ஜமால் கசோஜி கொலை: குற்றவாளிக் கூண்டில் சவுதி அரேபியாவா?


adfww

பிரபல பத்திரிகையாளரும், சவுதி அரசாங்கத்தின் விமர்சகருமான ஜமால் கசோஜி, இஸ்தான்பூலில் உள்ள தூதரகத்துக்கு சென்று காணாமல் போய் இரண்டு வாரங்களுக்கு மேலாகி உள்ளது.

காணாமல்போன ஜமால் கசோஜி சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதை நிரூபிக்கும் ஒலிப்பதிவு மற்றும் காணொளி சான்றுகள் தங்களிடம் இருப்பதாக துருக்கி அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். முதலில் இதனை மறுத்த சவுதி அரேபியா, பின்னர் ஜமால் இறந்து விட்டதை ஒப்புக் கொண்டது.

ஜமால் கசோஜி தூதரகத்துக்கு சென்ற பின் அங்கிருந்த அதிகாரிகளுடன் சண்டை நடந்துள்ளது. அச்சண்டை அவரது மரணத்தில் முடிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யார் இந்த ஜமால்?

யார் இந்த ஜமால்? ஒர் ஊடகவியலாளர் காணாமல் போனது உலக அளவில் தலைப்பு செய்தியாக மாற என்ன காரணம்?

இஸ்லாமியர்களின் புனித நகரமான மதினாவில் 1958 ஆம் ஆண்டு பிறந்தவர் ஜமால். அமெரிக்காவில் உள்ள இந்தியானா பல்கலைக்கழகத்தில் வணிக மேலாண்மை பட்டப்படிப்பை முடித்தவர்.

ஒரு காலத்தில் சவுதி அரச குடும்பத்தின் ஆலோசகராக இருந்தவர், பின் சவுதி அரசாங்கத்திற்கு எதிராக திரும்பினார். அதற்கு பிறகு அவர் சவுதியிலிருந்து வெளியேறினார்.

ஒசாமா பின் லேடனின் எழுச்சியை நேரில் கண்டவர் ஜமால். 1980 – 90 ஆகிய காலகட்டங்களில் பல முறை ஒசாமாவை நேர்காணல் கண்டிருக்கிறார்.

ஜமால் 2017 ஆம் ஆண்டு கோடை காலத்தில் சவுதியைவிட்டு வெளியேறி அமெரிக்கா சென்றார்.

கைது செய்யப்படுவோம் என்ற பயத்தில் பலர் சவுதிதியைவிட்டு வெளியேறுவதாக வாஷிங்டன் போஸ்டில் செப்டம்பர் மாதம் எழுதிய முதல் பத்தியில் குறிப்பிட்டு இருந்தார்.

தூதரகம் சென்றது எதற்கு?

ஜமால் தன் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு துருக்கி பெண் ஒருவரை திருமணம் செய்ய இருந்தார். விவாகரத்து தொடர்பான ஆவணங்களை பெறுவதற்காகத்தான் அவர் இஸ்தான்பூலில் உள்ள தூதரகத்துக்கு செப்டம்பர் 28ஆம் திகதியன்று சென்றார்.

இதன்படி, அவருக்கு 02 ஆம் திகதி தூதரகத்துக்கு வருமாறு நேரம் ஒதுக்கிக் கொடுக்கப்பட்டிருந்தது. உள்ளூர் நேரப்படி மதியம் 1:30 மணிக்கு சந்திப்புக்கான நேரம் வழங்கப்பட, அவர் 1:14 மணிக்கு தூதரகத்தை வந்தடைந்தார் என சிசிடிவியில் பதிவான காட்சிகளில் தெரிய வந்துள்ளது.

முதல்முறை வந்தபோது நல்ல விதமாக தாம் நடத்தப்பட்டதால், இரண்டாவது முறை எந்த பிரச்சனையும் இருக்காது என ஜமால் அவர் நண்பர்களிடம் கூறியுள்ளார்.

“துருக்கி மண்ணில் ஏதும் அசம்பாவிதம் நடக்காது என்று நம்பியதால், இஸ்தான்பூலில் உள்ள சவுதி தூதரகத்திற்கு செல்ல ஜமால் தயங்கவில்லை” என வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் ஹெடிஸ் செஞ்சிஸ் (ஜமால் திருமணம் செய்து கொள்ள இருந்த பெண்) எழுதியுள்ளார்.

