வளர்ந்து வரும் துப்பாக்கி கலாச்சாரம்


gun culture

6 மணிக்கு மேல இந்த கொச்சிக்கட, செம்பட்டா ஸ்ட்ரீட்க்கு போகவே பயமா இருக்கு. எந்தபக்கத்தால வந்து சூட் பண்ணிட்டு போறங்கன்னே தெரியலீ என கொழும்பு 13 ஐ சேர்ந்த நடுத்தர வயதுடைய பெண்ணொருவர் பயம் கலந்த தொனியில் கூறுவது எனக்கு கேட்டது.

ஆம், அவரின் அந்த கூற்றும் உண்மையானது தான். ஏனெனில், கடந்த சில மாதங்களாகவே கொழும்பை மட்டுமன்றி நாட்டின் பல பாகங்களிலும் நடாத்தப்பட்ட துபாக்கிச்சூட்டு சம்பவங்களே மக்களை அவ்வாறு பேசவைத்துள்ளது. வளர்முக நாடுகளை ஆட்டிப்படைத்துவரும் துப்பாக்கிக் கலாச்சாரம் எங்கே எமது நாட்டையும் ஆட்கொண்டுவிடுமோ என்ற பீதியில் நாம் இருக்கின்றோம். நாட்டில் இடம்பெறும் அண்மைக்கால சம்பவங்களும் அதனை புலப்படுத்துவது போன்றே தெரிவிக்கின்றன.

30 வருட கால யுத்தத்தை தாண்டி வாழும் நமக்கு, துப்பாக்கிச் சத்தங்களும், குண்டுவெடிப்பு சத்தங்களும் புதிதல்ல. இருப்பினும் யுத்தம் நிறைவடைந்து கடந்து விட்ட 9 வருடங்களில் இவ்வாறான சம்பவங்கள் சாதாரணமக்களிடம் இன்னுமே நிகழ்வது ஒரு துர்ப்பாக்கிய சம்பவமாகவே கருதப்படுகின்றது. வல்லரசு நாடுகளை பொறுத்தவரையில் இவ்வாறான துப்பாக்கி கலாச்சாரம் சாதாரண ஒன்றாகவே கருதப்படுகின்ற போதிலும், இலங்கைக்கும் இவ்வாறான ஒரு தொற்றுநோய் வந்துவிடுமா? என்ற கேள்வி இருக்கத் தான் செய்கிறது.

வானுயர்ந்த கட்டிடங்கள், மேம்பட்ட கலாச்சாரம், வலிமையான இராணுவம் என அமெரிக்கா மீது உலகம் வைக்கும் பார்வை எப்பொதுமே உயரமானதுதான். இருப்பினும், அங்கு அடிக்கடி நடைபெறும் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் அமெரிக்கா மீதான பார்வையில் பயத்தை கொடுக்கிறது. நாகரீகத்தில் மேம்பட்டு இருந்தாலும் எதற்காக இப்படி சிலர் துப்பாக்கிகளை கொண்டு அப்பாவிகளை கொன்று வருகின்றனர்? என்ற கேள்வி எழாமல் இல்லை. படித்தாலே மனதை மரமரத்து போகச்செய்யும் புள்ளிவிபரம் துப்பாக்கி தாக்குதல் குறித்து வெளியாகியுள்ளன. அமெரிக்காவில் இந்த ஆண்டில் மாத்திரம் சுமார் 52 ஆயிரத்து 385 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதில் 13 ஆயிரத்து 149 பேர் தங்களது உயிர்களை இழந்துள்ளனர். இதில், 307 சம்பவங்கள் பெரியது என குறிப்பிடப்பட்டுள்ளன. தீவிரவாதத்தை விட அமெரிக்காவுக்கு பெரிய தலைவலியை கொடுப்பது உள்நாட்டில் மக்களோடு மக்களாக கலந்திருக்கும் துப்பாக்கிகள்தான். அதுமட்டுமன்றி நாளொன்றுக்கு ஒரு துப்பாக்கிச் சூடு வீதம் அமெரிக்காவில் நடப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவில் கடந்த 10 வருடங்களில் மட்டும், துப்பாக்கி சூட்டின் மூலம் ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளார்கள். சர்வதேச நாடான அமெரிக்காவின் நிலை இவ்வாறிருக்க, இலங்கையையும் இந்நிலைமை மேலும் பற்றிப்பிடித்துள்ளது.

