கல்விக் கடைகளாக மாறும் சர்வதேச பாடசாலைகள்


international schools

அறிவியல் வேகமாக முன்னேற்றமடைந்து வியத்தகு மாற்றங்களை நாளாந்தம் ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றது. கல்வித்துறையின் அசுர வளர்ச்சியைப்போலவே கல்விக்கூடங்களும் நாளுக்கு நாள் மூலைமுடுக்கெல்லாம் முளைத்துக்கொண்டிருக்கின்றன. ஆனால் கவலைக்குரிய விடயமென்னவென்றால் கல்விக்கூடங்கள் கல்விக்கடைகளாக மாறிக்கொண்டிருக்கின்றன. குறிப்பாக ஆங்கில மொழியினை அடிப்படையாக கொண்ட சர்வதேச பாடசாலைகளின் ஊடுறுவல் இன்று ஒரு வியாபாரமாக வியாபகம் அடைந்துவருகின்றது. தேசிய ரீதியில்கூட அங்கீகரிக்க முடியாதளவிற்கு பெரும்பாலான சர்வதேச பாடசாலைகளின் தரம் மோசமாகவே காணப்படுகின்றது.

பாலர் வகுப்புக்கள் முதல் உயர் வகுப்புக்கள் வரை சர்வதேச பாடசாலைகள் மாணவர்களை உள்வாங்கிக்கொண்டிருக்கின்றன. பாடசாலையின் தரம், கல்விக்கொள்கை, நிர்வாகம், ஆசிரியர்கள், ஒழுக்கம், இனைப்பாட விதானங்கள், ஏனைய செயற்பாடுகள் என பாடசாலை குறித்த எந்தவித ஆய்வுகளுமின்றி பெற்றோர்களும் தங்களது பிள்ளைகளை சர்வதேச கல்விக் கடையில் சேர்த்துவிடுவதில் அலாதியான ஆர்வத்தை கொண்டுள்ளனர். ”எங்கட புள்ள இன்டநெசனல் ஸ்கூலுக்குத்தான் போற” என்று உறவினர்களிடமும், அயலவர்களிடமும் தம்பட்டம் அடிப்பதே பெரும்பாலான பெற்றொர்களின் அவா. பிள்ளைகளின் முன்னேற்றத்திலோ, பாடசாலையின் வளர்ச்சியிலோ அவர்களுக்கு அந்தளவிற்கு ஈடுபாடில்லை. காலையில் பாடசாலை வேன் வந்து வாசலில் நிற்கின்றது. கை நிறைய Pocket money வழங்கப்படுகின்றது. பிள்ளைகளும் பாடசாலைக்கு சென்றுவருகின்றார்கள். வகுப்பேற்றப்படுகின்றார்கள். கணிதமும், விஞ்ஞானமும் தெரியாதவன்கூட இல்லை, இஸ்லாமும் தெரியாதவனும்கூட ஆங்கிலத்தில் நான்கைந்து வார்த்தைகளை பேசுகின்றான். இப்போது மம்மியும், டெடியும் மகிழ்ச்சியடைகின்றனர். வெறும் ஆங்கிலத்தை கதைப்பதுதானா சர்வதேச பாடசாலைகளின் அடைவு? இதுவரை சர்வதேச பாடசாலைகளில் கற்று வெளியான ஆயிரக்கணக்கான மாணவர்களில் எத்தனை பட்டதாரிகள், எத்தனை வைத்தியர்கள், எத்தனை பொறியியலாளர்கள், எத்தனை துறைசார்ந்த நிபுணர்கள் உருவாகியுள்ளனர் என்று ஆய்வுசெய்தால் விரல் விட்டு எண்ணக்கூடிய மிகச்சிறிய தொகையினரே உள்ளனர். ஏனைய பெரும்பாலான மாணவர்கள் வெறும் ஆங்கில மொழியோடு மட்டும்தான் வெளியேறியுள்ளனர் என்பது கசப்பான உண்மை.

சர்வதேச தரம்வாய்ந்த பல சர்வதேச பாடசாலைகளும் தேசிய அளவில் இல்லாமலில்லை. ஆனாலும் குறிப்பாக பெரும்பான்மையாக முஸ்லிம் பிரதேசங்களில் இயங்கிக்கொண்டிருக்கின்ற சர்வதேச பாடசாலைகளின் நிலைமை கவலைக்கிடமானதே. அவை தொடர்பிலானதொரு அலசலே இது.

பெரும்பாலான சர்வதேச பாடசாலைகள் கல்வித்துறையில் பின்னடைவதற்கு பிரதான காரணமாக அமைவது அவை வெறும் இலாபநோக்கிலான வியாபாரமாக இயங்குவதனாலாகும். வியாபாரத்தில் கல்வி முன்னேற்றத்தையோ, சமூக மேம்பாட்டையோ எதிர்பார்க்க முடியாது.