தூதரகத்திற்கு வெளியே காதலியிடம் கையடக்கத் தொலைபேசியை கொடுத்துவிட்டு சென்ற அவர், தான் திரும்பி வராவிட்டால், துருக்கி ஜனாதிபதி ரிசெப் தையிப் எர்துகானின் ஆலோசகரை தொலைபேசியில் அழைத்து நடந்ததை தெரிவிக்குமாறும் கூறியுள்ளார்.

தூதரகத்திற்கு வெளியே ஹெடிஸ் 11.00 மணி நேரங்கள் காத்திருந்தும் ஜமால் வரவில்லை. மீண்டும் அடுத்த நாள் அங்கு சென்றபோதும் அவர் அங்கு இல்லை.

சவுதி அரேபியா கூறியது என்ன?

கசோஜி எங்கிருக்கிறார் என்று தெரியாது என இரண்டு வாரங்களுக்கு மேலாக சவுதி அரேபியா கூறி வந்தது.

ஜமாலுக்கு என்ன ஆனது என்பதை தெரிந்து கொள்ள சவுதி மக்களும் ஆர்வமாக உள்ளதாக குறிப்பிட்ட சவுதி இளவரசர் மொஹமத் பின் சல்மான் சில நிமிடங்கள் அல்லது ஒரு மணி நேரத்தில் தூதரகத்தில் இருந்து ஜமால் புறப்பட்டுவிட்டார்.  தங்களிடம் மறைப்பதற்கு ஒன்றுமில்லை” என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

ஜமால் கொலை செய்யப்பட்டார் என்று வரும் தகவல்கள் எல்லாம் பொய் மற்றும் அடிப்படை ஆதாரமற்றது எனறும் இளவரசர் சல்மானின் சகோதரரும், அமெரிக்காவுக்கான சவுதி தூதுவருமான காலித் பின் சல்மான் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், அக்டோபர் 20ஆம் திகதியன்று சவுதி அரசாங்க தொலைக்காட்சி செய்தியின்படி, ஜமால் கசோஜி தூதரகத்துக்கு சென்ற பின் அங்கிருந்த அதிகாரிகளுடன் சண்டை நடந்ததாகவும், அச்சண்டை அவரது மரணத்தில் முடிந்ததாகவும் கூறப்பட்டது.

துருக்கியில் இன்னும் தொடரும் இந்த விசாரணையில் இதுவரை 18 சவுதி அரேபிய நாட்டவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து சவுதி மன்னர் நீதிமன்றத்தின் முக்கிய நபராகவும், இளவரசர் முகமத் பின் சல்மானுக்கு ஆலோசகராகவும் இருந்த சவுத் அல் கதானி மற்றும் மேஜர் ஜெனரல் அகமத் அல் அசிரி ஆகியோர் பணியிலிருந்து நீக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக முதல்கட்ட விசாரணைகள் நடத்த இளவரசர் தலைமையில் கமிட்டி அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஜமால் குறித்து துருக்கி என்ன கூறியது?

தூதரகத்தினுள் கசோஜி துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்டதாகவும் பின்னர் அவரது உடல் அங்கிருந்து நீக்கப்பட்டதாகவும் துருக்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை நிரூபிக்கும் ஒலிப்பதிவு மற்றும் காணொளி சான்றுகள் துருக்கி அதிகாரிகளிடம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. எனினும், இதுவரையில் இது பகிரங்கப்படுத்தப்படவில்லை.

“ஜமாலின் குரலும், மேலும் சில ஆண்கள் அரபு மொழியில் பேசுவதையும் அந்த ஒலிப்பதிவில் கேட்க முடிகிறது” என வாஷிங்டன் போஸ்ட் செய்தித்தாள் வெளியிட்டுள்ள ஆதாரம் ஒன்று குறிப்பிட்டது.

“அவர் எப்படி துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார் என்றும் கேட்க முடிகிறது”

குற்றஞ்சாட்டப்பட்ட சவுதி முகவர்கள் யார்?

ஜமால் காணமால் போன நாளன்று இஸ்தான்பூலில்  இருந்து விமானம் மூலம் சென்ற மற்றும் இஸ்தான்பூலுக்கு வந்த சந்தேகத்திற்குரிய 15 நபர்கள் அடங்கிய குழுவை அடையாளம் கண்டுள்ளதாக துருக்கி ஊடகம் தெரிவிக்கிறது.

