அல்மனாரை அதிரவைத்த வளத்தாப்பிட்டி கோர விபத்து


accident shiyana teacher

கடந்த 28.07.2018 சனியன்று மாலை கிடைத்த விபத்து செய்தியொன்று என்னை அதிரவைத்தது என்று தான் கூற வேண்டும். அது ஹந்தஸ்ஸ அல்-மனார் தேசிய பாடசாலை ஆசிரியை ஷியானா மற்றும் அவரது கணவர் மொஹம்மத் லாபிரின் மரணச்செய்தியாகும். சம்மாந்துறை வளத்தாப்பிட்டி எனும் இடத்தில் இடம்பெற்ற கோர விபத்து இவர்களது உயிரைப் பலியெடுத்தது. மணல் ஏற்றிவந்த கனரக லொறியொன்றுடன் இவர்கள் பயணித்த வேன் நேருக்கு நேர் மோதியதில் இடம்பெற்ற விபத்தில் இருவரும் இவ்வுலகை விட்டு பிரிந்து சென்றனர். விபத்தின் கோர தாண்டவத்தை சமூக வலைத்தளங்களில் வந்த படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் மூலம்
கண்டுகொள்ள முடிந்தது. இந்த செய்தியை கேட்டு நான் மட்டுமல்ல முழு அல் மனார் சமூகமுமே
கதி கலங்கிப் போயிருந்தன.

சம்மாந்துறையில் கல்வி கற்க சென்றிருக்கும் தமது ஒரே அன்பு மக்களை விடுமுறைக்காக வீட்டுக்கு அழைத்துவர லாபிர் மற்றும் ஷியானா தம்பதியினர் அண்மையில் வாங்கிய தமது வேனில் அம்பாறை நோக்கி சென்றுள்ளனர். இம்முறை உயர் தர பரீட்சைக்கு இரண்டாவது முறையாக முகங்கொடுக்கவுள்ள தமது ஒரே மக்கள் பாதிமா உமைமாவை எவ்வாறாவது கல்வியில் கரைசேர்க்க வேண்டும் என்ற நோக்கில் சம்மாந்துறையில் உயர் கல்வியை பெறுவதற்காக அனுப்பியிருந்தனர். அடுத்தவாரம் இடம்பெறவுள்ள பரீட்சைக்கு தமது அன்பு மகளை அழைத்து வர சென்ற போதே இந்த கோர விபத்து இடம்பெற்றுள்ளது. கண்டியில் இருந்து பயணதித்த வேன் தமது மகள் தங்கியிருக்கும் இடத்துக்கு இன்னும் கொஞ்ச தூரமே உள்ள நிலையில் விபத்து இடம்பெற்று அவர்களது உயிர் பிரிக்கப்படுகின்றது. இதேவேளை, அவர்களுடன் பயணித்த அவர்களது உறவினர் சிறுவன் எம்.என்.எம். மின்ஹாஜ் பலத்த காயங்களுக்கு உள்ளாகுகின்றார்.

உடனே இவர்கள் அம்பாறை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படுகின்றனர். எனினும் கணவர் லாபிர் சம்பவ இடத்திலேயே உயிரிந்துள்ளார். குற்றுயிராக மீட்கப்பட்ட ஆசிரியை ஷியானா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். பலத்த காயங்களுக்குள்ளான சிறுவன் மின்ஹாஜ் அம்பாறை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

உலகில் பிறப்பவர்கள் அனைவரும் இறப்பது உறுதி, அதில் சந்தேகம் கொள்ளவே முடியாது. ஆனால் எவர் எந்த இடத்தில் மரணிப்பார் என்பதை எவரும் அறிந்ததில்லை. இதுவே யதார்த்தம். இந்த யதார்த்தமே ஆசிரியை சியான மற்றும் அவரது கணவர் லாபிர் உயிர் பிரிந்ததும். இதனை யாரும் அறிந்திருக்கவில்லை. இறைவன் ஒருவன் மாத்திரமே அதனை அறிந்து வைத்திருந்தான்.

இதனை கேள்விப்பட்ட அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உடனே அம்பாறைக்கு விரைந்தனர். அம்பாறை வைத்தியாசலையில் மேற்கொள்ளப்பட்ட மரண விசாரணைகளின் பின் ஜனாஸாக்கள் கடந்த ஞாயிறு (29) மாலை உறவினர்களிடம் வழங்கப்பட்டன. அல் – மனாரில் சேவையாற்றி இடமாற்றம் பெற்று சென்ற கிழக்கு மாகாணத்தை சேந்த ஆசிரியர்களும் அவ்விடத்துக்கு வருகை தந்து ஜனாஸாக்களை பெற்றுக்கொள்வதில் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது. அன்று இரவே தவுலகலைக்கு கொண்டுவரப்பட்ட ஜனாஸாக்கள், பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர் திங்கட்கிழமை அதிகாலை 3.00 மணிக்கு அம்பரபொல ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டன. உறவினர்கள், சக ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஊர் மக்கள் என பெருந்திரளானவர்கள் அதிகாலை 3 மணிக்கு இடம்பெற்ற ஜனாஸா நல்லடக்கத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

மாவனல்லையில் அத்தலபிடிய கிராமத்தில் பிறந்த ஷியானா ஆரம்பக் கல்வியை மாவனல்லை ஸாஹிரா கல்லூரியில்கற்று பின்னர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் ஆங்கில மொழி மூலம் தனது உயர் கல்வியைத் தொடர்ந்து ஒரு பட்டதாரியாக வெளியானார்.

