பங்கரகம்மன: முஸ்லிம் பூர்வீகக் கிராமம்


pangaragammana

அறிமுகம்

பல்லின மக்களையும் இயற்கை வளங்களையும் கொண்டுள்ள இலங்கைத் தீவின் வளங்களும், வனப்புகளும், நிலமும் நிறைந்ததாக ஊவா மாகாணம் திகழ்கின்றது.

மத்திய, தென், கிழக்கு ஆகிய மாகாணங்களை எல்லையாகக் கொண்டுள்ள இம்மாகாணம் மொனராகலை, பதுளை ஆகிய மாவட்டங்களை தன்னுள் உள்ளடக்கியுள்ளது.

ஊவா மாகாணமானது துன்கிந்த, தியலும், ராவண எல்லை போன்ற முக்கிய நீர்வீழ்ச்சிகளையும், கிழக்கு மாகாணத்துடன் தொடர்புடைய யால தேசிய வனம், கல்லோயா தேசிய பூங்கா ஆகியவற்றையும், மத்திய குன்றுகள், மகாவலி மெனிக் ஆறுகள், சேனநாயக்கா சமுத்திரம், மாதுருஓயா ஆகிய நீர் நிலைகளையும், மேலும் பல சுற்றுலாத் தலங்களையும் கொண்டாகக் காணப்படுகின்றது.

2012ம் ஆண்டைய குடிசன மதிப்பின் பிரகாரம் பதுளை மாவட்டம் 811,758 மக்களையும், 9 தேர்தல் தொகுதிகளையும், ஒரு மாநகர சபையையும், 14 பிரதேச சபைகளையும் கொண்டுள்ளது.

 

அமைவிடம்
பதுளை மாவட்டத்திலுள்ள 15 பிரதேச செயலகப் பிரிவினுள் கிழக்கு மற்றும் மத்திய மாகாண எல்லையில் அமைந்துள்ள மஹியங்கனை பிரதேச செயலகத்தினுள் காணப்படும் ஒரேயொரு முஸ்லிம் கிராமம் பங்கரகம்மனவாகும்.

இப்பிரதேச செயலகம் கொண்டுள்ள 75,327 மொத்த சனத்தொகையில் 73,320 பேர் சிங்கள மக்களாவர். இவர்களுள் 1,836 முஸ்லிம்களும் பங்கரகம்மன கிராமத்திலேயே வாழ்ந்து வருகின்றனர். மஹியங்கனை நகரிலிருந்து ரஜமாவத்தை லொக்கொல்லை, பதுளை செல்லும் பிரதான பாதையே பங்கரகம்மனக்குச் செல்லும் குறுகிய தூரம் கொண்ட பாதையாகும்.

பெரடியகல, ரந்தனிக்கல, மினிப்பே, றந்தம்பே, திகிரிபுதாம, கோனகல, ஹந்தகனாவ ஆகிய மலைகளின் மையமாக அமைந்துள்ள இக்கிராமத்தில் பச்சைப்பசேல் என பரந்து கிடக்கும் நெல் வயல் வெளிகள் தனி அழகைக் கொடுக்கின்றன.

இக்கிராமத்தினுடன் இணைந்து ஓடிக் கொண்டிருக்கும் மகாவெலி ஆறு இக்கிராமத்தின் ஒரு சொத்தாக இருந்து வருகின்றது.

எல்லைகள்
இரண்டாம் இராஜசிங்க மன்னன் இக்கிராமத்தை முஸ்லிம்களுக்காக பரிசளித்த போது நவகவ்வ எனும் நான்கு திசைகளும் கூப்பாடு போட்டு அச்சத்தம் எவ்வளவு தூரம் கேட்டதோ அத்தூரம் வரை பங்கரகம்மனவின் எல்லைகள் காணப்பட்டதாக கூறப்படுகின்றது.

பங்கரகம்மன கிராமத்தில் தற்போதைய எல்லைகளாக வடக்கே; மஹியங்கனை, கிழக்கே; மாப்பக்கடவௌ, தெற்கே; தம்பக்கொல்ல, லொக்கல்லோயா, மேற்கே; மகாவலிகங்கை ஆற்றையும் கொண்டுள்ளது.