அதில் ஒருவர் மஹெர் முத்ரெப். இவர் சவுதி புலனாய்வில் கலோனலாக பணியாற்றினார்.

மேலும் நான்கு நபர்கள் சவுதி முடியரசருக்கு தொடர்புடையவர்கள் என்றும் மற்றொருவர் அந்நாட்டின் உள்துறையின் மூத்த நபர் என்றும் கூறப்படுகிறது.

கசோஜி தூதரகத்துக்கு சென்ற அதே நாளில் 3:15 மணிக்கு, 9 நபர்கள் சவுதி தலைநகர் ரியாத்தில் இருந்து தனி விமானம் மூலமாக அங்கு வந்தடைந்ததாகவும் கூறப்பட்டது.

சந்தேகிக்கக்கூடிய மற்ற நபர்கள் அதே நாளில் பின்னர் தனி விமானம் அல்லது வணிக விமானங்கள் மூலமாக வந்திருக்கலாம். அவர்கள் அனைவரும் தூதரகத்திற்கு அருகில் உள்ள இரண்டு ஹோட்டல்களில் தங்கியிருந்தார்கள்.

இஸ்தான்பூல் விமான நிலையம் வழியாக சவுதி நபர்கள் வருவது மற்றும் ஹோட்டலுக்குள் நுழைவது போன்ற சிசிடிவி காட்சிகள் துருக்கி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.

மேலும் அக்காட்சிகளில், கசோஜி தூதரகத்துக்கு வருவதற்கு முன்னால் சில வாகனங்கள் உள்ளே சென்றதும் காண்பிக்கப்பட்டுள்ளது. அதில் சில கருப்பு வேன்களும் அடங்கும்.

கசோஜி வர இரண்டு மணி நேரத்திற்கு முன்பாக ஏதோ ஒரு வேனில் அருகில் உள்ள இடத்தில் இருந்து சென்ற நபர்கள் இருந்துள்ளனர்.

பின்னர் அந்த குழுவினர் இரண்டு தனியார் விமானங்கள் மூலம் கைரோ மற்றும் துபாய் வழியாக ரியாத்துக்கு சென்றுவிட்டதாக விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

துருக்கி ஊடகங்களின்படி இதுவரை நடந்த சம்பவங்கள்

03:28: சந்தேகத்திற்குரிய சவுதி முகவர்களை கொண்ட முதல் தனியார் ஜெட் விமானம்  இஸ்தான்பூல் விமான நிலையத்துக்குள் நுழைகிறது.

05:05: அந்த குழு சவுதி தூதரக கட்டிடத்திற்கு அருகில் இருக்கும் இரண்டு விடுதிக்குள் செல்வதை காண முடிகிறது.

12:13: தூதரக அதிகாரிகளின் வாகனங்கள் தூதரகத்திற்கு வருவது படம் பிடிக்கப்பட்டது. அதில் சவுதி முகவர்கள் இருந்ததாக கூறப்படுகிறது.

13:14: கசோஜி கட்டடத்துக்குள் நுழைகிறார்

13:14: தூதுரகத்தில் இருந்து வாகனங்கள் புறப்பட்டன. சந்தேகத்திற்குரிய சவுதி தூதரக அதிகாரியின் குடியிருப்புக்கு வாகனம் வருவது படம் பிடிக்கப்படுகிறது.

17:15: சந்தேகத்திற்குரிய சவுதி அதிகாரிகளை கொண்ட இரண்டாவது தனியார் ஜெட் விமானம் இஸ்தான்பூலில் தரை இறங்கியது.

17:33: தூதரகத்துக்கு வெளியே கசோஜியை மணமுடிக்கவிருந்த பெண் காத்திருந்தார்.

18:20: இஸ்தான்புல் விமான நிலையத்திலிருந்து தனியார் ஜெட் விமானம் புறப்பட்டது. மற்றொரு விமானம் இரவு ஒன்பது மணியளவில் புறப்பட்டது.

துருக்கியின் விசாரணை எவ்வாறு நடைபெறுகிறது?

கடந்த ஒக்டோபர் 15 ஆம் திகதி துருக்கி பொலிஸாருக்கு சவுதி தூதரகத்திற்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டது.

