இளைய தலைமுறையினர் போதைப் பொருளுக்கு அடிமையாவது அபாயகரமானது – என்.எம். அமீன்


N M Ameen

இளைய தலைமுறையினர் போதைப் பொருட்களுக்கு துரிதமாக அடிமையாகும் நெருக்கடிமிக்க காலகட்டத்தில் முஸ்லிம் சமூகம் காணப்படுகின்றது. எமது இளைய தலைமுறையினர் போதைப் பொருட்களுக்குத் துரித கதியில் அடிமையாகி வருகின்றனர். முஸ்லிம்களின் சனத்தொகை விகிதாசாரத்தை விட சிறைச்சாலைகளில் இருக்கும் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இது மிக அபாயகரமானதாகும். எனவே, நாம் சமூகத்தைப் பற்றி சிந்திக்க வேண்டிய முக்கிய காலகட்டத்தில் வாழ்கின்றோம் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும் நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான என்.எம். அமீன் தெரிவித்தார்.

மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கவின் ஏற்பாட்டில் மத்திய மாகாணத்தில் கண்டி , மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் இயங்கி வரும் அஹதிய்யா பாடசாலை ஆசிரியர்களுக்கான இரு நாள் பயிற்சி செயலமர்வு மற்றும் அஹதிய்யா பாடசாலை மாணவ தலைவர்களுக்கான தலைமைத்துவ வழிகாட்டல் கருத்தரங்கு என்பவற்றில் பங்குபற்றியவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம் பள்ளேகலை மாகாண சபை கட்டிடத் தொகுதி கேட்போர் கூடத்தில் கடந்த சனிக்கிழமை (15) முதலமைச்சரின் இணைப்பு அதிகாரி ரசீத் எம். ரியாழ் தலைமையில் நடைபெற்றது.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

மத்திய மாகாண முதலமைச்சர் முஸ்லிம் சமூகத்திற்கு செய்து வரும் சேவைகள் பாராட்டத்தக்கதாகும். அஹதிய்யா பாடசாலை வத்தேகெதரயில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. கண்டி மாவட்டத்தில் அஹதிய்யா கல்வி முன்னேற்றத்திற்கு மத்திய மாகாண முதலமைச்சரின் பங்களிப்பு அளப்பரியதாகும்.

இளைய தலைமுறையினர் போதைப் பொருட்களுக்கு துரிதமாக அடிமையாகும் நெருக்கடிமிக்க காலகட்டத்தில் முஸ்லிம் சமூகம் காணப்படுகின்றது. எமது இளைய தலைமுறையினர் போதைப் பொருட்களுக்குத் துரித கதியில் அடிமையாகி வருகின்றனர். முஸ்லிம்களின் சனத்தொகை விகிதாசாரத்தை விட சிறைச்சாலைகளில் இருக்கும் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இது மிக அபாயகரமானதாகும். எனவே, நாம் சமூகத்தைப் பற்றி சிந்திக்க வேண்டிய முக்கிய காலகட்டத்தில் வாழ்கின்றோம்.

இந்நாட்டில் எமது எதிர்கால சந்ததியின் வாழ்வு , இருப்பு தொடர்பாக சிந்திக்க வேண்டியுள்ளது. இளந்தலைமுறையினர் போதைப்பொருட்கள், கைடயக்கத் தொலைபேசி என்பவற்றுக்குள் வாழ்க்கையைத் தொலைத்து வருகின்றனர். பெற்றோர்கள், பிள்ளைகள் பரீட்சையில் சித்தியடையும் மாணவர்களுக்கு கைடயக்கத் தொலைபேசியை வழங்குகின்றனர். அண்மையில் ஒரு பிரபல அமைச்சர் கூறிய விடயத்தை இங்கு குறிப்பிடுவது பொருத்தமாக அமையும்; என்று நினைக்கின்றேன். எனது மகள் உயர்தரப்பரீட்சை எழுதும் வரை கைடயக்கத் தொலைபேசியை வாங்கிக் கொடுக்கவில்லை. அவர் தற்போது புதுடில்லியில் பல்கலைக்கழகத்தில் படிக்கின்றாள். அவர் பல்கலைக்கழகம் சென்ற பின்பு தேவை கருதி கைடயக்கத் தொலைபேசியை வாங்கிக் கொடுத்தேன் என்றார்.

கண்டி மாவட்டம் முஸ்லிம்கள் அதிகளவில் வாழும் இரண்டாவது மாவட்டமாகும். கண்டி வன்முறை சம்பவங்கள் கசப்பானவை. இத்தகைய சம்பவங்களுக்கு சவால்களை விடும் மத்திய மாகாண முதலமைச்சர் போன்ற முதலமைச்சர்கள் தான் நாட்டுக்கு அவசியம்.

