த அரசாங்க காலத்தில் முஸ்லிம் சமூகம் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தது. குறிப்பாக முஸ்லிம்களின் இருப்பு பெரும் சவாலாக மாறியிருந்தது. எமது அமைப்பு, எம்மைப் போன்ற சகோதர அமைப்புக்களுடன் இணைந்து இந்நிலைமையை மாற்றியமைக்க பாரிய வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க முடியுமாக இருந்தது.

இன்று எமது நாட்டில் ஒரு சுமுகமான நிலைமை உருவாகியுள்ளது என்பதைக் காண முடிகிறதாயின், அதன் பின்னால் எமது அமைப்புடையவும் கடுமையான பிரயத்தனங்கள் மூலதனமாக இடப்பட்டுள்ளது என்பது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். இந்த 22 ஆவது வருடாந்த பொதுக் கூட்டத்துக்கு வருகை தந்துள்ள இவ்வமைப்பின் உறுப்பினர்கள், தங்களால் தெரிவு செய்யப்பட்ட தலைமை, உரிய கடமைகளை ஆற்றியுள்ளது என சந்தோசப்பட முடியும். சிலபோது நாம் முன்னெடுத்த நடவடிக்கைகளை பகிரங்கமாக சொல்ல முடியாமல் இருந்திருக்கிறது.

சிங்கள சமூகத்தவர்களிடத்தில் முஸ்லிம்கள் பற்றி பரப்பப்பட்டு வந்த தவறான செய்திகளை நீக்கி சரி செய்வதற்கு பல நடவடிக்கைகளை அமுக்கக் குழுவாக இருந்து கொண்டு முன்னெடுக்க வேண்டியிருந்தது.

நாம் இன்றும் எமது இருப்பு தொடர்பில் சிக்கலை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறோம் என்பதை இங்குள்ள அமைச்சர்களினதும், பாராளுமன்ற உறுப்பினர்களிதும் கவனத்துக்கு கொண்டு வருகின்றோம். எமது இருப்பு தொடர்பில் நாம் நம்பிக்கையிழந்திருக்கின்றோம். இந்த நிலைமையைப் போக்குவதற்கான ஒரு வேலைத்திட்டமொன்று இந்நாட்டுக்கு அவசியமானது. நாம் இலங்கையர்கள் என்ற எமது அடையாளத்தை பாதுகாத்துக் கொண்டு, முஸ்லிம் சமூகத்தின் மத அடையாளத்தை பாதுகாத்துக் கொண்டு வாழ விரும்பும் ஒரு மக்கள் தொகுதியாகும்.

நாம் வேறு எந்த எதிர்பார்ப்புக்களையும் வைக்கவில்லை. எமது பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியைப் பெற்றுக் கொள்வதற்கான ஒரு சூழல் காணப்படுவதாயின், எமது சமயக் கிரியைகளை ஒழுங்காக நிறைவேற்றிக் கொள்ள முடியுமாக இருக்குமாயின், எமது தொழில் நடவடிக்கைகளை பாதுகாப்பான முறையில் முன்னெடுக்க முடியுமாயின் இந்த அனைத்துடனும் இலங்கையின் முன்னேற்றத்துக்கும் அபிவிருத்திக்கும் பணியாற்ற முடியுமாயின் அது போதுமானது. இதற்காகத்தான் இலங்கையிலுள்ள முஸ்லிம் ஊடக அமைப்பாக இருந்து கொண்டு நாம் செயற்படுகின்றோம்.

இன்று முஸ்லிம்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துள்ளனர். இந்த அரசாங்கத்தை கொண்டுவருவதற்காக முஸ்லிம்கள் பாரிய அர்ப்பணிப்புக்களைச் செய்தனர். இருப்பினும், எமது சமூகம் இந்த அரசாங்கத்தினால் புறக்கணிக்கப்படுகின்றது என்ற கருத்து பரவலாக இருந்து வருகின்றது.