அனுபவமும், தேர்ச்சியும்மிக்க ஆசிரியர்கள் இல்லாமை அடுத்த பிரதான குறைபாடாகும். அனுபவமும் தேர்ச்சியும்மிக்க தகுதியான ஆசிரியர்களை பணியில் அமர்த்தும் போது அவர்களது தகுதிக்கேற்ற கொளுத்த சம்பளங்களை வழங்க வேண்டியுள்ளது. எனவே குறிப்பிட்ட சர்வதேச பாடசாலையில் குறுகியகால டிப்ளோமா பாடநெறியினை பூர்த்திசெய்து வெளியாகும் டிப்ளோமாதாரிகளுக்கு அப்பாடசாலையிலேயே வேலைவாய்ப்பு வழங்கப்படும் நடைமுறை இருந்துவருகின்றது. இவர்களுக்கு ஆயிரக்கணக்கில் சம்பளம் வழங்கவேண்டிய அவசியமில்லை. Allowance ஆக சில ஆயிரங்களை வழங்கினால் போதுமானது. இப்பணி அனுபவமும், தேர்ச்சியுமற்ற டிப்ளோமாதாரிகளுக்கு ”நானும் இன்டநெசனல் ஸ்கூல் டீச்சர்” என்று பிதற்றிக்கொள்வதற்கு வாய்ப்பை வழங்குகின்றது. எனவே அவர்களுக்கு சம்பளம் ஒரு பொருட்டாக அமையாது.

பொதுவாக பெரும்பாலான சர்வதேச பாடசாலைகளில் நடைபெறுகின்ற பரீட்சை வினாப்பத்திரங்களும் மிக இலகுவானதாகவே தயாரிக்கப்படுகின்றன. பின்தங்கிய மாணவர்களும் பரீசைகளில் அதிகூடிய புள்ளிகளைபெற்று விருதுகளை அள்ளிக்கொள்கின்றனர். மாதாந்த கட்டணம் வேறாகவும், பரீட்சை கட்டணம் வேறாகவும் ஆயிரக்கணக்கில் செலுத்தும் பெற்றோர் இந்த உண்மையினை அறிய வாய்ப்பில்லை. பெற்றோர்களும் தங்களது பிள்ளை சரியான பாடசாலைக்குத்தான் செல்கின்றான், தனது பணம் வீனாகவில்லை, தனது பிள்ளை கெட்டிக்காரன் என திருப்தியடைகின்றனர். மேலும் பாடசாலைக்கு இது சிறந்ததொரு விளம்பரமாகவும் இருந்துவருகின்றது.

பெற்றோர்களுக்கும் பாடசாலைக்கும் இடையிலான உறவுகள் வெறும் Get together களாகவே இனிதே நிறைவுபெறுகின்றன. அங்கே பிள்ளையின் பலம் – பலவீனங்கள் பற்றி கலந்தாலோசிப்பதில்லை. மாறாக பாடசாலையினை பௌதீக ரீதியில் அபிவிருத்தி செய்துகொள்வதற்கு தேவையான நிதியினை திரட்டிக்கொள்வார்கள். பாடசாலை (வியாபாரம்) அபிவிருத்தியடைகின்ற அதேயளவிற்கு மாணவர்கள் முன்னேற்றமடையமாட்டார்கள்.

மாணவர்களின் ஒழுக்க வீழ்ச்சி, கல்வியில் பின்னடைவு போன்ற பலவீனங்களை பெற்றோர்களிடம் முறையிடமாட்டார்கள். அவைகளை முறையிட்டால் பிள்ளைகளுக்கும், பெற்றோருக்குமிடையில் முரண்பாடு, பிள்ளைகளுக்கும், ஆசிரியர்களுக்குமிடையில் முரண்பாடு என பிரச்சினைகள் ஆரம்பித்து மாணவர்கள் பாடசாலையிலிருந்து விலகிச்செல்வார்களென்ற அச்சத்தில் இவ்வாறான விடயங்கள் மூடிமறைக்கப்படுகின்றன.

அரச பாடசாலைகளோடு ஒப்பிடுமிடத்து சர்வதேச பாடசாலை மாணவர்களிடம் ஒழுக்க வீழ்ச்சியும், பண்பாட்டு வீழ்ச்சியும் பாரதூரமாக காணப்படுகின்றன. சிகை அலங்காரம் முதல் காதல் வரை ஒழுக்காற்று பிரச்சினைகள் மலிந்து காணப்படுகின்றபோதும் அவற்றிற்கெதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் கண்டும் காணாததுபோல் நிர்வாகம் இருந்து வருகின்றது.