பூர்வீகம்
பங்கரகம்மன கிராமத்தின் பூர்வீக மக்கள் வீரம் நிறைந்தவர்களாகவும், காட்டு மாடுகளைப் பிடித்து அவற்றை தவளமாடுகளாக பழக்கி வியாபாரம் செய்தனர். தவள முறையில் போக்குவரத்துச் செய்பவர்கள் அம்பலங்களை அமைத்து இங்கு வாழ்ந்த மக்களுடன் சேர்ந்து வாழ்ந்தார்கள்.

1505இல் போத்துக்கேயரால் கொழும்பில் இருந்து விரட்டப்பட்ட முஸ்லிம்களை கண்டி மன்னர் செனரத் அரவணைத்து அவர்களை பாதுகாப்பான இடங்களில் குடியமர்ததினான்.

குறிப்பாக அவர்கள் மாவனெல்ல, மடவெள, அக்குரணை, கம்பளை, உக்வெல்ல, மஹியங்கனை, பங்கரகம்மன போன்ற பிரதேசங்களிலும், கிழக்கு மாகாண கரையோரப் பிரதேசங்களிலும் பாதுகாப்பாக குடியமர்த்தப்பட்டார்கள்.

பெயர் வந்த வரலாறு
இக்கிராமத்தின் பெயர் வந்த வரலாறு சுவாரஷ்ய மான சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டமைந்தது. ஒருமுறை கண்டி மன்னன் செனரத் இக்கிராமத்தின் ஊடாக பயணிக்கவுள்ளதை அறிந்த கிராம மக்கள் மன்னனுக்கு அமோக வரவேற்பளித்தார்கள்.

இந்நிகழ்வின்போது மன்னனின் தாகம் தீர்க்க தோடம்பழச் சாற்றில் தேன்கலந்து குடிக்கக் கொடுத்தார்கள். அதன் சுவையில் நனைந்த மன்னன் அக்கிராமத்திற்கு பெங்கிரிகம என பெயர் சூட்டினான். பெங்கிரிகம என்ற சிங்கள சொல்லின் பொருள் சுவையான கிராமம் என்பதாகும். இதுவே காலப்போக்கில் திரிவடைந்து பங்கரகம்மன என அழைக்கப்பட்டு வருகின்றது.

இக்கிராமத்துடன் இணைந்தாற்போல் நாளுவீடு, எட்டுவீடு, றோஹண பிட்டின ஆகிய சிறு கிராமங்களும், தம்பகொல்ல, றோஹன ஆகிய பெரும்பான்மையாக சிங்களவர்களைக் கொண்ட கிராமங்களும் காணப்படுகின்றன.

இரண்டாம் இராஜசிங்கன்
கண்டி ராச்சியத்தைக் கைப்பற்றும் நோக்கில் போத்துக்கேயர் படையெடுப்புக்களை மேற்கொண்டு தோற்றுப்போன அவர்கள் இராஜசிங்கனை கொலை செய்வதனூடா அதனை அடைந்து கொள்ள முயற்சித்தார்கள்.

எதிர்பாராத சந்தர்ப்பத்தில் போத்துக்கேயர் மேற்கொண்ட படையெடுப்பை எதிர்கொள்ள முடியாத இராஜசிங்க மன்னன் பாதுகாப்புக் கருதி பங்கரகம்மன முஸ்லிம் கிராமத்தினுள் சென்று அங்கிருந்த பெரிய மரமென்றின் பொந்தினுள் ஒளிந்து கொண்டான். அப்போது அவ்விடத்தில் பால் கறந்து கொண்டிருந்த பாத்திமா என்ற முஸ்லிம் பெண் மன்னன் ஒளிவதைக் கண்டாள்.

மன்னனை துரத்தி வந்த போத்துக்கேயப் படையினரால் மன்னனை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆத்திரம் கொண்ட அவர்கள் பால் கறந்து கொண்டி ருந்த பெண்ணிடம் மன்னன் எங்கே என அதட்டினார்கள்.