இங்கு அமைச்சர் கபீர் ஹாஷிம் இருக்கின்றார். அவருடைய கட்சியின் கடந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் மௌலவி ஆசிரியர் நியமனம் குறித்து குறிப்பிடப்பட்டிருந்தது. இருப்பினும், நான்கு வருடங்களை நெருங்கியுள்ளன. இதுவரையில் இது நிறைவேற்றப்படாத ஒன்றாகவே உள்ளது.

அதேபோன்று, இந்த நாட்டில் சம்பிரதாய ரீதியில் மாகாணங்களுக்கு ஆளுநர் நியமனங்களின் போது தமிழ், சிங்கள, முஸ்லிம் சமூகங்களிலிருந்து ஒருவர் நியமிக்கப்படுவது வழக்கம். எம்மால் இந்த அரசாங்க காலத்தில் அவ்வாறு ஒரு ஆளுநரை பெற முடியாமல் போயுள்ளது. எமக்கு அந்த பதவியல்ல முக்கியம். எமது சமூகத்துக்கு கிடைக்கும் கௌரவம் என்பதுதான் இங்கு நோக்கப்படுகின்றது.

இன்று ஒரு அமைச்சுக்காவது ஒரு முஸ்லிம் செயலாளர் நியமிக்கப்படாத நிலைமை உள்ளது. நாம் அமைக்குமாறு கோரவில்லை. ஆனால், அந்த கௌரவம் எமக்கு வழங்கப்படவில்லை. எமது சமூக இளைஞர்கள் இவற்றை வேறு கண்ணோட்டத்தில் பார்க்க முயற்சிக்கின்றனர். நாம் அவர்களை ஜனநாயக நீரோட்டத்தில் வைத்துக் கொள்வதற்கு முயற்சி எடுத்துக் கொண்டிருக்கின்றோம். இந்த நாட்டுக்கு துரோகம் இழைத்தவர்களாக எமது இளைஞர்களை மாற்ற தயாரில்லை.

இந்த நாட்டில் கடந்த 2 வருடங்களுக்கு முன்னரும் ஐ.எஸ்.ஐ.எஸ். செயற்பாட்டாளர்கள் குறித்து பேசப்பட்டது. அந்த நேரத்தில் உடனடியாக எமது அமைப்பு தலையிட்டு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அமைப்புடன் இணைந்து ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடாத்தி முஸ்லிம் சமூகத்தை தெளிவுபடுத்தினோம்.

இந்த அமைப்பு இஸ்லாத்தின் அடிப்படையில் தடை செய்யப்பட்ட ஒன்று என்று கூறினோம். இதனுடன் எந்தவொரு முஸ்லிம் இளைஞனும் தொடர்புபடவில்லையென்பதை எடுத்துக் கூறினோம். அது ஒரு சர்வதேச பயங்கரவாத அமைப்பு என ஜம்இய்யத்துல் உலமா சபையினால் பிரகடனப்படுத்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் பின்னால் இருந்து செயற்பட்டது.

சிலர் எம்மைப் பற்றி விமர்ஷனம் செய்கின்றனர். வருடாந்தம் ஒரு மாநாட்டைக் கூட்டி உணவைப் பரிமாறிவிட்டு கலைந்து செல்லும் ஒர் அமைப்பாக எம்மைக் காட்ட முயற்சிக்கின்றனர். தேசிய நடவடிக்கைகளில் நாம் ஆற்றிவரும் பணி குறித்து சிலபோது எம்மால் வெளிப்படையாக கூற முடியாமல் இருக்கும். நாம் எம்மை விமர்சிப்பவர்களிடம், எம்மை தவறான கண்கொண்டு பார்க்க வேண்டாம் என்பதை விநயமாக கேட்டுக் கொள்கின்றோம்.

நாம் எதிர்காலத்தில் இந்த அமைப்பை இளைஞர்கள் கையில் ஒப்படைத்து விட்டு செல்ல வேண்டியுள்ளோம். இந்த அமைப்பை ஆரம்பத்தில் 34 பேருடன் எடுத்து வந்துள்ளோம். இப்போது 22 வருடங்களைக் கடந்த நிலையில் இலங்கையிலுள்ள ஊடகவியலாளர்களில் 98 வீதமானவர்கள் அங்கத்தும் பெற்ற ஓர் அமைப்பாக வளர்ந்துள்ளது.