பாடசாலையில் கல்விச்சுற்றுலா, கண்காட்சி, விளையாட்டு போட்டி, கலை விழா, இஸ்லாமிய தினம், சந்தை, பரிசளிப்பு விழா, ஆசிரியர் தினம், சிறுவர் தினம், பெற்றோர் தினம் என எல்லாமே கலர்கலராகத்தான் நடக்கும். அதில் ஒரு குறையும் இருக்காது. இவற்றின் பெயரில் டாம்பீக பெற்றோர்களிடமிருந்து ஆயிரக்கணக்கில் அறவிட்டுகொள்வார்கள். இவ்வாறானதொரு ஏமாற்று வியாபாரமே இந்த சர்வதேச கல்விக் கடைகள் என்பதில் சந்தேகமேயில்லை. சில வியாபாரிகளைவிட சர்வதேச பாடசாலை நிர்வாகிகள் செல்வந்தர்களாக வாழ்ந்துகொண்டிருப்பதன் மூலம் இதனை உங்களால் இலகுவாக ஊகித்துக்கொள்ளலாம்.

சர்வதேச பாடசாலைகள் ஒரு ஏமாற்று வியாபாரம் என்றால் நாங்கள் எங்களது பிள்ளைகளை அரச பாடசாலைகளில் அனுமதிப்பதா? அரச பாடசாலைகளில் பௌதீக வளப்பற்றாக்குறைகள் காணப்படுகின்றன. ஆசிரியர் பற்றாக்குறைகள் நிரம்பி வழிகின்றன. இவ்வாறன குறைபாடுகளுடன்கூடிய அரச பாடசாலைகளில் எவ்வாறு எங்கள் பிள்ளைகளை சேர்ப்பது என நீங்கள் கேட்பது புரிகின்றது.

பெற்றோர்களாகிய நீங்கள் இலட்சக்கணக்கில் அனுமதி கட்டணங்களாகவும், ஆயிரக் கணக்கில் மாதாந்த கட்டணங்களாகவும், இன்னும் பல பெயர்களில் பல ஆயிரங்களையும் சர்வதேச பாடசாலைகளுக்கு செலுத்திக்கொண்டிருக்கின்றீர்கள். இந்த பாரிய நிதியினை நன்கொடையாக உங்கள் பிரதேசத்திலுள்ள அரச பாடசாலைக்கு வழங்கி அந்நிதியின் மூலம் உங்கள் பிரதேசத்தின் பின்தங்கிய அரச பாடசாலையினை அபிவிருத்தி செய்யலாமல்லவா…

அரச பாடசாலைகளில் நிலவுகின்ற ஆசிரியர் பற்றாக்குறைக்கு தொண்டர் ஆசிரியர்களை நியமித்து சம்பளங்களை வழங்கலாம். புதிய கட்டடங்களை நிர்மானித்து நவீன வகுப்பறைகளை உருவாக்கலாம். விஞ்ஞான ஆய்வுகூடம், வாசிகசாலை, தொழில்நுட்ப பிரிவு, மனையியல் கூடம், செயற்பாட்டு அறைகள், விளையாட்டு பிரிவு, ஊடகப்பிரிவு என சகல அலகுகளையும் ஆரம்பித்து அவற்றிற்கு தேவையான உபகரணங்களை அன்பளிப்பு செய்து உங்கள் கிராம பாடசாலையை பல்கலைக்கழகமாக மாற்றலாம்.

தேவையான சந்தர்ப்பங்களில் விசேட வளவாளர்களை அழைத்து கருத்தரங்குகளையும், விரிவுரைகளையும் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ஏற்பாடு செய்யலாம். இதன்மூலம் உங்களது பிள்ளைக்கு மட்டுமல்ல உங்கள் பிரதேசத்திலுள்ள மீனவனின் பிள்ளை, விவசாயியின் பிள்ளை, உழைப்பாளியின் பிள்ளை, முஅத்தினாரின் பிள்ளை, கூலியின் பிள்ளை, அநாதைப் பிள்ளைகள் என சகல ஏழை மக்களுக்கும் தரம்வாய்ந்த கல்வியை வழங்கலாமல்லவா…

இவ்வாறான நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும் போது உங்கள் ஊரில் அறிவொளி வீசுவது நிச்சயம். சர்வதேச பாடசாலைக்கு சென்று வெறும் ஆங்கிலத்தோடு திரும்பிய உங்கள் பிள்ளைக்கும், அரச பாடசாலையில் அறைகுறை அறிவோடு திரும்பிய ஏழை மாணவனுக்கும் இந்த மாற்றம் பயனுள்ளதாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. இது மட்டுமா, உங்களது இப்பணி ஸதகதுல் ஜாரியாவாகவும் உங்களுக்கு மறுமையில் ஒளி வீசப்போகின்றது. இன்ஷா அல்லாஹ்! சிந்திப்போம்! செயற்படுவோம்!. அறிவால் உலகை ஆள்வோம். (நு)

– ரூமி ஹாரிஸ் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>