பின்னர் உடுநுவர தவுலகளை மொஹம்மத் லாபிருடன் தனது குடும்ப வாழ்க்கையில் இணைந்து பாத்திமா உமைமாவை தனது ஒரே மகளாக பெற்றுக்கொள்கிறார். பின்னர் ஆங்கில மொழி மூலமான வர்த்தக பட்டதாரி ஆசிரியையாக திருமதி ஷியானா 2005.02.10ம் திகதி முதல் ஹந்தஸ்ஸ அல்-மனார் தேசிய பாடசாலையில் இணைந்து மரணிக்கும் வரை கடந்த 13 வருடங்களாக தகவல் மற்றும் தொடர்பாடல் தொழினுபம் (ICT), இஸ்லாம், சித்திரம் ஆகிய பல்வேறு பாடங்களை கற்பித்து வந்த ஒரு திறமையான ஆசிரியையாக சேவையாற்றி வந்தார். தனது நியமனம் பாடம் வர்த்தகமாக இருந்தாலும் ஏனைய படங்களை ஒரு சவாலாக ஏற்று கற்பித்து வந்தார். குறிப்பாக தகவல் மற்றும் தொடர்பாடல் தொழினுபம் (ICT) பாடத்தை கற்பித்தது மாத்திரமல்லாமல் கணினி ஆய்வு கூடத்துக்கும் பொறுப்பாக இருந்து ICT சியான என அல் மனாரில் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார்.

கணவர் லாபிர் நீண்டகாலம் வெளிநாட்டில் பணியாற்றி வந்து, பின்னர் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தவர். இந்நிலையிலேயே தமக்கான சொந்த வாகனத்தை அண்மையில் வாங்கினார். தனது ஒரே மகளை எவ்வாறாவது கற்பிக்க வைக்க வேண்டும் என இருந்த அவர் மகளின் கல்வி நடவடிக்கைகளுக்கு உதவியாக இருக்கும் என்ற நோக்கத்தில் தான் இந்த வாகனத்தை வாங்கியதாகவும் ஆசிரியை ஷியானாவுடன் நெருங்கிப் பழகிய சக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

“தமது நியமனப் பாடத்தை விட்டுக் கொடுக்காமலும் வேறு பாடங்களை கற்பிப்பதற்கு விரும்பாத பல ஆசிரியர்கள் இருக்கும் இக்கால கட்டத்தில் ஆசிரியை ஷியானா போன்ற ஆசிரியர்களின் இழப்பு பாடசாலைக்கு பெரும் நஷ்டமாகும். ஆசிரியை ஷியானா ஆரவாரமில்லாத அமைதியான ஒரு ஆசிரியை. வகுப்பில் சகல மாணவர்களையும் இனங்கண்டு அவர்களது பின்னணியை விளங்கி கற்பித்துக் கொடுப்பதில் வெற்றிகண்ட ஒரு திறமையான ஆசிரியை. இம்முறை தெநுவர வலய மட்ட மீலாத் தின போட்டிகளுக்கு மாணவர்களை தெரிவு செய்து தயார் படுத்தி 17 முதல் இடங்களையும் 10 இரண்டாம் இடங்களையும் 7 மூன்றாம் இடங்களையும் மொத்தமாக 34 இடங்களைப் பெற்று தெநுவர வலயத்தில் எமது பாடசாலை முதலாம் இடத்தைப் பெறுவதற்கு காரணமாக இருந்தவர்களுள் ஆசிரியை ஷியானாவுக்கு பெருமளவு பங்குண்டு” எனவும் பொருளாதார சிக்கலுள்ள பிள்ளைகளுக்கு தனது சொந்தப் பணத்திலிருந்து உதவுவதாக கேள்விப்பட்டுள்ளதாகவும் அல்-மனார் தேசிய பாடசாலை அதிபர் எம்.ஜே.எம். ஹிஜாஸ் ஆசிரியை ஷியானாவின் இழப்பு தொடர்பில் உருக்கமாக தெரிவித்தார்.

நாளாந்தம் செய்திகளை கேட்கும் போது வீதி விபத்துக்கள் தொடர்பான செய்திகள் கேள்விப்படாத நாளே இல்லை என்ற அளவுக்கு இலங்கையில் வீதி போக்குவரத்து தொடர்பான விபத்துக்கள் இடம்பெறுகின்றன. கடந்த ஆண்டில் வீதி விபத்துக்களால் சராசரியாக ஒரு நாளைக்கு 8 பேர் உயிரிழந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இலங்கை பொலிஸாரின் தகவல் படி, வீதி விபத்துக்களால் 2017ம் ஆண்டில் ஒரு நாளைக்கு 12 பேர் காயங்களுக்குள்ளாகி உள்ளனர்.

2016ம் ஆண்டில் அபாயகர விபத்துக்கள் 2798 இடம்பெற்றுள்ள அதேவேளை, 2017ல் அபாயகர விபத்துக்கள் 2922 ஆக அதிகரித்துள்ளன. அதன்படி 2016இல் 2,961 பேரும் 2017இல் 3,100 பேரும் வீதி விபத்துக்களால் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, 2018 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இடம்பெற்ற அபாயகரமான விபத்துக்களுள் மரணித்தவர்களில் எண்ணிக்கை 1514 ஆக உள்ளதாக பொலிஸ் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அதன்படி நோக்கும் போது விபத்துக்களால் ஏற்படும் இறப்பு வீதம் குறைந்ததாக தெரியவில்லை.

– நுஸ்கி முக்தார் –

accident shiyana teacher

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>