நாம் இந்நாட்டில் முஸ்லிம்களுக்கு மாத்திரம் செயற்படவில்லை. எமது வளவாளர்களைக் கொண்டு கிராமம் தோரும் சென்று 21 ஆம் நூற்றாண்டில் ஊடகத்துறையின் செல்வாக்கு குறித்து விழிப்புட்டல் கருத்தரங்குகளை முன்னெடுத்து வருகின்றோம். எம்மிடம் பணம் இல்லை. இருப்பினும், எம்மிடமுள்ள ஊழியர்கள் தங்களது திறன் மற்றும் செல்வாக்கு என்பவற்றைப் பிரயோகத்து இதனைச் செய்து வருகின்றனர்.

எமது ஊடகவியலாளர்கள் இன்னும் நாட்டுக்கு வெளியில் உள்ளனர். அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் இதற்குக் காரணமாக அமைந்துள்ளன. அத்தகையவர்கள் நாட்டுக்குள் வருவதற்கான சூழலை மீண்டும் உருவாக்கித் தரவேண்டும். அது இந்த அரசாங்கத்தினாலோ, எதிர் காலத்தில் அமையும் எந்த அரசாங்கத்தினாலோ அமைய வேண்டும் என்றே நாம் கூறுகின்றோம்.

நாட்டில் முஸ்லிம்களுக்கு என்று விசேட கவனிப்பு தேவை என்று கூறவில்லை. எமக்குக் கிடைக்க வேண்டியதை கிடைக்கச் செய்வதற்கு நடவடிக்கை எடுங்கள் என்றே கோருகின்றோம். இந்நாட்டின் பாராளுமன்றத்தில் 21 முஸ்லிம் உறுப்பினர்கள் உள்ளனர். இந்த பாராளுமன்ற உறுப்பினர்களை உருவாக்கிய பெற்றோர்களுக்கு மக்கள் ஏசும் அளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது. இதனால், தங்களது கடமைகளை நிறைவேற்றுமாறு நாம் பகிரங்கமாக வேண்டுகோள் விடுகின்றோம்.

எமது அமைப்புக்கு அரசியலில் பங்கு இல்லை. நாம் எந்த அரசியல் கட்சியின் பின்னாலும் செல்ல மாட்டோம். நாம் சுயாதீன அமைப்பாக செயற்பட்டு வருகின்றோம். முன்னாள் அமைச்சர் ஜி.எல். பீரிஸ் அவர்களும் எம்மோடு மிகவும் நெருக்கமாக பணியாற்றி வருகின்றார். அவர் ஒரு புதிய கட்சியின் தலைவராக உள்ளார்.

அந்தக் கட்சிலுள்ளவர்கள் கடந்த ஆட்சியில் இருக்கும் போதும் முஸ்லிம் சமூகம் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்தது. எதிர்வரும் காலங்களில் இது போன்ற அசம்பாவிதங்கள் இடம்பெறாமல் இருப்பதற்கு அவர் தலைமையிலான கட்சி பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். அந்த செய்தியை அவர் இந்த சபையில் அறிவிப்புச் செய்வார் என நாம் எதிர்பார்க்கின்றோம்.

எமக்கு நாட்டில் இன்னும் பல பிரச்சினைகள் உள்ளன. ஹஜ் தொடர்பில் தொடர்ந்தும் பல பிரச்சினைகள் உள்ளன. இதனைத் தீர்ப்பதற்கு ஒரு புதிய சட்டமொன்றை உருவாக்குமாறு நாம் வேண்டுகோள் விடுகின்றோம். அரசியல் தலையீடு இன்றி இந்த புனித கடமையை நிறைவேற்ற வழியமைக்குமாறு அமைச்சர் கபீர் ஹாஷிம் அவர்களைக் கேட்டுக் கொள்கின்றோம்.