சில சவுதி அதிகாரிகள் மற்றும் சுத்தம் செய்யும் குழுவினர் அக்கட்டிடத்திற்குள் நுழைந்ததையடுத்து அவர்கள் அங்கு சென்றனர்.

தூதரகம் மற்றும் அதன் அருகில் உள்ள சவுதி தூதரகத்தின் குடியிருப்பில் தேடிய காவல்துறையினர், டீ.என்.ஏ சோதனைக்கு தேவையான சில மாதிரிகளை எடுத்துச் சென்றுள்ளனர்.

அருகில் உள்ள காட்டிலும், யலோவின் வயல்வெளிகளிலும் அவர்கள் தேடினர். ஏனெனில் ஜமால் கொல்லப்பட்டதாக கூறப்படும் தினத்தில் இரண்டு சவுதி தூதரக வாகனங்கள் அந்த வழியை நோக்கி சென்றுள்ளது.

கசோஜியின் உடல் காட்டிலோ அல்லது வயல்வெளியிலோ அகற்றப்பட்டிருக்கலாம் என பெயர் வெளியிடாத சில துருக்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், இஸ்தான்பூலில் உள்ள சவுதி தூதரகத்தில் பணிபுரிந்து வந்த துருக்கி நாட்டை சேர்ந்த 15 பேர் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

தொழில்நுட்ப ஊழியர்கள், வரவேற்பாளர்கள், கணக்காளர்கள் மற்றும் ஓட்டுனர் ஆகியோரிடம் சாட்சியங்கள் பெறப்பட்டுள்ளன.

இந்நிலையில், பத்திரிகையாளர் ஜமால் கஷோஜி கொலை பல நாட்களுக்கு முன்னதாவே திட்டமிடப்பட்ட ஒன்று என ஆளுங்கட்சியின் எம்.பி.க்களிடம் துருக்கி ஜனாதிபதி ரிசெப் தையிப் எர்துகான் நேற்று (23) தெரிவித்துள்ளார்.

இஸ்தான்பூலில் உள்ள சவுதி தூதரகத்தில் அக்டோபர் 02 ஆம் திகதி கஷோஜி கொடூரமாக கொலை செய்யப்பட்டதற்கான “வலுவான” ஆதாரங்கள் இருப்பதாவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கசோக்ஜியின் உடல் எங்கே? அவரை கொலை செய்ய யார் உத்தரவிட்டது? போன்ற கேள்விகளுக்கு சவுதி அரேபியா பதிலளிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி எர்துகான் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, சவுதி அரேபியாவில் நடைபெறவிருந்த “டாவோஸ் இன் த டெசர்ட்” முதலீட்டு மாநாட்டுக்காக ஆரம்பிக்கப்பட்டிருந்த இணையத்தளத்தின் மீது நேற்று (23) ஹேகர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரித்தானிய டேலிமெய்ல் செய்தித்தளம் அறிவித்துள்ளது.

ஊடகவியலாளர் ஜமால் கசோஜியின் கொலைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த மாநாடு நேற்று (23) சவுதியில் ஆரம்பமாக இருந்தது. இருப்பினும், ஊடகவியலாளர் ஜமாலின் கொலையையடுத்து அந்த மாநாட்டை ஒத்திவைக்க சவுதி அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.

சவுதிக்கு சர்வதேச ரீதியில் விடுக்கப்பட்டுள்ள அழுத்தங்கள் காரணமாக இந்த மாநாட்டை ஒத்திவைக்க வேண்டிய நிலைக்கு சவுதி தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவிருந்த அரச தலைவர்கள், நிதி அமைச்சர்கள், வர்த்தகர்கள், முதலீட்டாளர்கள், உலக புகழ்பெற்ற நிறுவனங்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக அமைப்புக்கள் என்பன அந்த மாநாட்டைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளதாகவும் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

அத்துடன், மாயமான பத்திரிகையாளர் ஜமால் கஷோஜி குறித்து சவுதி கூறிய பதில், இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு சம்பவத்தை மறைக்க கூறப்பட்ட மிக மோசமான பதில் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்த கொலைக்கு பொறுப்பானவர்கள் தண்டிக்கப்படுவார்கள்,” என்றும் அவர் கூறியுள்ளார். (மு)

தொகுப்பு – அபூ ஷபா

நன்றி – பி.பி.சி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>