7 மாதங்களில் 282 பேர் கொலை
2018 ஆம் ஆண்டின் கடந்துவிட்ட 7 மாதகாலங்களில் 282 கொலை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது. இந்த 282 கொலை சம்பவத்தில் 28 சம்பவங்கள் துப்பாக்கிச்சூட்டு பிரயோகமாகும். கடந்த 6 மாதக்காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் மற்றும் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து ரி56 ரக 16 துப்பாக்கிகளும், 35 ஆயிரத்து 923 வெடிப்பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இக்காலப்பகுதியில் 992 பெண் துஷ்பிரயோக சம்பவங்களும், 1179 கொள்ளை சம்பவங்களும் இடம்பெற்றுள்ளது. இதேநேரம் 2017 ஆம் ஆண்டு 452 கொலை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது. இந்த வருட ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து ஜுலை மாதம் 31 ஆம் திகதிவரையான காலப்பகுதியில் 20 ஆயிரத்து 826 சிறுகுற்றங்கள் இடம்பெற்றுள்ளதோடு, குறித்த குற்றச்செயல்களில் 14 ஆயிரத்து 272 குற்றங்கள் தீர்த்துவைக்கப்பட்டுள்ளன. இந்த வருடத்தின் ஜுன் மாதத்தில் மாத்திரம் 42 கொலை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. பொலிஸாரிடம் இல்லாத புதிய ரக துப்பாக்கிகள் இவ்வாறான துப்பாக்கிச்சூடு நடத்துபவர்களிடம் இருப்பதாகவும் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த சட்டவிரேதமான துப்பாக்கி பாவனையானது தேசிய பாதுகாப்புக்கு மட்டுமல்லாது மனித பாதுகாப்புக்கும் பாரிய அச்சுறுத்தலாக அமைகின்றது.

இருப்பினும் ஒரு சிறிய ஆறுதலாக இந்த கணிப்பீட்டை காணக்கூடியதாகவுள்ளது. 2013 ஆம் ஆண்டு இடம்பெற்ற குற்றச்சம்பவங்களை விட 2017 ஆம் ஆண்டில் குற்றச்சம்பவங்கள் 20 ஆயிரத்தால் குறைந்துள்ளதாக பொலிஸ் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

      வருடம்         குற்றங்களின் எண்ணிக்கை 
2013 55,349
2014 50,962
2015 40,188
2016 36,937
2017 35,978

கடந்த ஜுலை 9 ஆம் திகதி கொழும்பு மாநகர சபை உறுப்பினரும், நவோதய மக்கள் முன்னணியின் தலைவருமான எஸ்.கே. கிருஷ்ணா சுட்டுக் கொல்லப்பட்டார். செட்டியார் தெருவில் உள்ள தமது வியாபார நிலையத்தில் இருந்த போது, காலை 7.45 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். மக்கள் வீதியில் இறங்கி நடப்பதற்கும் அஞ்சும் சூழ்நிலை தற்போது நாட்டில் உலாவி வருகின்றது.கடந்த அரசை விடவும் இந்த நல்லாட்சியில் பாதாளக்குழுக்களின் ஆட்டம் சூடுப்பிடித்துள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருத்துகள் முன்வைத்துள்ளனர். பாதாளக்குழுக்களின் பலித்தீர்க்கும் படலமாகவே இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. கடந்த மாதங்களில் இடம்பெற்ற கொழும்பு செம்பட்டா வீதி, செல்லையா தோட்ட துப்பாக்கிச்சூடுகள் பலியை தீர்த்து கொள்ளும் மரணங்களாகவே காணப்பட்டன. கொழும்பு கொச்சிக்கடை, செம்பட்டா வீதி மற்றும் மட்டக்குளியை பொறுத்தவரையில் துப்பாக்கிச் சூடு நடாத்தப்படும் மைதானமாகவே கருதப்படுகின்றது.

போதைப்பொருள் பாவனையும், போதைப்பொருள் கடத்தலும், கப்பம் கொடுத்து கொலை செய்யும் கலாச்சாரமும் உள்ளவரை இந்த துப்பாக்கி கலாச்சாரத்தை நிறுத்த முடியாது. இந்த ஆண்டின் கடந்துவிட்ட 7 மாதங்களில் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் 2080 மில்லியன் ரூபா பெறுமதியான 173 கிலோ கிராமுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. மேல் மாகாணத்திலேயே அதிகளவான போதைப்பொருள் வர்த்தகம் இடம்பெறுவதோடு, மேல் மாகாணத்தை போன்று வட மாகாணத்திலும் போதைப்பொருள் வர்த்தகம் அதிகளவில் இடம்பெறுகின்றது. போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு மரணதண்டனை வழங்கப்படும் என்று ஜனாதிபதியால் அறிவிக்கப்பட்டிருந்தபோதிலும், மனித உரிமை ஆணைக்குழு மற்றும் பல நல்லெண்ண அமைப்புக்களின் பரிந்துரைகளின் படி அந்த தீர்ப்பும் இடைநடுவே நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், பொலிஸாரும் தமது சட்டத்தை செய்யாமல் இல்லை. பல பாதாளக்குழு தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் என்று சொல்லக்கூடியவர்களை பொலிஸார் கைதுசெய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள்.

