
விடுதலைப் புலிகளை மீள உருவாக்கம் செய்ய வேண்டுமென்று விஜயகலா மகேஸ்வரன் ஆற்றிய உரை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் நிறைவடைந்து அதுசம்பந்தமான அறிக்கை சட்ட மா அதிபரிடம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் திட்டமிடப்பட்ட குற்ற புலனாய்வுப் பிரிவினர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான வழக்கு இன்று கொழும்பு பிரதான நீதவான் ரங்க திசாநாயக்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதிமன்றத்திற்கு விளக்கமளித்த பொலிஸ் திட்டமிடப்பட்ட குற்ற விசாரணைப் பிரிவினர், சம்பவம் தொடர்பாக 59 வாக்குமூலங்கள் பதிவு செய்து கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
அதில் 06 அமைச்சர்கள், 14 அரச உத்தியோகத்தர்கள் மற்றும் 30 ஊடகவியலாளர்களும் அடங்குவதாக பொலிஸார் நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளனர்.
சட்டமா அதிபரின் ஆலோசனை கிடைக்கும் வரை வழக்கை மீள அழைப்பதற்குத் திகதி வழங்குமாறு பொலிஸ் திட்டமிடப்பட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர்.
அதன்படி இது தொடர்பான வழக்கை மீண்டும் ஒக்டோபர் மாதம் 19ம் திகதி விசாரிப்பதற்கும், அதன்போது முன்னேற்ற அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் பிரதான நீதவான் ரங்க திசாநாயக்க உத்தரவிட்டார்.(ச)