பயத்தால் நடுங்கிய அவள் மன்னனைக் காட்டிக் கொடுக்க விரும்பாமல் மௌனமாக இருந்தாள். கோபம் கொண்ட படையினர் இரக்கமில்லாமல் அப்பெண்ணை வெட்டிக் கொன்றனர்.

போத்துக்கேயப் படையினர் அங்கிருந்து சென்ற பின்னர் முஸ்லிம் பெண் கொல்லப்பட்டுக்கிடப்பது கண்டு இராஜசிங்கள் துயர் கொண் டான்.

என்னைக் காப்பாற்ற தன் உயிரை தியாகம் செய்த பெண்ணுக்காக இரங்கினான். “மாவ ரெகபு லே” என கூறி அழுதான். இதுவே பிற்காலத்தில் ‘மரக்கலே” என திரிவடைந்துள்ளது.

இராஜசிங்கன் மீண்டும் அரசனான பின்னர் பங்கரகம்மன கிராமத்தை முஸ்லிம்களுக்கென அப்பெண்ணின் குடும்பத்தினரிடம் ஒப்படைத் தான்.

இச்சம்பவம் தொடர்பாக கடந்த 1982-1987 வரையான தமிழ், சிங்கள பாடப்புத்தகங்களில் இடம்பெற்றிருந்த ‘உயிர்கொடுத்த உத்தமி” என்ற என்ற பாடம் எல்லோருக்கும் நினைவிற்கு வரும் ஒன்றாகும். இது பின்னர் நீக்கப்பட்டதன் மூலம் முஸ்லிம்கள் தொடர்பான வரலாறு மறைக்கப்பட்டது.

பள்ளிவாசல்கள்
இங்கு ஊர் பள்ளிவாசல் என அழைக்கப்பட்டு வரும் நூரானியா ஜூம்ஆ பெரிய பள்ளிவாசல் பிரதானமாகும். ஓலைக் குடிசையாக ஆரம்பிக்கப்பட்ட இது பல புனருத்தானத்தின் பின்னர் அழகிய தோற்றம் பெற்றுளள்ளது. ஊரின் மத்தியில் இது அமையப்பெற்றுள்ளது.

இப்பள்ளிவாசலுக்கு மேலதிகமாக றோகன மஸ்ஜிதுல் ஸலாம், எட்டுவீடு மஸ்ஜிதுல் ஜபல், தம்பகொல்ல மஸ்ஜிதுல் நூர், லிஹினியமன்டிய மஸ்ஜிதுல் றகுமானியா ஆகிய தைக்காப் பள்ளிவா சல்களும் இங்கு காணப்படுகின்றன.

தொழில்கள்
இக்கிராமத்தின் ஆரம்பத்தில் குடியேறிய மக்கள் காட்டுமாடுகளைப் பிடிப்பதை பிரதான தொழிலாக கொண்டிருந்தனர். மேலும் காட்டுத் தொழில், விவசாயம், சேனைப் பயிர்ச் செய்கை போன்றவற்றை தமது பிரதான ஜீவனோபாயமாகக் கொண்டிருந்தனர்.

பின்னர் வர்த்தகம், கட்டிடத்தொழில், சிறு தொழில் முயற்சிகள், வெளிநாட்டுத் தொழில் வாய்ப்புக்கள், மணல் அகல்தல், அசிரியத் தொழில், மௌலவிகள் போன்ற தொழில்களில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

கல்வி
பங்கரகம்மனயின் நிறுவன ரீதியான கல்விக்கு வித்திட்டு கிராமத்தின் கலங்கரை விளக்காக திகழும் முஸ்லிம் வித்தியாலயம் தனக்கென ஒரு இடத்தைப் தக்கவைத்துக் கொண்டுள்ளது எனலாம்.

எனினும் இப்பாடசாலையின் தொடக்கத்திற்கு முன்னர் பங்கரகம்மன மக்கள் தங்களது கல்வித் தாகத்தை தனித்துக் கொள்ள மஹியங்கனை, தம்பகொல்லை, மாப்பக்கடவௌ, றோஹண போன்ற பிரதேசங்களிலுள்ள சிங்கள பாடசாலைகளையும், மடவெல, பதுளை போன்ற பிரதேசங்களிலுள்ள முஸ்லிம் பாடசாலைகளையும் நாடிச் சென்றனர்.