இளம் தலைமுறையினரை நேர்வழிப்படுத்துவதற்கு சமயக்கல்வி மிக அவசியம். இன்று இளைய தலைமுறையினரை பிழையான வழிகளில் வழிப்படுத்தும் பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இளந்தலைமுறையினரை போதைப் பொருட்களுக்கு அடிமைப்படுத்தப்படுகின்றனர். இது எதிர்கால இளந்தலைமுறையினரை பலவீனப்படுத்தும் சதியாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுகின்றது.

சமயக்கல்வி கற்கும் பல்லின மாணவர்கள் ஒன்றுகூடுவதற்கான வழிகாட்டல் வேலைத்திட்டம் முன்மாதிரியாக அமையும். எமது கல்வித் திட்டத்தில் உள்ள குறைபாடுகளால் ஒருவர் மற்ற சமயத்தைப் புரியாதவர்களாக வாழ்கின்றோம். பல்லின மாணவர்களின் ஒன்றுகூடல் பரஸ்பர புரிந்துணர்வுக்கு உதவும். கடந்த காலங்களில் நாம் விட்ட தவறு பள்ளிவாசலை எமக்கு மட்டும் வரையறுத்துக் கொண்டோம். பள்ளிவாசல்கள் எமக்கும் மட்டும் என்று நாம் நினைத்தோம். பெரும்பான்மை சமூகத்தை முஸ்லிம்கள் தமது வைபவங்களுடன் தொடர்புபடுத்திக் கொள்ள வேண்டும்.

ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா தலைமையில் சிங்கள ஆணைக்குழு முன்னிலையில் சென்று சாட்சியமளித்தோம். அப்போது ஆணைக்குழவின் பிரதிநிதிகள் பள்ளிவாசலில் என்ன நடைபெறுகின்றது? வெள்ளிக்கிழமைகளில் என்ன நடைபெறுகின்றது? என்று கேட்டனர். பள்ளிவாசலில் நடைபெறும் விடயங்கள் தொடர்பாக ஆணைக்குழு பிரதிநிதிகள் சந்தேகம் வெளியிட்டனர். நாம் தெளிவூட்டினோம். இதனால், அறிக்கையில் பல விடயங்கள் திருத்தப்பட்டன. முஸ்லிம் பள்ளிவாசல்கள் தொடர்பாக பிழையான கருத்துக்கள் பிரச்சாரப்படுத்தப்பட்டன. இன்று பள்ளிவாசல்கள் பிற சமூகத்தவர்களுக்காகத் திறந்துவிடப்பட்டுள்ளன.

குழந்தைகளுக்கு ஆரம்பத்தில் சமய அறிவை சரியாகக் கொடுக்க வேண்டும். இதில் பெற்றோர்களின் முயற்சி அவசியம். இளம்சந்ததி குடிபோதை மற்றும் போதைப்பொருட்களுக்கு அடிமையாகுவதை தவிர்ப்பதற்கு இளம்வயதில் சமய அறிவு உரிய முறையில் வழங்கப்பட வேண்டும்.

முஸ்லிம் மாணவர்கள் பொது அறிவில் மிகவும் பின்தங்கியுள்ளனர். இதனை மாற்றியமைப்பதற்கு பிள்ளைகளுக்கு வாசிப்பு பழக்கத்தை ஊக்குவியுங்கள். பத்திரிகைகளை வாங்கி வாசிக்கும் முஸ்லிம்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகும். புத்தகங்களை வாங்கிக் கொடுங்கள். கேகாலை மாவட்டத்தில் குக்கிராமமொன்றில் பிறந்த நான் சிறு வயதில் சலூனுக்கு வரும் சிங்கள பத்திரிகைகளை தொடரந்து வாசித்து வரும் பழக்கத்தைக் கொண்டிருந்தேன். இப்பழக்கம் என்னை வாழ்க்கையில் முன்னேற வழி செய்தது.

முஸ்லிம் வாழும் பகுதிகளில் அதிகளவு சப்பாட்டுக் கடைகள் இருக்கின்றன. சிங்கள, தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் கல்லூரிகளும், கலாசாலைகளும், தொழிநுட்ப நிலையங்களும் காணப்படுகின்றன என்று நண்பரொருவர் அண்மையில் கூறினார். கல்வியை இரண்டாம் நிலைக்குத்தள்ள வேண்டாம் என்றார்.

இந்நிகழ்வில் கண்டி மாவட்ட பள்ளிவாசல்களுக்கு முதலமைச்சரினால் நிதியுதவிகளும் வழங்கப்பட்டன. சட்டத்தரணி ரஷீத் எம். இம்தியாஸ் கலந்து கொண்டு உரையாற்றியதுடன் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான லாபிர் ஹாஜியார், எம். இப்ராஹீம் உட்பட பலரும் கலந்து கொண்டனர். (நு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>