தொழில் துறையை எடுத்துக் கொண்டாலும் எமக்குப் பிரச்சினையுள்ளது. இந்த நாட்டின் அரச துறைகளில் நூற்றுக்கு இரண்டு, மூன்று வீதமானோரே முஸ்லிம்கள் உள்ளனர். இந்நிலையில், முஸ்லிம் இளைஞர்களை வெளிச் சக்திகள் தவறாக வழிநடாத்த முயற்சித்தால் அவர்களை இலகுவாக கையாள முடியுமாக இருக்கும். இதனால், பிரத்தியேக வேலைத்திட்டமொன்று தேவைப்படுகின்றது. சகலருக்கும் சம அளவில் தொழில்வாய்ப்புக்கள் பிரிந்து செல்வதற்கு ஒழுங்குகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

இதனால், நாம் எமது நடவடிக்கைகளை முன்கொண்டு செல்ல ஓரணியாக நின்று செயல்படுவது காலத்தின் தேவையாகும். எம்மை மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நோக்க வேண்டாம் என்ற வேண்டுகோள் விடுகின்றேன் எனவும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் கௌரவ என்.எம். அமீன் அவர்கள் மேலும் கூறினார்.

இந்நிகழ்வில் பலர் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இந்தவகையில், சமூக மேம்பாட்டுக்கும் இன நல்லிணக்கத்துக்கும் பங்களிப்புச் செய்தமைக்காக மௌலவி ஏ.எல்.எம். இப்றாஹிம், தஹ்லான் மன்சூர் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இதுதவிர, நீண்டகாலம் ஊடகத்துறையில் பங்களிப்புச் செய்தமைக்காக தயா லங்காபுர, ரி. ஞானசேகரன், எம்.இஸட். அஹமட் முனவ்வர், எம்.ஐ.எம். சம்சுதீன், மௌலவி எஸ்.எம்.எம். முஸ்தபா, ஹம்ஸா ஹனீபா, ஸக்கியா பரீட் ஆகியோரும் கௌரவிக்கப்பட்டனர்.

இவ்வமைப்பு நாட்டில் ஆற்றி வரும் சேவைகள் என்ன என்பது சிலபோது வெற்றுப் பார்வைக்கு தெரியாமல் இருக்கும். கடந்த காலத்தில் சமூகத்துக்கு ஆற்றிய பணிகள் என்னவென்பதை சமூகம் ஒரு போதும் மறந்திருக்காது. சில விடயங்கள் சமூகத்தில்

அதன்பின்னர் 2018/2020 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகத்தெரிவு நடைபெற்றது. இதில் தலைவராக என்.எம். அமீன், பொதுச் செயலாளராக ஸாதிக் ஷிஹான், பொருளாராக ஜெம்ஸித் அஸீஸ் ஆகியோர் போட்டியின்றி ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டனர். செயற்குழுவுக்காக போட்டியிட்ட 32 பேரை தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் தலைமையில் நடைபெற்றது.

இந்த வாக்கெடுப்பில், எம்.பி.எம். பைறூஸ், ரிப்தி அலி, எம்.எப். ரிபாஸ், எஸ்.ஏ.கே. பலீலுர் ரஹ்மான், மௌலவி எஸ்.எம்.எம். முஸ்தபா, எம்.எஸ்.எம். ஸாஹிர், எஸ்.ஏ. அஸ்கர்கான், ஜாவிட் முனவ்வர், ஷாமிலா ஷரீப், ஏ.ஜே.எம். பிறவ்ஸ், புர்கான் பீ இப்திகார், ஐ.எம். இர்ஷாத், கலைவாதி கலீல், ஸமீஹா ஸபீர் மற்றும் ஆதில் அலி சப்ரி ஆகியோர் நடப்பாண்டு நிர்வாகத்துக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.  (மு)

  • தொகுப்பு – கஹட்டோவிட்ட முஹிடீன் இஸ்லாஹி

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>