அரசியல்
பங்கரகம்மன மக்களின் அரசியல், நிறுவாகம், விவசாயம், வர்த்தகம் மற்றும் ஏனைய வாழ்வாதார போக்கில் அரசியல் குறிப்பிடத்தக்க செல்வாக்கை செலுத்தியுள்ளது.

இது நூர்டீன் ஆராட்சி, சதக்குலெப்பை பொலிஸ் விதானை, சொறபொற அஹமட் காடின் போன்ற பொறுப்புள்ள பதவிகள் மூலம் செல்வாக்குப் பெற்றது.

1965இல் கிராம சபை உறுப்பினராக இருந்த எம். சம்சுதீன் அவர்களுக்குப் பின்னர் 2018ல் மஹியங்கனை பிரதேச சபைக்கு உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட எம். அக்மல் அவர்கள் மக்கள் பிரதிநிதி அந்தஸ்தைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

இக்கிராமத்தின் அரசியல் வரலாறு மிகக் குறுகியபோதிலும் சுதந்திர இலங்கையில் தொடர்ச்சியாக ஐக்கிய தேசிய கட்சியில் அதிக அக்கறை காட்டிய இம்மக்களின் அபிலாசைகளும், பாதுகாப்பும் அக்கட்சியினூடாகவே நிறைவேற்றிக் கொள்ள முடியும் என நம்புகின்றனர்.

இன நல்லுறவு
பங்கரகம்மனவைப் பொறுத்தவரையில் இன நல்லுறவு என்பது இம்மக்களிடத்திலிருந்து பிரித்துப்பார்க்க முடியாத ஒன்றாக காணப்படுகின்றது.

இம்மக்களது பிரதான ஜீவனோபாய தொழிலாக காணப்படுகின்ற விவசாயத்தை செய்கை பண்ணும் முறையிலிருந்து கட்டியெழுப்பப்படும் இன நல்லுறவானது கல்வி, பழக்கவழங்கங்கள், சடங்குகள், ஒன்றுகூடல்கள், தொழில்கள், நம்பிக் கைகள் என வளர்ந்து செல்கின்றன.

இக்கிராமத்தில் காணப்படும் நெய்னார் உடையார் கபுரடியை சிங்கள மக்கள் அப்புஹாமி தெய்யோ என வழிபட்டு வந்த வரலாறு இங்கு நிலவிய சிங்கள் – முஸ்லிம் நல்லுறவின் பெறுமதியான சான்றாகும்.

அதேபோல் அப்புஹாமி தெய்யோவை மிஞ்சிய சக்திவாய்ந்த தெய்யோவாக ஊவா மாகாண சிங்கள மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றுள்ள கிவுளகெதர பண்டார தெய்யோவுக்கும் இக்கிராமத்திற்கும் இடையிலான தொடர்பானது முழு மாகாணத்துடனும் இங்கு வாழும் மக்கள் கொண்டிருந்த நல்லுறவை எடுத்துக் காட்டுக்கு மற்றுமொரு சான்றாகும்.

இதுபோன்ற இன்னும் பல சம்பவ திரட்டுக்களை கொண்டு சமாதான வழியிலும், இன நல்லுறவிலும் பல ஆண்டுகள் பயணம் செய்து இக்கிராமம் சாதனை படைத்துள்ளது. இவை மீள வாசிக்கப்பட வேண்டியது காலத்தின் தேவையாகும்.

ஏனைய பிரதேசங்களுடனான தொடர்பு
பங்கரகம்மன கிராமத்து மக்கள் மஹியங்கனை நகருடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளனர். வர்தத்க நிலையங்கள், தொழில் முயற்சிகள், கல்வி, போக்குவரத்து, வைத்தியசாலை சேவைகள் போன்ற பல விடயங்கள் இதற்காக காரணிகளாகின்றன.