ஆமி சம்பத் என்று சொல்லக்கூடிய புளுமென்டல் சங்க என்ற பாதாளக்குழு உறுப்பினருக்கு எதிராக 8 கொலைச்சம்பவங்கள், போதைப்பொருள் கடத்தல், கப்பம் உள்ளிட்ட பல குற்றச்செயல்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. தெமட்டகொட சமிந்தவை கடந்த ஆண்டு சிறைச்சாலை பஸ்ஸில் வைத்து சுட்டுகொல்லப்பட்ட சம்பவத்தில் இவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இதேபோன்று, கின்னஸ் சாதனை பெற்ற கராத்தே வீரர் வசந்தவை கொலை செய்தமைக்காக எஸ்.எப்.லொக்கா என்ற பாதாளக்குழு உறுப்பினர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கொஸ்கொட சுஜி பல குற்றச்செயல்களை புரிந்து டுபாய் நாட்டில் பதுங்கியிருந்து பாதாளக்குழுவை டுபாயிலிருந்து செயற்படுத்துகிறார். கரந்தெனிய சுத்தா என்ற பாதாளக்குழு உறுப்பினர் வைத்தியர் ஒருவரை கொலைசெய்துவிட்டு தற்போது காலி சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 15 கொலைகள் 25 கொள்ளைச்சம்பவங்களை புரிந்த பலங்கொட ஹீனா என்ற பாதாளக்குழு உறுப்பினரை விசேட படையினர் கைதுசெய்யச்சென்றபோது தப்பித்துச் செல்ல முயற்சித்த போது துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார். தெமட்டகொட சமிந்த மரணதண்டனை விதிக்கப்பட்டு சிறைச்சாலை பஸ்ஸில் செல்லும்போதே பாதாளக்குழு உறுப்பினர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இவர்களுள் பொடி லசி, கராத்தே தம்மிக்க, எஸ்.டி.எப்.நதுன் இவர்கள் கைதுசெய்யப்படாது தப்பித்து இருப்பதோடு ஆமி அசங்க, மீடியாகொட ராஜு ஆகியோர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தற்போது நாட்டில் நாளாந்தம் குற்றச்செயல்கள் அதிகரிக்கப்படுகின்றது. இந்த குற்றச்செயல்களுக்கு பிரதான காரணமாக சட்டவிரோதமான முறையில் பாவிக்கப்படும் துப்பாக்கி பாவனையும் உள்ளடங்குகின்றன. இதனோடு சேர்ந்து போதைப்பொருள் பாவனையும் அடங்குகின்றது. தற்போது நாட்டில் சட்டவிரோதமான முறையில் பாவிக்கப்படும் துப்பாக்கிகளின் எண்ணிக்கை அதிகரித்தே வருகின்றன. இவ்வாறானவர்களினால் சமூக விரோத செயல்கள் மேற்கொள்ளப்படுவதோடு, தனிமனித வாழ்வும் பாதிக்கப்படுகின்றது. எனவே, சட்டவிரோதமானமுறையில் துப்பாக்கியைப் பிரயோகிக்கும் நபர்களை உடனடியாக கைது செய்வதே சிறந்தது. போதைப்பொருள் பாவனை மற்றும் சட்டவிரோத துப்பாக்கி பாவனை ஆகியவற்றுக்கு எதிராக முழுமையான சட்டநடவடிக்கை எடுத்தாலே நாட்டில் பாதி குற்றச் செயல்கள் குறைந்துவிடும். சட்டவிரோதமான துப்பாக்கி பாவனைக்கு அரசாங்கத்தினால் உடனடி தீர்வு எடுக்கப்பட்டாலே அது மக்களுக்கு செய்யப்படும் மாபெரும் சேவையாகும்.

துப்பாக்கி கலாச்சாரத்துடன் எந்தவித கொடுக்கல் வாங்கல்களும் இல்லாத பாராளுமன்றம் மற்றும் அரசியல்வாதிகளை நாட்டினுள் வளரவிடாமல் இருப்பதற்கு அந்தந்த அரசியல் கட்சிகளே பொறுப்பெடுக்கவேண்டும். கத்தி எடுத்தவனுக்கு கத்தியால் தான் சாவு என்பது போல, துப்பாக்கி எடுத்தவனுக்கும் துப்பாக்கியாலேயே சாவு என்பதை புலப்படுத்தும் விதமாக அண்மைக்கால மரணங்களும் உதாரணமாய் நிற்கின்றன. பாதாளக்குழுக்களும், சில அரசியல் புள்ளிகளுக்குமிடையில் இடம்பெறும் விளையாட்டில் அப்பாவி மக்களின் உயிர்கள் பறிபோவது தடுக்கப்படவேண்டும். இனிவரும் தலைமுறையினருக்காவது இந்த துப்பாக்கி கலாச்சாரம் தெரியாமல் இருக்க அரசாங்கம் சட்டநடவடிக்கைகளை எடுக்கவேண்டும். தனிமனித தேவைகளுக்காக துப்பாக்கி வைத்திருக்கும் அனுமதிச்சீட்டை இரத்து செய்யவேண்டும். 30 வருட கால யுத்தத்தின் பின் சற்று ஓய்வு பெற்றிருக்கும் நாடு மீண்டும் அந்த திசையை நோக்கி செல்லாமல் அமைதியான சூழ்நிலையை உருவாக்க நாம் அனைவரும் ஒன்றிணையவேண்டும். (நு)

– பா. மலரம்பிகை –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>