இன்றைய காலநிலை


Weather Update

இலங்கைக்கு தென்மேற்காக காணப்படும் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் காரணமாக நாட்டிலும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் காணப்படும் மழையுடன் கூடிய நிலைமையும் மேகமூட்டமான நிலையும் மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பொதுமக்களும் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் ஆராய்ச்சி திணைக்களத்தால் வழங்கப்படும் எதிர்கால ஆலோசனைகள் குறித்து தொடர்ந்தும் அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறார்கள்.

நாடு முழுவதும், அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஓரளவு குளிரான வானிலை எதிர்பார்க்கப்படுகின்றது

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடக்கு, மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் 100 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை மற்றும் புத்தளம் ஊடாக காலி வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் பலமான மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மட்டக்களப்பிலிருந்து திருகோணமலை, காங்கேசன்துறை, மற்றும் புத்தளம் ஊடாக கொழும்பு வரையான கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடும். நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றானது வடமேற்கு முதல் மேற்கு வரையான திசைகளிலிருந்து வீசக்கூடும்.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படுவதுடன் காங்கேசன்துறையிலிருந்து புத்தளம் ஊடாக காலி வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட ஆழம் கூடிய கடற்பரப்புகளில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் கொந்தளிப்பாக காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது (மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரையான அதிகரித்த வேகத்தில்) பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள் கொந்தளிப்பாகவும் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.(அ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>