மேலும் பதுளை, பிபிலை, கணுல்வெல, கொட்டப்போவ, பகினிகஹவெல, மடவெள, திகனை, மாவனெல்ல போன்ற பிரதேசங்களுடன் திருமணம், குடும்ப உறவுகள், தொழில் ரீதியான தொடர்பை பேணி வருகின்றனர். ஆரம்ப காலங்களில் கிழக்கு மாகாணத்துடன் இதுபோன்ற தொடர்புகளைக் கொண்டிருந்த இம்மக்கள் இன்றைய காலகட்டத்தில் அவை குறைந்து விட்டது எனலாம்.

பொதுச் சேவைகள்
இக்கிராமத்து மக்களுக்குத் தேவையான பொது வசதிகள் முழுமையாகக் காணப்படவில்லை. இருந்த போதிலும் போக்குவரத்து வசதிகள் சற்று மேன்படுத்தப்பட்டுள்ளன.

மஹியங்கனையிலிருந்து பதுளை நோக்கிச் செல்லும் பஸ் பங்கரகம்மன ஊடாகவே பயணிக் கின்றன. இதனால் இம்மக்களின் போக்குவரத்துப் பிரச்சினை ஓரளவு தனிக்கப்பட்டுள்ளன. உபதபாலகம், மின்சாரம், தொலைத் தொடர்பு, குடிநீர் வசதிகள் இக்கிராமத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

எதிர்காலத் தேவைகள்
இக்கிராமத்தினூடாகச் செல்லும் பிரதான வீதி செப்பனிடப்படவேண்டிய ஒன்றாகும். குன்றும் குழியுமாகக் காணப்படும் இவ்வீதி மக்கள் போக்குவரத்துக்கு மட்டுமல்லாது மாணவர்களுக்கும் அசௌகரியத்தை ஏற்படுத்துகின்றன.

பங்கரகம்மன கிராமத்தில் வாழும் ஆயிரக் கணக்கான மக்களின் அடிப்படை சுகாதார வசதிகளை பெற்றுக் கொடுக்கும் வகையில் அரச மருத்துவ நிலையம் ஒன்று அமைக்கப்படாமை பெரும் குறையாகும்.

நூலகம், பொது விளையாட்டு மைதானம், சனசமூக நிலையம், கிராமிய அபிவிருத்திச் சங்கம், கமநல சேவை நிலையம், பல்தேவைக் கட்டிடம் போன்றவற்றை நிறுவுவதன் மூலம் எதிர்காலத்தில் இக்கிராமம் எழுச்சி பெறும் என்ற நம்பிக்கை எழுகிறது.

முடிவுரை
கண்டி இராச்சியத்துடன் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்த பங்கரகம்மன எனும் முஸ்லிம் பூர்வீகக் கிராமம் இந்நாட்டின் இறைமைக்கு முழு பங்களிப்பைச் செய்துள்ளமை புலனாகின்றது.

தம்மைச் சூழ சிங்கள மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட போதிலும் சிங்கள – முஸ்லிம் நல்லுறவை நிலையாகப் பேணி சமூக ரீதியான தாக்கங்களில் விரிசல்கள், கீறள்கள் ஏற்படாத வகையில் காத்துக் கொண்டுள்ளது.

இதுபோன்ற பல சிறப்பம்சங்களைக் கொண்டுள்ள பங்கரகம்மன கிராமம் இன்று மக்கள் மத்தியில் மறக்கப்பட்டுவரும் ஒன்றாக மாறி வருகின்றது.

இந்நிலையிலிருந்து இக்கிராமத்தின் பூர்வீகம், அங்கு வாழும் மக்களின் நிலை போன்ற விடயங்களை ஒன்று சேர்த்து ஆவணப்படுத்தவேண்டிய தேவை உள்ளது.

எனவே, இக்கிராமத்தின் வரலாறு முஸ்லிம் சமூகத்தின் எதிர்கால இருப்பின் தொன்மையாகும். ஆதலால் சிங்கள மக்களுடன் இணைந்து வழும் முஸ்லிம் கிராமங்களின் வரலாறும் தேசிய முஸ்லிம் வரலாற்றுடன் இணைந்து மீள பேசப்பட வேண்டிய ஒன்றாகும். (நு)

– ஏ.எம்.பறக்கத்துள்ளாஹ், கல்முனை –

pangaragammanaIMG_60508104

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>